Advertisement

அத்தியாயம் 1
     அந்த மத்திய ரயில் நிலையம் எப்போதும் போல் தனக்கே ஆன பரபரப்புடன் காலையில் இயங்கி கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சாரை சாரையாக நகர்ந்து கொண்டிருந்தனர்.
      “சார் கொஞ்சம் வழி விடுங்க. கொஞ்சம் கொஞ்சம் அந்த பக்கம் நகருங்களே!” என தன் கையில் இருந்த பொருட்கள் அந்த கூட்டத்தால் விழாதவாறு பிடித்தபடி தான் ஏற வேண்டிய ரயிலின் கம்பார்ட்மெண்டை அடைந்தாள் ஸ்ரேயா.
     பார்க்கும் போதே துருதுருவென அலையும் கண்கள். அந்த கண்களில் நிறைந்த குறும்பு மற்றும் பார்ப்போரை சுண்டி இழுக்கும் அழகு. அவளின் வயது ஒரு இருபத்து இரண்டு இருக்கும் என கணித்து கூட விடலாம்.
     ஒருவழியாக தேடி சென்று தன்னுடைய இருக்கையில் பொத்தென்று அமர்ந்து விட்டாள். “ச்சே சே! என்னா கூட்டம்!‌ என்னா கூட்டம்!
     எல்லாரும் அப்படி எங்க தான் போறாங்கன்னு தெரியலைப்பா‌. இந்த கூட்டத்தில முண்டி அடிச்சு வரதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு” என தன் போக்கில் புலம்பி தள்ளினாள்.
     பின் தன் போக்கில் ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு தன் கையில் இருந்த பொருட்களை கீழே இருந்த தன் பையில் வைத்தாள்.‌ அவள் எதிரே இவளின் வயதை ஒத்த ஒரு பெண் ஸ்ரேயாவின் செயலை பார்த்த படி அமர்ந்திருந்தாள். ஆனால் பேசாது அமைதியாக இருந்தாள்.
     அவள் சஹானா. அமைதியான அழகு முகம் இவளது. யார் இவளின் முகத்தை பார்த்தாலும் மனம் தன்னாலே அமைதி அடையும் என சொல்லலாம். ஆனால் அந்த கண்கள் ஏதோ தேடலை உள்ளடக்கி இருந்தது போல் தெரிந்தது.
     அவளுக்கு அருகே ஒரு வயதான தம்பதி தங்கள் பையை வைத்து கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ஸ்ரேயா “ஹாய் அங்கிள்! ஹாய் ஆண்டி.
      நான் டெல்லி போறேன். நீங்க எங்க போறீங்க” என கேட்டு அவர்களும் டெல்லி செல்கின்றனர் என அறிந்து கொண்டாள். அதன்பின் தன் போல் ஊர் கதை உலக கதை என பேச ஆரம்பித்து விட்டாள் ஸ்ரேயா.
     அந்த சிறிது நேர பேச்சில் சோமசுந்தரம் அவளுக்கு ‘சோம் அங்கிள்‌’ ஆக அவர் மனைவி லக்ஷ்மி அம்மா ‘லக்ஸ் ஆன்டி’ ஆகிவிட்டார். அவர்களுக்கு இவள் ‘ஸ்ரே பாப்பா’ ஆகிவிட்டாள்.
      ரயில் கிளம்ப சிறிது நேரம் இருக்கும் போது இன்னும் இரண்டு இளைஞர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் இருக்கை ஸ்ரேயாவின் அருகே என்பதால் தங்கள் பைகளை அங்கே வைத்தனர்.
     “ஏன்பா தம்பிகளா உங்க சீட் இதுவா? இங்கையா உக்கார போறீங்க” என்றார் ஸ்ரேயாவால் அங்கிள் என அழைக்கப்பட்ட சோமசுந்தரம். புரியாது திரும்பிய இருவரும் அவரை பார்த்து ஆம் என தலையை அசைத்தனர்.
     அவர்கள் தலை ஆட்டிய உடன் “ஸ்ரே பாப்பா இங்க வந்து ஆன்டி பக்கத்தில உக்காந்துக்கிரியா மா. நான் அந்த ஜன்னல் சீட்ல உக்காந்துக்கிறேன். இங்க ஒரே புழுக்கமா இருக்கு” என்றார் சட்டென ஒரு காரணம் கண்டுபிடித்து.
