Advertisement

அத்தியாயம் – 9
     “என்ன சஹி உங்க அப்பா உங்க அம்மா மேல அவ்ளோ லவ் வச்சிருந்தாருன்னு சொன்னீங்க. இப்போ என்னங்க பணத்து மேல லவ் ஆகிட்டாரு” என வருத்தமாக சொன்னான் வெற்றி.
     என்னதான் அவன் வருத்தம் தெரிவித்தாலும் வெற்றியின் குரலில் சிரிப்பு தான் வந்தது சஹியிற்கு. பழைய நினைவுகள் தந்த தாக்கத்தை இவனின் பேச்சு சற்று ஆற்றியது என்றால் மிகையில்லை.
     அவனை புன்னகையுடன் கண்ட சஹி “ஆமா வெற்றி எங்க அப்பா ஒருத்தர் மேல‌ லவ் வச்சா எப்பவும் எக்ஸ்ட்ரீம் தான். பர்ஸ்ட் எங்க அம்மா அப்புறம் இந்த பணம்” என்றாள்.
     அவள் முகத்தை பார்த்து “என்னங்க சிரிக்கிறீங்க” என்றான் பாவமாய். அதே நேரம் விஜய் அங்கே வெற்றியை கோபமாக முறைத்து கொண்டிருந்தான்.
     அவனின் முறைப்பை அப்போது தான் பார்த்த வெற்றி “என்ன மச்சான் முறைக்கிற. நான் என்னடா பண்ணிட்டேன்” என்றான் ஒன்றும் புரியாது. விஜய் எதுவும் சொல்லவில்லை.
     ஆனால் அவன் பார்வை ‘உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்” என்றது. ‘ஐயையோ இவன் என்ன இந்த பார்வை பார்த்து வைக்கிறான். உசுரு முக்கியம் டா வெற்றி’ என மனதினுள் பேசியவன் நன்றாக தள்ளி ஜன்னலின் ஓரம் அமர்ந்து கொண்டான்.
     இவர்களை யாரும் பார்க்கவில்லை. அதே நேரம் சஹியும் தங்கள் வாழ்க்கையில் இருந்த வசந்தங்கள் எப்படி நீங்கியது என அந்த நாட்களை பகிர்ந்து கொண்டாள்.
     “அன்னைக்கு வெளியூர் போக ஆரம்பித்தவர் தான் அங்கிள்‌. அதை தொடர்ந்து நிறைய நிறைய பிஸினஸ் டீல்ஸ்‌. பெரிய பெரிய கம்பெனியோட டை-யப்ஸ்.
      அதோட எங்க கம்பெனியும் பெரிய கம்பெனியா உருவாச்சு. பட் அதெல்லாம் எங்க அம்மாகிட்ட அப்பா ஷேர் பண்றதையே விட்டுட்டார். அதுக்கு பதிலா என்கிட்ட ஷேர் பண்ண ஆரம்பிச்சார்.
     எனக்கு அதுலாம் என்ன அப்படின்னு கூட புரியாது. பட் அப்பா பெரிய பிஸ்னஸ் பண்றார் அப்படின்ற அளவுல புரிஞ்சுது. ஆனா எனக்குள்ள அவர் பிஸனஸை விதைச்சிருக்காருன்னு எனக்கு புரியாமையே போய்ருச்சு அங்கிள்‌” என்றாள் வருத்தமாய்.
     இப்போதும் அடங்காத வெற்றி “ஏங்க சஹி அப்போ ராஜாராம் சாராலை தான் உங்களுக்கு பிஸ்னஸ் மேல இன்ட்ரஸ்ட் வந்திருக்கு. சோ அதான் நீங்க உங்க அப்பா பிஸ்னஸ பார்த்தீங்களா?” என்றான் பட்டென்று.
     அவன் கேள்வியில் பட்டென்று திரும்பி பார்த்த விஜய் முறைத்தான். அப்போது தான் ‘ ஐயையோ நானே உளரிக் கொட்டிட்டேன் போலையே. கண்டு பிடிச்சிருவாங்களோ?’ என்று பீதியுடன் சஹியை கண்டான்.
     ஆனால் தன் எண்ணத்தில் இருந்த சஹியோ அவனுக்கு எப்படி தன் அப்பாவின் பெயர் தெரிந்தது, தான் தன் தந்தையின் தொழிலை பார்த்தது இவனுக்கு எப்படி தெரியும் என எல்லாம் யோசித்து பார்க்கவில்லை.
