Advertisement

தூறல் – 29
கோபம் கூட காற்றில் கரைந்ததே பெண்ணே,
உன் விழி வீச்சு என்னை சாய்த்த நொடிதனில்;
காற்றிலாடும் இலையென இசைந்து சென்றேன்,
நீ எனை கண்டு உன் இதழின் மென்னகை செய்த நொடி!!
     ‘என்ன இவன் தான் மாறனா’ என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்த நொடி “என்ன எல்லாரும் ஷாக் ஆகி நிக்கிறீங்க.
     ஷாக் ஆகுறத அப்புறமா ஆகிகோங்க என்ன. இப்ப போலீஸ் வருவாங்க. எல்லாரும் மரியாதையா போலீஸ் ஸ்டேஷன் வந்து செஞ்ச தப்பை ஒத்துக்கறீங்க புரியிதா” என்றான் மாறன்.
     அங்கு அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த குமாரை பார்த்து “என்ன குமார் பிரீஸ் ஆகிட்ட. மாறன்னா வெற்றி மாறன்னு நினைச்ச நீ,
      மணிமாறன்னு ஒரு பேர் இருக்குங்கிறத மறந்துட்டியே‌. இப்ப பாரு சும்மா கொத்தோட மாட்டிக்கிட்டீங்க” என்று உச்சு கொட்டினான்.
     “ஏய் என்ன மணி நீதான் அந்த போலீஸ்காரனா. என் கூடவே இருந்து என்னையே ஏமாத்தி இருக்கல்ல. உன்னை கொன்னு போட்டா தான் என் மனசு ஆரும்டா” என்ற சக்தி பிரசாத் அவனை தாக்க வந்தான்.
     அந்த நேரம் அவனை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான் கௌதம். “எங்க போற சக்தி பிரசாத். சத்யா, இங்க இருக்க சின்ன பசங்கன்னு எல்லாத்தையும் கொன்னீங்கல்ல.
     இப்ப பதிலுக்கு நீங்க நல்லா அனுபவிப்பீங்க டா” என்றான் ஆக்ரோசமாக. இருவரும் தங்கள் பிடியில் இருந்து வெளிவர முயன்றனர்.
     இப்போது தெளிந்த பிரசாத்தின் ஆட்கள் அங்கிருந்த இரண்டு பெண்களையும் பிடிக்க வந்தனர். அதை பார்த்த கௌதம்
      “ருத்ரா ரெண்டு பேரும் இங்க இருந்து ஓடுங்க சீக்கிரம். வெளிய போய் முடிஞ்சா போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணுங்க. போங்க” என்று கத்தினான் கௌதம்.
     இப்போது மீராவையும் இழுத்துக் கொண்டு ஆரு அந்த கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முயன்றாள்.
      ஆனால் பிரசாத்தின் ஆட்கள் அவர்களை வெளியே விடாது உள்ளே துரத்தி சென்றனர். அவர்களும் ஓடினர் அந்த கட்டிடத்திற்குள்ளே.
      சக்தியும் விஷ்ணு பிரசாத்தும் இவர்கள் பிடியில் இருந்து வெளிவர முயன்று கொண்டிருந்தனர்.
      கௌதமும் மாறனும் அவர்களை விடாது பிடித்திருந்தனர் அவர்களின் மற்ற ஆட்களையும் சமாளித்து கொண்டு.
     அந்த இடமே கலவரமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் மற்ற ஆட்களை சமாளிக்கும் போது மாறனின் பிடியில் இருந்து நழுவி சென்ற விஷ்ணு பிரசாத்தை தடுக்க முடியவில்லை.
     இந்த கலவரமான நேரத்தில் தான் முகிலன் தன் படையுடன் வந்து சேர்ந்தான். அங்கு நடந்து கொண்டிருந்ததை பார்த்த முகிலன் அவசரமாக தன் படையுடன் உள்ளே நுழைந்தான்.
      முகிலன் வந்தபின் சண்டை வேகமாக முடிவுக்கு வந்தது. மாட்டிய அனைவரையும் கைது செய்து காவல்துறையினர் தங்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
     கௌதம் இப்போது விஷ்ணு பிரசாத் எங்கே சென்றான் என்று முகிலன் மாறனின் உதவியோடு தேடத் தெடங்கினான்.
