Advertisement

 அத்தியாயம் – 3
    சோமசுந்தரம் மற்றும் லக்ஷ்மி இருவரும் சொந்த மகனாலே ஏமாற்றப்பட்டுவிட்டதை கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாமல் மனது சஞ்சலத்துடன் இருந்தனர்.
     அந்த வீட்டை வாங்கிய நபர் வந்து சென்று ஒரு வாரம் போய் இருந்தது. அந்த ஒரு வாரமும் லக்ஷ்மி அம்மா அழுதுக் கொண்டே இருக்க சோமசுந்தரமும் வருத்தத்தில் தான் இருந்தார். அவர்களின் ஊர் தலைவர் அப்போது வந்தார்‌.
     அவர் சோமசுந்தரத்தின் மகனிடம் பேசி இருந்தார். அவன் ‘நீங்கள் தவறான எண்ணை அழைத்து உள்ளீர்கள்’ என்று மனசாட்சியே இன்றி கூறி வைத்து விட என்ன செய்வதென புரியாது பார்க்க வந்தார்.
     வந்தவர் அனைத்து விவரத்தையும் கூறி என்ன செய்யலாம் என கேட்க ஒன்றும் சொல்லாது அமைதியாக இருந்து விட்டார். அதன் பின் எதையோ தீவிரமாக சிந்தித்த சோமசுந்தரம் ஒரு முடிவை எடுத்தவராக லக்ஷ்மி அம்மாவையும் தேற்றினார்.
     “நானும் ஒரே பையன். இவ சொந்தமும் அவ்வளவா யாரும் இல்லை. அப்படி இருந்தாலும் யார் வீட்டிலும் போய் இருந்து அவங்களை தொல்லை பண்ண பிடிக்கலை கண்ணுங்களா.
      எங்க புள்ளை என்ன நெனைச்சானோ நான் பேங்க்ல போட்ட வச்சிருந்த காசை மட்டும் விட்டுட்டு போய்ருந்தான். பேங்க்ல எவ்ளோ வச்சிருக்க போறேன்னு நினைச்சிட்டான் போல.
     ஆனா அதுலயும் நான் கணிசமான தொகை தான் வச்சிருந்தேன்‌. அப்போ முடிவு செஞ்சேன். அந்த காசை வச்சு இனி கோயில் குளம்னு போய் எங்க வாழ்க்கையை முடிச்சுக்கிலாம்னு முடிவு செஞ்ப்புட்டேன்.
     அதை இவக்கிட்ட சொன்னேன். அவளும் என்னைக்கு நான் சொன்னதை மீறி இருக்கா. சரின்னு வந்துட்டா. ஊரு அடங்கவும் அங்க இருந்து நேத்து ராத்திரியே கிளம்பிட்டோம்” என தன் கதையை சொல்லி முடித்தார் சோமசுந்தரம்.
      யாரென்றே தெரியாத நால்வரிடம் ஏன் இதை சொல்ல வேண்டும் என எண்ணாது அவர்களை தன் மனம் நம்பிய ஒரே காரணத்தால் அனைத்தையும் சொல்லி விட்டார் சோமசுந்தரம்.
     இப்போது லக்ஷ்மி அம்மா தொடர்ந்தார் “இவரு கூட ரெஜிஸ்டர் ஆபிஸ் போறப்ப ஏதோ சரியா தோனலைன்னு சொன்னாரு. நான் தான் நம்ம புள்ளையை நம்பாம யாரை நம்ப. அவன் போயா நம்மல ஏமாத்துவான்னு சொல்லி இவரை கூட்டிட்டு போனேன்.
     ஆனா அவன் இப்படி செய்வான்னு எனக்கு தெரியாம போச்சு. அவன் கேட்டுருந்தாலே நாங்க எல்லாத்தையும் தந்திருப்போம். என்ன நாங்க இருக்க வரை அதை விக்க வேணாம்னு சொல்லிருப்போம்.
     எங்க எல்லா சொத்தும் அவனுக்கு தானே. எங்களுக்கு அப்புறம் அவன் தானே எடுத்துக் போறான். ஆனா இப்படி பண்ணிப்புட்டான். அவனா இதை செஞ்சானா இல்லை அவன் பொண்டாட்டி பேச்சை கேட்டு இப்படி செஞ்சானான்னு தெரியலை.
     ஆனா பெத்த எங்க ரெண்டு பேரையும் எப்படி இப்படி நடுரோட்டுல நிறுத்த மனசு வந்துச்சுன்னு தெரியலை” என்றார் கண்களில் வலியுடன்.
      இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நால்வருக்கும் அந்த தம்பதியை எண்ணி மிகுந்த வேதனையாகி விட்டது. அதுவும் இவ்வளவு நேரம் சிரித்த முகத்துடன் இருந்த ஸ்ரேயா தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்.
     அவள் அழுகை அதிகமாகவும் சஹானா தான் அவளை அணைத்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். சஹியின் முகமும் வேதனையில் கசங்கி இருந்தது.
     சஹியும் தன்னுடைய அழுகையை அடக்க முயல்வது நன்றாக தெரிந்தது. அதன்பின் சஹி ஸ்ரேயாவை தன் மடியில் தாங்கிக் கொள்ள அவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக சிறு விம்மலாக மாறியது.
     “இங்க பாரு ஸ்ரே குட்டி. அழக்கூடாது டா. நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் சரியா. நீ அழுதா எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல டா.
     இப்படி அழுதா என்ன அர்த்தம். அங்க பாரு சோம் அங்கிள்‌ லக்ஸ் ஆன்டி எல்லாரும் உன்னையே பயந்து போய் பார்க்குராங்க. நீ இப்படி செய்றியே டா” என்று மெதுவாக பேசி அவள் அழுகையை நிறுத்தி விட்டாள் சஹி.
     “சாரி சகி. இனிமே நான் அழவே மாட்டேன் ஓகே” என்றவள் மற்றவர்களை பார்த்து “சாரி சாரி நான் அழுது உங்களையும் பயமுறுத்திட்டேன்” என்றாள் பாவமாக முகத்தை வைத்து.
     இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஜய் இப்போது தன் வாயை திறந்தான். “அங்கிள்‌ நான் ஒரு விஷயம் கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க” என்று முதலில் கேட்டுவிட்டு
     “நீங்க அந்த இன்சிடன்ட்க்கு அப்புறம் அந்த ஊருல இருந்தீங்கல. நீங்க இருந்த கஷ்டத்துல கண்டிப்பா சமைச்சு இருக்க மாட்டீங்க. அப்போ என்ன சாப்டீங்க. யாராவது உங்களுக்கு சாப்பாடு தந்தாங்கலா?” என்று கேள்வியாய் நிறுத்தினான்.
     ‘இது எதுக்கு இப்போ?’ என அனைவரும் எண்ணினாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை. சோம் அங்கிள் “எங்க பக்கத்து வீட்டு பிள்ளைங்க. ஊர்ல தெரிஞ்சவங்க சாப்பாடு கொண்டு வந்து எங்களை சாப்பிட வச்சிட்டு போனாங்க பா.
     ஆனால் அவங்ககிட்ட நாங்க எதையும் கேக்காமலையே வந்து எங்களை சாப்பிட வச்சாங்க” என்றவர் அந்த நல்ல மக்களை மரியாதையுடன் மனதில் எண்ணி கொண்டார்.
     தான் கேட்காமலே தனக்கு தேவையான பதிலை சோம் தந்துவிட “அங்கிள் அப்போ உங்க சொத்து உங்களை விட்டு போகலை. ஏன்னா நீங்க பொன் பொருளா உங்க முன்னோர்கள் தந்த, நீங்க சம்பாதிச்சு சேர்த்து வச்சிருந்த விஷயம் தான் போயிருக்கு.
     ஆனா வாழ்க்கைல உங்க  பிஹேவியர் அதாவது உங்க குணத்தால நீங்க சம்பாதிச்ச சொத்து அந்த மனுஷங்க தான் அங்கிள்‌. உங்க பையன் வேணா சந்தர்ப சூழ்நிலையால மாறியிருக்கலாம்.
     ஆனா உங்க குணத்தால நீங்க சம்பாதிச்ச உன்மையான மனுஷங்க உங்களை தாங்கிக்கிட்டாங்களே அது சொல்லாதா அங்கிள்‌ நீங்க வாழ்ந்த வாழ்கையில எப்பவோ ஜெயிச்சுட்டீங்கன்னு.
     நீங்க எவ்ளோ தூரம் உதவி செஞ்சிருந்தா அந்த மக்கள் உங்களுக்கு உறுதுணையா இருந்திருப்பாங்க. இந்த விஷயமே சொல்லுதே நீங்க வாழ்க்கையில மோட்சத்தை அடையை உங்க வழி என்னன்னு.
     கோவில் குளம்னு நீங்க போறதை நான் தப்பு சொல்லலை அங்கிள்‌. ஆனா உங்க உடல் நல்லா இருக்க வரை உங்க நல்ல மனசை நாலு பேருக்கு தரலாமே.
     நான் உங்களுக்கு புரியுற மாதிரியே சொல்றேன் அங்கிள்‌. இப்போ நீங்க ஒரு கோவிலுக்கு போறீங்கன்னு வச்சுக்கோங்க. அங்க வாசல்ல ஒரு குழந்தை பசிக்கு அழுது.
