Advertisement

அத்தியாயம் – 10
     “என்ன பாப்பா நீ இப்படி சொல்ற அவ்ளோ வருஷத்தில ஒரு நாள் கூட நீங்களாம் உங்க அப்பா ஆபீஸ பார்த்ததே இல்லையா?” என்றார் சோம் ஆச்சரியமாக.
     அவரின் முகம் கண்டு “அட உண்மையை தான் சொல்றேன் அங்கிள்‌. எங்க கம்பெனி எங்க இருக்குன்னு கூட எங்களுக்கு தெரியாதுனா பாருங்களேன்” என்றாள் அவளும் வேடிக்கையாக.
     அதே சமயம் அவள் சொற்கள் அத்தனையும் உண்மையும் கூட. திடீரென எதோ தோன்ற “உங்க தூக்கத்தை கெடுத்து ரொம்ப பேசி போர் அடிக்கிறனா?” என்றாள் அனைவரின் முகத்தையும் பார்த்து பாவமாக.
     “அப்படியே ஒன்னு போட்டேனா. லூசு மாதிரி பேசாத சஹி. இவ்ளோ வருஷம் தான் எல்லாத்தையும் மனசுக்குள்ளையே போட்டு வச்சிருந்த அதை இப்போ எங்க கூட ஷேர் பண்றதுல உன் மனசும் கூட ரிலாக்ஸ் ஆகும்.
     எங்களை உன் மனசுக்கு குளோசா பீல் பண்ணவும் தானே எங்கக்கிட்ட இதெல்லாம் ஷேர் பண்ற. அப்போ நாங்க மட்டும் உன்னை வேறையாவா பார்ப்போம்” என்றது விஜய் அல்ல வெற்றி.
     இந்த முறை வெற்றி பேசியதை அனைவரும் அமைதியாக ஆமோதித்தனர். அவன் கூறியதை கேட்டு சிரித்த சஹி “நான் யாரையும் நம்பினதே இல்லை தெரியுமா.
     எங்க அப்பா அடிக்கடி சொல்வாறு யாரையும் நம்பக் கூடாது அப்படின்னு. சோ சின்ன வயசுல இருந்தே நான் யார் கூடவும் பழக மாட்டேன். மனுஷங்கள நம்பினா ஏமாத்திருவாங்கன்னு நானும் நினைச்சிட்டு தான் இருந்தேன்.
    பட் சோம் அங்கிள்‌ நீங்க தான் என்னோட அந்த எண்ணம் மாற காரணம்” என்றாள். அனைவரும் புரியாத பார்வை பார்க்க “ம்ம் யாருனே தெரியாத ஸ்ரே பேச ஆரம்பிக்கவும் சட்டுன்னு நீங்க பாசமா பேச ஆரம்பிச்சது பிடிச்சிது.
     அதுவும் பசங்க ரெண்டு பேரு” என வெற்றியையும் விஜய்யையும் காட்டியவள் “அவங்க வரவும் நீங்க சீட் மாறினதுல உங்க கேர் எனக்கு நல்லாவே புரிஞ்சுது அங்கிள்‌. எங்க அப்பா கூட இப்படி செஞ்சதா எனக்கு நியாபகம் இல்லை.
     அப்புறம் நீங்க கொண்டு வந்த புட் தந்ததுல உங்க இயல்பே இதுதான்னு எனக்கு புரிஞ்சுது. எங்களை நம்பி நீங்க உங்களை பத்தி சொன்னப்போ எந்த நம்பிக்கையில இதை எங்ககிட்ட ஷேர் பண்றீங்கன்னு கூட யோசிச்சேன்.
     ஆனா உங்க லைஃப்ல நடந்த இன்சிடன்ஸ் என்னை வேற மாதிரி யோசிக்க வச்சிது அங்கிள்‌. நமக்கு மட்டும் தான் லைஃப்ல பிரச்சினை இருக்கு அப்டின்னு நான் நினைச்சிருக்கேன்.
     பிகாஸ் நான் தான் யார்க்கிட்டையும் பேச மாட்டேனே. ஸ்கூல் காலேஜ் ரெண்டுலையும் எனக்கு பிரண்ட்ஸ்னு யாருமே இல்லை. உண்மையை சொல்லனும்னா நான் தான் யாரையும் கிட்ட சேர்க்கலை.
     அவங்க சந்தோஷமா இருக்கிறத பார்த்து ஏங்கி கூட இருக்கேன். பட் நீங்க சொன்ன அப்புறம் தான் என் மர மண்டைக்கு புரிஞ்சுது” எனும் போது “என்னன்னு” என்று குறுக்கிட்டான் வெற்றி.
     “அது லைஃப் அப்படினாலே பிராப்லம்னு” என்று அசடு வழிந்தாள் சஹி. மற்றவர்களும் புன்னகைக்க ” அப்போ அங்கிள் கிட்ட விஜய் பேசினாருல்ல. உங்க சொத்து எல்லாம் போகலை.
