Advertisement

அத்தியாயம் – 2
     சோமசுந்தரம் வெற்றியிடம் எங்கே செல்கிறீர்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவன் தாங்களும் டெல்லி செல்கிறோம் என கூற அவனுடன் பேச்சை தொடர்ந்தார்.
     “சரிப்பா உங்க பேருலா என்ன?” என மேலும் அவர்களை அறிய எண்ணி கேள்விகளை தொடுத்தார் சோம் அங்கிள். “என் பேர் வெற்றி அங்கிள். அன்ட் இவன் என் பிரண்ட்.
     இவன் பேரு விஜய் அங்கிள்” என்று அருகில் இருந்த நண்பனையும் சேர்த்தே அறிமுகப்படுத்தி வைத்தான்.  இப்போது விஜயை கண்ட வெற்றி “டேய் விஜய் அவருக்கு ஒரு ஹாய் சொல்லுடா” என்றான் விஜயின் காதில் கிசுகிசுப்பாய்.
     அவனை ஒரு பார்வை பார்த்த விஜய் அவனுக்கு பக்கத்தில் இருந்த சோமசுந்தரத்தின் புறம் திரும்பி “ஹாய்” என இதழில் ஒட்ட வைத்த சிரிப்புடன் சம்பிரதாயமாக ஒரு வணக்கத்தை வைத்தான்.
     பின் மீண்டும் அவன் கையில் இருந்த புத்தகத்தில் தன் தலையை புகுத்தி கொண்டான். அவனை விநோதமாக பார்த்த சோமசுந்தரத்தை கலைக்கும் விதமாக ஸ்ரேயா அவரை அழைக்க;
     இடையில் குறுக்கிட்ட லக்ஷ்மி அம்மா “கண்ணுங்களா! இந்தாங்க ப்பா வடை எடுத்துக்கோங்க. வீட்ல நானே செஞ்சது. சாப்டுகிட்டே பேசுங்க எல்லாரும்” என அனைவருக்கும் அவர் வைத்திருந்த உணவு பொருட்களை பகிர்ந்தளித்தார்.
     ஏன் வெற்றி விஜய் கூட அதை மகிழ்வுடன் எடுத்து கொண்டனர். தானும் ஒன்றை கையில் எடுத்த சோமசுந்தரம் “ஸ்ரே பாப்பா! நீ உங்களை பத்தி சொல்லேன்” என்றார் சஹானாவையும் சேர்த்து.
     அவரிடம் “எங்களை பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை அங்கிள்‌. நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ். எங்களுக்குன்னு யாரும் இல்லை. ரெண்டு பேருமே ஒரு ஆஸ்ரமத்தில தான் வளர்ந்தோம்” என கூறினாள்.
     “அடிப்பாவி! சரியான புளுகு மூட்டையாகிட்டடி நீ” என மெதுவாக சஹி ஸ்ரே காதை கடித்தாள்‌. “நீ கம்முன்னு இரு” என்ற ஸ்ரே தானும் ஒரு வடையை கையில் எடுத்து கொண்டாள். அவளின் பதிலில் வெற்றியும் விஜயும் ‘அடிப்பாவி!’ என்ற பார்வையை பார்த்து வைத்தனர்.
      ஆனால் ஸ்ரேயாவோ சற்றும் அலட்டாமல் அந்த வடையை உண்டு கொண்டே “சோம்‌ அங்கிள்” என ஆரம்பித்து தன் கேள்வியை கேட்க துவங்கினாள் ஸ்ரேயா.
     “அங்கிள் நீங்க சொல்லுங்க. உங்க ஊரு எது. நீங்க எதுக்காக டெல்லிக்கு போறீங்க? ரிலேட்டிவ்ஸ் வீட்டுக்கு எதுவும் போறீங்களா? இல்லை டெல்லிக்கு டூர் மாதிரி எதுவும் சுத்தி பார்க்க போறீங்களா?
     இல்லை எதாவது பங்ஷன்க்கு போறீங்களா?” என தன் பாட்டில் கேள்விகளை எழுப்பி அவர் முகத்தை ஆர்வமாக பதிலுக்காய் பார்த்தாள்.
     இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருந்த சோமசுந்தரம் லக்ஷ்மி அம்மா முகம் நொடியில் சூம்பி விட்டது. அதை கண்டு அங்கிருந்த அனைவரின் முகமும் யோசனையை தத்தெடுத்தது.
