Advertisement

அத்தியாயம் – 5
     மாலை நேர காற்று முகத்தில் மோத டீயை உறிஞ்சி குடித்து கொண்டிருந்தாள் சஹி. அவள் இது போல் பொறுமையாக அமர்ந்து நேரம் செலவிட்டு பல நாட்கள் ஆகிறது.
     தேநீர் வாங்கி வந்த உடன் ரயில் புறப்பட்டு விட அந்த ரயிலின் வேகத்தோடு தேநீரை அருந்துவது அவ்வளவு இனிதாக இருந்தது. அதுவும் பேச்சும் சிரிப்புமாக செல்ல சொல்லவும் வேண்டுமா.
     “தம்பி நாம இப்போ எந்த இடத்தில‌ போய்ட்டு இருக்கோம்?” என்று சோம் அங்கிள் விஜையை பார்த்து கேட்டார். அவனும் தற்போது புத்தகத்தை எடுத்து பை உள்ளே வைத்து விட்டு இவர்களுடன் பேசிக்கொண்டு தான் இருந்தான்.
     அவரின் கேள்வியில் கூகுளை திறந்து “ம்ம் இப்போ விஜயவாடா கிட்ட போய்ட்டோம் அங்கிள்‌. இன்னும் ஒரு ஒன்றை மணி நேரத்தில‌ விஜயவாடா  ரீச் ஆகிருவோம்” என கூறி முடித்தான்.
     இவர்கள் பேசிக் கொண்டிருக்க ஸ்ரேயா ஏதோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள். அதன் முடிவாக “உங்க ரெண்டு பேர் கிட்டையும் ஒரு விஷயம் கேக்கனும்” என விஜய் மற்றும் வெற்றியிடம் கேட்டாள்.
     ‘மறுபடியுமா?’ என பார்த்தாலும் “இப்ப என்னம்மா கேக்கனும்” என்றான் வெற்றி விளையாட்டாய். “அது நீங்க எதுக்கு டெல்லிக்கு போறீங்க. சுத்தி பாக்கவா?” என்றாள் கேள்வியாய்.
     “நாங்க ஒரு இன்டர்வுயூக்காக டெல்லி போறோம்” என்றான் மேம்போக்காக. “ஓஓஓ… சரி சரி” என்று இழுத்தாள். பின் “எங்களுக்கு தான் லாஸ்ட் மினிட் ஹரி. சோ இந்த பாண்டி எக்ஸ்பிரஸ்ல தான் டிக்கெட் கிடைச்சிது.
     உங்களுக்கு என்ன பாஸ்டா போற ட்ரெயின்ல புக் பண்ணிருக்கலாம்ல” என கேட்டு நிறுத்தினாள். அதை கேட்டு விஜய் திடுக்கிட்டு திரும்ப வெற்றி திருதிருவென முழித்தான்.
     ஆனால் அதை கவனிக்காத ஸ்ரேயா தொடர்ந்தாள். “ஒரு வேளை நீங்களும் எங்களை போல‌ லாஸ்ட் மினிட் புக் பண்ண கேசா” என அவளே ஒரு பதிலையும் சொல்லி கொண்டவள் அடுத்த பேச்சிற்கு தாவி விட்டாள்.
     அந்த பதிலை கேட்டு ‘ஹப்பாடி. கொஞ்ச நேரத்தில பதற வச்சிட்டாளே’ என பெருமூச்சு விட்ட வெற்றியை பார்த்து விட்டாள் சஹி. விஜயும் நிம்மதியானான்.
     சஹி வெற்றியை சந்தேகமாய் பார்க்கவும் அவளை பார்த்து “ஹிஹிஹி..” என அசட்டு சிரிப்பை தந்தான் வெற்றி. அவனை பார்த்து சாஹியும் சம்பிரதாயமாக சிரித்தாலும் அவனை குறுகுறுவென பார்த்து தான் வைத்தாள்.
     “ஆனாலும் இந்த முப்பது எட்டு மணி நேர டிராவல் கூட நல்லா தான் இருக்குல்ல அங்கிள்‌” என்ற ஸ்ரேவின் குரலில் அவளின் பேச்சில் கவனம் செலுத்தினாள் சஹி.
     “டூ நைட்ஸ் அன்ட் திரீ டேஸ் ஒரு ட்ரெயின் டிராவல். இப்படி புது ஆளுங்க கூட அவங்களையும் நம்ம ஃபிரண்ட் ஆக்கி. வாவ் சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் இல்ல அங்கிள்” என்று குதூகலமாக ஆகிவிட்டாள் ஸ்ரே.
      அனைவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருந்தாலும் ஸ்ரேயா சொன்ன இந்த விஷயம் மிகவும் பிடித்து தான் இருந்தது. ரயில் பயணம் பலரின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை தரும் என்னும் போது இவர்கள் வாழ்க்கையிலும் தராது செல்லுமோ! பொறுத்திருந்து பார்ப்போம்!
     இரவு நேரம் கவிழ்ந்து விட பேசிக் கொண்டிருந்த ஸ்ரேயா கொட்டாவி விட் ஆரம்பித்து விட்டாள். அந்த சத்தத்தில் திரும்பி பார்த்த விஜய் “என்னமா அதுக்குள்ள தூக்கம் வந்திருச்சா” என்றான் அவளிடம்.
     “ம்ம் ஆமா” என்று சிரித்தாளும் அவள் கண்களில் தூக்கம் அப்பட்டமாக தெரிந்தது. அதை கண்ட சோம் அங்கிள்‌ தான் “அப்போ சரி கண்ணுங்களா எல்லாரும் தூங்கலாம்.
     நேரமும் ஆகி போச்சு போல. பேசுனதுல நேரம் போனதே தெரியலை” என்றார். ஒருவழியாக மேல் பெர்த்தில் விஜயும் வெற்றியும் கீழே சோம் அங்கிளும் லக்ஷ்மி அம்மாவும் நடு பெர்த்தில் ஸ்ரேயாவும் சஹானாவும் என முடிவு செய்து படுக்க சென்றனர்.
     ரயிலும் தன் தடக் தடக் ரிதத்துடன் ஒரே வேகத்தில் தன் பயணத்தை தொடர்ந்தது. நடு இரவு அந்த கம்பார்ட்மெண்டே நல்ல தூக்கத்தில் இருந்தது.
     ஸ்ரேயாவின் மனதின் அலைப்புருதல் அவளின் நெற்றி சுருங்கி கண் மணிகள் அசைந்த விதத்தில் நன்றாகவே காணப்பெற்றது.
     இவ்வளவு நேரம் சிரித்த பெண்ணா இவள் என எண்ணும் அளவு முகம் வேதனையில் சுருங்கி மீண்டது. ஏதோ பயங்கர கனவை கண்டது போல் அவள் இதயம் பலமாக அடித்து கொள்ள வேர்த்து வழிய துவங்கினாள்.
     மற்ற அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம் திடீரென ஸ்ரேயாவின் குரல் வீரிட்டது. “ஐயோ… அம்மா அப்பா…. அப்பா…. இரத்தம்….. காப்பாத்துங்க…. அக்கா… அக்கா… ஆஆஆஆஆஆ….” என்று சம்பந்தம் இல்லாமல் புலம்பி தவித்தாள் ஸ்ரேயா‌.
     கத்தியவள் தூக்கத்தில் இருந்து எழுந்து மெத்தையின் ஓரம் கையால் காலை கட்டிக் கொண்டு “அம்மா அப்பா” என உளறியவாறு அழுதுக் கொண்டே அமர்ந்து விட்டாள்.
     அவள் கத்த ஆரம்பிக்கவுமே அந்த சத்தத்தில் முழித்துக் கொண்டாள் சஹானா. வேகமாக தன் இடத்தில் இருந்து இறங்கி ஸ்ரேயாவிடம் வந்து சேரும் நேரம் ஸ்ரேயாவின் அலறலில் உடன் இருந்தவர்களின் தூக்கமும் தூர போனது.
     அவர்கள் எழுந்த நேரம் எல்லோரும் கண்டது அழுதுக் கொண்டிருந்த ஸ்ரேயாவும் அவளை அணைத்து ஆறுதல் அளித்து கொண்டிருந்த சஹானாவும் தான்.
     “அக்கா அக்கா… அம்மா அப்பா க்கா… நீ என்னை விட்டுட்டு போகாத” என்றவாறு தேம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரேயா. அதற்கு “ஒன்னும் இல்லைடா. ஒன்னும் இல்ல. அக்கா இருக்கேன்ல.
     நான் எங்கேயும் போகலை டா குட்டிம்மா. உன் பக்கத்திலையே தான் இருக்கேன்டா. நீ அழுதா அம்மா அப்பாக்கு பிடிக்காதுல்ல டா. பாரு அழுது அழுது மூச்சு வாங்குது.
