Advertisement

அத்தியாயம் – 7
     சஹானா தங்கள் வாழ்க்கையில் கடந்த பக்கங்களை புரட்டி கொண்டிருந்தாள். அவள் கூறியதைக் கேட்ட சோம் மற்றும் லக்ஷ்மி இருவரின் மனதிலும் மிகுந்த ஆர்வம் வந்தது.
     விஜய் வெற்றியும் கூட ‘பார்ரா! எவ்ளோ நல்ல மனுஷனா இருந்திருக்காரு’ என்று தான் பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு சஹி முகத்தில் இடையே ஏற்ப்பட்ட வேதனை தான் குழப்பத்தை ஏற்படுத்தியது.
     ஆனாலும் அவர்கள் எதுவும் கேட்காது அவள் பேச ஆரம்பிக்கவும் அங்கே கவனம் செலுத்தினர். சஹானா மற்றும் ஸ்ரேயாவின் தந்தை அவரின் தொழில் நல்ல முறையில் கொண்டு செல்ல ஆரம்பித்த பின் அவர்களின் வாழ்வும் மேன்மை அடைந்தது.
     கொஞ்சம் கொஞ்சமாக பணம் பெருக துவங்க வாடகை வீட்டில் இருந்தவர்கள் நல்ல பெரிய இடமாகவே பார்த்து வாங்கி அவ்வளவு ஆசையாக அவர்களின் சொந்த வீட்டை கட்டி முடித்தனர்.
     அப்போது சிறுமிகளாக இருந்த சஹியும் ஸ்ரேயும் அந்த புது வீட்டை கண்டு ஆர்ப்பரித்து தீர்த்தனர். அவர்களின் ஆர்ப்பாட்த்தை கண்டு பெற்றோர்களின் மனமும் பூரித்து போனது.
     சஹியின் தந்தைக்கு அவர் இத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அந்த வீட்டை காணும் பொழுது பனியாய் விலகி செல்வது போல் தான் இருந்தது.
     அவர்கள் வாழ்வு ஏற்றம் காண, மனிதர் வாழ்வில் முன்னேற்றம் மட்டுமே இருக்குமா என்ன. சிலபல சரிவுகளும் இருந்திடுமே! அதே போல் தான் இவர்கள் வாழ்வும் காண ஆரம்பித்தது.
     “பணம்!! இது அவ்ளோ பெரிய போதைன்னு நிறைய பேரு சொல்வாங்க. அந்த பணம் நம்மலை பாதிக்காதபடி நம்மோட இயல்பில எப்பவும் மாறாம இருக்கனும் இருந்து காட்டனும்.
     ஆனா அது நம்மளை அப்படி ஒன்னும் பாதிக்காது. அது எனக்கு நல்லாவே தெரியும். எங்க பசங்க நீங்க அப்படி தான் இருக்கனும். புரியுதா செல்லங்களா” இது தான் வழக்கமாக சஹியின் அன்னை கூறும் கூற்று.
     சிறு வயதில் இருந்தே தங்கள் பணத்தின் செழுமையில் வளரும் பிள்ளைகள் வழி தவறாது இருக்க அவள் அம்மா கூறும் போதனைகள் அதிகம். அந்த வார்த்தைகள் இன்னும் சஹியின் காதில் கேட்பது போல் இருந்தது.
     பிள்ளைகளை பார்த்து கொண்ட சஹியின் தாய் அந்த பிள்ளைகளின் தந்தையை பற்றி சிந்திக்க மறந்தார். சிந்திக்க மறந்தாரா இல்லை அவர் கணவர் மேல் அதீத நம்பிக்கை வைத்திருந்தாரா அது அவரே அறிவார்.
     இதையே தான் சஹியும் யோசித்திருந்தாள் ‘எங்களுக்கு செய்த அறிவுரைகளில் கொஞ்சம் அப்பாவுக்கும் கொடுத்திருக்கலாமே’ என.
     ஆனால் அவர் அதை உணரும் தருணம் காலம் எல்லாம் கடந்து விட்டிருந்தது. சிறிது நேரம் அமைதியாக தன் எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தாள் சஹி.
     இப்போது பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் “பணம் ஒரு மனுஷன எந்த அளவுக்கு ஆட்டி படைக்காம்ன்னு பர்ஸ்ட் எனக்கு புரியலை அங்கிள்” என பூடகமாக ஆரம்பித்தால் சஹி.
