Advertisement

அத்தியாயம் – 4
     எல்லாரும் வருத்தத்தில் இருக்க சூழ்நிலையை சற்று இலகுவாக்க முயன்ற வெற்றி “எப்பா சாமி எவ்ளோ பெரிய லெக்சர் டா. கேட்ட எனக்கே காது வலிக்குது. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ டா. இப்படி மூச்சே விடாம பேசிட்ட?” என விஜயை கிண்டல் பேசினான்.
     ஆனால் அவனை எதுவும் சொல்லாது சிறு சிரிப்புடனே பார்த்திருந்தான் விஜய். முன்னே திரும்ப அங்கே அழுததில் வீங்கிய முகத்துடன் இருந்த ஸ்ரேயாவை கண்டான். அது அவன் மனதை கஷ்டமாக்க அவளிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்தான்.
     “என்னமா ஸ்ரே பாப்பா நீ இப்படி அழற.‌ நான் கூட நீ சிரிக்கிற பாப்பான்னு பார்த்தா, நீ சரியான அழுமூஞ்சு பாப்பாவ இருப்ப போலவே.
     உட்வேட்ஸ் வேணுமா” என ராகமாய் கேட்டு “சிரிக்கும் பாப்பா உட்வேட்ஸ் பாப்பா” என்று விளம்பர பாணியில் கிண்டல் செய்தான் வெற்றி.
     அவனின் கிண்டல் மற்றவர்களையும் சற்று இலகுவாக்க ஸ்ரேயாவுக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு “ஓய் முட்டை கண்ணா யாரை பார்த்துடா அழுமூஞ்சுனு சொல்ற.
     அப்படியே அந்த முட்டகண்ணை நோண்டி கையில‌ கொடுத்துருவேன் பாத்துக்க. அந்த உட்வேட்ஸ்ச வாங்கி நீயே குடி” என்றாள் பாய்ந்து கொண்டு வந்து.
     அவள் டா போட்டு பேசியதை கூட அவன் கண்டுகாது சஹியை பார்த்து “நீ என்னம்மா சஹி. விட்டா அவளை மடியில போட்டு கொஞ்சி தாலாட்டுவ போலையே. என்னா ஒரு பிரண்ட்சிப்பு…” என அவளையும் வாரினான்.
     அவனின் கிண்டலை சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட சஹி அமைதியாக இருந்தாள்‌. ஆனால் அவளுக்கும் சேர்த்து ஸ்ரேயா தான் எகிறினாள்.
     “ஓய் முட்டகண்ணா என்ன என் டார்லிங்கையே கிண்டல் பண்றியா. முஞ்சிய பேத்து டிஞ்சர் ஒட்டிருவேன்” என்றாள் காரமாக. “எம்மா என்னா எகிறு எகிறுற. உன் பிரண்ட் அவங்களே அமைதியா இருக்காங்க. உனக்கு என்னம்மா?” என்று மேலும் பேசினான்.
     அதன்பின் இவர்கள் விளையாட்டாக சண்டையிட்டு மற்றவர்களை மகிழ்வித்தனர். அவர்களும் இருவரின் பேச்சையும் சிரிப்புடன் கேட்டிருந்தனர்.
     ஏன் சோமசுந்தரம் லக்ஷ்மி அம்மாவின் முகத்தில் கூட புன்னகை வந்திருந்தது. ஆனால் விஜய் விதைத்த சிந்தனை விதைகள் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொருவாறு பதிந்து போனது.
     மதிய உணவு நேரமும் வந்தது. சோமசுந்தரம் லக்ஷ்மி தம்பதி தாங்கள் கொண்டு வந்த உணவுகளை எடுத்தனர். விஜய் ,வெற்றி மற்றும் ஸ்ரே சஹி இவர்கள் எதுவும் எடுத்து வரவில்லை.
     எனவே “ஏன் அங்கிள்‌ டிரைன்ல புட்க்கும் சேர்ந்து தானே பணம் கட்டியிருக்கோம். அப்புறம் ஏன் சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கீங்க” என்று புரியாது கேள்வி கேட்டாள் ஸ்ரே.
     அதற்கு பதில் லக்ஷ்மியிடம் இருந்து வந்தது. “அதுவா பாப்பா. எங்க போனாலும் சாப்பாடு கட்டிட்டு போய் பழகிப்போச்சு. அதான் நேத்தே புளி சோத்தை கிண்டி வச்சிட்டேன்” என்றார் வெள்ளந்தியாய்.
     ரயிலில் உணவு வந்ததும் அனைவருக்கும் லக்ஷ்மி தான் கொண்டு வந்த உணவையும் பகிர்ந்தளித்தார். உண்டு கொண்டே “ஆமா அங்கிள்‌ கேக்கனும்னு நினைச்சேன் எந்த கோவிலுக்கு போக பிளான் பண்ணுனீங்க” என்றான் வெற்றி.
