Advertisement

தூறல் – 30
கண்டேன் என் காதல் நீயென,
இனி தடையேதும் இல்லை பெண்ணே;
வந்துவிடு என் முன்னே,
காத்திருப்பேன் உனகாய் கரையேறும் மீனாக,
கடல் நடுவில் காற்றாக!!
       “கௌதம் என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க. பொம்பள புள்ள கணக்கா இவ்ளோ நேரமாவா கிளம்பிக் கிட்டு இருப்ப.
      அங்க பொண்ணு வீட்ல மாப்பிள்ளை வரலைன்னு நிச்சயித்த வேற தேதிக்கு மாத்திர போறாங்க” என்று கௌதமின் அறைக்கு வெளியில் நின்று கத்திக் கொண்டு இருந்தார் ரேவதி.
      பட்டென கதவை திறந்த கௌதம் “எம்மா ஏன் இந்த கொலை வெறி உனக்கு விட்டா நீயே இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுவ போல.
      காலைல இருந்து இதை வாங்கிட்டு வா அதை வாங்கிட்டு வான்னு என்னை போட்டு படுத்தி எடுத்துட்டு இப்ப வந்து என்னை சொல்ற.
      இப்ப தானே நான் கிளம்ப உள்ள போனேன். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என்னை சொல்ற” என்று கடிந்துக் கொண்டே வந்தான் கௌதம்.
     அதை வழக்கம் போல் கண்டு கொள்ளாத ரேவதி தேவையான பொருட்களை எடுத்து கொண்டே “நின்னு வெட்டி கதை பேசாம சீக்கிரம் கிளம்புடா.
      உள்ள என்னடா பண்ற இன்னும்” என்று பேசி வெளியே சென்று கௌதமை சத்தம் போட்டார்.
     “எல்லாம் என் நேரம்” என்று முணுமுணுத்த கௌதம் வீட்டை பூட்டி தானும் தாயுடன் கிளம்பினான் தன்னுடைய ருத்ராவை காணும் மகிழ்ச்சியில்.
      அன்று சக்தி மற்றும் விஷ்ணு பிரசாத் இருவரையும் கைது செய்த போலீசார் அடுத்த நாளே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
      சத்யாவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது.
       மேலும் சமர்பிக்கபட்ட ஆதாரம் அனைத்தும் அவர்கள் இருவருக்கும் எதிராக அமைந்ததால் அவர்களுக்கு கிடைத்த தீர்ப்புக்கு பெரிதாக எந்த எதிர்ப்பும் எழவில்லை.
     இப்போது ஜெயிலில் இருந்த சக்தி இன்னும் தன் தவறை உணராது மற்றவனை திட்டிக் கொண்டிருந்தான். விஷ்ணு பிரசாத் தன்னால் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி மருத்துவனாய் எப்போதும் போல் கலங்கினான்.
     ஆனால் செய்த வினையானது சிறியது அல்லவே. இது தனக்கான தண்டனையென எண்ணி தன் நாட்களை கழிக்க முடிவு செய்திருந்தான்.
     தன் மகன்கள் இருவரும் இவ்வளவு பெரிய தவறு செய்து ஆயுள் தண்டனை பெற்றது மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ராஜசேகருக்கு.
     வாழ்க்கையே வெறுத்தது அவருக்கு. இவ்வளவு ஓடி ஓடி பணம் சம்பாதித்தது யாருக்காக.‌ தன் மகன்களுக்கு தானே.
     இப்படி இரண்டு மகன்களும் தங்கள் சுயநலத்திற்காக பலபேர் வாழ்க்கையை கெடுத்து தங்கள் வாழ்நாளை இனி ஜெயிலில் தான் கழிக்க போவது மனதை ரணமாக்கியது.
     இனி தானம் தர்மம் என அனைவருக்கும் தன் பணத்தை பயன்படுத்த முடிவு செய்தார் மனமுடைந்த ராஜசேகர்.
     கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன். நல்லது எது கெட்டது எதுவென சிறு வயதிலேயே தன் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்காது அவர்கள் வளர்ந்த பின் வருத்தப்படுவது என்ன நியாயம் என அறியாது விட்டார் அவர்.
     சித்து, விக்கி மற்றும் ரோஹித் ஆகிய மூன்று சிறுவர்களுக்கம் தான் பிரசாத் புற்றுநோய் செல்களை செலுத்தி இருந்தான்.