     “எங்க அப்பா முதல்ல எங்களுக்காகன்னு தான் பணம் சம்பாதிக்க நினைச்சாரு. அது மாதிரி அவர் சம்பாதிக்கவும் செஞ்சார். கொஞ்சம் கொஞ்சமா வசதி பெருகுச்சு.
     அதோட பணம் சம்பாதிக்கனும் அப்படிங்கற என் அப்போவோட எண்ணமும். கையில பணம் அதிகமா புலங்க தொடங்க ஆரம்பிச்சப்ப அது இன்னும் வேணும் நிறைய வேணும்ன்னு பணத்தை சுத்தியே அவர் எண்ணமும் போய்ருக்கு.
     எங்க அப்பா பணத்துக்கு பின்னாடி ஓட ஆரம்பிச்சதை எங்க அம்மா ஆரம்பத்தில‌ கவனிக்கலை. ராத்திரி பகல்னு பார்க்காம வெறித்தனமா வேலை பார்த்திருக்கார்.
     நான் பார்க்க என் அப்பா மாதிரி இருப்பேன். ஆனா ஸ்ரே பார்க்க என் பாட்டி மாதிரி. நாங்க ரெண்டு பேருமே அவருக்கு ரொம்ப செல்லம்.
     அதே மாதிரி ஸ்ரே சின்ன பொண்ணுன்னு நினைச்சாரோ என்னவோ எங்க பிசினஸ் வாரிசா என்னை கொண்டு வரனும்னு முடிவு பண்ணிட்டார்” அதற்காக அவர் செய்ததில் தான் இழந்ததை நினைத்து வருந்தினாள்.
     சஹி தொடர்ந்தாள். “அதனால‌ நான் தனியா இருக்கப்ப எல்லாம் என்னை கூப்பிட்டு வச்சு பேசுவாறு. நாங்க என்ன பிசினஸ் பண்றோம். எவ்ளோ பெரிய கம்பெனி வச்சிருக்கோம் அப்டின்னு.
     என் அம்மாக்கு பணத்துக்கு பின்னாடி ஓடுறது சுத்தமா பிடிக்காது தேவைக்கு மட்டும் சம்பாதிச்சா போதும்னு சொல்வாங்க. அதனால அவர் என்கிட்ட பேசறது என் அம்மாக்கு தெரியாம பாத்துக்கிட்டார்.
      அதோட வாழ்க்கைக்கு பணம் ரொம்ப தேவை, பணம் இருந்தா எது வேணா செய்யலாம்னு சொல்வாரு. அவர் உலகத்தை எந்த கண்ணோட்டத்தில‌ பார்த்தாரோ அதே மாதிரி நானும் பார்க்கனும்னு எனக்கு சின்னதுல இருந்தே டிரைனிங் தருவார்.
     மனுஷங்க கிட்ட அவ்ளோ சீக்கிரம் பழக கூடாது. யாரையும் நம்பவும் கூடாது. அவங்க நம்மல ஏமாத்த நிறைய சான்ஸ் இருக்கு. அதனால‌ எல்லாருக்கிட்ட இருந்தும் தள்ளியே இருக்கனும் அப்படின்னு அடிக்கடி சொல்லி என் மனசுல விதைச்சாரு.
     ஸ்டார்டிங்கல அவரை சிலர் ஏமாத்த பார்த்திருக்காங்க. அதை வச்சு அவர் என்கிட்ட சொல்லிருக்கார்” அவர் பேசுவதை உள்வாங்கிய சஹியின்‌ மனதில் பசுமரத்தாணி போல் அவள் தந்தையின் சொற்கள் பதிந்து போனது.
     அவளின் மனது அந்த நாட்களுக்கே சென்று விட்டது. அவள் தந்தையின் சொற்களே அவளை மற்றவர்களிடம் இருந்து விலக்கி வைக்க போதுமானதாக இருந்தது.
     எனவே அவள் ஒரு தனிமை விரும்பி ஆகி போனாள். நண்பர்கள் என யாரையும் தன் அருகே அண்ட விட மாட்டாள். அதனாலோ என்னவோ ஸ்ரேயாவின் மீது தங்கை என்பதை தாண்டி தோழமையும் வலுப்பெற்றது.
       அவள் இதுபோல் எல்லாரிடமும் இருந்து ஒதுங்கி நிற்பதை கண்டு குழம்பிய அவள் அன்னை அவளுக்கு அறிவுரைகள் வழங்கி தான் பள்ளிக்கு அனுப்பி வைப்பார். ஆனால் பலன் தான் கிட்டவில்லை. சஹி தனித்தே நின்று விட்டாள்.