     அந்த சொத்தே நீங்க சம்பாதிச்ச மனுஷங்க தான்னு. அந்த வேர்ட்ஸ் ரொம்பவே என்னை டிஸ்டர்ப் பண்ணிருச்சு. அப்போ இவ்ளோ நாள் லைஃப்ல நான் என்னத்தை சம்பாதிச்சிருக்கேன் அப்படின்னு ஒரு தாட்” என பெருமூச்சு விட்டவள் சோர்வான புன்னகையுடன்
      “அந்த நேரம் எனக்கு புரிஞ்சுது. எங்களுக்குன்னு இந்த உலகத்தில யாருமே இல்லைன்னு” என்னும் போதே கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்து விட்டது.
     இடையே பேசப் போன வெற்றியின் கையை பிடித்து தடுத்த விஜய் அவளை இன்னும் நிறைய பேசவிட்டான்‌. அதன் மூலம் அவள் மனதில் நிம்மதி கண்டிப்பாக பிறக்கும் என நம்பினான்.
     தன்னையே சற்று தேற்றி கொண்டவள் “அதுக்கு அப்புறமும் விஜய் பேசின விஷயங்கள் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச்சுனு தான் சொல்லனும்.
     எனக்கு மனசுல ஒரு தேடல் இருந்துட்டே இருந்துச்சு. எதை செஞ்சா மனசு நிம்மதியா இருக்கும்னு. அதோட விஜய் சொன்ன விஷயமும் ஒத்து போச்சு.
     எங்ககிட்ட பணம் நிறையவே இருக்கு. அதை எங்க அப்பா செஞ்ச மாதிரி வெறும் புண்ணியம், வரி விலக்குக்காகன்னு அந்த பணத்தை செலவு பண்ணாம நானே போய் செய்யனும் அப்படின்னு மனசுல இப்போ தோனுது” இதுவரை பொதுவாக பார்த்து பேசியவள் இப்போது விஜய்யை பார்த்து ஆரம்பித்தாள்
     “இந்த மாதிரி தேவை இருக்க ஆட்களுக்கு உதவுனா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் அப்படின்னு எனக்கு யாரும் சொல்லி தந்தது இல்லை விஜய்.
     அன்பை நாம ஒரு மடங்கு தந்தா அது எப்படி நமக்கு பேரன்பா திரும்பும்னு சோம் அங்கிள் நீங்க உங்க வாழ்க்கையால எனக்கு சொல்லி தந்தீங்க” என சோம் அங்கிளை பார்த்து முடித்தாள்.
     எல்லோரும் அவளை பரிவுடன் பார்க்கும் போது “யார் என்னன்னு தெரியலைனாலும் பசில இருந்தா சாப்பாடு குடுக்கனும் அப்படின்னு உங்க கிட்ட தெரிஞ்சிக்கிட்டேன் லக்ஸ் மா.
     யாராவது சோகமா ஆகிட்டா அவங்க மனசு சரியில்லைனா அவங்கல எல்லாம் சிரிக்க வைக்கனும்‌ன்ற விஷயத்தை உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டேன் வெற்றி” என்று முடித்தாள்.
     “அதுவும் இல்லாம ஸ்ரே அழவும் என மனசு ரொம்ப லோன்லியா பீல் ஆச்சு. லைஃப்ல எனக்கு முக்கியமான நிறைய விஷயங்களை சொல்லி தந்த நீங்க எனக்கு என் ஃபேமிலி மெம்பர்ஸா தான் தெரிஞ்சீங்க.
     அதனால‌ உங்ககிட்ட என் மனசுல இருந்த விஷயத்தை எல்லாம் சொல்லலாம்னு முடிவு செஞ்சேன். மோர் ஓவர் எனக்கும் மனுஷங்கள தெரிஞ்சுக்க ஆசை வந்திருச்சு” இவ்வாறு தன் மனதை சொல்லி முடித்தாள் சஹி.
     அவள் மனநிலையை கணிந்த சோம் மற்றும் லக்ஷ்மி “இனிமே இந்த உலகத்தில‌ எனக்கு யாரும் இல்லை அப்படின்னு உளறக் கூடாது பாப்பா. நீயும் என் பொண்ணு தான்” என்றனர்.
     அதற்கு சிரித்து மட்டும் வைத்தாள் சஹி. வெற்றி “அப்புறம் உங்க அப்பாவோட ஆபீஸ் போன கதையை சொல்லாம விட்டுட்டீங்க” என்று விஷயத்திற்கு வந்தான்.
     சஹியும் புன்னகையுடனே ஆரம்பித்தாள் “அது ஒரு காமெடி வெற்றி. நானும் வாயை பிளந்துட்டு உள்ள போக ஆபீசே என்ன கேவலமா பார்க்கன்னு செமயா போச்சு.
     அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் நான் யாருன்னே சொல்லாம ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு செஷனா போய் நான் வேலையை நல்லா கத்துக்கிட்டேன்.
     வேலைல டௌட்னா யாரு என்னன்னு பார்க்க மாட்டேன். பக்தத்தில‌ யாரு இருந்தாலும் உடனே கிளியர் பண்ணிப்பேன். அதுக்கு அப்புறம் எங்க அப்பா எனக்கு டெஸ்ட்லாம் வச்சு என்னை கம்பெனி எம்.டி ஆக்கினார்.
