Advertisement

தூறல் – 26
என்னுள் புதைந்திருந்த புலவனை நீ மீட்டுள்ளாய்,
ஏனோ அதை அறிய மறுக்கிறாய்;
எனக்கே நான் புதிதாய் தெரிய,
உன்னாலான மாற்றம் உனக்கே என்கிறேன்;
இதற்கேனும் பதில் தந்திடு பெண்ணே!!
      கௌதம் தன் இருசக்கர வாகனத்தில் வரும் போது அவன் கைப்பேசி அலறியது. யார் என எடுத்து பார்த்தான். அதில் ருத்ரா என்று வந்தது.
     வண்டியை ஓரமாக நிறுத்தியவன் ‘இப்ப எதுக்கு ருத்ரா கால் செய்றா. ஏதாவது பிரச்சனையோ’ என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றவன் “சொல்லு ருத்ரா” என்றான்.
     “கௌதம் நான் சத்யாவ துரத்திட்டு வந்த ஆளுங்கள்ல ஒருத்தனை இங்க பார்த்தேன். இப்ப அவனை தான் பாலோ பண்ணிட்டு போய்ட்டு இருக்கேன்” என்றாள் மெதுவான குரலில்.
     இதை கேட்ட கௌதமிற்கு தான் கோபம் எவரெஸ்டாய் ஏறியது “ஏன்டி உனக்கு மூளைன்னு எதாவது இருக்கா, இல்லை ஓரமா கழட்டி ஏதும் வச்சிட்டு வந்திட்டியா” என்று கத்தினான்.
     திடீரென கௌதம் தன்னை திட்டவும் திடுக்கிட்டாள் ஆரு‌‌. பின் தன்னை தேற்றி கொண்டு “இங்க பாருங்க கௌதம்” என்று ஆரம்பித்தாள்‌.
     அவளை பாதியில் தடுத்தவன் “ஸ்ஸ் பேசாத. எதுக்கு எடுத்தாலும் எனக்கு தெரியும்னு சொல்றது. பிரச்சினையோட சீரியஸ்நஸ் புரியலையா.
     ஏன்டி போறதும் போனியே இப்படி தனியா தான் போவியா. கூட யாரையாவது துணைக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே.
      முதல்ல எங்க போய்ட்டு இருக்கன்னு ஒழுங்கா லொக்கேஷன அனுப்புற புரியுதா” என்றான் கடுமையான குரலில்.
     “ஏன் இப்படி கத்துறீங்க. நான் பாலோ பண்ணி மட்டும் தான் போறேன். அதான் இப்ப உங்ககிட்ட சொல்றேன்ல”
     என்றவள் தன் முன்னே செல்லும் வாகனம் ஒரு கிளை சாலையில் சென்று நிற்பதை பார்த்தாள்.
     உடனே “அண்ணா அண்ணா இங்கையே நிறுத்துங்க” என்று ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி இறங்கிக் கொண்டாள்.
     அவரிடம் பணம் தந்து அனுப்பி விட்டாள். அதை அங்கு கேட்ட கௌதமிற்கு இன்னும் டென்ஷன் ஏறியது.
     ஆட்டோ சென்றவுடன் “கௌதம் நான் இறங்கிட்டேன். இப்ப என்ன பண்ணட்டும்” என்றவளை என்ன செய்தால் தகும் என எண்ணியவன் அவளை திட்டினான் மனதிற்குள்.
     “எதுக்கு ஆட்டோவ நீ திரும்ப அனுப்புன” என்றான் காட்டமாக. “அதான் நீங்க வர்றீங்கள” என்றாள் நியாயமாக. ‘இவளை’ என்று மனதில் எண்ணியவன்,
      “இப்ப நீ எங்க இருக்க லொக்கேஷன அனுப்பு” என்றான் பற்களை கடித்தபடி. கௌதம் சத்யாவின் உடல் இருந்த இடத்தை சுற்றி ஏதேனும் கிடைக்குமா என்று பார்க்கவே கிளம்பி இருந்தான்.
