Advertisement

அத்தியாயம் – 6
     அந்த இருட்டை வெறித்தவாறு சோகமே உருவாய் நின்றிருந்தாள் சஹானா. மனதில் உள்ள காயங்கள் எல்லாம் காற்றின் வழி கடந்து செல்வதாய் எண்ணி கதவில் சாய்ந்து இருந்தாள்.
      அவளின் சோக சித்திரத்தை கண்டு ஒரு கணம் அவளின் வேதனையை தன் வேதனையாக எண்ணி வருந்தினான் விஜய். பின் மெல்ல அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்‌.
     அவன் அருகே வந்தும் அதை உணராது நின்ற சஹானாவை அழைத்தான் விஜய். ஆனால் அதை கூட கவனிக்காமல் இருளை வெறித்திருந்தாள் சஹி.
     இப்போது சற்று சத்தமாக “சஹானா” என்று அழைத்து அவள் கையை தொட்டான். அதில் திடுக்கிட்டு திரும்பிய சஹி அது விஜய் என்றதும் சற்று ஆசுவாசமானாள்.
     அவள் பார்த்த பின்னும் பேசாமல் அவள் முகத்தையே விஜய் பார்க்கவும் சஹியே “என்ன விஜய்? என்னாச்சு உங்களுக்கு தூக்கம் வரலையா. நீங்களும் இங்க வந்துட்டீங்க” என்றாள் கேள்வியாய்.
     அதன் பின்னர் தன் முக பாவத்தை மாற்றிய விஜய் “ம்ம். ஆமா தூக்கம் வரலை தான். ஆனா நீங்க ஏன் சஹி இங்க நிக்கிறீங்க. நைட் டைம் வேற. எதாவது தப்பா ஆகிற போகுது.
     இங்க இப்போ நிக்கிறது அவ்வளவா சேப் இல்லை. வாங்க” என்று அவளை அழைத்தான். அவன் பேசியதை கேட்டும் சிறிது நேரம் எதுவும் பேசாது அமைதியாக நின்ற சஹி சில நிமிடங்கள் கழித்து “வாங்க போகலாம்” என விஜய்யையும் அழைத்து இருக்கைக்கு சென்றாள்.
     அங்கே ஸ்ரே மட்டும் தூங்கிக் கொண்டிருக்க மற்ற மூவரும் கீழே உள்ள சீட்டில் இவர்கள் வருகிறார்களா இல்லையா என்று பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
     அவர்களை கண்டு “என்ன அங்கிள்‌ ஆன்டி நீங்க தூங்காம இன்னும் இப்படி உக்காந்துட்டு இருக்கீங்க. இப்படி தூங்காமா இருந்தா ஹெல்த்து தான் பாதிக்கும் தூங்குங்க. போங்க வெற்றி நீங்களும் போய் தூங்குங்க” என்று அனைவரையும் தூங்க பனித்தாள்.
     ஆனால் அவர்களோ இவளை அருகே அழைத்தனர். சோம் அங்கிள் “சஹி பாப்பா இங்க வாடாம்மா” என்று பரிவோடு அழைக்க அவரின் குரலில் இருந்த ஏதோ ஒன்றில் அமைதியாக அவர்களின் முன் சென்றாள்.
     அவள் அருகே வரவும் சோம் அவளை தனக்கும் லக்ஷ்மிக்கும் நடுவில் அமர்த்திக் கொண்டார். இவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் விஜையும் வெற்றியும் இவர்களை பார்த்தவாறு அமர்ந்து விட்டனர்.
      கொஞ்ச‌ நேரத்திற்கு முன்பு பார்த்த வரை சோமிற்கு புரிந்தது ஸ்ரேயாவும் சஹானாவும் ஒரு மாதிரி இயல்பு உடையவர்கள் என.
     என்ன ஒன்று ஸ்ரே அழுது ஆர்ப்பாட்டமாக தன் கவலையை காட்டினாள் என்றால் சஹி அமைதியாக அழுது தன் வேதனையை காட்டி இருந்தாள்.
     எனவே அவளிடம் பேசும் அவசியம் உணர்ந்த பெரியவர்கள் அவளை அருகே அமர்த்தி தலையை தடவி கொடுக்க ஆரம்பிக்க இவர்கள் பரிவில் சஹியின் கண்களில் நின்ற கண்ணீர் தானாக மீண்டும் வந்துவிட்டது.
