ஈசனிடம் இன்னும் கிருபா எதையும் சொல்லவில்லை. ஈசன் இந்தியா வருவதை கொண்டு அவன் பேச்சில் அத்தனை புலம்பல்.. “அப்பா இறந்து வருஷம் ஆகிடுச்சி.. ம், அப்பா சஹாக்கு கல்யாணத்திற்கு பார்க்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தார். நான் இன்னும் அதை யோசிக்கவே இல்லை, என்னை பத்தியே நினைச்சிட்டு இருக்கேன். கல்யாணம்ன்னா எத்தனை பவுன் போடணும். கல்யாணம் பொண்ணு வீட்டில்தான் செய்து வைக்கணுமா.. செலவு எவ்வளோ வரும்.” என நிறைய கேள்விகள்.. கிருபாவிடம்.
பின் அவனே “முதலில், நம்மக்கு கல்யாணம் நடந்திடணும்.. நாம முன்னின்று செய்யலாம்ன்னு நினைச்சேன். ஆனால், இப்போது தோன்றுது.. கமிட்மென்ட் முதலில் முடிக்கணும்ன்னு. கிருபா.. உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே.. தாத்தா ஏதாவது பார்க்கிறா உனக்கு” என்றான்.
கிருபா “இல்ல.. இல்ல” என்றாள்.
இந்தியா வர போகிறோம் என்றதும், ஈசனின் மனதில் தன்னுடைய விருப்பத்தையும் தாண்டி.. தங்கைக்கு என்ன செய்ய போகிறோம்.. என்றே ஓடிக் கொண்டிருக்க.. எப்படி அவனிடம் போய் சொல்லுவாள் கிருபா, எனக்கு வரன் பார்த்திருக்கிறார் ஷண்முகம் என. அதனால் ஈசனிடம் ஏதும் சொல்லவில்லை இந்த நான்கு நாட்களும்.
அவளால் செய்ய முடிந்தது.. இப்போது ஜாதகத்தோடு வந்திருக்கும் மீனாட்சியிடம் பேசாமல் இருப்பது மட்டுமே. மேலும் ‘ஜாதகம் சரியில்லாமல் போகட்டும் ஆண்டவா’ என வேண்டிக் கொண்டாள்.
தாத்தாவும், இன்று கிருபாவிடம் கேட்க்க வேண்டும் என.. கடைக்கு சென்றார் அவளோடு. கிருபாவின் முகம் தாத்தாவை பார்க்க பார்க்க.. இன்னும் இன்னும் மாறி போகிறது. இப்போதுதான் வீட்டில் கொஞ்சம் ஷண்முகம் மாமா.. இயல்பாக நடக்கிறார்.. திரும்பவும் எப்படி ஈசனின் பேச்சை ஆரம்பிப்பது. அதுவும், அவரை விரும்புகிறேன் என எப்படி சொல்லுவது நான்.. என மனது குமைந்துக் கொண்டே இருந்தது கிருபாவிற்கு.
ஈசன்க்கு, இன்று கிளம்புகிறான். அதனால், கிருபாவிடம் நேற்று இரவு பேசியதுதான். இப்போது கிருபாவிற்கு ஈசனிடம் பேச வேண்டும் போல இருந்தது. தாத்தா, தன்னை பார்க்கிறார் என எண்ணிக் கொண்டே இருந்தாள்.
அன்றாட வேலைகள் எப்போதும் போல பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்றைய ஆர்டர்களின் பில்களை சரிபாத்துக் கொண்டிருந்தாள்.
தாத்தா, ராம்மோடும்.. ஏஜென்ட்களோடும் பேசினார். என்ன நிலவரம் என கேட்டுக் கொண்டிருந்தார்.
நேரம் கடந்தது.
மதியம் கிளம்பும் நேரம் தாத்தா, கிருபாவின் அறைக்கு வந்தார். கிருபா “தாத்தா, ஐந்து நிமிடம் கிளம்பலாம் தாத்தா” என்றாள்.
அமைதியாக தாத்தா அமர்ந்தார்.
கிருபாவின் கண்கள் லாப்டாப்பில் இருந்தாலும்.. மனம் பதற தொடங்கியது தாத்தாவின் அமைதியில். அவரிடம் ஏதும் மறைப்பதற்கு இதுவரை அவளுக்கு விஷயங்கள் இருந்ததில்லை. அவர் கேட்டால், கண்டிப்பாக அவளால் மறைக்கவும் முடியாது. ஆனால், திரும்பவும் மாமாவுக்கும் தாத்தாவிற்கும் பிரச்சனை வரும்.. என்ன செய்வது என யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
தாத்தா “கிருபா.. என்ன ஆச்சு.. நீ ரெண்டு நாளா டல்லா இருக்க.. “ என்றார்.
