Advertisement

அத்தியாயம் – 13
     சஹி மற்றும் ஏனையோர் பயணிக்கும் ரயில் அப்போது தான் அந்த நிறுத்தத்தில் இருந்து புகையை கக்கி கொண்டு செல்ல ஆரம்பித்தது. ஒரு பத்து நிமிடம் இருக்கும் திடீரென நின்றது.
     திடீரென ரயில் நிற்கவும் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் அப்போது தான் வெளியே பலவிதமான அழுகுரல்கள் கேட்டதை அனைவரும் உணர்ந்தனர்.
     எல்லோருக்கும் உள்ளம் பதற தொடங்கியது. “அங்கிள் நீங்க எல்லாம் இங்கையே இருங்க. நாங்க போய் என்னன்னு பார்த்துட்டு வந்து சொல்றோம்” என வெற்றியை அழைத்துச் சென்றான் விஜய்.
     சிறிது நேரம் கழித்து வெற்றி மட்டும் பதட்டமாக தனியே வந்தான்‌. “என்ன ஆச்சு? விஜய் எங்க” என சோம் கேட்க “அங்கிள்‌ இந்த டிராக் ஆப்போசிட்ல இருந்து வந்த டிரையின் ஒன்னு தடம் புரண்டுருச்சு.
     ப்ர்ஸ்ட் இருந்த ஏசி கோச் எல்லாம் சரிஞ்சிருச்சு. நல்ல வேலை நம்ம இஞ்சின் மாஸ்டர் தூரத்தில இதை பார்த்து நம்ம டிரையன நிறுத்திட்டார். இல்லைனா இன்னும் பேட்டல் டேமேஜ் தான்‌ ஆகியிருக்கும்.
     அங்க அந்த டிரையின் கம்பார்ட்மெண்ட்ல இருக்க ஆளுங்க எல்லாம் உள்ளே மாட்டிட்டு இருக்காங்க. இதுக் கொஞ்சம் சிட்டி அவுட்டர் பிளேஸ்‌ போல. இன்னும் ரெஸ்க்கூயு டீம்லாம் வரலை.
     விஜய் அங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கான். உங்ககிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன். நானும் போறேன்” என வெற்றி எல்லா தகவல்களையும் சொல்லி கிளம்பி விட்டான்.
     அவன் கூறி சென்றதை கேட்டு எல்லோரும் பதறி விட்டனர். சோம் அங்கிள் போவதாக கூற சஹி தானும் வருவதை கூறி அவருடன் சென்றாள். லக்ஷ்மி அம்மாவின் வயதையும் ஸ்ரேயாவின் மனநிலையையும் கருத்தில் கொண்டு அவர்களை அங்கையே இருத்தி சென்றனர்.
     சோம் மற்றும் சஹி அங்கே செல்லும் போது பல பேரின் வலியின் ஓலம் தான் அவர்கள் காதை எட்டியது. இவர்களை போல் இவர்கள் ரயிலில் இருந்து வந்து நிறைய பேர் மக்கள் வெளியேற உதவிக் கொண்டு இருந்தனர்.
     அதில் விஜய் வெற்றி எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சோம் அங்கிள்‌ அந்த சூழ்நிலையை கண்டு தானும் துரிதமாக செயல்பட்டார்.
     ஆனால் அங்கே இரத்த வெள்ளத்தில் இருந்த மக்களை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டாள் சஹி. இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூட அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
     அப்போது எங்கேயோ ஒரு குழந்தை வலியில் அழும் குரல் வரவே, அதில் தெளிந்தாள் சஹி. அந்த குரல் எங்கிருந்து வருகிறது என தேடி சென்றாள்.
     அங்கே விழுந்து‌ கிடந்த ரயில் பெட்டியின் அருகே தான் அந்த குழந்தை நின்று கொண்டிருந்தது. யாரோ அனேகமாக அந்த குழந்தையின் பெற்றோராக இருக்கலாம். அந்த குழந்தையை மட்டும் ஜன்னலின் வழி அனுப்பி விட்டிருப்பர் போல்.
     அந்த குழந்தைக்கும் சிறு சிறு அடிப்பட்டிருந்தது. அந்த குழந்தை எங்கே செல்வது என புரியாது இங்கையும் அங்கையும் பார்த்து அழுதுக் கொண்டிருந்தது.
     அந்த குழந்தையை கண்டு விட்ட சஹி அதை தூக்கி கொண்டு வந்து காப்பாற்றிய எல்லோரையும் அமர வைத்திருந்த இடத்திற்கு கொண்டு வந்தாள். அதே நேரம் ஆம்புலன்ஸ் ரெஸ்க்யூ டீம் எல்லாரும் வந்துவிட்டனர்.