     இப்போது இந்த ஆரு‌ வேறு ஒரு பிரச்சனையை இழுத்து விட்டாள். இருந்தாலும் அங்கு சென்றால் இன்றே கூட இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்க வாய்ப்பும் உள்ளது என எண்ணினான்.
     ஆருவின் குறுஞ்செய்தி வந்தவுடன் அதை பார்த்தவன் ஒரு நிமிடம் நிம்மதி ஆனான். ஏனெனில் அது அவன் சென்றுக் கொண்டிருந்த இடம் தான்.
     அந்த இடத்திற்கு சிறிது தொலைவில் இருந்து தான் பேசிக் கொண்டு இருக்கிறான். எனவே இன்னும் பத்து நிமிடத்தில் சென்று விடலாம் என்று நினைத்தவன் உடனே வேகத்தை கூட்டி கிளம்பினான்.
     அவன் செல்லும் வழியெல்லாம் ஆருவை மனதில் இன்னும் திட்டிக் கொண்டே தான் சென்றான். ‘இவ என்ன நினைச்சுக்கிட்டு இப்படிலாம் செய்றா.
     தனியா போய்ருக்கா, ஆட்டோவையும் திரும்ப அனுப்பிட்டா. ஏதும் அங்க அவளுக்கு பிரச்சினை வந்தா என்ன பண்ணுவா.
      என்னை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்திருப்பாளா. அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்’ என்ற மனதின் வார்த்தைகளில் திடுக்கிட்டு விட்டான்.
     ‘இப்ப என்ன நினைச்சேன். ருத்ரா இல்லாம நான் எப்படி இருப்பேன்னு தானே. ஆனா எனக்கு ஏன் இப்படி தோனுது.
     ஆண்டவா. ஒருவேளை நான் ருத்ராவ விரும்புறனா. ஆனா எப்ப இருந்து இப்படிலாம் யோசிக்க ஆரம்பிச்சேன்’ என தன் போக்கில் யோசித்தான்‌.
      கடைசியாக ‘எஸ் நான் ருத்ராவ லவ்  பண்றேன் தான். அவ எனக்கு தான். அதான் என் மனசு அவளுக்கு ஏதோ ஆபத்து அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தது.
     அது அவ மேல நான் வச்ச காதலால தான்’ என்று பலவாறு யோசித்தவன் ஒருவழியாக தன் டியூப்லைட் மூளையின் காதலை உணர்ந்தான்.
     ஆனால் இந்த நிமிடம் மகிழ்ச்சியை விட பயம் தான் அதிகமாக இருந்தது அவன் மனதில். காரணம் அவன் ருத்ரா அன்றி வேறு யார்.
      போகும் அவன் தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களிடமும் மனுப் போட்டு கொண்டே சென்றான். ‘நான் போறதுக்குள்ள ருத்ரா எந்த பிரச்சனைலையும் சிக்கிடக் கூடாது’ என்று.
     அங்கே தனியாக நின்றிருந்த ஆருவிற்கு தற்போது தான் கௌதம் தன்னை எதற்கு திட்டினான் என்று புரிந்தது.
     அந்த சாலையில் அவளும்‌ வந்ததில் இருந்து பார்த்ததில் ஒரு வண்டி, ஏன் ஒரு காக்கா குருவி கூட செல்லவில்லை.
     என்னதான் வெளியே தைரியமாக நின்றாலும் மனதிற்குள் பயம் பயங்கரமாக உருவெடுத்தது. கௌதம் சீக்கிரம் வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்‌.
      அதற்கு அவள் மனதே ‘ஆமா இப்ப நினைச்சு என்ன பண்றது. அதான் வந்த ஒரு ஆட்டோவையும் அனுப்பிட்ட. கௌதம் உன்னை திட்டுறதுல தப்பே இல்லடி.
     பாவம் அவரும் இப்ப வேகமா கிளம்பி வந்துட்டு இருப்பாரு. வந்து நல்லா இன்னும் நாலு திட்டு திட்டுனாக் கூட பரவாயில்லை.
