இரண்டுநாட்கள் சென்று ட்ரைன்னில் சென்னை செல்லுவது என்பது திட்டமிடப்பட்டது. காரில் பாட்டியினால் நீண்ட நேரம் அமர முடியாது என்பதால் இந்த ஏற்பாடு.
ஷண்முகத்திற்கு அழைத்து கிருபாதான் பேசினாள் “மாமா சென்னை வரோம் எல்லோரும்.” என்றாள்.
ஷண்முகத்திற்கு கோவம் குறையவில்லை “எதுக்கு.. “ என்றார்.
கிருபா “சங்கர் மாமாக்கு உடம்பு முடியலையாம்.. பார்க்க வரோம்” என்றாள்.
ஷண்முகம் “ஓ.. அதான் காசு இல்லாமல் சொத்தை கொடுன்னு கேட்க்கிரானாம் அவன்.. அப்படி நேராக கேட்கக் வேண்டியதுதானே” என காய்ந்தார்.
கிருபா “அப்படி இல்ல மாமா.. சங்கர் மாமா, ரொம்ப முடியாமல் இருக்கார்.. அவர், மனதில் எதோ வருத்தமிருக்கும் போல.. தாத்தாவையும் பாட்டியையும் பார்க்க நினைக்கிறார்ன்னு சொன்னார். பாட்டிக்கு சங்கர் மாமாக்கு உடம்பு முடியாமல் போனதை கேட்டதிலிருந்து.. அழுதுட்டே இருக்காங்க.. அத்தோட மாமாவையும் பார்க்கணுமில்ல” என்றாள்.
ஷண்முகம் “கோர்ட்டில் பார்க்கலாமின்னு சொல்லியிருக்கான் அவன். கேஸ்சினை வாபஸ் வாங்க சொல்லிட்டு, அப்புறம் போய் பார்த்தாலும் ஒரு பிரயோஜனம் இருக்கும். கேஸ்சும் போடுவான்.. நீங்களும் போய் பார்ப்பீங்க” என்றார்.
சண்முகம் “நான் எதுக்கு யோசிக்கணும், அவங்க என்னை நினைக்கவேயில்லையே.. சரி, எப்போ வரீங்க, டாக்ஸி புக் செய்து வைக்கிறேன்..” என பேச்சை மாற்றிக் கொண்டு விவரம் கேட்டுக் கொண்டார்.
சென்னை வந்து சேர்ந்ததும் கிருபா ஈசனுக்கு அழைத்தாள்.
ஈசனிடம் கிருபாவின் எண் இல்லையே முதல் அழைப்பு முடிந்தது. பின் கிருபா ஈசனுக்கு வாட்ஸ்அப் செய்தாள்.. தான் கிருபா என.
ஈசன் அந்த செய்தியை பார்த்திருந்தான். எதுக்கு இப்போது கூப்பிடுகிறாள்.. என எண்ணம். மருத்துவர்கள் அவனை இப்போதுதான் அழைத்து பேசி இருந்தனர். அந்த பயத்தில் இருக்கிறான். எனவே, யோசிக்க முடியவில்லை அவனால். அமைதியாக இருந்துவிட்டான்.
அதன்பின் அரைமணி நேரம் சென்று.. அவன் அந்த செய்தியை பார்த்தது தெரிந்து, அழைத்தாள் கிருபா.
ஈசன் அந்த அழைப்பையே பார்த்திருந்தான். அவன் மூளையில் ஏதேதோ ஓடுகிறதே. பொறுமையாக அழைப்பை ஏற்றான், கிருபா “ஹெலோ ஈசன்.. எப்படி இருக்கீங்க” என்றாள் இயல்பான குரலில்.
ஈசனுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டது.. மென்னும் விழுங்கும் நிலையில் கூட அவனில்லை.. அழுதே அறியாதே அவன் கண்ணோரங்கள் லேசாக கசகசத்தது.
கிருபா அவன் பதிலில்லா நிலையில் “ஈசன், நான் கிருபா.. என்னை தெரிகிறதா. ஊரிலிர்ந்து தாத்தா பாட்டி எல்லோரும் வந்திருக்கோம் மாமாவை பார்க்க.. எப்படி இருக்கார் மாமா” என்றாள்.
ஈசன் சுதாரித்தான் “ம்.. அப்..பா.. க்கும்” என தன்னை இன்னும் சரிசெய்துக் கொண்டான்.