     அதன் பின் சஹியும் நிற்கவில்லை. அவள் கண்ணுக்கு தெரிந்த இடத்திற்கு சென்று அங்கே இருந்தவர்கள் எல்லோரும் வெளியே வர உதவ ஆரம்பித்தாள்.
     ஒரு இடத்தில் ஏசி கோச் என்பதால் ஜன்னல்கள் எல்லாம் அடைந்து கிடக்க திறக்க முடியாது உள்ளே ஸ்டக் ஆகி இருந்தது. அதில் இருந்த யாரோ மூச்சுக்கு திணறி கையால் ஜன்னலை தட்டிக் கொண்டிருக்க அதை பார்த்துவிட்டாள் சஹி.
     அருகில் கிடந்த கல்லை எடுத்து தன் பலம் முழுவதையும் கொடுத்து ஜன்னலை உடைத்து விட்டாள். பின் அந்த நபரை கஷ்டப்பட்டு வெளியே இழுத்து வந்தாள்.
     அதன் பின் அங்கே இருந்த மற்றவர்களும் அந்த ஜன்னலின் வழியே வெளியே இழுத்தாள் முதலில் இழுத்த நபரின் உதவியோடு.
     அதை செய்து முடித்த பின் வெளியே வந்தவர்கள் கை கூப்பி இவளுக்கு நன்றி உரைத்திட உண்மையான மகிழ்ச்சியை மனதார உணர்ந்தாள் ச‌ஹி.
     அவர்களிடம் பரவாயில்லை என கூறி ஆம்புலன்ஸ் இருக்கும் திசையை காட்டிவிட்டு தன் பணியை தொடர சென்றாள் இப்போது சஹி. அங்கே சோம் அங்கிள் தன்னால் ஆன உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்.
     உள்ளே இருந்து வெளியே வருபவர்களை ஆம்புலன்ஸ் இருக்கும் இடம் அழைத்து செல்ல, நடக்க முடியாதவர்களை தன் கைகளால் தாங்கி செல்ல என அவரின் வயதிற்கு முடிந்த உதவிகளை செய்யலானார்.
     விஜய்யும் வெற்றியும் ரயிலின் உள்ளே இருப்பவர்களை முடிந்த அளவு அவர்களை பத்திரமாக வெளியே இழுத்து வந்தனர். அதுவும் விஜய் ரயிலின் உள்ளே செல்ல முடிந்த இடத்திற்கு எல்லாம் அவனே சென்று காப்பாற்றி கொண்டிருந்தான்.
     இப்படி போய் கொண்டிருக்கும் போது தான் ஏசி கோச் ஒன்றில் மெதுவாக தீப்பற்ற ஆரம்பித்தது. நல்ல வேளையாக அந்த கோச்சில் இருந்த நபர்களை தான் சஹி காப்பாற்றி இருந்தாள்.
     ஆனால் நெருப்பு கண்டிப்பாக மற்ற பெட்டிகளுக்கும் பரவும் அபாயம் இருக்கவே எல்லோரும் துரிதமாக செயல்பட ஆரம்பித்தனர்.
     ஆனாலும் மக்கள் இருந்த ஒரு பெட்டி திடீரென தீப்பற்றி விட அனைவரும் அதிர்ந்து நின்று விட்டனர். அந்நேரம் வந்த விஜய் யோசிக்காது உள்ளே ஏறி விட்டான்.
     சஹி சோம் வெற்றி அங்கே தான் நின்றிருந்தனர். சஹியும் சோம் அங்கிளும் பதறி போய் கத்தினர். ஆனால் வெற்றி தான்‌ “அவன் முறையா நிறைய டிரைனிங் எடுத்திருக்கான்.
     சோ பயப்படாதீங்க. அவன் எல்லாத்தையும் சேஃப்பா கூட்டிட்டு அவனும் சோஃபா வெளியே வந்திருவான்” என்று சமாதானம் செய்தான்.
     ஆனால் அவன் மனதும் திக்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு என்ன தான் விஜய் பாதுக்காப்பாக வந்துவிடுவான் என அவன் மூளை சொன்னாலும் விஜய் நல்லபடியாக வரவேண்டும் என்றே வேண்டிக் கொண்டிருந்தான்.
     கொஞ்ச நேரத்தில் விஜய் ஒவ்வொரு நபராக வெளியே தூக்கி வர அவர்களை வெற்றி என அங்கிருந்தவர்கள் வாங்கி கொண்டு சென்றனர்.
     நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் தான் ஆனது. ஆனால் தைரியமாக அங்கே இருந்த கடைசி நபர் வரை வெளியே கொண்டு வந்து தான் பத்திரமாக வெளியே வந்துவிட்டான் விஜய்.
     கீழே இவன் இறங்கவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் கை தட்டி ஆர்ப்பரிந்தனர். அதை சிறு சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட விஜய் நல்லபடியாக கீழே இறங்கி விட்டான்.