      மூன்று சிறுவர்கள் என்று கௌதம் கூறிய உடன் மாறன் கண்டுபிடித்து விட்டான் அது இந்த மூன்று சிறுவர்கள் தான் என.
     ஏனெனில் அந்த சிறுவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்திற்கு இரவு நேரம் வரும் பிரசாத்தின் ஆட்கள் சிறுவர்கள் அறைக்கு சென்று ஏதோ செய்து வருவர்.
     அதுவும் அந்த மூன்று சிறுவர்களை தனிமைபடுத்தியதில் இருந்தே கண்டு விட்டான் மாறன் அது இவர்கள் என. உடனே அவர்கள் மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டான் மாறன்.
     அவர்கள் தற்போது ஆரம்ப கேன்சர் நிலையில் இருப்பதால் எளிதில் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
     அதன் மருந்து செலவுகள் எல்லாம் கூட ராஜசேகரே ஏற்றுக் கொண்டார். கடத்திய சிறுவர்களை அவர்தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர்.
     வெளியூர் வெளிநாடு என்று அனுப்பிய சிறுவர்கள் மேலும் தற்போது வரை காப்பாற்றபட்டு காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் என அனைவரையும் அவர்கள் பெற்றோர் பொறுப்பில் விட்டனர்.
     கார்முகிலன் மற்றும் மாறன் இருவரும் நீதிமன்றம் விட்டு வெளியில் வந்த போது செய்தியாளர்கள் மூலம் அனைத்து பெற்றோர்க்கும் தங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி சென்றனர்.
     “பேரண்ட்ஸ் உங்க பசங்க போன்ல கேம் தானே விளையாடுராங்கனு கேர்லெஸ்ஸா இருக்காதீங்க.
      பிகாஸ் இந்த கேங் பசங்கல கடத்துனதே ஒரு கேம வச்சு தான். அவங்கல கேம விளையாட வச்சு கிஃப்ட்ஸ் கொடுத்து அவங்க பக்கம் இழுத்துப்பாங்க.
      அன்ட் அவங்க பத்தின எல்லா டீடெயில்ஸ்ம் வாங்கிக்கிட்டு அதை வச்சே வீட்டுல இருக்கவங்கல கொன்னுருவேன் அது இதுன்னு மிரட்டுவாங்க.
     அப்படியே இதை சொல்லி தான் உங்க பசங்கல அவங்க தங்களோட கூட்டிட்டு போனாங்க.
     சோ பேரண்ட்ஸ் உங்க குழந்தைகள கேர் எடுத்து பாத்துக்கோங்க. அவங்க கூட கொஞ்ச டைம் ஸ்பென்ட் பண்ணுங்க” என்று பெற்றோர்களுக்கு தங்கள் கடமையையும் விளக்கினார்கள்.
      இப்படி எல்லா வேலைகளையும் பார்த்து முடித்த போது தான் கௌதம் ஆருத்ராவின் மனம் சமாதானம் அடைந்தது.
     அடுத்து காதலை உணர்ந்த கௌதம் நேராக சென்று அன்னை ரேவதியின் காலில் விழுந்து விட்டான் எப்படியாவது தன் காதலை சேர்த்து வைக்கும் படி.
     அப்போது சந்தோஷமாக தன் வேலையை ஆரம்பித்த ரேவதி இப்போது அவனை கொண்டு வந்து நிறுத்தியிருப்பது இந்த நிச்சயதார்த்தத்தில்.
      ஆருத்ராவின் சொந்த ஊரும் மதுரை அருகே தான். அதுவே ரேவதிக்கு போதுமானதாக இருந்தது. தன் சொந்தங்களை வைத்து பேசி முடித்துவிட்டார்.
     ஆருத்ரா வீட்டிலே சிறிய அளவில் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர் திருமணத்தை சிறப்பாக செய்து கொள்ளலாம் என.
      இப்போது அடித்து பிடித்து செல்ல சண்டையுடன் தாயும் மகனும் ஆருத்ரா வீட்டை வந்தடைந்தனர்.
      அங்கே ஆருத்ரா குடும்பம் அவள் தோழிகள் என அனைவரும் அவர்களுக்காய் காத்திருந்தனர்.
      கௌதமும் ரேவதியும் வந்தவுடன் அவர்களை தடபுடலாக வரவேற்று அமர வைத்தனர். சில நேர பேச்சுக்குப் பின் ஆருத்ராவை அங்கே அழைத்து வந்தனர்.