கிருபா ஏதும் பேசவில்லை..
ஈசனே “ம் அப்படியே இருக்கார்.” என்றான்.
கிருபா “நாங்க எப்போ வந்து பார்க்கலாம்.. ஏதாவது டைம் இருக்கா” என்றாள்.
ஈசன் “இல்ல, நீங்க வாங்க.. பேசிக்கலாம்” என்றான்.
கிருபா “ஒருமணி நேரத்தில் கிளம்பிடுவோம்.. மாமாக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கலாமா.. பாட்டி கேட்க்கிறாங்க” என்றாள்.
ஈசன் “ரசம் சாதம்.. தயிர் சாதம் இப்படி கொடுக்கலாம்” என்றான். மறுக்கவோ.. வீம்பு கொள்ளவோ.. அவனின் சூழல் இடம் தரவில்லை.
சமையல் முன்பே முடிந்திருந்தது. மீனாட்சி வேலைக்கு செல்லுகிறார். அதனால், அவர் எப்போதும் சமையலை முடித்திடுவார். இன்று கோக்கிலவும் உதவ.. நேரமாக சமையல் முடிந்திருந்தது.
சம்பூர்ணா, பள்ளி கிளம்பிவிட்டாள்.
ஷண்முகம் முகம் கொடுத்து நின்று பேசவில்லை. நேரமாக அலுவலகம் கிளம்பிவிட்டார். மீனாட்ஷி “உபர் ஆப் போட்டுக்கோ கிருபா.. போயிட்டு கூப்பிடு. மாமா ஜாக்கிரதை. அத்தை நீங்களும்.. பார்த்து போயிட்டு வாங்க” என சொல்லி மீனாட்சியும் கிளம்பிவிட்டார்.
இவர்கள்தான் வீட்டில், பத்து மணிக்கு மேல்.. ஊபர் புக் செய்து கிளம்பினர்.. உணவு எடுத்துக் கொண்டு.
மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.
தாத்தாவும் பாட்டியும் கோக்கிலாவின் உதவியோடு சங்கர் இருப்பதாக சொன்ன இடம் வந்து சேர்ந்தனர்.
கிருபா தாத்தா சொன்னதை கேட்டு.. அழைப்பை துண்டிக்கவில்லை.. ஈசனை பார்த்தாள்.. உயரமான தேகம்.. கலைந்த கேசம்.. கண்கள் எங்கோ வெறித்திருந்தது.. அவனின் நிறத்திற்கு.. முகப்பருக்கள் ஆங்காங்கே.. சிவந்து தெரிந்தது.. எதோ ஒரு கருப்பு டி-ஷர்ட்.. ஜீன் அணிந்து போனை கையில் சுழற்றிக் கொண்டு.. நிர்கதியாய் அமர்ந்திருந்தான். அந்த போனின் அழைப்பு, அந்த சூழற்றலை நிறுத்தியிருந்தது.. அழைப்பு முடியும் தருவாயில்.. அந்த அழைப்பை ஏற்றான் “ஹெலோ” என்றான்.
நிமிர்ந்து பார்த்தான் ஈசன்.. கிருபா கை உயர்த்தினாள்.. ஈசனும் “வாங்க” என அமர்ந்துக் கொண்டு கை உயர்த்தினான்.
தாத்தா முன்னாள் சென்று.. நின்றார். பேரன் எழுந்துக் கொண்டான் இப்போதுதான். பாட்டி கண்ணில் நீரோடு வந்து நின்றார்.
கோக்கிலா கிருபா இருவரும் கையில் எதோ பொதிகளோடு நின்றனர்.
ஈசனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
தாத்தா “சங்கர் எங்க ப்பா.. எப்படி இருக்கான்” என தானே பேசினார்.
ஈசன் “இந்த ரூமில்தான் இருக்கார்..” என கண்களை பாட்டியை நோக்கி செலுத்தினான்.
கிருபா “இது பாட்டி.. இவங்க, என் அம்மா.. உங்க அப்பாவோட அக்கா.. கோக்கிலா” என அறிமுகம் செய்தாள்.
ஈசன், தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு.. அனைவரையும் தலையசைத்து வரவேற்பது போல நின்றான்.