கிருபா, என்னதான் தாத்தா ‘கேட்பார்’ என அனுமானித்திருந்தாலும்.. கேட்டே விட்டாரே என அதிர்ந்துதான் போனாள் இப்போது.
கிருபா திணறினாள்.
தாத்தா “என்னான்னு சொல்லுடா, ஏன் முகம் இப்படி வாடியிருக்கு” என்றார்.
கிருபா கொஞ்சம் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு “தாத்தா, உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்தான்.. ஆனால், இப்போ இல்ல.. நாளைக்கு சொல்றேன்” என்றாள்.
தாத்தா சிரித்தார் என் கணிப்பு தவறாகவில்லை என எண்ணி சிரித்தார் “நாளைக்கு சொல்ல வேண்டியதை இன்னிக்கே சொல்லேண்டா” என்றார்.
கிருபாவிற்கு பதில் சொல்ல முடியவில்லை “ப்ளீஸ் தாத்தா” என்றாள்.
தாத்தா “எதுவாக இருந்தாலும், நான் பார்த்துக்கிறேன், சொல்லு” என்றார்.
கிருபா “இப்படி கேட்டால் கண்டிப்பா நான் சொல்லிடுவேன் தாத்தா. ஆனால், உங்களுக்குத்தான் கஷ்ட்டம். இன்னுரு சங்கடம் உங்களுக்கு வேணாம் தாத்தா” என்றாள், தடுமாறிக் கொண்டே.
தாத்தா “அப்போ என்னை சங்கடப்படுத்த போறீயா” என்றார், சிரிப்பை தொலைத்து. அவருக்கு யோசனை.. என்ன ஆகிற்று.. ஏதேனும் கணக்கு வழக்கில் பிரச்சனையா.. என்ன இது என யோசனை. அத்தோடு, எந்த குளறுபடியோடும் கிருபா பொருந்த மாட்டாளே.. அவளுண்டு அவள் வேலையுண்டு என இருப்பாள். அவளின் பார்வையை தாண்டி எந்த தவறும் நடக்காதே.. என்னவாக இருக்கும்.. என தாத்தாவிற்கு ஆராய்ச்சி. எப்படியும் பேத்தி காதலிப்பாள் என கனவில் கூட யோசனையில்லை தாத்தாவிற்கு.
கிருபா அவசரமாக “தாத்தா, கண்டிப்பா இல்லை… ஆனால், இருக்கு” என்றாள் கடைசி வரிகளை பேசும் போது ஸ்ருதி இறங்கிதான் போகிற்று பெண்ணுக்கு.
தாத்தாவும் “சரி, அப்படி நாளைக்கு என்னதான் சொல்ல போறேன்னு பார்க்கிறேன் நான்” என்றார் ஆராய்ச்சி புன்னகையோடு.
கிருபாவிற்கு சற்று மனது இலகுவானது. தாத்தாவோடு, கடையை பற்றி பேசிக் கொண்டே வீடு வந்தாள்.
மறுநாள், மதியமாக ஈசன் பெங்களூர் வந்து சேர்ந்தான். தங்கையின் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு.. மாலை கிளம்பி விடியற்காலையில் வந்து சேர்ந்தனர் சஹாவும் ஈசனும், வீட்டுக்கு. காரில் வந்தனர். காரினை தங்கையிடம் விட்டு சென்றிருந்தான்.
சந்தோஷமாக வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர், அந்த அதிகாலை நேரத்தில். மீனாட்சி, என்ன சத்தம் என எட்டி பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார், ஈசன் வந்த உடன். ஷண்முகம் இன்னும் ஊரிலிருந்து வரவில்லை.
நாளை மறுநாள்தான் சங்கரின் திவசம். வீடே அவரை பற்றி பேசிக் கொண்டு அப்படியே ஈசனோடு அமர்ந்துக் கொண்டிருந்தனர். கோகிலா காபி கலந்து எடுத்து வந்தார். யாருக்கும் எழுந்து செல்லும் எண்ணமில்லை போல.. இத்தனை மாத கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.
கிருபாவின் முகத்தில் எதோ குழப்பம். ஈசனின் வரவை அவளால் உணரவே முடியவில்லை. தாத்தாவும் ஈசனும் அவளின் முக மாற்றத்தை கவனித்தனர்.
கண்ணம்மா அக்கா, வந்ததும்தான் டிபன் வேலை தொடங்கியது. ஒவ்வொருவராக எழுந்து அறைக்கு சென்றனர்.
