Advertisement

அத்தியாயம் – 8
     சஹியின் அம்மா பேசிய பின் அவர்களின் தந்தையின் செயலில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது போல் தான் இருந்தது. ஆனால் அந்த மாற்றம் எல்லாம் சில நாட்கள் தான் நீடித்தது.
     பணம் என்ற போதை அவ்வளவு எளிதில் ஒரு மனிதனை விட்டு விலகி விடுமா என்ன‌. சஹியின் அன்னை சொற்களாலும் அவளின் தந்தையை சில நாட்களுக்கு மேல் தாங்கி பிடித்து வைக்க முடியவில்லை.
     மறுபடியும் ஒரு நீண்ட தேடல் பணத்திற்காய். இப்போது எல்லாம் சஹியின் தாய் என்ன சமாதானம் செய்ய முயன்றாலும் சமாளித்து‌ அவர் கூற்றை ஒத்துக் கொள்ள செய்து விடுவார்.
     சஹியிம் அன்னை இப்படி பேசுவது நச்சரிப்பாய் தெரிய அவரின் கவனத்தை திசைத் திருப்பும் பொருட்டு அவரை சமூக சேவையில்‌ ஈடுபட வைத்தார் அவர் கணவர்.
     அவரின் எண்ணம் புரியாமல் சஹியின் தாயோ அந்த ஆதரவில்லா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருந்த மனிதர்களுக்கு உதவ விருப்பத்துடனே இசைந்தார்.
     எனவே அதில் தன் கணவரின் செய்கைகளை சற்று மறந்து விட்டார் என்றே சொல்லலாம். அது அவரின் கணவருக்கு வசதியாக போய்விட சுதந்திரமாக தன் தொழில் முன்னேறினார்.
     அதே போல் யாருக்கு உதவி என்றாலும் முன்னே நின்று செய்து தருவார் சஹியின் தாய். அதற்கு செலவிடுவதை அவர்களின் தந்தையும் கணக்கு பார்க்காமல் தர அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
     இப்போது எல்லாம் எந்த நேரமும் பணம் பணம் என அலைந்து கொண்டிருக்கும் அவரின் கணவர் எப்படி இவ்வளவு பணத்தை பிறக்கு உதவ தருகிறார் என உணரவில்லை அவர்.
     எதிலும் லாபம் இல்லாமல் நுழைய மறுக்கும் சஹியின் தந்தையின் எண்ணமோ இப்படி உதவி செய்வதால் மனைவியின் தலையீடு இல்லை.
     அதேபோல் புண்ணித்திற்கு புண்ணியமும் ஆச்சு அரசிடம் வரியில் இருந்து விலக்கும் ஆச்சு என்றே எண்ணினார். அதற்காக கருப்பு பணம் சேர்த்து வைப்பவரும் இல்லை அவர்.
     பணம் சம்பாதிப்பதில் சில சமயம் சேர்த்த பாவத்தை இப்படி கழித்து கொள்ளலாம். அதே போல் நல்ல மனிதர் என்ற பெயரும் கிட்டும் என சராசரி தொழிலதிபராய் எண்ணினார்.
     அவரின் எண்ணத்திலும் தவறு இல்லையே. அவர் தரும் பணத்தால் பல குழந்தைகள் வயிறு நிரம்பவே செய்தது. ஏனோ அந்த பிஞ்சு முகங்களை காணும் போது சஹியுடைய தாயின் மனம் நிரம்பி தான் போகும்.
     நாட்கள் இப்படி அமைதியாகவே கடந்தது. ஆனால் அவரின் அமைதியும் கடக்கும் நாளும் வந்தது. அன்றென பார்த்து ஸ்ரேயாவிற்கு நல்ல காய்ச்சல்.
     இரவு முழுதும் வலியிலும் சோர்விலும் அனத்திக் கொண்டே இருந்தாள் ஸ்ரே. தீடீரென அவளின் உடல் காய்ச்சலில் தூக்கி தூக்கி போட தாயோ பயத்தில் பதறி வெளியூர் சென்ற தன் கணவனுக்கு அழைக்க வழி தேடினார்.