பாட்டி “என் பையனுக்கு.. ஒரு பையன்..” என சொல்லி.. ஈசனை தொட கை நீட்டினார்.
ஈசன் அப்படியே நின்றான்.
தாத்தா “சிவா, சங்கர்.. உன்னை அம்மான்னு சொன்னால்தான்.. இந்த பையன் நம்மை நம்புவான்” என அசதியாக சொல்லி.. சேரில் அமர்ந்துக் கொண்டார்.
பாட்டி தாத்தாவின் அருகே அமர்ந்துக் கொண்டார்.
ஈசன் “இதோ.. அட்டெண்டர்கிட்ட கேட்டுட்டு வரேன்” என சொல்லி சென்றான்.
ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி கோட் அணிந்துக் கொண்டு வந்தார் ஈசனிடம் எதோ பேசிக் கொண்டே. அருகில் வந்தவர் வயதானவர்களை பார்த்ததும்.. “எப்படி இவர்களை அனுப்ப முடியும் ஈசன்” என்றார்.
எல்லோரும் ஸ்தம்பித்து போயினர்.
அந்த பெண்மணி “கண்டிப்பா வயதானவர்களை அனுப்ப முடியாது.. இன்னும் அவர் சரியாகட்டும்” என்றார்.
ஈசன் “எத்தனை நாளில் சரியாவார் மேம்” என்றான் ஓய்ந்த குரலில்.
அந்த பெண்மணி ஏதும் சொல்ல முடியாமல் நின்றார். பின் அவரே.. முககவசம்.. தனி செப்பல்.. என தேவையாவற்றை கொடுத்து நிறைய அறிவுரைகள் சொல்லி இரண்டு இரண்டு நபர்களாக சென்று பார்க்க அனுமதித்தார்.
அந்த லேடி அங்கிருந்து நகர்ந்ததும்.. தாத்தாவும் ஈசனும் உள்ளே சென்றனர். பாட்டியும் கோக்கிலாவும் அடுத்து உள்ளே சென்றுவிட்டனர்.
தனி வார்ட்.. நன்றாக செர்னிடைஸ் செய்த தனி அறையில் உபகரணங்களுக்கு நடுவே சங்கர் கட்டிலில் சாய்ந்தார் போல.. அமர்ந்திருந்தார். கையில் எதோ ஆல்பம்.. பார்த்துக் கொண்டிருந்தார் போல.. எதிரே மகன் அழைக்கவும் நிமிர்ந்தவர்.. அருகில் இருப்பது யாரென தெரியாமல் தடுமாறினார்.
பாட்டியும் வந்து சேர்ந்துவிட்டார்.. தழுதழுத்த குரலில் “சங்கரு..” என்றவர்.. மகனின் கைபிடித்துக் கொண்டார்.
சங்கர் கதிகலங்கி போனார்.. யாரிது எனதான் முதலில் அவருக்கு தோன்றியது. அம்மா என தன் மூளை செல்களை புரட்ட.. அவகாசம் வேண்டியிருக்கிறது அவருக்கு.. வெறித்த கண்களோடு அப்படியே பார்த்திருந்தார்.
அம்மாவின் குரல் தெரிகிறது உணர முடிகிறது.. சங்கருக்கு. ஆனால், வார்த்தை வரவில்லை. பாட்டி மகனின் நெற்றி வருடி.. கன்னம் தீண்டி.. நின்றார்.
முகத்தில் சுவாசத்திற்கான உபகரணங்கள் இருந்தது.
ஈசன் சட்டென பாட்டி செய்ததை தடுக்கும் வகையறியாது நின்றான்.
தாத்தா “சிவா, இரு இரு பையனுக்கு முடியலை.. பேசுவான் இரு” என நிதாப்படுத்தினார்.
ஈசன் தந்தையின் அருகே வந்தான்.. அவரின் அருகே குனிந்து.. “அப்பா.. மாஸ்க் எடுக்கிறேன்.. பேசுங்க” என்றான்.
சங்கர் தலையசைத்தார்.
ஈசன் அவ்வாறே செய்து.. நின்றுக் கொண்டான்.
எவ்வளவோ சொல்லி அனுப்பினார் அந்த பெண்மணி.. உள்ளே சென்று அழ கூடாது என. ஆனால், பாட்டியால் தாங்கவே முடியவில்லை “அடையாளமே தெரியலையேடா..” என அழ தொடங்கினார்.
