Advertisement

தூறல் – 25
வாயில் வரை வந்து நின்றேன்,
வார்த்தை மட்டும் வராது நிற்க
உன் சங்கீத சிரிப்பொலியே பதிலாக;
காற்றும் அதை அழகுற என்னிடம் நீட்ட,
பற்றி கொள்கிறேன் அதையே பற்றுகோளாய்!!
      கௌதம் கிளம்பினான் தன் அலுவலகம் நோக்கி. அங்கே அவன் எதிர்பார்த்த தகவல் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
     அலுவலகம் வந்தவன் நேராக எடிட்டர் அறைக்கு சென்றான். கதவை தட்டி அனுமதி கேட்டவன் ‘கம் இன்’ என்ற சத்தம் கேட்ட பின் உள்ளே சென்றான்.
      கௌதமை கண்ட எடிட்டர் நாராயணன் “வாப்பா கௌதம். என்ன ஆபிஸ் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு போல” என்றார் சிரிப்புடன்.
      “அப்படிலாம் ஒன்னும் இல்லை சார். நான் வந்து போய்க்கிட்டு தான் இருக்கேன். நீங்க தான் என்னை கவனிக்கவில்லை” என்றான் தானும் சிரிப்புடன்.
     “சரிதான். ஓகே என்ன விஷயம் கௌதம். காரணம் இல்லாம நீ வந்து என்னை பார்க்க மாட்டியே” என்றார் அவனை கூர்மையாக பார்த்து கொண்டே.
     அவரை பார்த்து வாய்க்குள் சிரித்தவன் “சார். அது முக்கியமான ஒரு விஷயம் தான். அன்ட் அது யாருக்கும் தெரியவும் கூடாது.
      அதான் எப்படி ஆரம்பிக்கிறதுனு தான் யோசிக்கிறேன்” என்றான் யோசனையாக. “மை மேன். என்ன கேக்கனுமோ நீ கேளு ஓகே.
     அப்புறம் இது என்னோட கேபின் என்னை கேக்காம ஒருத்தரும் உள்ள வரமாட்டாங்க உனக்கே தெரியும். இப்ப சொல்லு” என்றார் கௌதமிற்கு நம்பிக்கை தரும் விதமாக.
     சிறிது நேரம் சென்று “எனக்கு சத்யாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேணும் சார். அதோட காப்பி உங்ககிட்ட இருக்கும்னு எனக்கு தோனுது.
     சப்போஸ் அப்படி உங்ககிட்ட இல்லைனா கூட அதை எனக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா சார்” என்று ஒரு வழியாக கேட்டு விட்டான் கௌதம்.
      கௌதமை பார்த்த நாராயணன் “என்னால முடியாது கௌதம்” என்றார். அவரை அதிர்வுடன் பார்த்த கௌதம் “சார்” என்றான்.
     “என்ன சார். உரிமையா முடிஞ்சு தாங்கனு கேக்காம‌. முடியுமானு கேக்குற” என்ற நாராயணனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவன்
      “இப்படியா சார் பிபிய ஏத்துவீங்க. ஒரு நிமிஷம் அப்படியே ஸ்டன் ஆகிட்டேன்” என்றான். “ஜஸ்ட் பார் ஃபன் மை பாய்” என்றவரின் பதிலுக்கு
      “என்னா ஃபன்னு கொஞ்ச நேரத்தில டென்ஷன் பண்ணிட்டு” என மனத்திற்குள் திட்டியவன் வெளியில் சிரித்து வைத்தான்.
     “சார் நான் கேட்டது” என்றான் இழுவையாய் “காரியத்துல கண்ணா இருக்க. சரி என்கிட்ட ஒரு காப்பி இருக்கு.
     உனக்கு தேவைப்படும் அப்படினு எனக்கு தோனுச்சு. சோ வாங்கி வச்சேன். நீ முன்னாடியே வருவனு எதிர்ப்பார்த்தேன். பட் நீ கொஞ்சம் லேட் தான்” என்றார்‌ நாராயணன்.
     பேசாமல் அமைதியாக இருந்த கௌதமை கண்டவர் என்ன நினைத்தாரோ எழுந்து சென்று தன் கப்போர்டை திறந்து ஒரு கவரை எடுத்து வந்தார்.