     அவர் சொன்னவுடன் நின்றிருந்த இரண்டு பேரில் ஒருவன் அதை கண்டுக் கொள்ளவில்லை. அவன் விஜய். அதில் மற்றொருவனோ சோமசுந்தரத்தை டக்கென்று திரும்பி பார்த்து முறைத்தான்.
     ‘எங்கல பார்த்தா எப்படி தெரியுதாம் இந்த பெருசுக்கு. இப்படி கேவலபடுத்திருச்சே. அந்த பொண்ணை நாங்க என்ன கடிச்சா திங்க போறோம்.
     இந்த பெருசு எங்கள‌ என்னன்னு நினைச்சுச்சு. ச்சே இந்த உலக்ததில பேச்சுலரா இருக்கிறது எவ்ளோ கஷட்மா இருக்கு!!’ என நொந்து போனான். அவன் தான் வெற்றி.
     அதன்பின் நொந்த முகத்தோடு தலையை திருப்பி தன் நண்பன் விஜையை காண ‘இங்க எதுவும் நடந்ததா?’ என்பது போல் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தான்.
     ‘ம்ஹூம்!! இவன் என்ன ஜடம்‌ மாதிரி நிக்கிறான். ஒருவேளை படிச்சு படிச்சு ஜென் நிலைய அடஞ்சிட்டானோ. ச்சே! அவன் எப்போ இதெல்லாம் கண்டுக்கிட்டான்’ என காண்டாகவே எண்ணி சோமசுந்தரம் அருகே அமராது விஜய் அமர்ந்த உடன் இவன் கடைசியில் அமர்ந்தான்.
     அமர்ந்த உடன் விஜய் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க துவங்க வெற்றி ‘நமக்கெதுக்கு வம்பு’ என தன் கைப்பேசியை எடுத்து கொண்டு அதை நோண்ட ஆரம்பித்தான்.
     அங்கே எதிரே சோமசுந்தரம் மனைவியான லக்ஷ்மி அம்மாவை ஜன்னலில் புறம் அமர்த்தி விட்டு நடுவே ஸ்ரேயா அமர கடைசி இருக்கையில் சஹானா ஸ்ரேயாவிற்கு அனைவாக அமர்ந்து கொண்டாள்.
     ஸ்ரேக்கு வெற்றியின் முகத்தை கண்டு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டாள். சஹானா முகத்தில் மெல்லிய புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
     ஒருவழியாக அனைவரும் சவுகரியமாக அமர சஹானாவை நோக்கி திரும்பிய ஸ்ரேயா “ஹேய் கேர்ள் உன்னை நீ இன்டர்டியூஸ் பண்ணலை” என்றாள் கேலியாக.
     அவளுக்கு ஒத்து ஊதி சோமசுந்தரமும் “சொல்லும்மா சொல்லும்மா” என்றார் வேகமாக. ஸ்ரேயாவும் “ஆமா ஆமா. டெல்லி வரைக்கும் ஒன்னா தானே போறோம்.
     மூனு நாளுக்கு மேல ஆகும்.  அது வரைக்கும் நாம பேசிட்டே போக வேண்டாம்” என்றாள் இன்னும் சிரிப்புடன். அவளை விளையாட்டு போல் முறைத்து வைத்தாள் சஹானா.
     அவள் உண்மையாகவே முறைக்கிறாள் என்று எண்ணிய சோம் அங்கிள்‌ “என்னமா ஸ்ரே பாப்பா சொல்றது போல‌ எல்லாம் டெல்லி போறோம். அதுவரைக்கும் பேசிட்டே போகலாம்ல” என்றார் எதார்த்தமாக.
     இன்னும் அமைதியாக பார்வை வீசிக்கொண்டிருந்த சஹானாவை நோக்கி “என்ன இது சஹி செல்லம். சோம் அங்கிள்‌ தான் இவ்ளோ கேட்குறாரே உன் பேரை சொன்னா என்ன குறைஞ்சா போய்ருவ” என்றாள் சட்டென.
     சஹானாவை பேச வைக்கும் ஆர்வத்தில் இதுவரை யாரென தெரியாதது போல் பேசிக் கொண்டு இருந்த ஸ்ரேயா இப்போது மாட்டிக் கொண்டாள்.
