Advertisement

அத்தியாயம் – 12
     விஜையை பற்றி தனக்கு தெரிந்த இன்னும் சொல்ல போனால் விஜயை பார்த்த நாட்களை பகிர ஆரம்பித்தான் வெற்றி. “அதுக்கு நாம ஒரு நாலு வருஷம் பின்னாடி போகனும்” என ஆரம்பிக்க
     “ஹலோ வெற்றி இதுக்காக நாங்க டைம் டிராவல் எல்லாம் பண்ண முடியாது. ஒழுங்கா நடந்ததை சொல்லு இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ்லா சொல்லி எங்களை கடுப்பேத்தாத” என்றாள் ஸ்ரே கோபமாக.
     “ஓகே ஓகே மா. வைய் டென்ஷன். நடந்த விஷயத்தை சொல்றேன். அன்னைக்கு தான் எனக்கு பர்ஸ்ட் டே ஆபிஸ். புது ஆபிஸ் எனக்கு யாரையும் தெரியலை.
     முதல் நாள் வேறையா மீட்டிங்க வைச்சாங்க. அந்த கம்பெனி பத்தி எல்லாத் தகவலையும் எங்க மைன்ட்ல ஏத்தி தான் அனுப்பி வச்சாங்க. அவ்ளோ நேரம் நான் எப்படி தூங்காம வந்தேன்னு தான் எனக்கு இப்ப வரை புரியலை” என அதிசயம் போல் சொன்னான்.
     மற்றவர்களின் பார்வை முறைப்பாய் வருவதை கண்டவன் நல்ல பிள்ளையாக மாறி “ஒருவழியா மீட்டிங் முடிஞ்சுது. ரூமை விட்டு வெளியே வந்த உடனே ஒரு யூ டர்ன போட்டு கேண்டீனை தான் தேடி போனேன்.
     அங்க ஒரு காபியை வாங்கி குடிச்சு முடிச்ச அப்புறம் தான் என் மயக்கமே தெளிஞ்சுது. சரி ஆபிஸ்ல சேர்ந்தாச்சு. நமக்குன்னு ஒரு ஃபிரண்டை பிடிப்போம்னு தலையை தூக்கினப்ப எனக்கு முதல்ல தெரிஞ்ச முகம்” என்றவன் விஜயை காட்டி
     “இந்தா இவன் முகம் தான் ஸ்ரே. இவனை பார்த்த உடனே ஆஹா பர்ஸ்ட் இவனை தான் பார்த்திருக்கோம் இவனை நம்ப ஃபிரண்ட் ஆக்கியே தீரனும்னு அப்போ டிசைட் பண்ணுனேன்” அன்றைக்கு மனதில் பேசிய வீர வசனம் எல்லாம் நினைத்து இப்போது சிரித்தான் வெற்றி.
     “ஓய் வெற்றி! என்ன சிரிப்பு. சிரிக்காம சொல்லு மேன்” என்றாள் ஸ்ரே. அவளை பார்த்து “சொல்றேன் தாயே! குறுக்க பேசாத!” என்றான். ஸ்ரேயும் சரி சரி என மண்டையை நாலாபுறமும் ஆட்டி வைத்தாள்‌.
     அவளை சந்தேகமாக பார்த்தாலும் தொடர்ந்தான் வெற்றி. “மனசுல முடிவை எடுத்த உடனே இவன் டேபில்ல போய் உக்கார்ந்துட்டேன். நான் இவனை பார்த்து ஆர்வமா ஒரு ஹாய‌ போட.
     அவன் ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான். சே என்ன ஒரு அவமானம்னு நினைச்சாலும் என் கையை நீட்டி என் பேர் வெற்றி உங்க பேர் என்னன்னு கேட்க அவனும் விஜய்னு கை குடுத்தான்.
     ஆஹா இவனுக்கும் நம்ப கூட பிரண்ட்ஷிப் வச்சுக்க இஷ்டம் தான் போலன்னு நானும் நினைச்சேன். அதை நம்பி இவன்ட்ட நான் என்னை பத்தி அதாவது நான் படிச்ச ஸ்கூல் காலேஜ் பத்தி எல்லாத்தையும் அப்படியே ஒப்பிச்சேன்.
     அவன் மூஞ்சில ஒரு ரியாக்ஷனும் காட்டலை. அதை பார்த்தாவது அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும் ஸ்ரே. நான் லூசு மாதிரி எல்லா டீடெயிலும் சொல்லிட்டு உன்னை பத்தி சொல்லுன்னு சொன்னேன்.