     அதோடு ருத்ரா மற்றும் மீராவையும் மீட்க தேடினான். அந்த கட்டிடம் முழுவதும் தேடிக் கொண்டு வந்தனர்.
     அப்போது அங்கே ஒரு அறை பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் உள்ளே ருத்ராவின் குரல் போல் கேட்டது. அதை கவனித்த கௌதம்
     “மாறன் இந்த ரூம் உள்ள தான் ஏதோ சத்தம் கேக்குது‌. அது கண்டிப்பா ருத்ரா வாய்ஸ் தான். திறக்கலாம் வாங்க” என்றான் பதட்டத்துடன்.
     “கௌதம் நாம உள்ள பாக்கலாம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்ற மாறன் முகிலிடம் திரும்பி “என்ன பண்ணலாம் முகில் உள்ள பிரசாத் இருப்பான் போல.
     ரூம் லாக் ஆகி இருக்கு. உடைச்சிறலாமா” என்றான். முகிலனும் ஒரு நிமிடம் யோசித்தவன் “ஓகே மாறன் ஒடச்சிறலாம்” என்று மூவரும் அந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
     அவர்கள் அங்கு பார்த்ததோ சர்ஜிக்கல் கத்தியின் பிடியில் நின்றிருந்த ஆருத்ரா மீரா இருவரையும் தான்.
     அந்த கத்தியை பிடித்திருந்த பிரசாத் நிஜத்தை ஏற்கும் துணிவின்றி “இங்க பாருங்க என்னை உங்களால எதுவும் பண்ண முடியாது.
     அப்படி எதாச்சும் என்னை பண்ண நினைச்சா இவங்க ரெண்டு பேர் கழுத்தையும் அறுத்து போட்டுருவேன்” என்றவன் அவனுமே பயத்தில் இருந்தான்.
     அவன் இந்த பிரச்சினை இந்த அளவு வரும் என்று நினைத்து பார்க்கவில்லை. அதுவும் போலீஸே தன் கும்பலில் இருந்து தங்களை பிடித்தது என்றதில் பெரிதும் பயந்து விட்டான்.
     அவன் இதுவரை பல கொலைகள் செய்த குற்ற உணர்வில் இருந்தவன் தற்போது பயம் வந்தவுடன் பயத்தில் ஏதேதோ செய்து கொண்டிருந்தான்.
     “இங்க பாரு உன் கைலாம் நடுங்குது. வேணாம் அவங்களை விட்டுரு பிளீஸ். உன்னை எதுவும் செய்ய வேணாம்னு நான் போலீஸ் கிட்ட சொல்றேன்.
     பிளீஸ் தயவு செஞ்சு அவங்கள ஏதும் செஞ்சிறாத பிரசாத்” என்று கெஞ்சி கொண்டிருந்தான் கௌதம். அதே நேரம் அவன் ருத்ராவை கண்டு ‘அவன் கைய பிடி’ என்பது போல் செய்கை செய்தான்‌.
     இதை புரிந்த ஆருவும்‌ மெதுவாக அவன் கவனம் திரும்பும் நேரம் அவன் கையை பிடித்து கொண்டாள். அப்போது பிரசாத் அவளை திரும்பி முறைத்தான்.
      இந்த இடைவெளியை பயன்படுத்திய கௌதம் மீராவை தன் புறம் இழுத்து பிரசாத்தின் மற்றொரு கையை பிடித்தான்.
     இப்போது மாறன் வந்து ஆருவை நகற்றி அந்த கையை அவன் பிடித்து முறுக்கினான்.
      இது எல்லாம் சில நிமிட இடைவெளியில் நடக்க பிரசாத் எதிர்ப்பாரா இந்த நிகழ்வால் எதுவும் செய்ய தோன்றாது நின்றான்.
      பிரசாத் பிடிபட்டவுடன் அவனையும் சேர்த்து கைது செய்தான் முகிலன். இங்கே ஆருவின் அருகே சென்றான் கௌதம்.