     ஆருத்ரா வந்தவள் ரேவதியை மட்டும் பார்த்து சிரிப்புடன் வரவேற்று அமர்ந்தவள் கௌதமை திரும்பி கூட பார்க்கவில்லை.
     அவனும் அவள் தன்னை இப்போ பார்ப்பாள் அப்போ பார்ப்பாள் என எண்ணி எண்ணி அவள் முகத்தையே பார்த்தான். ஆனால் ஆரு நிமிரக்கூட இல்லை.
     ஏன் அவர்கள் செல்லும் போது ரேவதியிடம் பேசிய ஆரு கௌதமிடம் பேசாமல் சென்றாள். பார்த்த கௌதமிற்கு உள்ளுக்குள் புசு புசுவென கோபம் ஏறியது.
      ‘ஏன் என் கூட மட்டும் பேச மாட்டேங்குறா. என்ன நினைச்சிட்டு இருக்க அவ மனசுல. எங்க அம்மா கிட்ட பேச முடியுது என்கிட்ட பேச முடியாதா’
      என்று மனதிற்குள் ஆருவை திட்டியவன் ‘சரி வீட்டுக்கு போய் போன் செஞ்சு அவக்கிட்ட பேசிக்கலாம்’ என்று எண்ணி அமைதியாக சென்றான்.
     ஆனால் ஆரு அவன் அழைப்பை ஏற்காது அவனுக்கு போக்கு காட்டினாள். அது அவர்கள் திருமணம் வரை நீண்டது.
     கௌதமிற்கு தான் மண்டை காய்ந்தது ‘இவளுக்கு நம்மல புடிச்சிருக்கா இல்லையா. என்னோட பேச மாட்டேங்கிறா ஆனால் மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டா.
      என் அம்மா அவங்கட்ட அவளால பேச முடியுது என்னை பாத்தா வாய்ல கம் போட்டு ஒட்டிகிறா’ என்று கௌதம் மனதில் போட்டு ஆருவை திட்டி தள்ளினான்.
     இதுவரை கொலையாளி யாரென கண்டு பிடிக்க முயன்றதில் தன் மனதையே உணராத கௌதம்
       இப்போது மனம் முழுவதும் ஆருவின் எண்ணம் மட்டும் கொண்டதால் அவள் ஒதுக்கம் எதனால் என்று அறியாது குழம்பி தவித்தான்.
     திருமண நாளும் அழகுற விடிந்தது. கௌதம் திருமணத்திற்கு முன்பேனும் அவளிடம் பேசிவிட எண்ணினான். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
     திருமணமே முடிந்து விட்டது. கௌதம் ‘இனி அவள் தன் வீட்டுக்கு தன்னோடு தானே வர வேண்டும்’ என்று எண்ணி ‘சரி நேரில் பேசிக் கொள்வோம்’ என்று காத்திருந்தான்.
     இரவு நேரம் கௌதம் ஆருவின் வரவிற்கு காத்திருந்தான். ஆருவும் வந்தாள். வந்தவள் நேராக வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள் கௌதமிடம் பேசாது.
     கௌதம் ஆருவின்‌ அருகே சென்று “ருத்ரா என்ன பாரு. ஏன் நீ என்கூட பேச மாட்டேங்கிற. நானும் நம்ம எங்கேஜ்மென்ட்ல இருந்து பாக்குறேன்.
     நீ என்ன பர்பஸா அவாய்ட் பண்ற ருத்ரா. ஏன்னு கேக்க வந்தா அதுக்கு கூட என்னை பாக்க மாட்டேங்குற” என்றான் தவிப்புடன்.
      தன் முன்னால் நின்றிருந்த கௌதமை மேலிருந்து கீழ் வரை நோக்கிய ஆரு‌ அப்போது தான் வாயை திறந்தாள்.
     “நான் ஏன் உங்ககிட்ட பேசனும்?” என்றாள் நிதானமாக. அவளின் கேள்வி கண்டு அதிர்ந்த கௌதம் “ஏன் பேசனும்னு கேக்குற.
     ருத்ரா நாம‌ இப்ப ஹஸ்பண்ட் அன்ட் வைஃப் டா. நாம‌ பேசி தானே ஆகனும்” என்றான் பாவமாக. “ஓஓ” என்றுவிட்டு அமைதியானாள் ஆரு‌.
     அவள் முகத்தை கண்டு அதிர்ந்த கௌதம் “ருத்ரா மா உனக்கு என் மேல என்ன டா கோபம். ஏன் இப்படி செய்ற” என்றான் மீண்டும் முகத்தை பாவமாக வைத்து.