     ஒருவழியாக எல்லா மக்களையும் வெளியே இழுத்து விட்டனர். ஆனால் சிறு அடி முதல் பலமான அடி என எல்லோருக்குமே அடிப்பட்டிருந்தது. அதுவும் சிலருக்கு எல்லாம் அடி மிகவும் அதிகம்.
     அவர்களின் நிலை கவலைக்கிடம் தான். இனி மருத்துவமனை சென்ற அவர்களின்‌ உயிர் மருத்துவர் கைகளில் தானே. யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது என வேண்டிக் கொள்வதை தவிர வேற எந்த எண்ணமும் யாருக்கும் தோன்றவில்லை.
     முழுதாக ஐந்து மணி நேரம் கடந்திருந்தது. நன்றாக இருளும் சூழ ஆரம்பிக்க அப்போது தான் இவர்கள் நால்வரும் தங்கள் பெட்டியை அடைந்தனர்.
     இவர்கள் ரயிலும் இங்கே தான் நின்று கொண்டிருந்தது. ஏனெனில் முன்னே இருக்கும் ரயிலின் பெட்டிகளை நீக்கினால் தான் இவர்களது முன்னேறும்.
     எப்படியும் வேலை முடிய இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என புரிந்தது. அதனால் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டனர். சோம் அங்கிள் தான் அங்கே நடந்த எல்லாவற்றையும் லக்ஷ்மி ஸ்ரே இருவருக்கும் கூறிக் கொண்டிருந்தார்.
     விஜய் அந்த எரியும் பெட்டியின் உள்ளே ஏறியதை சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். இதை பற்றி பேச ஆரம்பிக்கும் போதே சஹி சட்டென எழுந்து விட்டாள்.
     எல்லோரும் ‘என்ன’ என்பதை போல் பார்க்க “அது ரெஸ்ட் ரூம் போறேன். இப்போ வந்தர்ரேன்” என நகர்ந்திருந்தாள். அவளை பார்த்த விஜய் அவளின் முகம் சரியில்லை என புரிந்து கொண்டான்.
     எனவே அவள் சென்ற சில நிமிடங்கள் கழித்து அவனும் சென்றான். பார்த்தவர்களுக்கு புரியாமலா இருக்கும். புரிந்தது தான். ஆனால் யாரும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
     அங்கே கதவருகில் தான் சஹி நின்றிருந்தாள். அவளை நெருங்கிய விஜய் “என்னாச்சு சஹி?” என்றது தான் தாமதம் விஜய்யின் கையை பிடித்து கொண்டு அழுது விட்டாள்.
     “ஏன்” என விஜய் கேட்டகாது அவள் மனபாரம் குறையும் வரை அழவிட்டான். அவள் சற்று தெளிந்த பின்‌ “ஏன் மா அழுத?” என்றான் பரிவாய்.
     அவனை பார்த்தவள் “தெரியலை. ஆனா நீங்க சட்டுன்னு அந்த நெருப்புக்குள்ள போகவும் ரொம்ப பயமாகிருச்சு. எதோ ஒரு பீல். எனக்கு அதை சொல்ல தெரியலை.
     ஆனா உங்கள இழ்திருவோம்னு பயமாகிருச்சு. அதான் இப்ப சோம் அங்கிள் அதை சொல்லவும் அழுகை வந்திருச்சு” என்றாள் தன் கண்களை துடைத்துக் கொண்டு.
     தனக்கான அவள் உணர்வுகள் என்னவென புரிந்து கொண்ட விஜய் எதுவும் பேசவில்லை. காதல் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை.
     இது சாதாரண ஈர்ப்பாக தான் இருக்கும் என எண்ணினான். பாவம் பெண்ணின் மனதை பற்றி அறியாத விஜய்.
     அந்த நேரம் சஹியின் கைப்பேசி அழைப்பு விடுக்க அழைத்தது அவள் மேனேஜர். ரயில் விபத்து செய்தியை பார்த்து பதறி அழைத்திருந்தார்.
     அவரிடம் பேசி சமாதானம் செய்தவள் கைப்பேசியை அணைத்தாள். அப்போது எதேச்சையாக அவளின் கைப்பேசியை கண்ட விஜய் ஆனந்தமாக அதிர்ந்தான்.
     அவள் கைப்பேசியில் இருந்த அவள் அம்மாவின் புகைப்படத்தை காட்டி “பானு ம்மா தானே! இவங்க தான் உன் அம்மாவா?” என்றான் ஆச்சரியமாக.
     ‘இவருக்கு எப்படி நம்ம அம்மாவை தெரியும்’ என குழம்பிய சஹி ஆம் என்பதாய் குழப்பத்தோடு தலை அசைத்தாள்.
-பயணம் தொடரும்

Advertisement