     “ருத்ரா உனக்கு ஒன்னும் ஆகலை தான்டா” என்றான் காதலாக அவளின் கன்னம் தாங்கி. “ம்ம். நான் நான் ஓகே தான் கௌதம்” என்றாள் அவன் பார்வையில் கட்டுண்டு.
      அப்போது தான் அவளுக்கு பிரசாத்துடன் ஏற்பட்ட போராட்டத்தில் கையில் ஏற்றப்பட்ட காயத்தை கண்டான் கௌதம்.
      “ஹே கைல என்ன காயம்” என்று பதிறியவனிடம் “ஜஸ்ட் சின்ன காயம் தான் கௌதம் ஆறிடும்” என்றாள் ஆறுதலாக. “ம்ம்” என்று அரைகுறை மனதுடன் தலை ஆட்டி வைத்தான்.
      இதில் அருகில் தங்களை முறைத்து கொண்டிருந்த மீராவை கவனிக்கவில்லை இருவரும். “ஆரு‌….” என்ற குரலில் திரும்பி பார்த்த ஆரு‌ அப்போது தான் ஞாபகம் வந்தவளாய்
       “ஐயோ மீரா செல்லம் உன்னை மறந்தே போய்ட்டேன். சாரி டா. உனக்கு ஒன்னும் ஆகலைல” என்றாள்.
      அதற்கு இருவரையும் முறைத்த மீரா விறுவிறுவென அறையை விடுத்து அந்த நீண்ட ஹாலிற்குள் சென்றாள். அவள் பின்னே ஆரு செல்ல கௌதமும் சென்றான்.
      அங்கே ஹாலில் இருந்த மாறன் “ஹான் கௌதம் ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.
     அந்த பிரசாத் எதோ டாக்குமெண்ட் பத்தி கேட்டுட்டு இருந்தான். அது என்ன” என்று வினவினான். “ஆமா நான் கூட கேக்கனும்னு நினைச்சேன்.
     அது என்ன எனக்கு கூட தெரியாம அப்படி என்ன டாக்குமெண்ட்” என்றாள் ஆருவும். அதை கேட்டு சிரித்த கௌதமும் நேற்று நடந்ததை கூற தொடங்கினான்‌.
     மதியம் அலுவலகத்தில் இருந்து வந்தவன் சத்யாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் எப்.ஐ.ஆர் காப்பியை பார்த்திருந்தான்.
     அதில் சத்யா இறந்த நேரத்தில் இருந்து ஒரு கால் மணி நேரத்திலே போலீஸார் அவன் உடலை கண்டு பிடித்ததாக இருந்தது.
     அதை வைத்து தான் கௌதம் அவன் இறப்பு ஒன்று அந்த இடத்தில் நடந்திருக்க வேண்டும் அல்லது அவனை கொன்ற இடம் அவன் உடல் இறந்த இடத்தின் அருகே இருக்க வேண்டும் என்று யூகித்தான்.
     அவன் யூகம் சரியே. ஏனெனில் அந்த கட்டிடத்தில் வைத்து கொன்று விட்டு உடலை எங்காவது கொண்டு போட்டு விட
      எடுத்து வந்த பிரசாத்தின் ஆட்கள் போலீஸ் ஜீப் சத்தம் கேட்டு அங்கேயே ரோட்டோரம் அவன் வண்டியோடு போட்டு ஒளிந்து கொண்டனர்.
      அங்கே வந்த போலீசும் அவன் உடலை அப்புறப்படுத்தினர். அதுவே கௌதமின் சந்தேகத்தை தூண்டியது.
     அவன் அங்கே சென்று பார்க்கலாம் எதாவது துப்பு கிடைக்கலாம் என தன் வண்டி சாவியை எடுக்க போனான்‌. சாவியை எங்கே வைத்தான் என தேடும் போது தான் அங்கே சத்யாவின் ஐ.டி கார்ட் அவன் கண்ணில் பட்டது.
      அதை கையில் எடுத்தவன் சத்யாவின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்தவன் தன் கைகளால் தடவினான். அப்போது தான் அதில் இருந்த வித்தியாசம் தெரிந்தது.