     அவள் அழ துவங்கவும் லக்ஷ்மி அம்மா அவளை மடியில் போட்டு தட்டிக் கொடுத்தார். இப்போது அவள் கண்ணீர் அதிகமாக பெருகியது. ஆனால் அது மௌன கண்ணீராய் வழிந்து சென்றது.
     அவளை அழ விட்ட லக்ஷ்மி அம்மாவும் எதுவும் சொல்லவில்லை. மற்றவர்களும் அவளின் மனதில் இருந்த வேதனைகள் கண்ணீரில் கண்ணீராய் கரையட்டும் என எண்ணிணரோ என்னவோ அவர்களும் இவளை தொந்தரவு செய்யாமலே இருந்தனர்.
     சஹி நன்கு அழுது அவளே சற்று தெளிந்த பின்னரே லக்ஷ்மியின் மடியில் இருந்து மெதுவாக எழுந்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
     சிறிது நேரம் மௌனமே அங்கு ஆட்சி செய்தது. அதை யாரும் கலைக்க விரும்பவில்லை. விஷயம் எதுவானாலும் அது சஹி வாயில் இருந்தே வரட்டும் என அவளை மட்டுமே பார்த்திருந்தனர்.
     அதே போல் சஹியே ஆரம்பித்தாள். “நானும் ஸ்ரேயும் அக்கா தங்கச்சி தான் ஆன்டி” என முதலில் தங்கள் உறவை தெரியப்படுத்தினாள். அதன் பின்னே தங்களை பற்றி தங்கள் வாழ்வில் நடந்ததை பற்றி என அனைத்தையும் சொல்ல தொடங்கினாள்.
     “எங்க அப்பா அம்மா லவ் மேரேஜ். ஊரை விட்டு ஓடி வந்து தான் கல்யாணமே பண்ணிக்கிட்டதா சொல்வாங்க. அவங்களுக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம் எதோ ஒரு கிராமம்‌.
     அவங்க மேரேஜ் முடிஞ்ச அப்புறம் தான் சென்னைக்கே வந்திருக்காங்க அங்கிள். அப்பா எங்க அம்மா மேல அவ்ளோ காதல் வச்சிருந்ததா சொல்லிட்டு இருப்பாரு” எதையோ நினைத்து விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.
     பின் “எல்லாருக்கும் பணம் வந்தா லவ் காணாமா போய்டும் போல ஆன்டி” என்று வருத்தமாக கூறிக் கொண்டாள் இடையே. அவளே மீண்டும் தொடர்ந்தாள்.
     “அவங்க இங்க சென்னைக்கு பர்ஸ்ட்‌ வந்தப்ப ஒரு சின்ன வீட்ல தான் வாடகைக்கு இருந்தாங்களாம். அப்பா நல்லா படிச்சவர் தான். இருந்தாலும் நல்ல வேலை கிடைக்கல. சோ கிடைச்ச வேலைக்கு போய்ட்டு இருந்தாராம்.
     அப்போ தான் நான் பிறந்தேனாம். எனக்கு ரெண்டு வருஷம் கழிச்சு என் தங்கச்சி. ஃபேமிலி ரன் பண்ற அளவு ஓரளவு வருமானம் இருந்திருக்கு. பட் எங்க அப்பாக்கு அது பத்தலை.
     எங்க அம்மாவையும் அப்புறம் எங்களையும் நல்லா வச்சுக்கனும் அப்படின்னு ரொம்ப ஆசைப்பட்டாராம். அதோட லைஃப்ல பெருசா எதாவது சாதிக்கனும்.
     அப்படின்னும் ரொம்ப ஆசையாம்” என்றவள் இதை சொல்லும் போது தன் அன்னையின் முகத்தில் வரும் பலவகை உணர்வுகள் எப்படி வருத்தத்தில் வந்து முடியும் என்பதையும் நினைத்து கொண்டாள்.
     “நாங்க படிக்கிற ஸ்கூல்ல இருந்து நாங்க‌ வாழுற ஒவ்வொரு நாளும் கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுன்னு அவ்ளோ உழைப்பாருன்னு அம்மா சொல்வாங்க.