     ஆம் வேலை சம்மந்தமாக அவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். ஆனால் அவரை அழைப்பில் பிடிக்க முடியவில்லை. இன்று போல் அன்றைய நாள் தொலைதொடர்பு சாதனங்கள் இல்லையே.
      இரவு முழுவதும் அவருக்கு பயத்திலும் அழுகையிலும் தான் கழிந்தது. காலை விடிந்தவுடன் மருத்துவமனை அழைத்து சென்று விட்டார். மருத்துவர் பார்த்துவிட்டு அவரை திட்டி தீர்த்தார்.
     குழந்தைக்கு இவ்வளவு காய்ச்சல் வரும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று. அதன்பின் ஊசி மருந்து மாத்திரை என எல்லாம் முடிந்து மாலை வரை மருத்துவமனையிலே குழந்தை ஸ்ரேவை வைத்திருந்னர்.
     சஹியும் அவள் தாயும் ஸ்ரேயாவோடு மாலை வரை மருத்துவமனையிலே இருந்தனர். காய்ச்சல் பாதி குறைந்த பின் தான் மாலை போல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
     வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு உணவை கொடுத்து ஸ்ரேவிற்கு மாத்திரை மருந்து கொடுத்து இருவரையும் உறங்க வைத்து வெளியே வந்த நேரம் தான் அவர்களின் தந்தை வந்து சேர்ந்தார்.
     வீட்டில் நடந்த எதையும் அறியாத அவரோ தொழிலில் தனக்கு இன்று கிட்டிய வெற்றியை எண்ணி மகிழ்வுடன் வந்து அவர் மனைவியிடம் இனிப்பை நீட்டினார்‌.
     அதை தொட்டு கூட பார்க்கவில்லை அவர். அதையெல்லாம் கவனிக்காத மனிதர் தான் எவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தி வந்துள்ளேன் என தன் போக்கில் பேசியபடி இருந்தார்.
     “பிள்ளைகள் எங்கே?” என்றார் முடிவாக அவர்களை பார்க்கும் எண்ணத்தில். அதற்கு “அங்க இன்னும் செத்து போகலை” என்றார் வெடுக்கென்று.
     அவரின் இந்த பதிலை எதிர்பாராத அவர் கணவர் திக்கென்றது திரும்பி தன் மனைவியை பார்த்தார்.‌ அப்போது தான் அவர் முகத்தில் இருந்த அதீத கலைப்பையும்‌ அவரின் உணர்வற்ற பார்வையையும் கண்டார்.
     சூழ்நிலை எதுவோ சரியில்லை என்பதை தாமதமாக உணர்ந்த அவர் “என்னமா ஆச்சு?” என்றார் உள்ளே போன குரலில். இப்போது அவர் மனதில் இருந்த கோபத்திற்கு எல்லாம் கணவர் வடிகாலாகி போனார்.
     “நாங்க இருந்தா உங்களுக்கு என்ன செத்தா உங்களுக்கு என்ன. உங்களுக்கு எங்களை விட பணம் தான் இப்போல்லாம் பெருசா போச்சுல. இன்னைக்கு ஸ்ரேயா செத்து பிழைச்சிருக்கா.
     இராத்திரி காச்சல்ல அவ உடம்பு தூக்கி தூக்கி போடறப்ப நான் உயிரோட செத்தேன். இராத்திரி நேர்த்தில எந்த ஆஸ்பத்திரி திறந்து இருக்கும்னு தெரியாம விடிய விடிய உயிரை கையில பிடிச்சிட்டு உக்காந்திருந்த எனக்கு தான் தெரியும்.
     ஒரு நாள் பூரா ஆஸ்பத்திரியில வச்சு அனுப்புறாங்கனா அவளுக்கு எவ்ளோ காச்சல் இருந்திருக்கும். ஆனா நாங்க என்ன பண்ணுறோம் நல்லா இருக்கமா உயிரோட இருக்கமா செத்தமான்னு கூட தெரியலை.
