Advertisement

அத்தியாயம் – 11
     வெய்யோனின் ஒளி சிறிது சிறிதாய் உறங்கி கொண்டிருந்த ஸ்ரேயா முகத்தின் மீது விழுந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் கருவிழிகளை மெல்ல அசைத்தாள்.
     மெதுவாக எழுந்து பார்க்கும் போது அவளை தவிர்த்து மற்றவர்கள் எல்லாரும் கீழே அமர்ந்து இருந்தனர். அனைவரும் பேசாது மௌனமாக இருக்க சஹி வேறு சோம் மற்றும் லக்ஷ்மியின் நடுவே அமர்ந்திருந்தாள்.
     அப்போது தான் இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தது. ‘சே எல்லாரையும் படுத்திட்டேன் போலையே.
     சஹி முகமே வேற சரியில்லை. பாவம் அவ கஷ்டத்தையே வாழ்க்கை பூரா அனுபவிக்கிரா” என வேதனையாக எண்ணி கொண்டவள் அமைதியாக கீழே இறங்கினாள்.
     சோம் அங்கிள்‌ முன் போய் நின்றவள் அனைவரையும் தயங்கியபடியே ஏறிட்டாள். “சாரி உங்க எல்லாரையும் நான் ரொம்ப பயமுறுத்திடேனா?” என்றாள் சங்கடத்துடன்.
     முறைக்க கூட முடியாது அவளை பார்த்த வெற்றி “அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸ்ரே. நீ வொர்ரி பண்ணிக்காத” என்று ஆதூரமாக கூறியவன் “நைட் நல்லா தூங்குனியா டா?” என்றான் பரிவான குரலில்.
     “ம்ம் நல்லா தூங்கிட்டேன். இப்போ கூட நானா தானே எழுந்தேன். நீங்க எழுப்பி விடவே இல்லை” என்றாள் குறை போல். அதன்பின் எங்கே அமர என இரண்டு இருக்கையையும் அவள் மாறி மாறி பார்க்க அதை கவனித்த வெற்றி சிரித்து விட்டான்.
     “எம்மா ஸ்ரே! என்ன திருவிழால காணம போன பச்சைப் புள்ளை மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்க. நேத்து வாய மூடாமா பேசிட்டு இருந்த, இன்னைக்கு என்ன ஆச்சு.
     தூங்கி எழுந்தா முதல் நாள் நடந்தது எல்லாம் மறந்திடுவியா? எங்க எல்லாரையும் உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா” என்றான் கிண்டலாக.
     இதை கேட்டவாறு பழையபடி சோம் சென்று வெற்றி விஜய்யின் அருகே அமர்ந்துக் கொண்டார். அதை கண்டு வெற்றியை பார்த்து பழிப்பு காட்டிவிட்டு சஹியின் அருகே அமர்ந்து கொண்டாள்.
     இப்போது ஸ்ரே பழைய ஸ்ரேயாவா தெளிந்து திரும்பி இருந்தாள். “இந்த கேள்வியை நான் தான் கேக்கனும் மிஸ்டர். முட்டை கண்ணன். தூங்கிட்டு இருந்த என்னை விட்டுட்டு நீங்க எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க.
     வாட்ஸ் த மேட்டர். என்ன ரகசியம் பேசினீங்க. சொல்லுங்க முட்டை கண்ணன் சொல்லுங்க” என்று ஆரம்பித்துவிட்டாள் ஸ்ரேயா. மேலும் இவர்கள் இருவரின் பேச்சுக்களும் மற்றவர்களுக்கு சிரிப்பை தான் தந்தது.
     “ஏய் வாயாடி எழுந்தியே பிரஷ் பண்ணுனியா. வந்து பேச உக்காந்துட்ட. சரியான சோம்பேறி கழுதை” என்று அவளை செல்லமாக திட்டினாள் சஹி.
     அப்போது தான் மற்ற அனைவருக்கும் நினைவு வந்தது. தாங்களும் இன்னும் பல்லு கூட விலக்கவில்லை என்று. அவர்களின் முழியை வைத்தே கண்டு கொண்ட ஸ்ரே
     “என்ன சொல்றியே, நீங்க எல்லாரும் பல்லை விலக்கு விலக்குன்னு விலக்கிட்டு தான் வாயடிச்சிட்டு இருக்கீங்களா” என்று அவர்களையும் ஓட்டினாள்.