     “சின்ன வயசுல இருந்தே காசிக்கு போகனும்னு ஒரு எண்ணம். என் அப்பாவோட அஸ்திய கூட ராமேஸ்வரத்துலையே கரைச்சிட்டேன். இப்படியெல்லாம் நடக்கவும் வடக்க காசி அப்புறம் இன்னும் நிறைய கோவில்லாம் இருக்காமே.
     அதான் போய் பார்க்கலாம்னு கிளம்பி வந்தோம் பா” என்றார் தான் எடுத்திருந்த முடிவை. இப்போது ஸ்ரேயா “அங்கிள் நாங்க ரெண்டு பேரும் டெல்லி ஆக்ரா ஹிமாச்சல்னு ஊர் சுத்த தான் போறோம்.
     நீங்க எங்க கூட வரீங்கலா. நாம தாஜ் மஹால் எல்லாம் போய் பார்த்துட்டு வரலாம்” என்றாள் ஆர்ப்பாட்டமாக.
     அவளின் ஆர்வத்தை கண்டு “இந்த வயசுல நாங்க தாஜ் மஹால் எல்லாம் பார்த்து என்ன செய்ய போறோம் பாப்பா” என்றார் சன்னமான புன்னகையில்.
     சோமசுந்தரம் மறுக்கவும் “ஏன் அங்கிள்‌ வயசு என்ன வயசு. மனசுல இருக்க லவ் தான் முக்கியம் அங்கிள்‌. அந்த லவ் உங்க ரெண்டு பேருக்கும் இடையில‌ அவ்ளோ இருக்கு.
     லவ்வர்ஸ் தான் தாஜ் மஹால் பார்க்கனும்னா உங்களை தவிர வேற யாரு அங்கிள்‌ அதுக்கு தகுதியானவங்க. இந்த உலகத்தில‌ ஊருக்காக சொசைட்டி ஸ்டேட்ஸ் இப்படி மத்தவங்களுக்காக வாழ்றவங்க தான் இருக்காங்க அங்கிள்‌” இதை சொல்லும் போதே அவள் குரல் வேதனையை காட்டியது.
     “அவங்களுக்கு நடுவுல ஒருத்தரை ஒருத்தர் அவ்ளோ புரிஞ்சுகிட்டு இவ்ளோ லவ் வச்சிருக்க உங்களைவிட யார் அங்கிள்‌ அந்த தாஜ் மஹாலை சுற்றி பார்க்க சரியானவங்க” என தன் மனதில் தோன்றியதை கூறி முடித்தாள் ஸ்ரேயா.
     அவள் கூறியது ஆமோதிக்கும் வண்ணம் “ஆமா அங்கிள்‌ ஸ்ரே சொல்றது நூறு பர்சென்ட் உண்மை. நீங்களும் எங்க கூட வாங்க நாம எல்லாம் சேர்ந்தே சுத்தி பார்க்கலாம்.
     நாங்களும் உங்க கூட காசி வரோம். நீங்க எங்க கூட ஆக்ரா ஹிமாச்சல் எல்லா சுத்தி பார்க்க வாங்க” என சஹியும்‌ இப்போது அவர்களை தங்களுடன் அழைத்தாள்.
     “யோசிங்க அங்கிள்‌ இன்னும் முழுசா ரெண்டு நாள் இருக்கு‌ நாம‌ டெல்லிய ரீச் பண்ண. சோ நல்லா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க” என்று அவர்களுக்கு யோசிக்க அவகாசமும் தந்தாள் சஹி.
     சஹி பேசி முடித்த போது “ஹப்பா பேசிட்டீங்களா. நான் கூட உங்களுக்கு பேச தெரியாதுன்னே நினைச்சேன்னா பார்த்துக்கோங்களேன்” என்று ஓட்டினான் வெற்றி.
     சோமசுந்தரத்தை இப்போது பார்த்து “ஆனா சோம் அங்கிள் உங்க ரெண்டு பேரையும் பார்க்க அவ்ளோ பொறாமையா இருக்கு‌ போங்க. என்ன ஒரு கெமிஸ்ட்ரி” என கிண்டல் போல் பேசினாலும் அவன் கண்களும் அவர்களை பிரம்மிப்புடன் பார்த்தன.
     “இதை மட்டும் மிஸ்டர். மோகன் பார்த்திருக்கனும். சும்மா பொறாமைலையே பொங்கி சாவாரு” என்றான் சம்மந்தமே இல்லாமல். உடனே “யார்ப்பா அந்த மோகனு. எதுவும் சினிமா நடிகரா?” என்று அப்பாவியாய் கேட்டு வைத்தார் லக்ஷ்மி.
     “அவரு வேற யாரும் இல்லை என்னை பெத்தவரு‌. என்ற அப்பா தான் ஆன்டி” என்றான் விசஷம குரலில். “அட என்னப்பா இது உங்க அப்பாவ போய் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க? அவங்ககிட்ட இப்படிலா பேசுவியா? கோச்சுக்க மாட்டாங்களா?” என்று கேள்வியாய் கேட்டார் லக்ஷ்மி.