     சஹியின் செய்கைகளை கூறி அவர் தன் கணவரிடம் புலம்பும் நேரம் அவருக்கு சமாதானம் சொல்லி தேற்றினாலும் தன் பிள்ளை தன்னுடைய பேச்சை கேட்டு நடந்து கொள்கிறாள் என மனத்திற்குள் கர்வப்பட்டு கொண்டார்.
     அவர் சொல்லிற்கு இணங்க சஹியும் ஒவ்வொரு செயலும் செய்யவே அவளை யாராலும் வெல்ல முடியாது என தகப்பனாக மகிழ்ந்து கொள்வார்.
     ஆனால் குருவி தலையில் பனங்காய் வைப்பது அவ்வளவு ஒன்று அந்த குருவிக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்பதை மறந்து போனார் அந்த தொழிலதிபர்.
     ஆம் சஹியின் மனதிலும் அந்தந்த வயதிற்கான ஆசைகள் நண்பர்கள் வேண்டும் என்ற எண்ணம் எல்லாமே இருக்க தான் செய்தது. அதே சமயம் அவள் தந்தை தந்த போதனையின் முடிவில் அவளின் மனம் வீட்டினரை தவிர்த்து மற்றவர்களை நம்ப தயங்கியது.
     அதுவே அவள் மனதை உள்ளே இறுகவும் செய்தது.‌ என்னதான் பிள்ளைகளை மட்டும் பார்த்து வந்தாலும் ஒரு கட்டத்தில் சஹியின் அம்மாவிற்கு அவர் கணவரின் செயல்கள் மாறுபட்டு தெரிந்தது.
     முன் போல் அவர் குடும்பத்துடன் நேரம் செலவு செய்யவில்லை என்ற மட்டில் புரிந்து கொண்டவர் இது வரை வேலை அதிகம் என எண்ணினார்.
      ஆனால் குடும்பத்தோடு கூட செலவு செய்யாமல் பணம்‌ சம்பாதிக்க உண்மையில் வருத்தம் தான் கொண்டார் அவள் தாய்.‌
     ஒரு நாள் அவர்‌ வரும் நேரம் வரை காத்திருந்து பேச அவரின் பணம் சம்பாதிக்கும் எண்ணம் புரிந்து போனது.
     “இங்க பாருங்க நமக்கு தேவைக்கு அதிகமாவே இப்போ பணம் இருக்கே. இன்னும் உங்களை ஏன் கஷ்டப்படுத்திக்கிறீங்க. பாப்பா ரெண்டு பேரும் உங்க முகத்தை பார்த்தே ஒரு வாரம் ஆகுது.
     ஏங்கி போய்டாங்க பிள்ளைங்க. ஸ்ரே குட்டி தினமும் அம்மா இன்னைக்காவது அப்பா சீக்கிரம் வருவாரா? அப்டின்னு கேக்குறா. நமக்கு பணம் போதும் பா.
     கொஞ்சம் எங்களோடையும் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்களே” என்று முடிந்தளவு தன்மையாகவே கூறினார். என்றும் இல்லாது மனைவி இன்று இப்படி கூறவும் அவருக்கும் மனது என்னவோ போல் ஆக
     “சாரி மா. உங்களை ஏங்க வைக்க நான் எதுவும் செய்யலை. நம்ம புள்ளைங்க வாழ்க்கை நல்ல இருக்கனும்னு தான் இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிறேன். நாம‌ சின்ன வயசுல பட்ட கஷ்டத்தை அவங்க நினைச்சு கூட பார்க்க கூடாது.
     அது மட்டும் இல்ல உன்னை அப்படி ராணி மாதிரி பார்க்கனும்னு நான் ஆசைப்படுறேன். அதான் இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் நான் நினைச்ச மாதிரி நம்ம கம்பெனிய இன்னும் பெரிசாக்கின அப்புறம் என் ஓட்டத்தையும் நிறுத்திக்கிறேன்” என அவரும் தன்மையாக பதில் அளித்தார்.
     இந்த சுமூக நிலை எவ்வளவு நாள் வரப்போகுது என்பதை போல் பணமும் இவர்களை கண்டு சிரித்து நின்றதோ?
-பயணம் தொடரும்

Advertisement