     ஒருவழியாக தங்கள் வேலைகளை முடித்து வந்தனர் அனைவரும். அதன்பின் ஸ்ரேயா வெற்றியின் பேச்சை ரசித்தபடி காலை உணவை எடுத்துக் கொண்டனர். இதில் சஹியும் அவர்களுடன் சகஜமாக பேச அவளையும் ஓட்டிக் கொண்டிருந்தாள் ஸ்ரே.
     இது மாதிரி ஒரு மகிழ்வான காலை வேளையால் சஹியின்‌ மனது நெகிழ்ந்து போனது.‌ அவர்கள் வீடும் இப்படி தான் சிரிப்பும் சந்தோஷமாக இருந்தது ஒரு காலத்தில்.
     மீண்டும் அந்த நிலை வராது என்ற நினைவே அவளுக்கு வருந்தத்தை அளிக்க அமைதியாகி விட்டாள் சஹி. சஹியின் அமைதியை கவனித்த சோம் அங்கிள்‌
     “என்ன பாப்பா பழசையே நினைச்சிட்டு இருக்கியா. எல்லாத்தையும் கடவுள் கைல விட்ரு டா. அவன் பார்த்துப்பான். மனச சந்தோஷமா வச்சுக்கோ என்ன” என்றார் ஆறுதலாக.
     அவரை கண்டு புன்னகைத்தவள் “ம்ம் சரி அங்கிள்” என்றாள்‌. இதை ஆச்சரியமாக பார்த்த ஸ்ரே அப்போது தான் சோமின் வரிகளை உணர்ந்தாள்.
     “அங்கிள்‌ அது எங்க பாஸ்ட் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் தயக்கமாக. அவள் அவரையே பார்க்க பதில் என்னவோ சஹியிடம் இருந்து வந்தது.
     “நான் தான் நம்ம லைஃப்ல நடந்த எல்லாவற்றையும் இவங்க கூட ஷேர் பண்ணிக்கிட்டேன் ஸ்ரே” என்றாள் புன்னகையுடன். இப்போது ஆச்சரியமாகி போன ஸ்ரே “நிஜமாவா!
     ஹே சஹி நிஜமாவே நீயே சொன்னியா என்ன. வானம் பொத்துட்டு தான் ஊத்த போகுது. உண்மை தானா?” என சந்தேகமாய் கேட்க செய்தாலும் அவள் மனமும் மகிழ்ந்தது உண்மையே.
     “ஹே உண்மை டா. நீ வேணும்னா இவங்ககிட்ட கேட்டு பாரு” என சின்ன பிள்ளையாய் முன்னிருந்தவர்களை‌ கை காட்டினாள். அவள் கிண்டல் செய்கிறாள் என புரியாத லக்ஷ்மியும்
     “சஹி சொல்றது உண்மை தான் ஸ்ரே பாப்பா. உங்களை பத்தி தெரிஞ்ச அப்புறம் மனசுக்கு கஷ்டமா போச்சுடா” என்றார் வருத்தமாக.
     இந்த பதிலில் பழையது நினைவு வர சற்றே சோர்ந்து விட்டது அவள் முகம். “எங்க லைப் சந்தோஷமா தான் இருந்தது. சஹி சொல்லிருப்பா. அப்படியே இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தோணுது அங்கிள்” என்றாள்.
     அவளின் நேற்றைய அழுகையை பார்த்து வருந்தி இருந்தவர்கள் இப்போது அவளின் சோர்ந்த முகத்தை காண சகியாது அவள் மனதை மாற்றும் பொருட்டு “சரியான அழுமூச்சு பாப்பாவே தான் நீ.
     தயவு செஞ்சு அழுது கிழுது வெள்ளத்தை வர வச்சிராத மா. எங்களால போட் எல்லாம் ஓட்ட முடியாது. அப்புறம் உன் முகத்தையும் பார்க்க சகிக்கலை” என ஆரம்பித்தான் வெற்றி.
     அவனின் முயற்சி புரிந்தபடி “ஹலோ ஹலோ! மிஸ்டர். முட்டை கண்ணன். நாங்களாம் அழுதாலும் அழகு தான். ரொம்ப பண்ணாதீங்க” என்றாள் வீம்பாக.
     கொஞ்ச நேரம் இப்படியே கழிய திடீரென விஜயை பார்த்து “ஆமா விஜய் நாங்க எல்லாம் எங்களை பத்தி செல்லிட்டோமே. நீங்க என்ன ஒன்னும் சொல்லலை.