      உற்று பார்த்தவன் கண்டது ஒரு ஹிட்டன் கேமராவை. அதை கண்டு பரபரப்பானவன் தன் மடிக்கணினியில் இனைத்தான்.
      அதில் சத்யாவின் நேரடி வாக்குமூலமே இருந்தது. “கௌதம் இதை எப்படியாவது உன்கிட்ட கொண்டு வந்து சேர வச்சிருவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.
     அப்படி உன்கைல கிடைச்சு நீ இந்த வீடியோவை பார்த்தா கண்டிப்பா அந்த பிரசாத்தை சும்மா விடாத டா. எல்லாம் சின்ன பசங்க டா.
      அவன் கண்டுபிடிச்ச மருந்த பரிசோதினை பண்ண அந்த பசங்கல சோதனை எலியா மாத்திட்டான் டா. அது மட்டும் இல்லாம வேற ஒரு வேலை பாத்திருக்கான் அந்த ராஸ்கல்.
      கேன்சர் மருந்து கண்டுபிடிக்கிறேன்னு அதை டெஸ்ட் பண்ண மூனு பசங்கல தேர்ந்தெடுத்தவன் அதை டெஸ்ட் பண்ணறதுக்கு முன்னாடி அந்த பசங்களுக்கு கேன்சர் செல்ஸ இன்ஜெக்ட் பண்ணிருக்கான்.
      ஒரு நோய் வந்தா கூர் பண்ண தானே டா டாக்டர். இவன் நோய‌ ஏற்படுத்தி சரி பண்ண டிரை பண்றான் டா. பிளடி.
     நான் அவன் இடத்துக்கு உள்ள போய் இந்த டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டேன் டா.
     நான் அவன் இடத்துக்கு வந்ததை அவன் கண்டுபிடிச்சுட்டான். அவன் ஆளுங்க என்னை துரத்திக்கிட்டு வராங்க டா.
     அப்படி வரவழியில அந்த எவிடன்ஸ் எல்லாத்தையும் சேப்-அ மறைச்சி வச்சிருக்கேன் டா. அதை பத்திரமா எடுத்து சேர்க்க வேண்டிய எடத்துக்கு அனுப்பி வைடா‌.
      நான் தப்பிக்க சான்ஸ் இருக்கான்னு தெரியலை. ஆனா அவன் தப்பிக்க கூடாது.
     அவன அவன எப்படியாவது தண்டிக்கனும் கௌதம். சாரி டா உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கனும். சாரி சாரி டா.
      என் அப்பா அம்மாவ பாத்துக்கடா” என்றவன் பின் ருத்ராவோடு பேசும் காட்சிகள் வந்தது. அதை கண்டவன் கண்களிலும் கண்ணீர்.
     சிறிது நேரத்தில் தன்னை தேற்றியவன் அந்த டாக்குமெண்ட்ஸ் இருக்கும் இடம் என சத்யா சொன்ன  அந்த இடத்திற்கு சென்றான்.
      அது ஒரு பாழடைந்த கோயில். அங்கே தான் இருந்தது அந்த கவர். அதை எடுத்து தன் வீட்டில் வைத்து விட்டு சத்யாவின் உடல் இருந்த இடத்தை காண சென்றான்.
     அப்போது தான் ஆருத்ரா அவனை அழைத்தது. நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்த கௌதம் அமைதியாக நின்றான்.
     அமைதியை கலைக்கும் விதமாக மாறன் “பொறுக்கி கேன்சர் செல் இன்ஜக்ட் பண்ணிருக்கானா. அதுவும் சின்ன பசங்களுக்கு ச்சே.
     சத்யா கிரேட் கௌதம். அவனே எல்லா எவிடன்சும் எடுத்துட்டு அவன் உயிரை மட்டும் காப்பாத்திக்க தெரியாம இருந்திருக்கான்.
      அந்த பிரசாத் எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிப்பான்” என்றான் கோபமாக. ‘ஆம்’ என்று கௌதமும் தலை அசைத்தான்.
-தொடரும்

Advertisement