     ஒரு கட்டத்தில‌ வெறுமனே வேலைக்கு போய் வாங்குற சம்பளம் மட்டும் பத்தாதுன்னு அவருக்கு தோன்றியிருக்கு.‌ அப்போ தான் அவருக்கு ‘நாமளே ஏன் பிசினஸ் செய்ய கூடாது’ அப்படின்னு ஒரு எண்ணம் வந்துருக்கு.
     அப்பா தன் லைஃப் எங்க அம்மா தான்னு எப்போ டிசைட் பண்ணினாரோ அப்பைல இருந்தே அவர் என்னனென்ன செய்யறாரோ அதை அம்மாட்ட கேட்டுட்டு தான் செஞ்சிருக்காரு.
     அது மாதிரி இந்த எண்ணத்தையும் அம்மாகிட்ட ஷேர் பண்ணி என்ன செய்யலாம். ஏது செய்யலாம் அப்படின்னு கேக்க அம்மாவும் அவரு ஆசைக்கு எந்த தடையும் சொல்லை.
     எங்க அப்பா ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனில தான் வேலைல இருந்திருக்கார். சோ அந்த பிசினஸே ஆரம்பிக்கலாம்னு டிசைட் பண்ணி அம்மாவோட நகை அதோட பத்தாததுக்கு பேங்க் லோன் வாங்கி பிசினஸ நல்லபடியா ஸ்டார்ட் பண்ணியிருக்கார்.
     ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டுடார் போல. யாருமே இவருக்கு புராஜெக்ட் தர தயாரா இல்லையாம். புது கம்பெனி நல்லா செஞ்சு தருவாங்களா மாட்டாங்களான்னு டௌட்.
     சோ ரொம்ப திணறி போய் இருந்திருக்கார். வீட்டை பார்க்கனும் அது வேற பிரசர். பழைய வேலைல இருந்திருந்தா குடும்பம் இவ்ளோ கஷ்டபட்டு இருக்காதே அப்படின்னு மனசுல கவலை வேற.
     ஒரு கட்டத்தில‌ சரி போதும் இது பேசாம ஆபீசை இழுத்து மூடிட்டு‌ பழையபடி வேலைக்கே போகலாம் அப்படின்னு கூட டிசைட் பண்ணியிருக்கார் மனுஷன்” என பேசியவள் மனதில் ‘அப்படி‌யே பண்ணியிருக்கலாம்’ என்றே நினைத்தாள்.
     “ஆனா அவரு ஒவ்வொரு தடவை இப்படி சொல்லி புலம்பும் போது எல்லாம் அம்மா தான் அவருக்கு தைரியம் கொடுத்து நம்பிக்கை கொடுத்து அவரை உயிர்ப்போட வச்சிருந்தாங்க.
     அப்போ தான் ஒரு வீடு கட்டுற‌ ஆஃபர் வந்துச்சு. வேலையே இல்லாம இருந்த இடத்தில முதல் வேலை. அப்பா அவ்ளோ சந்தோஷப்பட்டார். முதல்ல வந்து அம்மாகிட்ட தான் ஷேர் பண்ணி இதெல்லாம் உன்னால நான் அப்படின்னு கொண்டாடி தீர்த்திருக்கார் மனுஷன்.
     முதல் வேலை நல்லா பண்ணி தரனும் அப்டின்னு ராத்திரி பகல்னு பார்க்காம வேலை பார்த்தாரு. அவர் நல்ல திறமையானவர் கூட. சோ அந்த வீடு உண்மையாவே அவ்ளோ நல்லா வந்துச்சு. அப்பாக்கு சந்தோஷம் தாங்கலை.
     அந்த வீட்டை பாத்தவங்க ஒருத்தர் அப்படின்னு அடுத்தடுத்து வேலை வந்திட்டே இருந்துச்சு” என்றவள் இங்கே நிறுத்தி மென்னகை புரிந்தாள்.
     “அப்போ நாங்க சின்ன பசங்க தான். ஆனா எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு. எங்க அப்பா ஒவ்வொரு வெற்றிக்கு அப்புறம் எங்க அம்மாவை அப்படி தாங்குவார்.
     எங்ககிட்டையும் எங்க அம்மாவை பத்தி அவ்ளோ புகழ்வார். அப்படியே எங்க வாழ்க்கை இருந்திருக்க கூடாதான்னு மனசு இப்போ ஏங்குது அங்கிள்” என்றவளின் முகம் சொல்லொன்னா வேதனையை அப்பட்டமாக காட்டியது.
-பயணம் தொடரும்

Advertisement