தாத்தா “எப்படி சங்கர் இருக்க..” என்றார்.
சங்கர் நிதானமாக எல்லோரையும் பார்த்தார்.. பின் நன்றாக அமர முயற்சித்தார்.. முடியவில்லை. பக்கவாட்டில் நிறைய உபகரணங்கள் அவரின் உடலோடு பொருந்தி இருந்தது.. அவரால் நிமிர்ந்து அமர முடியவில்லை.. சங்கர் “அப்பா.. இந்த டியூப்களை எடுத்து விடுங்கப்பா” என்றார் முதல் வார்த்தைகளாக.
எல்லோரின் பதிலும் கண்ணீர்தான் அங்கு.
சற்று நேரம் சென்று.. கோக்கிலா “அண்ணா சாப்பிடுறீயா.. மணி 12 ரசம் சாதம் சாப்பிடு” என்றார்.
சங்கர் கண்களில் ஒளி.. கோக்கிலா உணவுகளை தட்டில் எடுத்துக் கொண்டே பேசினார்.. “இது என் பொண்ணு. நீ பார்த்திட்டு இருந்த கடையை இவள்தான் பார்த்துக்கிறா.. உனக்கு ஞாபகம் இருக்கா.. நம்ம கடையை” என்றார். பதிலை எதிபார்க்கவில்லை “அம்மா உனக்கு பிடிக்குமேன்னு.. வாழைக்காய் வறுவல் செய்தாங்க. இது கருனைகிழங்கு மசியல்.. சாப்பிடு..” என ஊட்டினார்.
பாட்டி கொஞ்சம் நிதானப்பட்டார்.. “சங்கர் மருந்தெல்லாம் சாப்பிட்டு சீக்கிரம் சரி பண்ணிக்க.. நாம ஊருக்கு போலாம்” என்றார்.
சங்கர் இப்போ “அப்பா, என்னை மன்னிச்சிடுங்க” என்றார்.. நீண்டகாலாமாக மனதில் சுமந்த ரணத்தை.. அரை நொடியில் தீர்த்துக் கொண்டார்.
அதன்பின் சங்கர் கடகடவென பேசினார்.. தன் “தப்பு செய்திட்டேன் பா.. அண்ணன் எங்கே..” என்றார்.
தாத்தா, சண்முகம் குடும்பம் பற்றி சொன்னார். கேட்டுக் கொண்டார் சங்கர்.
பின் சங்கர் “கோமதியிடம் கல்யாணம் ஆகிடுச்சா” என்றார். சற்று நேரம் முன்.. கிருபாவை அறிமுகபடுத்தியத்தை மறந்து.
ஈசன் “அப்படிதான் ஆக்கிடுவார்ங்க.. பதில் சொல்லுங்க” என்றான் கசப்பான் குரலில்.
கோமதி “ம்.. கல்யாணம் ஆகிடுச்சின்னா.. என் வீட்டுக்காரருக்கும் அவசரம்..” என சட்டென பேசியவர், சுதாரித்து “எனக்கு பெரிய பெண் கூட இருக்கா.. கிருபா.. இதுதான்” என மீண்டும் அறிமுகம் செய்தார்.
கிருபா “மாமா.. அத்தையை எனக்கு காமிக்கவேயில்லை” என கேட்க்க.
சங்கர் உண்டுக் கொண்டே.. “இங்கதான் இருக்கா..” என சொல்லி பெட்டில் இருந்த ஆல்பத்தை எடுத்து.. தானும் ரேவதியும் இருக்கும் புகைப்படங்களை காட்டினார்.
கிருபா “அத்தை அழகாக இருக்காங்க” என்றாள்.
சங்கர் “ம்.. நல்லா பேசுவா.. சமைப்பா.. கோலம்போடுவா.. துணி தைப்பா.. பலகாரம் செய்வா.. தைரியமா இருப்பா.. ” என பேசினார்.
கிருபா “உங்களுக்கு ரெண்டு பசங்களா மாமா” என்றாள்.
சங்கர் “ம்.. ஈசன், சஹானா.. பொண்ணு வேலை பார்க்கிறா. பொறுப்பானவள். இவன் கொஞ்சம் முரடு. அவள்.. அவ அம்மா மாதிரி” என்றார்.