      அப்பா அம்மா எங்கையும் போகலை. அவங்க இப்பையும் நம்மல பாத்துட்டு தான் இருப்பாங்க. சஹியை நம்பி தானே ஸ்ரே குட்டியை விட்டுட்டு போனோம். அவளை இப்படி அழ விட்டுட்டாளே இந்த சஹி அப்படின்னு என்னை திட்டமாட்டாங்களா.
     ஐயோ நம்ம சின்ன பாப்பா இப்படி நம்மால அழறாளே அப்படின்னு ரொம்ப பீல் பண்ணுவாங்க டா அவங்க. அவங்கல பீல் பண்ண வைக்க போறீயா நீ சொல்லு?” என்று கேட்க ‘இல்லை’ என்பதாய் தலையை ஆட்டினாள் ஸ்ரே.
     அவள் இல்லை என்றதும் அவளின் தலையை ஆதரவாய் தடவியவாறு “இது தான் என்னோட ஸ்ரே குட்டி. இப்போ அக்கா தட்டிக் குடுப்பேனாம் நீ சமத்தா என் மடியில படுத்து அப்படியே தூங்குவியாம் சரியாடா குட்டி” என கேட்டவள்
     தன் கைப்பையை எடுத்து அதில் இருந்த ஏதோ ஒரு மாத்திரையை தந்தவள் தண்ணீரை தந்து அவள் தலையை மடியில் வைத்து தட்டிக் கொடுத்தாள்.
     சஹி கண்களிலும் கண்ணீர் நிறைந்து விட்டது. அதை தன் கையால் துடைத்தவள் ஸ்ரேயா தூங்கும் வரை அவளை மடி தாங்கி அமர்ந்து விட்டாள்.
     இப்போது ஸ்ரேயாவின் முகத்தை காண சிறு குழந்தைக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத அளவில் இருந்தது. அழுததில் முகமே வீங்கி என்னவோ போல் இருக்க பார்க்கவே கஷ்டமாய் போனது.
     இதையெல்லாம் பார்த்த ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தது. ஆனால் யாரும் எந்த கேள்வியும் கேட்காமல் தான் பார்த்திருந்தனர்.
     சோம் அங்கிள்‌ மனதில் ‘அப்போ இந்த ரெண்டு புள்ளைகளும் அக்கா தங்கச்சியா. அப்புறம் ஏன் சிநேகிதப் புள்ளைங்கன்னு சொன்னுச்சுங்க‌.
     இந்த புள்ளைங்களுக்கு என்ன கஷ்டமோ தெரியலையே? இப்படி அழுது கரைதுகளே. பாக்கவே பாவமா இருக்கே’ என்று வருந்தியபடி நின்றார்.
     லக்ஷ்மியும் இவர்கள் இருவரின் நிலையை கண்டு ‘கடவுளே இந்த புள்ளைங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் அவங்க மனசை தேத்தி விடுப்பா!’ என்று அவசரமாய் வேண்டுதல் வைத்தார்.
     ஸ்ரேயா தூக்கத்திற்கு சென்று விடவும் அதன்பின் மெதுவாக கீழே இறங்கினாள். அப்போது தான் கீழே மற்ற எல்லாரும் இருப்பதை கண்டு சங்கடப்பட்டாள்.
     அவர்களை கண்டு “சாரி எல்லாரோட தூக்கத்தையும் நாங்க டிஸ்டர்ப் பண்ணிட்டோம். அவ தூங்கிட்டா நான் தூக்க மாத்திரை கொடுத்திட்டேன். இனிமே எந்திரிக்க மாட்டா. நீங்க தூங்குங்க” என அனைவரிடமும் பொதுவாக உரைத்தாள்.
     அதன்பின்னர் யாரின் முகத்தையும் பார்க்காது அந்த கம்பார்ட்மெண்டின் கதவருகில் போய் நின்று அந்த கதவின் வழி வந்த காற்றை முகத்தில் தாங்கி நின்றாள்‌. அதன் மூலம் மனதில் உள்ள கஷ்டம் யாவும் பறந்து போவதை போல் உணர்ந்தாள்.
     இங்கே இருந்த ஒருவருக்கும் இந்த நிகழ்விற்கு பின் தூக்கம் வராது போனது. சஹானா இப்படி வெளியே செல்லவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க விஜய் “நான் போய் என்னன்னு பார்த்திட்டு வரேன்” என்றவன் சஹியை நோக்கி சென்றான்.
-பயணம் தொடரும்

Advertisement