      அவனை முறைத்த ஆரு‌ “ஏன் உங்களுக்கு தெரியாதா நான் எதுக்கு இப்படி முறைக்கிறேன்னு” என்றவள் “சரி சொல்றேன்.
     நீங்க என்னை லவ் பண்றத என்கிட்ட புரபோஸ் செஞ்சீங்களா” என்றாள் முறைப்பாய். புரியாத கௌதம் “ஏன் ருத்ரா நான் தான் உன்கிட்ட புரபோஸ் செஞ்சேனே டா.
     நீ கூட எதுவும் சொல்லாம சரின்னுட்டு போனியே” என்றான். “எது நீங்க செஞ்சதுக்கு பேரு புரபோஸ்ஸா” என்றாள் கோபமாய்.
     அன்று நடந்ததை இன்று யோசித்து பார்த்தான் கௌதம். சக்தி மற்றும் பிரசாத்தின் கைதுக்கு பின் ஆருவையும்‌ மீராவையும் அவர்கள் வீட்டில் விட வந்தான்.
      அப்போதே நேரம் நள்ளிரவே நெருங்கி இருந்தது. ஆருவை‌ மட்டும் அங்கே தன்னுடன் நிருத்திய கௌதம் அவளை நோக்கி
      “ருத்ரா எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்றான். திடீரென கௌதம் கேட்கவும் ஆனந்தமாய் அதிர்ந்த ஆரு வெட்கத்துடன் சரி என்று ஓடிவிட்டாள்.
     வீட்டின் உள் சென்று மீரா மற்றும் தோழிகளிடம் சரமாரியாக திட்டு வாங்கியது தனிக் கதை. அதை நினைவு கூர்ந்த கௌதம் இப்போது “சரி அதுக்கு என்ன” என்றான் சாதரணமாக.
     “அதுக்கு என்னவா. நீங்க பண்ணதுக்கு பேரு புரபோஸ்ஸா. வெளியே சொல்லிறாதீங்க சிரிப்பாங்க. ஏதோ அப்ப கொஞ்சம் எமோஷனலா இருந்தேன்.
     அதான் நீங்க சொன்ன உடனே நான் சரின்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் தான் யோசிச்சேன் அட் லீஸ்ட் ஒரு ரோஸ் கூட குடுக்காம புரபோஸ் செஞ்சீங்க.
     சோ அது எனக்கு பிடிக்கில. அதனால நீங்க எப்ப எனக்கு ஒழுங்கா புரபோஸ் பண்றீங்களோ அன்னைக்கு தான் நான் உங்ககிட்ட பேசுவேன்” என்றாள் ஆரு‌.
      ஆருவின்‌ சிறுபிள்ளை தனத்தில் சிரித்த கௌதம் “ஓகே  நான் ஒழுங்கா புரபோஸ் பண்ணா உனக்கு கோபம் போய்ரும் ரைட்” என்றான் கௌதம்.
     ஆருவும்‌ ஆம் என தலையசைக்க, கௌதம் ஆருவை அழைத்து தன் அறை பால்கனியில் நிறுத்தியவன் மெத்தையில் கிடந்த ரோஜாக்களை எடுத்து கொத்தாய் பிடித்து கொண்டான்‌.
     பின் ஆருவின் முன் சென்றவன் அவள் முன்னே ஒரு காலை மடித்து முட்டியிட்டான். அவனின் செய்கையை ஆர்வமாய் பார்த்திருந்தாள் ஆரு‌.
      தன் கையில் இருந்த பூங்கொத்தை நீட்டி “ருத்ரா நீ லைஃப்ல நிறைய பேரை கிராஸ் பண்ணிருப்ப‌. அன்ட் அவங்க உனக்கு ஸ்பெஷலா கூட இருக்கலாம்.
     அவங்களுக்கும் நீ ஸ்பெஷலா இருக்கலாம். பட் எப்பவும் உன் சின்ன ஹார்ட்ல எனக்கும் அவங்களுக்கு மத்தியில ஒரு சின்ன இடம் கொடுத்துறுடா.
      உன்னை பர்ஸ்ட் டைம் பாக்குறப்ப நமக்கு கல்யாணம் ஆகும்னுலா நான் நினைச்சு கூட பார்க்கல. அன்ட் நாம மேரேஜ் வரைக்கும் வந்துட்டோம். இனியும் நாம போக போற தூரம் ரொம்ப அதிகம்.