தாத்தா “பொண்ணு எங்கப்பா” என்றார்.
சங்கர் “எங்கடா சஹா..” என்றார்.
ஈசன் “ம்.. காலையில்தானே ப்பா கிளம்பினா.. நீங்க கூட, நைட் போன்னு சொன்னீங்களே. மீட்டீங்க இருக்குன்னு கிளம்பிட்டா ப்பா. அடுத்த வாரம் வந்திடுவா” என்றான்.
சங்கர் “அஹ.. ம்.. வேலைக்கு போயிருக்கா” என்றார்.
கோக்கிலா ஊட்டி முடித்தார்.
தாத்தா ஆரெஞ்சு பழம் எடுத்து உரித்துக் கொடுத்தார்.
ஈசன் மாத்திரைகள் கொடுத்தான்.
பாட்டி பழங்கதைகளை பேசினார். சங்கருக்கு அதில் மனது பதியவில்லை. நடு நடுவே.. ‘ஷண்முகம் எங்க வேலைக்கு போறான். கோக்கிலா உனக்கு கல்யாணம் ஆகாமல்.. நான் கல்யாணம் செய்துகிட்டேன்.. மன்னிச்சிடு அக்கா’ என ஏதேதோ பேசினார்.
பாட்டி “தூங்கு டா” என்றார்.
சங்கர் “ம்மா.. நீ இங்கேயே இரு.. நம்ம வீட்டுக்கு போலாம். சஹானா வந்திடுவா. அவள் என்னை கூட்டிட்டு போய்டுவாள். ஈசா, சஹாக்கு போன் பண்ணு.. கூப்பிடு.. பெரியவங்கள் எல்லாம் வந்திருக்காங்க.. லீவ் போட்டுட்டு வர சொல்லு” என்றார்.
ஈசன் “இல்ல அப்பா.. முக்கியமான மீட்டிங். முடிச்சிட்டு வந்திடுவா” என்றான்.
பின் சங்கர் “எனக்கு என்னமோ பண்ணுது” என்றார். நெஞ்சில் கை வைத்துக் கொண்டு.
ஈசன் “ஒண்ணுமில்ல பா..” என சொல்லிக் கொண்டே.. அவருக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டுவிட்டான்.
பாட்டி தலை கோதினார். அப்படியே உறங்கிவிட்டார் சங்கர்.
ஈசன் “நாம வெளியே இருக்கலாம்” என்றான்.
பாட்டி அருகில் இருந்த பெட் காட்டி “நான் பையன் கூட படுத்துக்கிறேன்” என்றார்.
யாராலும் மறுக்க முடியவில்லை. கோக்கிலா “சாப்பிட்டு படுத்துக்கோம்மா” என்றார்.
பாட்டி “எப்படிடி சாப்பிடுவேன்.. என்னால முடியாது. எனக்கு வேண்டாம்.. என்னை கொஞ்சம் நேரம் என் பையன் கூட இருக்க விடு” என்றார்.
தாத்தா “சிவா.. இதென்ன.. அவன் சரியாகிடுவான். நீ உடம்பை அலட்டிக்காத” என்றார்.
சிவகாமி “எனக்கு உடம்பு நல்லா இருக்கு. பசிக்கலைங்க, அப்புறமா சாப்பிடுறேன்” என்றார்.
கிருபா “பாட்டி, முதலில் சாப்பிடுங்க.. அப்புறம்தான் தூங்கனும். அம்மா நீ சாப்பாடு எடும்மா” என்றாள்.
பாட்டி ஏதும் பேசவில்லை. கோக்கிலா உணவு எடுத்து கொடுக்க அமைதியாக உண்டார். கிருபா அருகிலேயே அமர்ந்துக் கொண்டாள் பாட்டி உண்ணும் வரை.
தாத்தா, இனி கிருபா பார்த்துக்குவாள்.. என வெளியே சென்றார். ஈசன் வெளியே செல்லுவதா.. இருப்பதா என தெரியாமல் விழித்தான்.
கோக்கிலா “ஈசா, தாத்தா தனியாக இருக்கார்.. அங்க பாருப்பா.. இங்க அப்பாவை நான் பார்த்துக்கிறேன்” என வெளியே அனுப்பி வைத்தார்.
ஈசன், தாத்தாவின் இருக்கைக்கை நான்கு இருக்கைகள் தள்ளி அமர்ந்துக் கொண்டான்.