     அதனால் “இல்லை வெற்றி. எனக்கு எங்க அப்பான்னா ரொம்ப பிடிக்கும். சோ அவர் என்ன சொன்னாலும் கேட்டுப்பேன். அது எனக்கு பிடிக்குதா பிடிக்கலையா அப்படின்னு நான் இதுவரைக்கும் யோசிச்சே பார்த்தது இல்லை” என்றாள் வெறுமையான குரலில்.
     அதை கேட்டவர்களின் மனநிலையை சொல்லவும் வேண்டுமா. ‘இந்த சின்ன பெண்ணிற்கு ஏன் இவ்வளவு சோதனை’ என்றே வருந்தினர்.
     எவ்வளவுக்கு எவ்வளவு ராஜாராம் தன் குடும்பத்தை விட்டு விலகி செல்ல முடியுமா அவ்வளவு தூரம் சென்றிருந்தார். அதனால் மாறியது என்னவோ சஹியின் அன்னையின் குணம் தான்.
     இவ்வளவு நாட்கள் ஆசிரமம் சென்று கொண்டிருந்தவர் தான். எப்போது ஒரு சண்டையின் போது அவரை திசை திருப்ப தான் ஆசிரமம் ஏன் போக சொன்னார் என உளறினாரோ அப்போதில் இருந்து அவர் அங்கே செல்வதையும் விட்டுவிட்டார்.
     இப்போது முழு நேரமும் வீடே கதி என கிடந்த சஹியின் தாய் மனது சாத்தானின் உறைவிடமானது. இப்போது எல்லாம் ராஜாராம் எந்த நேரம் வந்தாலும் சண்டை என்ற நிலை தான்.
     ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி சண்டை இட துவங்கினார். முதலில் குழந்தைகள் இருக்கிறார்கள் என எண்ணி அறைக்குள் மட்டும் இருந்த சண்டை நடு ஹாலிற்கு வந்தது.
     கணவருடன் சண்டையிடும் தீவிரத்தில் தன் பிள்ளைகளை மறந்து தான் விட்டார் போல்‌. ஆனால் இவை எல்லாம் பார்க்கும் அந்த சிறு பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும் என யோசிக்க மறந்தனர் இருவரும்.
     “சே. வீட்டுக்கு வரவே பிடிக்கல. எப்போ வந்தாலும் சண்டை சண்டை. உன்னையா காதிலிச்சு கல்யாணம் செஞ்சேனு நினைச்சா என்னை நினைச்சு எனக்கே கோபமா வருது” என்று கோபமாய் பேசி சென்றுவிட உடைந்து விட்டார் சஹியின் தாய்.
     இரவு முழுவதும் அழுதே கரைந்தார். இதற்கு பிறகு நிலைமை இதே போல் தான் இருந்தது. ராஜாராம் வரவே சண்டையிடுவார் சஹியின் தாய். இதுவே தொடர இவரும் சண்டையை அதிகப்படுத்துவார்.
     பின் தூங்கும் பிள்ளைகள் இருவரையும் பார்த்து சென்றுவிடுவார். அலுவலகமே கதி என வீட்டை மறக்க இன்னும் இன்னும் வேலையை இழுத்து கொண்டார்.
     “ஆபீஸே கதின்னு இருந்தார் அங்கிள்‌. ஆரம்பித்ததுல எங்களுக்கு தெரியாம செஞ்ச சண்டையை நாங்க இருக்கும் போதும் போட ஆரம்பிச்சாங்க.
     அதை பார்த்தா எங்க மனநிலை எப்படி இருக்குன்னு அவங்க யோசிக்கவே இல்லை. அப்புறம் நான் அவர் சொன்ன கோர்சையே காலேஜ்ல எடுத்து படிச்சேன். அவர் சொன்னபடி எங்க ஆபிஸ்க்கே வேலைக்கு வந்தேன்” என்க
     “அப்போ இதுவரைக்கும் உன் லைஃப்ல உன் விருப்பப்படி என்ன தான் நீ செஞ்சிருக்க?” என்றான் விஜய் சற்று கோபம் ஏறிய குரலில். கோபத்தில் மரியாதை எல்லாம் காற்றில் பறந்தது.
     ‘என்னதான் அப்பா மீது பாசம் மலை அளவு இருந்தாலும் தன் வாழ்வில் பிடித்ததை செய்ய கூடாதா?’ என்ற கேள்வியே விஜயின் மனதில் மேலே எழுந்தது.
     அவன் கோப முகத்தை புரியாது பார்த்தாலும் “இல்லை. அப்பா சொல்றபடி தான் செய்வேன். சின்ன வயசுல இருந்தே பழகி போச்சு. என்ன பண்ண தங்க கூண்டுல இருக்க கிளி தான் விஜய் நான்‌” என்று அவள் சொல்லும் போதே கேட்பவர்க்கு மனது வலித்தது.