      அதுக்கு ‘நான் எதுக்கு சொல்லனும்’னு கேட்டுப்புட்டான். ‘என்னை பத்தி நான் எல்லாம் சொன்னேனே அப்போ நீ உன்னை பத்தி சொல்லனும்ல’ அப்படின்னு நியாயமா ஒரு கேள்வியை நான் கேக்க அவன் சொன்ன பதிலை கேட்டு அப்படியே என் மனசே வெடிச்சிருச்சு” என்றான் பொய்யான சோகத்துடன்.
     “அப்படி விஜய் என்ன பதில் சொன்னாரு?” என்றாள் ஸ்ரே ஆர்வத்தை உள்ளடக்கிய குரலில். அன்றைய நாளின் நினைவில் விஜய்யும் சிரித்துக் கொண்டிருந்தான்.
     “சிரிக்கிறியா டா எருமை” என்று விஜையை கடிந்து கொண்டவன் “என்னை பார்த்து இந்த அப்பாவி வெற்றியை பார்த்து” என்னும் போதே “ஏய் நடுவுல என்ன உன்னை நீ அப்பாவின்னு வேற சொல்லிக்கிற.
     இந்த பில்ட் அப்பை கட் பண்ணிட்டு சொல்லு” என இடையே புகுந்தாள் ஸ்ரே. “கொஞ்சம் என்னை பத்தி பெருமையா ஒரு வார்த்தை சொல்ல விடுற” என பொய்யாய் சலித்தாலும் தொடர்ந்தான்.
     “நீ யாருன்னு கேட்டுப்புட்டான் மா பாவி பய. இவ்ளோ நேரம் தான் நான் என்னை பத்தி சொன்னேன்ல அப்படின்னு நான் பாவமா கேக்க,
      ‘அதெல்லாம் நான் உன்கிட்ட கேட்டேனா’ அப்படின்னு வேற சொல்லி என் வாயவே அடைச்சிட்டான் மா அடைச்சுப்புட்டான்” என்று நெஞ்சிலே கையை அடித்துக் கொண்டு வசந்தமாளிகை சிவாஜியை போல்‌ வசனம் பேசினான்.
     அவன் சொன்ன விதத்தில் எல்லோரும் சத்தமாக சிரித்து விட்டனர். “அப்புறம் என்னாச்சு?” என்றாள் ஸ்ரே சிரிப்பு மாறாத குரலில். அனைவரும் சிரிப்பதை பார்த்துக் கொண்டே
     “அது அதுக்கு மேல நடந்த ஒரு சோக கதை ஸ்ரே. இவன் என்னை அவ்ளோ அசிங்கப்படுத்தியும் அசரலையே நானு. நான் இவனை தான் முதல்ல பார்த்தேன். அதனால இவனை ஃபிரண்ட் ஆக்கியே தீருவேன்னு சத்தியமே பண்ணிட்டேன்னா பார்த்துக்கோயேன்.
     அப்போ என் மிஷனை நான் ஸ்டார்ட் பண்ணுனேன்” என்றான் தீவிர முகபாவத்தில் “என்ன மிஷன்‌. விஜய் கிட்ட அசிங்கப்படுற மிஷனா” என்றாள் சஹி புன்னகையுடன்.
     அவளை பார்த்து “யூ டூ புரூட்டஸ்” என்று பாவனையாக கேட்டவன் “அதெல்லாம் இல்லை. மிஷன் விஜய்னு நானே பேர் வச்சிக்கிட்டேன்” என்றவன் சஹியை பார்த்து
     “ஆனா நீ சொன்னது தான் மா நடந்தது” என்றான் பாவமாக. இப்போது எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தனர். “என் அவமானம் உங்களுக்கு எல்லாம் காமெடியா இருக்கா?” என்று கோபம் போல் சொன்னாலும் அவன் முகத்திலும் சிரிப்பு தான் இருந்தது.
      “என் மிஷனை அடுத்த நாள்ல இருந்தே ஆரம்பிச்சேன். நாயா பேயா ஒரு மாசம்‌ முழுசா ஒரு மாசம் நான் இவன் பின்னாடி சுத்தினா மகராசன் திரும்பிக் கூட பார்க்கலை.
     ‘என்ன ஒரு அசிங்கம்’ அப்படின்னு கண்ணாடியை பார்த்து என்னை நானே காறித் துப்பிக்கிட்டாலும் அவன் பின்னால போறதை நிறுத்தலையே.