     உன் லைப்ல அப்ஸ் அன்ட் டவுன்ஸ் எல்லா டைம்லையும் நான் உன்கூட இருப்பேன். உன்னை நல்லா பாத்துப்பேன்.
    என் கூட லைஃப் லாங் டிராவல் பண்ண ரெடியாடா. லைப் லாங் உன் ஹார்ட்டோட சேர்த்து உன்னையும் என்னோட டிரஷரா வச்சு பாத்துப்பேன்.
     ஐ லவ் யூ சோ மச் டா. என் ஹார்ட் உள்ள எப்பவும் நீ துடிக்கனும்னு ஆசைப்படுறேன். அப்புறம் என் ஹாட்ல நிறைய சேம்பர்லா இல்லை.
       ஒன்லி ரெண்டே சேம்பர் தான் இப்போ. ஒன் சைட் என் அம்மா அன்ட் இன்னொரு சைட் நீ மட்டும் தான்.
       கூடிய சீக்கிரம் அது இன்கிரீஸ் ஆகலாம். அதுக்கும் மேடம் நீங்க தான் மனசு வைக்கணும்” என்று குறும்பாக முடித்தான்.
     கௌதம் முடித்தவுடன் கண்களில் கண்ணீருடன் காதல் வழிய “ம்ம்” என்றாள் ஆரு அந்த பூக்களை வாங்கிக் கொண்டு.
     அப்படியே கௌதமின் தோளில் சாய்த்து கொண்டாள் ஆரு. “என்ன மேடம் புரபோஸ் பண்ண சொன்னீங்க. நானும் ஏதோ பண்ணிட்டேன் தேறுவனா” என்று வம்பிழுத்தான் கௌதம்.
      “ஷ்ஷ் இந்த நேரத்தை அப்படியே நான் பீல் பண்றேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்ற ஆரு அமைதியை கடைபிடித்தாள்.
     கௌதமும் என்ன நினைத்தானோ அந்த நிமிடத்தை அனுபவிக்க தானும் அமைதியானவன் ஆருவை தோளோடு அனைத்து கொண்டான்.
     சிறிது நேரம் சென்று ஆரு தன் நீண்ட நாள் சந்தேகமான கௌதமிற்கு தன் ரசனை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எல்லாம் எப்படி தெரியும் என்று கேட்டாள்.
     அதை கேட்டு மெல்ல சிரிப்பை உதிர்த்த கௌதம் ஆருவை தன்னை நோக்கி திருப்பி நிறுத்தி அவளின் தோள்களில் தன் கைகளை வைத்தான்.
     “ம்ம் ருத்ரா நான் ஒரு நாள் என் வேலைய முடிச்சிட்டு ஒரு மால்க்கு வந்தனா. அப்போ நீ ஒரு பையன் கூட பேசிக்கிட்டு இருந்த” என்ற கௌதமை புரியாது பார்த்தாள் ஆரு‌.
      பின் அந்த நிகழ்வை கௌதம் நன்கு விளக்கி கூறியவன் சிரிப்புடன் சொல்லி முடித்தான். “ஆனா ஒன்னு ருத்ரா இதுவரைக்கும் பசங்க தான் பொண்ணுங்கள கிண்டல் பண்ணி ஓட விடுவாங்க.
     ஆனா பர்ஸ்ட் ஒரு பொண்ணு பையன பேசியே ஓடவிட்டத அன்னைக்கு தான்டி பார்த்தேன். அவன் முகத்தை பார்த்து தான் நான் வீட்டுக்கு வந்தும் சிரிச்சுக்கிட்டே இருந்தேன் தெரியுமா” என்றான் கிண்டலாக.
     “ஐயோ கௌதம் பிளீஸ் கிண்டல் பண்ணாதீங்க” என்றாள் சிணுங்களாய். மீண்டும் மீண்டும் கிண்டல் செய்த கௌதமை கெஞ்சி கொஞ்சி தாஜா செய்தாள் ருத்ரா.
     பின் இருவரும் அந்த நேர இனிமையை அனுபவித்தவாறு இனி வாழ்வில் எது வந்தாலும் இருவரும் ஒன்றாக பார்ப்போம் என்று மகிழ்வுடன் நிலவொளியில் தங்கள் எண்ணத்தை பகிர்ந்தனர் மனதோடு.
     அத்துடன் நாமும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பலாம் நண்பர்களே!!
-முற்றும்

Advertisement