     ஒரு வருஷம் அவர் செஞ்ச வேலையை நானும் நல்லாவே கொண்டு போனேன். இப்பையும் சமாளிக்கிறேன்” என்று பெருமூச்சுடன் முடித்தாள்.
     “ம்ம் கிரேட்” என வாய்விட்டே பாராட்டினான் விஜய். லக்ஷ்மி அம்மா தயங்கியபடி “ஆனா ஸ்ரே பாப்பா எதுக்கு அப்படி புலம்பி அழுதா டா பாப்பா?” என்றாள் மெதுவாக.
     “அது” என இழுத்தவள் “ஒரு சிக்ஸ் மந்த்ஸ் இருக்கும். நான் ஆபீஸ் போய்ட்டேன். ஸ்ரே அப்போ தான் ஃபைனல் இயர் எக்சாம் முடிச்சிட்டு வீட்ல தான் இருந்தா. அப்பாவும் அம்மாவும் அன்னைக்கு வெளியே ஒரு பார்ட்டிக்கு போயிருந்தாங்க.
     வழக்கம் போல சண்டை போல கார்ல. ஸ்ரே அம்மாக்கு போன் பண்ணியிருக்கா. அம்மா கோபமா பேசிட்டு வச்சிட்டாங்க போல. அவ பயந்துட்டா. அதனால‌ என்கிட்ட போன் பண்ணி ஒரே புலம்பல்.
     எனக்கும் கஷ்டமா போச்சு. சோ அவ வீட்ல தனியா இருக்க வேண்டாம்னு ஆபீஸ்க்கு வர சொன்னேன். அது தான் நான் பண்ண பெரிய தப்பு” என்றவளின் கண்களில் கண்ணீர் வந்தது.
     அன்று ஸ்ரேயா வரும் வழியில் ஒரு இடத்தில் கூட்டமாக நிற்க எதோ ஒரு ஆர்வத்தில் பார்க்க போய்விட்டாள். அங்கே அவள் பார்த்தது என்னவோ ரத்த வெள்ளத்தில் இருந்த தாய் தந்தையை தான்.
     பார்த்த உடன் கதறி விட்டாள். யாரோ ஏற்கனவே ஆம்புலன்ஸை அழைத்து இருக்க அவளும் ஏறி சென்றாள். சஹிக்கும் விஷயம் சொல்லப்பட அடித்து பிடித்து ஓடி வந்தாள் மருத்துவமனைக்கு.
     ஆனால் என்ன முயன்றும் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியாமல் போக விதியின் விளையாட்டில் கைப்பாவை ஆகி போனார்கள் இருவரும்.
     “அப்பா அம்மா இறுதி காரியத்தை முடிச்ச அப்புறம் தான் எங்களுக்கு நிறைய பிரச்சினை. இதுவரை இல்லாத சொந்தகாரங்க எல்லாம் சொத்துக்காக வந்தாங்க.
     அவங்கல ஒருவழியா சமாளிச்சா ஆபீஸ்ல பிரச்சினை. எங்க கம்பெனி ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாரும் இவ பொண்ணு தானேன்னு எங்க கம்பெனிய புடுங்க பார்த்தாங்க.
     இப்படி பிரச்சினை எல்லாத்தையும் சரி பண்ணவே எனக்கு நாலு ஐஞ்சு மாசம் ஓடிப் போச்சு. இதுல நான் என் தங்கச்சியை மறந்தே போய்ட்டேன்” என்றவள் குற்றம் செய்த குழந்தையாய் முழித்தாள்.
     ஒரு நாள் வீட்டில் இருந்து வேலையாள் அழைத்தார். ஸ்ரேயா மயங்கி விழுந்து விட்டதால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூற வேகமாக சென்றாள்.
     அங்கே ஸ்ரேயா சில மாதங்களாக நிறைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூற உடைந்து விட்டாள் சஹி. தானும் மற்றொரு ராஜராமாக மாறி விடுவோமா என பயந்தே விட்டாள்.
     எனவே அதன் பிறகு ஸ்ரேயை உடன் இருந்தே பார்த்து கொண்டாள். மருத்துவர் இடமாற்றம் அவள் மன காயங்களை ஆற்றும் என்று கூறியதில் எங்கே செல்லலாம் என ஸ்ரோயாவிடமே கேட்டாள்.
     அவள் வடக்கே டெல்லி ஹிமாச்சல் போன்ற இடங்களுக்கு செல்லலாம் என கூற தங்கள் தொழிலின் ஆரம்பத்தில் இருந்தே உடன் இருக்கும் மேனேஜரிடம் மொத்த பொறுப்பையும் தந்து விட்டு இந்த இரயில் பயணத்தை தொடங்கி இருந்தனர் சகோதரிகள் இருவரும்.
     சஹி தங்கள் வாழ்வின் நிகழ்வுகளை சொல்லி முடிக்கும் நேரம் ஆதவனும் சோம்பலாக தன் கதிர்களை பரப்ப தொடங்கினான்.
-பயணம் தொடரும்

Advertisement