     இதே நான் ஒரு பொண்ணு பின்னாடி இப்படி சுத்தி இருந்தா இன்னேரம் நான் கமிட்டட் ஆயிருப்பேன். எங்க என் தலையெழுத்துல இவன் கூட சிங்கிளா தான் சுத்தனும்னு எழுதி இருந்தா யாரால மாத்த முடியும்” என்று வராத கண்ணீரை வலித்து துடைத்தான்.
     “அப்புறம் எப்படி தான் இவரை உங்க ஃபிரண்ட் ஆக்குனீங்க” என்றாள் சஹி ஆர்வமாய். “ஒரு மாசமா இவன் பின்னாடி சுத்துனதுல இவன் பார்த்தானோ இல்லையோ சுத்தி இருக்கவங்க பார்த்து என்னை அவனா நீன்ற ரேஞ்சுல நினைச்சு பேச அதைக் கேட்டு தான் என்னை திரும்பி பார்த்தான் மா.
     அப்பவும் வந்து ‘நீ யாரு? எதுக்கு என் பின்னாடி வரன்னு?’ கேட்டான் பாரு” என்று சொல்லி வடிவேலு பாவனைகள் நாலை முகத்தில் காட்டினான்.
   “அப்புறம் எங்க ஆபிஸ்ல பர்ஸ்ட் டே மீட் பண்ணதை சொல்லி. பிரண்ட்ஸ் ஆகலாம் அப்படின்னு நான் கேக்க ‘அதுக்கா என் பின்னாடியே நீ இவ்ளோ நாள் சுத்துன‘ அப்படின்னு ஐயா ஆச்சரியப்பட்டு, என் பர்பாமென்ஸ்ல இம்ப்ரெஸ் ஆகிட்டார்.
     அதுக்கு அப்புறம் தான் என்னை பிரண்டா ஏத்துக்கிட்டான் மா. எப்படியோ என் மிஷன் சக்சஸ் ஆச்சு. அதுல ஒரு ஆனந்தம்” என்றான் நிறைவான புன்னகையில்
     “ம்ம்.. அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் அதே கம்பெனில தான் நாங்க சேர்ந்து குப்பை கொட்டுனோம். அந்த நேரம் தான் என்ன பெத்தவரு ஒரு குண்டை தூக்கிப் போட்டாரு” என்று சோகமே உருவாக நிறுத்தினான். 
     “அப்படி என்ன குண்டு வெற்றி. ஆட்டம் பாமா? ஹைட்ரஜன் பாமா?” என்றாள் ஸ்ரே கிண்டலாக. “அதெல்லாத்தையும் விட பெரிய பாம். நான் சொன்னேன்ல என் நைநா சென்ட்ரல் கவர்மெண்ட்ல வேலை பார்க்குறார்னு.
     அதனால நானும் கவர்மெண்ட் எக்சாம்க்கு படிச்சு பாஸ் பண்ணும்னு சொல்லிப்புட்டாரு” என்றான் வருத்தம் மேலிட்ட குரலில். “நீங்க சொன்னா நான் கேட்டுருவேனா அப்படின்னு மனசுல நினைச்சுக்கிட்டு,
     இந்தா இருக்கானே இவனை என் உயிர் நண்பனா நம்பி ‘எனக்கு சப்போர்ட்டா வாடா என் சப்போட்டா’னு இழுத்துட்டு போனேன் மா. ஆனா அது எனக்கு நானே தோன்டுன புதைக்குழியா போச்சு.
     இந்த பக்கி பையல நம்பி போனேன் மா. அங்க வந்து என் அப்பா பேசறது எல்லாம் கேட்டுட்டு என்கிட்டையே வந்து ‘மச்சான் அப்பா சொல்றது எல்லாம் உன் நல்லதுக்கு தான் டா.
     அவர் பேசறத கேட்டு எனக்கே அந்த பீல்டுல ஆர்வம் வந்திருச்சு. நானும் வரேன் ரெண்டு பேரும் கோச்சிங் போலாம்னு சொல்லி என் தலையில பாராங்கல்லையே போட்டுட்டான்.
     அதோட விட்டு தொலைச்சானா தேடி புடிச்சு நல்ல ஒரு இன்ஸ்டிடியூட்டா பார்த்து ரெண்டு பேருக்கும் அட்மிஷனே போட்டுட்டான் இந்த தடிமாடி” என்றான் சோகமாக.