     “ஆனா நான் அதை எதுவும் என் தங்கச்சிய நெருங்க விட்டது இல்லை. அவ விருப்பப்படி தான் அவளை நான் செயல்பட விட்டேன். அப்பா என்னமோ நான் தான் எல்லாத்தையும் செய்யனும்னு எதிர்பார்த்தார்.
     அதனால ஸ்ரேய அவ இஷ்டபட்டபடி இருக்க மாதிரி நான் பார்த்துக்கிட்டேன்” என்றாள் பிரகாசமான முகத்தோடு.
     “அப்படின்னாலும் உனக்கு பிடிச்ச சின்ன சின்ன விஷயத்தையாவது நீ பண்ணிருக்கலாமே சஹி. ஏன்மா உன்னையே இவ்ளோ கஷ்டபடுத்திக்கிற” என வருத்தமாய் வார்த்தைகள் வந்தது விஜய்யிடம் இருந்து.
     “அது என்னமோ தெரியலை விஜய். என் அப்பா டிரைனிங் ரொம்ப பவர்புல்னு நினைக்கிறேன். நான் நினைச்சாலும் மாற முடியலை” என்று உயிர்ப்பில்லாத சிரிப்பை உதிர்த்தாள்.
     அதோடு ‘இதைப்பற்றி பேச வேண்டாமே’ என ஒரு கெஞ்சும் பார்வை வேறு சஹி வீச அதற்கு மேல் விஜயும் அதை பற்றி பேசவில்லை. ஆனால் அவர்களின் விழி பேசும் மொழியை கண்ட வெற்றி தான் ‘பே’ வென முழித்துக் கொண்டிருந்தான்.
     “எங்க ஆபிஸ்க்கு போன முதல் நாள் இன்னும் நியாபகம் இருக்கு. அந்த ஐச்சு மாடி கட்டிடத்தை பார்த்து என்னால‌ நம்பவே முடியல அது எங்க ஆபிஸ்னு. நான் அந்த பில்டிங்கையே ‘பே’ன்னு பார்க்க
     அந்த பக்கமா போன யாரோ என்னை பார்த்து “என்ன ஆபிஸ்க்கு புதுசா. என்னமோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி நிக்கிற. உள்ள போம்மா’ அப்படின்னு சொல்லிட்டு போனாங்க” என்றவள் அந்த நாளின் நிறைவில் சட்டென்று சிரித்து விட்டாள்.
     சஹி இதை சொன்னவுடன் விஜய் திரும்பி வெற்றியை தான் பார்த்தான். அவனிடம் ‘நீயே காட்டி கொடுத்துடாத டா பிளீஸ். ஐம் யுவர் பெஸ்ட் பிரண்ட்’ என்று வாயை மட்டும் அசைத்தான் வெற்றி.
      அவன் செய்கையை பார்த்து விஜய் வந்த புன்னகையை உதட்டை கடித்து அடக்கி கொண்டான். ‘பிளீஸ் டா மச்சான்’ என்று கண்களால் கெஞ்சினான். அதில் ‘பொழச்சு போ’ என்றுவிட்டான்.
     “எங்க அப்பா என்கிட்ட நம்ம ஆபீஸ் பெருசு பெருசுன்னு சொல்வார். ஆனா அவ்ளோ பெருசா… இருக்கும்னு நானும் நினைச்சு கூட பார்த்தது இல்லை.
     எங்க முதல் ஆபிஸ் திறந்தப்ப போனது அங்கிள்‌. அப்போ அது சின்ன ரூம் அங்கிள்‌. அதை அவ்ளோ பெருசா வளர்த்தது எங்க அப்பாவோட உழைப்பு தான்.
     அதை நான் ஒத்துக்கிறேன். ஆனா அதுக்காக சொந்த குடும்பத்தை அவரு ஒதுக்கி வச்சதை தான் எங்களால தாங்க முடியலை. அப்போ எனக்கு மனசுல தோனின ஒரே விஷயம்
     அட்லீஸ்ட் ஒரு ஒரு மணி நேரம் எங்க கூட ஸ்பென்ட் பண்ண முடியாம இவ்ளோ பெரிய பிஸ்னஸ் பண்ணி என்ன யூஸ்? அப்டின்னு” என்றாள் நியாயமாக.
     அவளின் கேள்வியின் நியாயம் மற்றவர்களுக்கு புரிய தான் செய்தது. ஆனால் புரிய வேண்டிய மனிதனோ ஒரேயடியாக போய் சேர்ந்துவிட்டாரே!
-பயணம் தொடரும்

Advertisement