     “ஐயோ லக்ஸ் ஆன்டி எங்க வீட்டை பத்தி உங்களுக்கு தெரியாதுல. நான் என்னை பத்தியும் சொல்லலை இல்ல அதான் உங்களுக்கு தெரியலை. சோ முதல்ல நான் என்னை பத்தி சொல்லிடறேன்.
     நான் வெற்றி. எங்க அப்பா தான் மிஸ்டர். மோகன். சென்ட்ரல் கவர்மெண்ட் வேலைல இருக்காரு. அம்மா சவுந்தர்யா, ஹவுஸ் வொய்ப். எங்க அப்பா பார்க்க நல்லா தெலுங்கு பட வில்லன் மாதிரி இருப்பாரு ஆன்டி.
     ஆனா பாருங்க அவர் மனசுல நடிகர் மோகன்னு நினைப்பு. சும்மா அப்படி ஒரு சீனை போடுவாறு. எங்க அம்மா மேல அவ்ளோ லவ்‌. உலகத்தில அப்படி யாரும் யார் மேலையும் லவ் வச்சிருக்க மாட்டாங்கன்னு அவரே வேற சொல்லிப்பாரு.
     ஆனா அவர் லவ் உண்மை தான் அதை நான் ஒத்துக்கிறேன். அதே போல எங்க அம்மாவை வெறுப்பேத்தி பார்க்க அவருக்கு அவ்ளோ பிடிக்கும். என்னையும் என் அம்மாவையும் வெறுப்பேத்தவே எதாவது பேசி எங்களை வம்பிழுப்பாறு.
     நாங்களும் தாருமாறா அவரை ஓட்டி தள்ளுவோம்‌. எனக்கு கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்லை ஆன்டி. வீட்ல நாங்க மொத்தமே மூனு பேரு தான். ஆனா நாங்க சேர்ந்து இருக்கப்ப வீடு சந்தகடை மாதிரி தான் இருக்கும்” என்றவன் எதையோ எண்ணி சத்தமாக சிரித்தான்.
     பேசிக் கொண்டிருந்த வெற்றி திடீரென சிரிக்கவும் அனைவரும் பார்க்க “என்னடா பேசிட்டு இருந்தவன் பயித்தியம் மாதிரி தானா சிரிக்கிறேன்னு தானே பார்க்குறீங்க” என அவனே அனைவரிடமும் கேட்டான்.
     யாரும் ஆம் என சொல்லவில்லை என்றாலும் அவர்கள் முகம் அதை தான் சொல்லியது. “அது ஒரு நாள் எங்களை வெறுப்பேத்தறா நினைச்சுக்கிட்டு இப்பையும் பொண்ணுங்க என் பின்னாடி சுத்துறாங்கன்னு ஒரு பிட்ட போட எங்க அம்மா பத்ரகாளியா மாறி அவரை சும்மா புரட்டி எடுத்துட்டாங்க.
     அந்த நினைப்பு வந்துருச்சு அதான் சிரிச்சுட்டேன் ஆன்டி. இப்படி அடிக்கடி எங்க அம்மா கிட்ட பூரி கட்டையால அடி வாங்கிடுவாரு. இல்லைனா அவருக்கு தூக்கம் வராது” என்றவன் சொன்ன விதத்தில் சுற்றி இருந்தவர்களும் சிரித்து விட்டனர்.
     மேலும் தொடர்ந்தான் வெற்றி “இது மாதிரி டிசைன் டிசைனா ரகளை நடக்கும் ஆன்டி. சோ எங்க வீடே நல்லா கலகலன்னு இருக்கும். சின்ன வயசுல இருந்தே அவங்க எனக்கு புல் பீரிடம் தந்தாங்க.
     என்னவோ அவங்க என்னை அவுத்து விடவும் அந்த சுதந்திரத்தை எல்லை மீற தோனலை. நானும் அப்பா அம்மாட்ட நான் வெளியே போய்ட்டு வந்த அப்புறம் எல்லாத்தையும் அப்படியே ஒப்பிச்சு வச்சிருவேன்.
     சோ அவங்ககிட்ட நல்ல பிரண்டா பழகிட்டேன் ஆன்டி. அதனால தான் நானும் இப்படி இருக்கேன்னு சொல்லலாம். அப்ப அப்போ நினைச்சுப்பேன் கடவுள் நமக்கு எவ்ளோ நல்ல அப்பா அம்மாவை தந்திருக்காருன்னு” என்று சொல்லி முடித்தான் வெற்றி.
     என்ன தான் விளையாட்டு போல் சொல்லி முடித்தாலும் வெற்றி அவன் பெற்றோர் மேல் வைத்திருக்கும் பாசம் அவன் பூரித்த முகத்தை பார்த்ததிலே அனைவருக்கும் புரிந்தது. அவர்களும் வெற்றியை மகிழ்ச்சியோடு பார்த்திருந்தனர்.
-பயணம் தொடரும்

Advertisement