     “அப்புறம் என்ன தான் ஆச்சு? எக்சாம்க்கு கிளாஸ் போனீங்களா இல்லையா?” என்று கேள்வி எழுப்பினாள் சஹி. “ம்ஹூம்” என பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டவன்
     “எங்க இவன் தான் சனி ஞாயிறுலாம் காலங்காத்தால கரெக்டா வந்து என்னை இழுத்துட்டு போய்ருவானே. அதுவும் சாதா கோர்ஸ்லையா சேர்த்து விட்டிருந்தான்.
     யு.பி.எஸ்.சி க்கு. ஐயா கலெக்டர் எக்சாம் எழுதனும்னு என்னையும் அவனோட ஜோடி சேர்த்துக்கிட்டான். அதோட விட்டானா வாடா குரூப் ஸ்டெடி பண்ணலாம்னு என்னை போட்டு பாடா படுத்தி மோரா திரிச்சான்” என்று அழுத்துக் கொண்டான்.
     அதற்கு “அப்புறம் என்ன ஆச்சு. கலெக்டர் எக்சாம் எழுதினீங்களா?” என்றாள் ஸ்ரே ஆர்வமாய். விஜய்யை பார்த்து “இவன் எங்க என்னை விட்டான். எனக்கும் சேர்த்து எக்சாம்க்கு அப்பளையே பண்ணிட்டான்.
     இவனை சும்மா சொல்லக் கூடாது ஸ்ரே தத்தி தடுக்கி பிரிலிம்ஸ் எக்சாம் மெயின் எக்சாம்னு ரெண்டு கண்டத்த என்னையே தாண்ட வச்சிட்டான். இன்னும் ஒரு வாரத்தில எங்களுக்கு டெல்லில இன்டர்வியூ.
     அதுக்கு தான் இப்ப உங்களோட குப்பை கொட்டிட்டு போய்ட்டு இருக்கோம்” என்று முடித்தான் சோகம் போல் முகத்தை வைத்து.
     அவன் என்னதான் கிண்டல் போல் பேசினாலும் அவர்கள் கலெக்டர் ஆக இன்டர்வியூ செல்கிறார்கள் என தெரிய சட்டென்று அனைவரும் அவர்களின் வாழ்த்தை முதலில் தெரிவித்துக் கொண்டனர்.
     வாழ்த்து படலம் முடிந்த பின்னர் ஸ்ரே எதோ யோசனை செய்து “ஆமா வெற்றி நான் விஜய்யோட பாஸ்ட் தானே கேட்டேன். நீ என்னனா அவரு உன் கூட பழகின அப்புறம் நடந்த இன்சிடென்ட்ஸா சொல்ற?” என்றாள் கேள்வியாக.
     அந்த கேள்வியில் அவளை பார்த்தவன் “இத்தனை நாள் பழகின இவன் அவனை பத்தி என்கிட்டையே சொல்லலையே!! நான் எப்படி அதை உங்ககிட்ட சொல்லுவேன்” என்றான் ராகமாய்‌.
     இப்போது காண்டான ஸ்ரே “அதை முதல்லையே சொல்றதுக்கு என்னடா முட்டை கண்ணா. இவ்ளோ லென்த்‌ லென்த்தா டையலாக் பேசுற” என புசுபுசுவென மூச்சு வாங்கினாள்.
     அவளை பார்த்து நக்கலாக சிரித்த வெற்றி “நான் முதல்லயே எனக்கும் அவனை பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லியிருந்தா நீ என்ன சொல்லி இருப்ப;
     ‘கூடவே சுத்துறியே செவ்வாழ உனக்கு தெரியாம இருக்காதுன்னு’ சொல்லி இருக்க மாட்ட. அதான்” என்றவன் நன்றாக சிரித்து விட்டான்.
     “அடேய்” என கத்திக் கொண்டே எழுந்த ஸ்ரே நங் நங்கென்று தன் மனம் ஆறும் வரை கொட்டி முடித்து வந்த அமர்ந்தாள். வெற்றியும் அதை சிரிப்புடனே ஏற்றுக் கொண்டான்.
     இவன் கதையாக எல்லாம் சொல்லி முடிக்கும் நேரம் மாலையே நெருங்கி விட்டது. இவர்கள் சிரித்துக் கொண்டிருந்த போது ரயில் திடீரென நிற்க ரயிலின் வெளியே அழுகுரல்கள் கேட்கவே திடுக்கிட்டனர் அனைவரும்.
-பயணம் தொடரும்

Advertisement