     அவள் பேசியதை கேட்ட பின் “என்ன ஸ்ரே பாப்பா உனக்கு அந்த பொண்ணை‌ முன்னாடியே தெரியுமா? அப்புறம் ஏன் தெரியாத மாதிரியே பேசுன?” என்றார் லக்ஷ்மி அம்மா.
     இப்படி தனக்கு சஹானாவை தெரியும் என அனைவருக்கும் தெரியும் படி உளரியதை தாமதமாக புரிய அசடு வழிய சிரித்துவிட்டு ” அது வந்து சோம் அங்கிள்‌
     இவ இருக்காலே இவ தான் சஹானா‌. என் பெஸ்ட் பெஸ்ட் பிரண்ட். சரியான ஊமைக் கோட்டான். பேசவே மாட்டா. அதான் பேச வைக்க டிரை பண்ணுனேன். அது சொதப்பிருச்சு” என்றாள் சமாளிப்பாய்.
     “ஓஓஓ…” என்று கேட்டு கொண்டார் சோமசுந்தரம். “சரி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தானே வரீங்க. ஆனா இந்த பொண்ணு முன்னாடியே உக்காந்து இருந்துச்சே.
     நீ லேட்டா தானே வந்த. ஏன்?” என்று நியாயமாக கேட்டார் லக்ஷ்மி அம்மா. அதற்கு “அதை ஏன் கேக்குறீங்க லக்ஸ் ஆன்டி. ரெண்டு பேரும் சேர்ந்து தான் வந்தோம்.
     வர வழியில ஸனாக்ஸ் எதாவது வாங்கலாம்னு சொன்னா டிரைன்க்கு டைம் ஆகிரும்னு இவ என்னை இழுத்துட்டு வந்துட்டா‌. அதான் பேக் எல்லாம் வச்சிட்டு சாப்பிட கொஞ்சம் ஸ்னாக்ஸ் வாங்க போனேன் ஆன்டி.
     வந்து பார்த்தா நீங்க ரெண்டு பேரும் இருந்தீங்க. இவ என்மோ வெளியே அப்படியே வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தா. அதான் அவளை கிண்டல் பண்ணலாம்னு பார்த்தேன்.
     எங்க கடைசியா நானே உளறி கொட்டிடேன்” என்று நொந்தவாறு நீளமாக பேசி முடித்தாள். அதையும் சிரிப்புடன் பார்த்திருந்தால் சஹானா. அதை கண்டு “வெறுப்பேத்தாத எரும” என்று கையில் கிள்ளி வைத்தாள்.
     அவளின் சிறுபிள்ளை தனத்தில் அனைவரும் அவளை சிரிப்புடன் பார்த்திருந்தனர். அரை மணி நேரம் சட்டென அப்படி கடந்துவிட்டது. அது ஸ்ரேயாவால் என்றால் அது மிகையல்ல.
     அப்போது தான் சோமசுந்தரம் தன் அருகே அமைதியாக இருக்க திரும்பி பார்த்தார். அங்கே ஒருவன் புத்தகத்திற்குள் புதைந்திருக்க மற்றொருவன் தேமே என கைப்பேசியை வெறித்திருந்தான்.
     “ஏன்பா தம்பி என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் எந்த ஊருக்கு போறீங்க?” என்றார் கேள்வியாக.
     அவரின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த வெற்றி ‘எப்பா சாமி! இந்த பெருசுக்கு நாங்க ரெண்டு பேரும் கூட இருக்கிறது இப்ப தான் கண்ணுல விழுது போல’ என‌ நொந்தேவிட்டான்.
     அவர் இன்னும் தன்னையே கேள்வியாய் பார்க்க சுதாரித்த வெற்றி “டெல்லிக்கு தான் அங்கிள்‌ நாங்களும் போறோம்” என்றான் இன்ஸ்டன்ட்டாக வந்த சிரிப்புடன்.
     “அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம் பா. நாம எல்லாரும் அப்போ மூனு நாளும் நல்லா பேசிக்கிட்டே போலாம்” என‌ ஆர்ப்பாட்டமாய் சோமசுந்தரம் சிரிக்க அவர்கள் பயணமும் இனிதே துவங்கியது.
-பயணம் தொடரும்

Advertisement