ஈசன், தாங்கள் எப்போதும் இருக்கும் அறைக்கு சென்றான். தனது பொருட்களை எல்லாம் வைத்து விட்டு.. கிருபாவை பார்க்கலாம் என.. பின்பக்கம் உள்ள திட்டின் அருகே நின்றான். அவளிடம் சொல்லவில்லை.. அவள் வருவாள் என எதிர்பார்த்து நின்றான்.
ஆனால், கிருபா வரவில்லை. போனில் அழைக்க யோசனை.. சஹா இருப்பாளே என. அதனால், அமைதியாக தனதறைக்கு வந்தான்.
கிருபாவிற்கு பயமோ பயம்.. ‘எப்படியும் சண்முகம் மாமா பார்த்த வரன் என சொன்னால்.. தாத்தாவிடம் நேரடியாக போய் நிற்பான்.. உடனே எனக்கு கிருபாவை திருமணம் செய்து வையுங்கள் என’ அதை எண்ணிக் கொண்டு.. அவனை சந்திப்பதை தள்ளி போட்டாள்.
கிருபா குளித்து.. பூஜை அறைக்கு சென்றுவிட்டாள்.
ஈசன், பூஜை அறையில் பாட்டி பேத்தியின் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தான்.. அப்போதும் அவன் கண்ணில் கிருபா படவில்லை.
ஈசன் குளிக்க சென்றான். மீண்டும் வந்தான் இன்னுமும் பூஜை அறையில் இருப்பதாகத்தான் தோன்றியது. இந்த முறை மணி சத்தம் பலமாக கேட்டது.
ஓரளவிற்குதான் அவனும் பொறுமைக்கு கட்டுபடுவான். பொறுமையை அவன் எப்போதும் எடுத்துக் கொள்வதில்லையே.. எனவே, தனது அறை வாசலில் நின்று.. “கிருபா..” என்றான் சத்தமாக.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த கிருபாவிற்கு.. இழுத்த மூச்சு வெளியே வரவில்லை.. வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.
தாத்தா குளித்து.. பூஜை அறையிலிருந்து.. வீபூதியோடு வந்தவர்.. ஈசனின் சத்தம் கேட்டு “என்ன அப்பா” என்றார் சாவகாசமாக.
ஈசன் “எங்க தாத்தா அவ..” என ஏக வசனத்தில் அழைத்தான்.
கோகிலாவிற்கு என்ன இது.. என ஒரு எண்ணம்.
கிருபா “என்ன.. என்ன” என்றாள். முகமே அதிர்ந்து இருந்தது.
ஈசன் சாவகாசமாக “சார்ஜர் கேட்டேனே” என்றவன்.. உள்ளே சென்றான்.
தாத்தாவிற்கு உடனே யோசனை உள்ளே செல்லுபவனை “ஈசா” என அழைத்து நிறுத்தினார்.. “கிருபா சார்ஜ் எடுத்து கொடும்மா” என்றார்.. பேத்தியை பார்த்து.
ஈசனிடம் திரும்பி “வாங்கிட்டு போ அப்பா.. அவளுக்கு இங்கே வேலையிருக்கு” என்றார்.
ஈசன் “அதானே, உங்க பேத்தியை எதுவும் சொல்லிட கூடாது” என முணுமுணுத்துக் கொண்டே நின்றான் சார்ஜருக்காக.
அவள் அருகில் வந்து கையில் கொடுக்கவும்.. திமிராக ஒரு பார்வை பார்த்து.. “தூக்கி போடு.. கிட்ட வந்திடாத..” என எரிச்சலாக முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு, அவளுக்கு மட்டும் கேட்க்குமாறு மொழிந்தான்.
கிருபாவிற்கும் இருந்த டென்ஷனில் “என்..ன இப்போ.. உங்களுக்கு.. இங்க நடக்கிறது தெரியாம” என புலம்பிக் கொண்டு திரும்பி சென்றாள்.
ஈசனுக்கு என்னமோ போலானது.. தன் கோவத்தை அவள் ஏற்றுத்தான் பார்த்திருக்கிறான்.. போனில் சண்டை போடும் போது கூட.. இரண்டு மணி நேரத்தில் அவளே அழைப்பாள்.. மாக்ஸ்சிமம் அவள் உறங்கும் முன் அழைத்திடுவாள்.. அவனை. என்னாச்சு என்றோ, சாரி என்றோ தானே பேசி ஈசனின் கோவத்தை தாங்கித்தான் நிற்பாள். இன்று, நேரில் வந்திருக்கிறேன்.. என்ன ஆகிற்று என மனது அலைபாய தொடங்கியது ஈசனுக்கு.. அவள் செல்லுவதை பார்த்துக் கொண்டே நின்றான்.