     ஆனா சீக்கிரம் வந்து என்னை கூட்டிட்டு போனா போதும்‌. நீ பெரிய இவ. ஜேம்ஸ் பாண்ட் இன்டியானா ஜோன்ஸ்னு நினைப்பு தான் ஆரு உனக்கு.
     இப்ப பாரு வந்து இப்படி மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டு நிக்கிற. இனிமே இப்படி பண்ணுவ பண்ணுவ’ என தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள்.
     அப்போது அவள் முதுகில் யாரோ கையை வைக்கவும் பயத்தில் அரண்டு போய் விட்டாள் ஆரு‌.
      அவள் கத்தப் போகும் நேரம் அந்த நபரின் மற்றொரு கரம் அவள் வாயை மூடவும் பயத்தில் மயக்கம் வரும் போல் ஆனது ஆருவிற்கு.
     குமார், மணி முதாலானோர் அனைவரையும் சக்தி பிரசாத் தன் அறைக்கு அழைத்தவன் “உங்களுக்கு ஒரு புது வேலை வந்திருக்கு” என்றவன்
     அதை பார்க்க குமார் போன்ற சிலரை தன்னோடு அழைத்துக் கொண்டு கிளம்பினான். இதில் மாறனும் அடக்கம்.
     தங்களை எங்கே அழைத்து செல்கிறார்கள் என்று கேட்ட வெற்றியின் கேள்விக்கு முறைப்பையே பதிலாக தந்தான் குமார்.
     விஷ்ணு பிரசாத் தன்னுடைய ஆய்வகத்தில் சில ஆட்களை அழைத்து “அந்த மூனு பசங்களை இங்க டெஸ்ட் எடுக்க அழைச்சிட்டு வாங்க” என்றான்.
     அங்கு வந்த சிறுவர்களுள் முதலில் அழுதுக் கொண்டிருந்த சித்துவை அழைத்தவன் “தம்பி அழக்கூடாது பா. நான் உங்களை ஒன்னும் செய்ய மாட்டேன்.
     ஒரு சின்ன டெஸ்ட் மட்டும் எடுப்போம் ஓகே. அப்புறம் நீங்க உங்க ரூம்க்கு போகலாம். அங்க நான் வாங்கி வச்சிருக்க டாய்ஸ் வச்சு விளையாடலாம்.
     அப்புறம் உங்களுக்கு என்ன புட்ஸ் வேணுமோ அதை கேளுங்க இந்த அங்கிள்லாம் வாங்கி தருவாங்க என்ன” என்றான் பரிவான குரலில்.
      “எங்களுக்கு அதுலாம் வேணாம். எங்களை எங்க வீட்ல கொண்டு போய் விட்டுருங்க” என்றான்‌‌ அழுதுக் கொண்டே.
     அவன் தலையை தடவிக் கொண்டே “ஓகே இங்க நீங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணீங்கனா நான் உங்களை உங்க வீட்டுக்கு அனுப்பிருவேன்” என்றான் பிரசாத்‌.
     அதை கேட்டு உண்மையா என்று ஏக்கமாக பார்த்தவன் “நாங்க உங்களுக்கு ஹெல்ப் செஞ்சா நீங்க எங்கள வீட்டுக்கு அனுப்புவீங்க தானே” என்றான் அப்பாவியாக.
      ஆம் என்றவன் தனக்கு தேவையான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டான். பின் சிறுவர்களுக்கு ஆளுக்கு ஒரு டம்ளர் ஜூஸை தந்தான்.
      “என்ன அங்கிள் இந்த ஜூஸ் கசக்குது” என்ற சித்துவின் கேள்விக்கு “அது அப்படி தான் இருக்கும். குடிங்க என்ன” என்றவன் அவர்கள் குடித்து செல்லும் வரை பார்த்திருந்தான்.
      அவர்கள் சென்றவுடன் தன் அருகில் இருந்த மற்றொரு மருத்துவரிடம் “நல்லா கேர் பண்ணிக்கோங்க.