     நாங்க சாப்பிட்டமா எப்படி இருக்கோம்ன்னு கூட கேக்க நேரமில்லாத அளவுக்கு உங்களுக்கு உங்க தொழில் தான் முக்கியமா போயிருச்சு இல்லை” என்று மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டி தீர்த்தார்.
     அப்போது தான் தன் சின்ன மகளுக்கு உடல் நிலை சரியில்லை என புரிந்து கொண்டவர் வேகமாக பிள்ளைகளின் அறை நோக்கி சென்றார்.
     அங்கே வாடிய மலராய் கிடந்த ஸ்ரேவை கண்டதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக போய் விட்டது. மெல்ல தலையை திருப்பி தன் பெரிய மகளை கண்டார்.
     அவளை தனியே தான் படுக்க வைத்திருந்தார் தாய். ஸ்ரேவின் காய்ச்சல் இவளுக்கு ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில். அவளும் இன்றைய நாளின் நிகழ்வுகளால் சோர்ந்து தெரியவே இருவரின் தலையையும் மெதுவாக வருடி கொடுத்தார்.
     பின் வருத்தத்துடன் தன் மனைவியை நோக்கி வந்தார். “இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லையே மா” என்றார் பாவமாய். அவரின் முகத்தை பார்த்து என்ன நினைத்தாரோ ‘ம்ம்’ என்று தலை அசைத்தார்.
     மறுநாள் சஹியின் தந்தை இனி வெளியூர் எல்லாம் செல்ல கூடாது என அவள் தாய் சொல்லிக் கொண்டு இருக்க அவர் பேசாது அமைதியாக இருந்தார்.
     ஏனெனில் அவர் பெரிய கம்பெனி ஒன்றோடு இனைத்து அரசாங்க டெண்டர் ஒன்றை வெளியூரில் எடுத்து உள்ளார். அது மட்டும் வெற்றி பெற்றால் அவர் இத்தனை நாட்கள் சம்பாதித்த பணத்தை இந்த ஒரே வேலையில் சம்பாதித்து விட முடியும்.
     அதற்காக தான் யோசித்து கொண்டிருந்தார். சரி மெதுவாக சொல்லி புரிய வைப்போம் என மனதில் நினைத்துக் கொண்டார். சில நாட்கள் அப்படியே போக இவர் வெளியூரில் நடக்கும் வேலையை காண நேரில் செல்ல வேண்டியதாக வந்தது.
     அவர் மெதுவாக மனைவியிடம் சொல்ல அவர் திட்டி தீர்த்து விட்டார். ஆனால் சஹியின் தந்தை தன் முடிவில் மாற்றம் இல்லை என்பது போல் நிற்க மனதே விட்டுவிட்டது அவளின் அன்னைக்கு.
     அவர் மேலும் சண்டை போட போட அவரின் மனதில் வீம்பு வந்தது. ‘நான் யாருக்காக சம்பாதிக்கிறேன். இவர்களுக்காக தானே.
     அதை புரிந்து கொள்ளாமல் இப்படி என் முன்னேற்றத்துக்கு தடை விதிக்கிறாளே’ என மனதில் நினைத்தவர் செல்வதென்று முடிவு செய்தார். அதன்படி சென்றும் விட்டார்.
     ‘தான் இவ்வளவு தூரம் சொல்லியும் சென்று விட்டாரே’ என எண்ணி கொண்டிருந்த சஹியின் தாய் அவர் மீது வெறுப்பை வளர்க்க ஆரம்பித்தாள்.
     ஒரு காலத்தில் இவர்கள் காதலித்தார்களா என கேட்கும் படி தான் அதன் பின்னான நிகழ்வுகள் நடந்தேறியது. பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இணங்க அதன் வேலையை கணக் கச்சிதமாக செய்ய துவங்கியது‌. அதன் தாக்கங்கள் பிள்ளைகளையும் வந்து சேர்ந்தது.
-பயணம் தொடரும்

Advertisement