     ஸ்ரேயா லக்ஷ்மி அம்மாவின் கைகளை ஆதரவாக பற்றி “என்ன அங்கிள்‌ நான் எதாவது தப்பா கேட்டு வச்சிட்டனா?” என்றாள் பாவமாக.
     அவளின் வருத்தமான குரலை கேட்டு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு கொண்ட சோமசுந்தரம் “நீ எதுக்கு ஸ்ரே பாப்பா பீல் பண்ற. நீ கேட்டது ஒன்னும் அவ்ளோ தப்பான கேள்வி இல்லை” என்றவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
     அவரே பேசட்டும் என ஒருவரும் பேசவில்லை. புத்தகத்தில் தலையை வைத்திருந்த விஜய் கூட அதை மூடி வைத்து விட்டு சோம் அங்கிளின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.
     “எங்க வயசு எழுவது கிட்ட ஆச்சு மா. இதை எங்க கடைசி காலம்னு கூட சொல்லலாம். இந்த வயசுல என்னத்த தேடி மா போவோம். மோட்சத்தை தேடி போறோம்ன்னு சொன்னா சரியா இருக்கும்” என்று வலியுடன் புன்னகைத்தார்.
      “எங்க ஊரு கும்பகோணம் மா. எங்க அப்பா அந்த காலத்துலையே கப்பல்ல வெளிநாடுலாம் போய் வியாபாரம் செஞ்சவரு. பணத்துக்கு குறைவில்லை. ஒத்த புள்ளை நானு. நல்ல செல்வ செழிப்போட வளர்ந்தேன்.
     அவருக்கு அப்புறம் அவரோட வியாபாரத்தை நான் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு கடை போட்டு எல்லாம் நல்லாவே போச்சு. அப்புறம் இவளை” என லக்ஷ்மி அம்மாவை கை காட்டினார்.
     “என் அப்பா அம்மா பார்த்து தான் கட்டி வச்சாங்க. சும்மா சொல்லக்கூடாது மா பேருக்கு ஏத்த மாதிரி இவ மகாலட்சுமியே தான் மா. என் அப்பா அம்மான்னு என் குடும்பத்தை அப்படி பார்த்துப்பா.
     ஒரு வருஷத்துல எங்களுக்கு ஒரு பையன் பிறந்தான்” என்னும் போதே அவர் அந்த காலத்திற்கே சென்று விட்டார். “அதுக்கு அப்புறம் எங்களுக்கு வேற குழந்தை பிறக்கலை.
     நாங்களும் சரி ஒரு பிள்ளை தான் கடவுள் நமக்கு தந்திருக்காரு போலன்னு சந்தோஷமாவே ஏத்துக்கிட்டோம். அவனை சீரும் சிறப்புமா வளர்த்தோம் மா.
     கஷ்டம்னா என்னன்னு அவனுக்கு தெரியாம தான் வளர்த்து விட்டோம். எங்களை அவனுக்கு அவ்ளோ பிடிக்கும். அவனும் அவ்ளோ நல்லா படிப்பான் மா.  ஸ்கூல்லையே நல்ல மார்க் வாங்குவான்.
     காலேஜ் போய் பெரிய பெரிய படிப்புலாம் படிச்சான். அவன் படிச்சு முடிச்ச உடனே வெளிநாட்டுல வேளை கிடைச்சிருச்சு. எங்க கிட்ட வந்து அவ்ளோ சந்தோஷமா சொன்னான். கொஞ்ச நாளுல எங்களையும் கூட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு தான் போனான்.
     அவனுக்கும் கல்யாணம் பண்ண வயசு வந்திருச்சேன்னு நாங்களும் பொண்ணு பார்த்தோம் மா. எங்க ஊருலையே சொந்தத்தில ஒரு பொண்ணு நல்லபடியா அமைஞ்சிச்சு.
     அவனுக்கும் பிடிச்சு போய் கல்யாணம் பண்ணி அந்தப் பொண்ணை மட்டும் வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய்டான் மா. அப்பக்கூட நாங்க நம்புனோம் எங்களை வந்து கூட்டிட்டு போவோம்னு.
     என் புள்ளையும் கல்யாணம் முன்னாடி வரை நிதமும் போன் போட்டு எங்க கூட பேசிடுவான். கல்யாணத்துக்கு அப்புறம் அதை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிட்டான். சரி அவனுக்கு வேலை ரொம்ப போலன்னு நாங்களும் அவனை தொந்தரவு செய்யாம இருந்தோம்.