     ஹெல்தியான புட்ஸ் குடுங்க அன்ட் மெடிசின்ஸ் மூனு நேரமும் குடுங்க. எந்த சிட்டுவேஷன்லையும் ஸ்டாப் பண்ணிடாதீங்க.
     அந்த பசங்களை நல்லா குளோஸா வாட்ச் பண்ணுங்க. எதாவது ஒரு சின்ன சிம்ப்டம்ஸ் ஆர் வேற எதாவது டிப்ரண்ட் ஆட்டிடூட் தெரிஞ்சா கூட எனக்கு இன்பார்ம் பண்ணிடுங்க.
     ஓகே” என்றவன் தன் அறைக்கு சென்று ஒரு குடுவையை எடுத்து தன் ஆராய்ச்சியை தொடர்ந்தான்.
      அந்த நேரம் பார்த்து வந்து சேர்ந்தான் சக்தி பிரசாத். வழமை போல் அவன் அறை கதவை திறந்தவன் நேரே பிரசாத்திடம் வந்தான்.
      “ஹே பிரசாத். என்னடா செய்ற” என்றவனை முறைத்த பிரசாத் “இந்த ரூம் உள்ள வரக்கூடாது அப்டின்னு எத்தனை தடவை சொல்றது” என்றான்.
     அதை கண்டு கொள்ளாத சக்தி “நீ சொன்ன மாதிரி என் ஆட்கள கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான். “சரி அவங்களுக்கு பசங்க இருக்க ரூமை காட்டு.
     நான் சொன்ன பசங்களை மட்டும் அங்க ஷிப்ட் பண்ணிர சொல்லு” என்றவன் தன் வேலையை தொடர்ந்தான்‌.
     மாறன் உள்ளே வந்தது முதல் இங்கிருந்த அனைத்தையும் யாரும் அறியாமல் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டான்.
      விஷ்ணுவை பார்த்த மாறன் ‘இவன் தான் பிரசாத்தா. இன்னைக்கே நான் உன்னை பார்ப்பேன்னு நினைக்கில டா. இன்னையோட நீங்க எல்லாம் காலிடா’ என்று மனதில் கறுவிக் கொண்டான்.
       பின்பு அவர்களை ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த சிறுவர்களை எல்லாம் ஒவ்வொரு நிலையில் பெட்டில் படுக்க வைக்க பட்டிருந்தனர்.
     பார்த்த மாறனுக்கு மனம் வேகமாய் அடித்து கொண்டது. இவர்களை எப்படி காப்பாற்றுவது என யோசிக்க தொடங்கியது.
     அப்போது “சே பக்கத்து ரூம்ல இருக்காங்க போல” என்றவன் அவர்களை அடுத்த அறைக்கு அழைத்து சென்றான்.
      அங்கே நல்ல நிலையில் இருந்த சிறுவர்களை தாங்கள் எடுத்து வந்த வேனில் ஏற்ற சொல்லி அவன் ஒரு அறையில் சென்று அமர்ந்து விட்டான்.
     குமார் உள்ளிட்டோர் அந்த சிறுவர்களை வேனில் ஏற்றி கொண்டிருந்தனர். மாறனும் எப்படி என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.
     அப்போது யாரும் அறியாதவாறு நகர்ந்தவன் மேலும் தனக்கு தேவையான தகவல்களை புகைப்படங்களாய் சேகரித்தான்.
     அங்கிருந்த லேப் தனியே அமர்ந்து வேலை செய்திருந்த வேறு சில மருத்துவர்கள் என் எல்லாவற்றையும் ஆதரங்களாய் ஆக்கினான்.
     அந்நேரம் வெளியில் இருந்து வேகமாக உள்ளே வந்த பிரசாத்தின் ஆள் ஒருவன் கூறிய செய்தியில் சக்தி பிரசாத் உட்பட அனைவரும் கோபம் அடைந்தனர்.
     அந்த ஆளிடம் மறுபடியும் ஏதோ சொல்லி அனுப்பினான் பிரசாத். அதை கேட்ட சக்தியோ விகாரமாய் சிரித்தான்.
-தொடரும்

Advertisement