பாட்டி படுத்துக் கொண்டு கண்மூடிக் கொண்டார்.
கோக்கிலா கிருபா இருவரும் வெளியே வந்தனர்.
தாத்தா கிருபாவிடம் “சண்முகத்திடம் பேசிட்டியாம்மா” என்றார்.
கிருபா பதில் சொன்னாள்.
மதியம் அப்படியே வராண்டாவில் எல்லோரும் உண்டனர். ஈசன் முதலில் வேண்டாம் என்றான்.. தாத்தா “சாப்பிடுப்பா.. சங்கர் கண்முழிச்சி உன்னை தேடுவான். சீக்கிரம் சாப்பிடு” என்றார்.
ஈசன் வீம்பாக போன் பேசிக் கொண்டே கவனியாதவன் போல.. எங்கோ சென்றுவிட்டான்.
எல்லோரும் உண்டனர். ஈசனுக்கு என கோக்கிலா ரசம் சாதம் பிசைந்து எடுத்து வைத்தார்.
பாட்டி உள்ளே பேசும் சத்தம் கேட்டது. சங்கர் எழுந்து இருந்தார். பாட்டி மகனின் கையை பிடித்துக் கொண்டு.. பேசிக் கொண்டிருந்தார். சங்கர் பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். கருணையான காட்சி.. ஆனால், நீண்ட நேரம் அதை பார்க்க முடியவில்லை கொடுமையாக இருந்தது மற்ற எல்லோருக்கும்.
பொற்றோரை மகன் தாங்கலாம்.. ஆனால், மகனின் கடைசி காலத்தை எந்த பெற்றோராலும் கண்கொண்டு பார்க்க முடியாது.
கிருபா வெளியே வந்து அமர்ந்துக் கொண்டாள்.
ஈசன் அப்போதுதான் வந்தான் எங்கோ சென்றிருந்தவன்.
கிருபா “சாப்பிட்டீங்களா” என்றாள்.
ஈசன் என்ன சொல்லுவது என யோசிப்பது போல இரண்டு நிமிடம் நின்றான்.
கிருபா “இல்ல, அம்மா உங்களுக்காக சாதம் வைச்சிருக்காங்க.. சாப்பிடுறீங்களா” என அந்த பையை எடுக்க.
ஈசன் “இல்ல.. இல்ல.. நான் சாப்பிட்டேங்க” என்றான்.
கிருபா அவனை ஒருபார்வை பார்த்து அமர்ந்துக் கொண்டாள்.
ஈசன் உள்ளே செல்லுவதா.. இங்கே இருப்பதா என தெரியாமல் நின்றான்.
ஈசன் அவளின் எதிரே நின்றிருந்தான் அவளையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டு “என்ன திடீர்ன்னு, எங்கே சொத்து முழுவதையும் கேட்டுடுவேனோன்னு பயமா.. சாப்பாடு, அழுகைன்னு.. சீன் பலமாக இருக்கே” என்றான்.
கிருபா எதிர்பார்க்கவே இல்லை இந்த வார்த்தைகளை.. இப்படி ஓய்ந்து இருப்பவனிடமிருந்து.. “என்ன சீன்’னா” என்றாள் அனிச்சையாய்.
ஈசன் அவளுக்கு இரண்டு சேர் தள்ளி அமர்ந்துக் கொண்டே .. “ம்.. இல்லைன்னு பொய் சொல்ல போறீங்களா.. எந்த பிளான்னும் இல்லாமலா வந்திருக்கீங்க..” என்றான், மனதை தைக்கும் குரலில்.
கிருபா பக்கவாட்டில் திரும்பி ஈசனை நன்றாக பார்த்தாள் “நமக்கு, பழக்கமில்லாத விஷயத்தை முதல்முறை பார்க்கும் போது.. இப்படிதான் அது ட்ராமாட்டிக்காக தெரியும்.. அன்பு சிலசமயம் இப்படிதான் எல்லோருக்கும் புரியாது. எக்ஸ்ப்ளைன் எல்லாம் செய்ய முடியாதுதானே.. புரியும் புரியும்..” என்றாள் நக்கலாக.
ஈசன், அவள் தன்னை தாக்குவதை உணர்ந்து.. எதுவும் என்னை பாதிக்காது என்பது போல.. நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.