     அந்த குழந்தைக்கு சாப்பிட ஒன்னும் இல்லை. இதே கோவில் உள்ள போறீங்க. அங்க மக்கள் பாக்கெட் பாக்கெட்டா பாலை கடவுள் சிலைக்கு ஊத்த தராங்க.
     இதை கேட்டா உங்களுக்கு என்ன தோனுது” என்று கேட்டு நிறுத்தினான். அனைவரும் இவன் என்ன சொல்ல வரான் என புரியாது பார்த்தனர். எனவே விஜயே தொடர்ந்தான்.
     “அந்த பாலையோ இல்லை வேற எதாவது வாங்கி அந்த குழந்தைக்கு சாப்பிட குடுக்கனும்னு தோனுதா” எல்லோரும் ஆம் என தலை அசைக்க “ஏன் அங்கிள்‌ அதே இடத்தை தான்டி பல பேர் போயும் இதை செய்யலை.
     ஏனா நம்ம மக்கள் கடவுளுக்கு செஞ்சா புன்னியம்னு நினைக்கிறாங்க. ஆனா கடவுள் அந்த குழந்தை ரூபத்தில தான் இருக்கார்னு யாரும் யோசிக்க மாட்டேங்கிறாங்க.
     உலகம் போற வேகத்தில தாங்களும் வேகமா ஓடி ஜெயிக்க நல்லா உழைக்கனும் அப்டின்னு நினைக்காம கடவுள்கிட்ட எங்னை வாழ்க்கையில ஜெயிக்க வைன்னு சொல்லி லஞ்சம் தராங்கன்னு சொன்னா ஒத்துப்பீங்க தானே” என்றான் சிறு சிரிப்புடன்.
     ஓரளவு அவன் சொல்வது புரிந்தாலும் “இப்போ என்னை என்னப்பா செய்ய சொல்ற?” என்று சோம் அங்கிள்‌ வினவினார்.
     “உங்களுக்கு நல்ல மனசு இருக்கு அங்கிள்‌. ஏன் நீங்க உங்களால முடிஞ்ச வரை மத்தவங்களுக்கு உதவியா இருக்க கூடாது?” என்று மெதுவாக தான் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு வந்தான்.
     “அதுக்கு நீங்க ஆஸ்ரமம் அப்படி எல்லாம் போகனும்னு நான் சொல்லலை. நீங்க போற வழியில‌ தேவை இருக்கவங்களுக்கு நீங்க உதவி செய்ங்க அங்கிள்‌.
     பணம் காசு தான் தரனும் அப்படின்னு இல்லை. உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க. பசியில பக்கத்தில இருக்க ஆளுக்கு வயிறு நிறைய சாப்பாடு கொடுத்தாலும் அது அவருக்கு பெரிய உதவி தானே அங்கிள்.
     அது கண்டிப்பா உங்க மனசை சந்தோஷமா வச்சுக்கும் அங்கிள்‌. ஏன்னா அதை நான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணியிருக்கேன். மனசுக்கு நிம்மதியா இருக்கும்.
      உங்க மனசுல இருக்க தேடலுக்கு விடையும் கிடைக்கும். இங்க இருக்க மக்கள் இதை யோசிக்க மாட்டேங்குறாங்க. நீங்க யோசிங்க அங்கிள்.‌
     நாம‌ உயிரோட இருக்க வரை நம்மலால‌ தேவை இருக்கவங்க‌ பயன் அடைமட்டுமே!” என தான் நினைத்ததை ஒருவழியாக கூறிமுடித்தான் விஜய்‌.
     விஜய் கூறியதை கேட்டு யோசித்த சோம் “உண்மை தான் பா. ஊருல பசினு வரவங்களுக்கு சாப்பாடு போடாம அனுப்பி வச்சது இல்லை. அந்த நேரம் மனசு காத்து மாதிரி அவ்ளோ நல்லா இருக்கும்.
     நீ சொல்ற மாதிரி செஞ்சா காசு பணம் இருக்கோ இல்லையோ ஆனா நிறைஞ்ச மனசா இந்த உலகத்தை விட்டு போவோம். ரொம்ப நன்றி பா” என்ற சோமசுந்தரம் தங்கள் வாழ்க்கைக்கு எது தேவை என முடிவு செய்தார்.
     விஜய் பேசியதை கேட்ட சஹானாவின் மனதிலும் ஒரு ஒளி சிறு கீற்றாய் தோன்றியது. அந்த கீற்று ஒளி என்று முழு வெளிச்சமாக மாறுமோ?
-பயணம் தொடரும்

Advertisement