     ஆனா இந்த வயசான கட்டைங்களுங்கு பெத்த புள்ளைய பத்தி தெரியாமா போச்சு” என்றவர் கண்களில் இருந்து வந்த நீரை கையை தூக்கி சட்டையில் துடைத்துக் கொண்டார். பார்த்திருந்த அனைவருக்கும் அவரின் கண்ணீர் அவ்வளவு வருத்தத்தையும் வலியையும் தந்தது.
     தன்னை தேற்றி கொண்ட சோமசுந்தரம் மீண்டும் தொடர்ந்தார் “அவனுக்கு பிள்ளையும் பிறந்துச்சு. போனுல தான் அந்த பச்ச புள்ளையையும் காட்டுனான்.
     நேருல இதுவரைக்கும் எங்க பேரப்புள்ளையை நாங்க பார்த்ததே இல்லை பாப்பா. அப்படி இருக்கப்ப தான் அவன் மட்டும் போன மாசம் வந்தான் எங்களை பார்க்க.
     அவ்ளோ சந்தோஷப் பட்டோம். அத்தனை வருஷம் கழிச்சு வந்த புள்ளையை இந்த கிறுக்கச்சியும் நல்லா சீராட்டி தான் விட்டா. அவன் போக முன்னாடி எங்ககிட்ட ஏதோ பத்திரத்துல எல்லாம் கையெழுத்து வாங்கினான் பா.
     எங்களை வெளிநாடு கூட்டி போக அந்த பத்திரம் எல்லான்னு சொன்னான். நாங்களும் பெத்த புள்ளைதானேன்னு நம்பி கையெழுத்து போட்டோம்” என்றவர் அதற்கு மேல் கூற முடியாது கேவி கேவி அழ துவங்கினார்.
     லக்ஷ்மி அம்மாவை பார்க்க அவரின் கண்களிலும் நீர் வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் இவர்களின் மகன் சொத்தை ஏமாற்றி எழுதிக்கொண்டான் என யூகித்தனர்.
     பின் சோமசுந்தரமே தொடர்ந்தார் “அதுக்கு அப்புறம் ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு போய் கையெழுத்து போட்டோம்‌ கண்ணு. அவனும் எல்லா வேலையும் முடிஞ்சு போச்சு.
     எல்லா பத்திரமும் வர கொஞ்ச நாள் ஆகும். நான் ஊருக்கு போய்டு வந்தர்ரேன் அப்படினு சொல்லிட்டு போய்ட்டான். அதுக்கு அப்புறம் ஒரு ஒரு வாரம் அப்படியே போச்சு.
     அப்ப தான் ஒரு ஆளு வந்தாரு. நாங்க இருந்த வீடு எங்க கடை நிலம் புலன் எல்லாத்தையும் அவர்கிட்ட எங்க பையன் வித்திட்டு போய்ட்டான்னு சொன்னார்.
     எங்களுக்கு ஒன்னும் புரியல. எங்க பையன் அப்டிலாம் செய்ய மாட்டான்னு இந்த மடச்சி அவங்ககிட்ட சண்டைக்கு போய்டா. ஊரே கூடி போச்சு. பஞ்சாயத்து வரைக்கும் போய்டோம்” என்றவரின் விழிகள் ஏகத்துக்கும் வெளிறி இருந்தது.
     அந்த சம்பவம் இன்னும் மனதை விட்டு விலகாமல் அப்படியே ரணத்தை கீறி சென்றது. பஞ்சாயத்தில் இவர்கள் மகன் இவர்களை ஏமாற்றி சொத்தை விற்று அந்த பணத்தை எல்லாம் அவன் எடுத்து சென்றது தெரியவந்தது.
      அந்த இடத்திலே மடிந்து அமர்ந்து கதறிவிட்டனர் தம்பதிகள். அந்த பஞ்சாயத்தில் இருந்தவர்களுக்கே இவர்களை கண்டு வருத்தமாகி விட்டது.
     வெளிநாட்டில் இருக்கும் அவர்கள் மகனுக்கு அழைக்க அந்த அழைப்பு ஏற்க்கப்படவே இல்லை. அந்த வீட்டை வாங்கியவருக்கே இவர்கள் அழுகை ஏதோ செய்ய இன்னும் மூன்று மாதம் அங்கே தங்கிக் கொள்ளும் படி கூறி சென்றார்.
     யாரே பேர் தெரியாத நபருக்கு இருந்த இரக்கம் கூட பெற்ற பிள்ளைக்கு இல்லை என்பதை எங்கே சென்று சொல்வது!!
-பயணம் தொடரும்

Advertisement