     எப்படியும் என் அக்கா ஏ டூ இசட் எங்களை பத்தி சொல்லிருப்பா‌. வெற்றியும் சொல்லிட்டாரு. சோம் அங்கிள் அவர் தான் ஸ்டார்ட் பண்ணியே வச்சாரு.
     ஆனா நீங்க கருத்து கருத்தா பேசுனீங்க. நீங்க என்ன பண்றீங்க என்ன ஏதேன்னு ஒன்னுமே சொல்லலையே. நீங்களும் சொல்லுங்க விஜய். அப்போ தானே உங்களை பத்தியும் எங்களுக்கு தெரியும்” என்றாள் ஆர்வமாக.
     ஆனால் விஜய் சிரித்தானே ஒழிய ஏதும் பேசவில்லை. “என்ன விஜய் இது. நாங்க எல்லாரும் சொன்னோம்ல நீங்க சொல்றதுக்கு என்ன. எங்களை நீங்க இன்னும் பிரண்டா கண்சிடர் பன்னலை இல்ல” என்றாள் கோபம் போல்.
     ஆனால் எதற்கும் விஜய் மசிந்து விடவில்லை. அவன் எதுவும் சொல்லாதது சஹிக்கும் ஒரு மாதிரி ஆக “என்ன விஜய் சொல்ல மாட்டீங்களா?” என்றாள் பாவமாக.
     அவள் கேள்விகளுக்கு மட்டும் “வேண்டாமே” என்றான். அவன் பார்வையில் இருந்த இயலாமையில் அதற்கு மேல் சஹியும் ஏதும் கேட்கவில்லை.
     ஆனால் அவன் பதிலில் கோபம் அடைந்த ஸ்ரே வெற்றியை பார்த்து “ஏய் முட்டை கண்ணா. அவர் உன் பிரண்ட் தானே நீ சொல்லுடா அவரை பத்தி” என்று கத்தினாள்.
     அவளை விஜையை விட பாவமான முகபாவத்தை வைத்து கொண்டு பார்த்தான் வெற்றி. “என்ன முகபாவனைல பேசுறியா. எனக்கு நேரா பேசினாவே புரியாது. நீ ஒழுங்கா வாயால பேசி தொலை” என்று கடுப்படித்தாள் ஸ்ரே.
     அவன் நிலையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் விஜய். அவனை பார்த்து “அடேய் கிராதகா! பாரு என்ன கேக்குறான்னு. இப்ப நான் சொல்றதை கேட்டா காறித் துப்புவாளே. ஏன்டா என்னை இப்படி மாட்டி விட்ட” என்று பல்லை கடித்தான்.
     “ஹேய் எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. அங்க என்ன ரகசியம்?” என்றாள் ஸ்ரே அவனை விடாது. இப்போது ஸ்ரேவை பார்த்து ‘உன் விதியை யாரால மாத்த முடியும் வெற்றி.
     கேட்டுட்டு கண்டமேணிக்கு கழுவி ஊத்த போறாங்க’ என மனதில் எண்ணினான். எல்லாரும் அவனையே பார்த்திருக்க ‘சரி ஆரம்பிப்போம்’ என சொல்ல தொடங்கினான்.
     “அந்த சோக கதையை ஏன்மா கேக்குற” என்று இழுத்து வராத கண்ணீரை துடைத்து கொண்டிருந்தான். அவன் செய்கையில் கடுப்படைந்த ஸ்ரே
     “இங்க பாரு வெற்றி என்னை கடுப்பேத்தாத. ஒழுங்கா சொல்லிரு. இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. பார்த்துக்க” என்று எகிறிவிட்டாள்.
     அவளை நன்கு கடுப்பேத்திவிட்டோம் என புரிய “சரி சரி கோவப்படாத. நான் சொல்லிடறேன். ஆனா அதை கேட்டுட்டு என்னை திட்டக்கூடாது, அடிக்ககூடாது. ஆன் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.
     என்னை கண்டபடி கழுவி ஊத்தவே கூடாது. இதுக்கு எல்லாம் ஓகேன்னு சத்தியம் பண்ணு நான் சொல்றேன்” என்று பீடிகை போட்டான். அவனை முறைத்த ஸ்ரே “சரி சத்தியம்.
     எதுவும் பண்ண மாட்டேன். நீ சொல்லு” என அவனை நம்பி வாக்கு கொடுத்தாள். ஆனால் அவன் சொல்லி முடிக்கும் போது இது அத்தனையும் அவள் செய்து தான் அவனை விட்டாள்.
-பயணம் தொடரும்

Advertisement