      “இந்தா கௌதம் நீ கேட்டது” என்று கொடுத்தவர் அவனை பார்த்து “என்னப்பா இறந்தது உன் பிரண்ட்ங்கிறதால மனசு ஒரு நிலைக்கு வர மாட்டேங்குதா” என்றார் பரிவோடு.
      அவரை பார்த்து “இருக்கலாம் சார். அன்ட் தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப் சார்” என்றவனை ஆதூரமாய் சிரித்தவர் “மை பிளஷர் கௌதம்” என்றார்.
      அவரிடம் மறுபடியும் தன் நன்றியை தெரிவித்தவன் அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனை கண்ட ரேவதி கூட “என்னடா மவனே வேலைய விட்டுட்டியா என்ன.
      வீடே அண்ட மாட்ட. இப்ப என்னன்னா பொழுதனைக்கும் வீடே கதின்னு கெடக்குற” என்றார். தன் அன்னையை முறைத்தவன் “எம்மா ஏன்மா உனக்கு இந்த கொலை வெறி.
     நான் வேலைக்கு போறது உனக்கு பொறுக்கலையா. பேசாம போய்று. வேலையை விட்டுடியானு கேக்குற” என தன் போக்கில் புலம்பி கொண்டே அவன் அறைக்கு சென்றான்.
      அவன் புலம்பி கொண்டு செல்வதை கண்ட ரேவதி “ஹப்பா நல்லா தான் இருக்கான். இவன் ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட மாதிரி சுத்தவும் என்னவோனு நினைச்சிட்டேன்” என்று தன் போல் பேசி சென்றார்.
     தன் அறைக்கு வந்த கௌதம் அந்த ரிப்போர்டை பிரித்து பார்த்தான். அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டோடு போலீஸ் எப்.ஐ.ஆரின்‌ காப்பியும் இருந்தது.
     தன் எடிட்டர் நாராயணன் தனக்கு குரு என்பதை நிரூபித்து விட்டார் என்று மகிழ்வுடன் எண்ணியவன் இரண்டையும் பார்க்கலானான்.
      முதலில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டை பார்த்தவன் சத்யாவின் இறந்த நேரத்தை குறித்து கொண்டான்‌.
      மேலும் அவன் பின் தலையில் அடிபட்டு இறந்திருக்கிறான் என்று குறிப்பிட்டு இருந்தனர். நண்பனை எண்ணி வேதனை அடைந்தான்.
     பின் தன்னை தேற்றி எப்.ஐ.ஆர் காப்பியை எடுத்தவன் அதில் போலீசார் சத்யாவின் உடலை கண்ட நேரத்தை பார்த்தவனது மனம் சட்டென்று பதட்டமானாது.
      தான் கண்டது உண்மை தானா என்று இரண்டு ரிப்போர்டையும்‌ ஒன்றாக வைத்து ஒருமுறைக்கு இருமுறை உறுதிபடுத்தினான்.
     இப்போது அவன் மனதில் புதிய உறுதி ஏற்பட்டது போல் இருந்தது. தான் அந்த கொலையாளியை நெருங்கியது போல் தோன்றியது.
     கமிஷனர் முகிலனிடம் மாறன் பேசிக் கொண்டு இருந்தான். “முகில் என்ன விஷயம் சொல்லனும் பேச சொல்லி மெசேஜ் போட்டாருந்தீங்க” என்றான் மாறன்.
      “எஸ் மாறன். எனக்கு ஒரு விஷயம் இப்ப தான் தெரிய வந்துச்சு. அதான் உங்ககிட்ட ஷேர் பண்ணியே ஆகனும் அப்படின்னு போன் பண்ண சொன்னேன்” என்றான்.
      பின் மீண்டும் அவனே “அந்த பிரசாத் விஷயம் சொன்னீங்கல. உங்களுக்கு வேலை சொல்றது அந்த ஆப்ப கண்டு பிடிச்சதுலாம் அந்த பிரசாத் தான்” என்றான்.
      “வாட் என்ன சொல்றீங்க முகில். அவன் பேசறத நானே கேட்டேன். ஐம் சென்ட் பர்சண்ட் சுயூர்” என்றான் மாறன் உறுதியாக.
     “நீங்க சொன்னதும் கரெக்ட் தான் மாறன். அதே சமயம் நான் சொன்னதும் கரெக்ட்” என்று குழப்பிய முகிலிடம் “என்ன இப்படி குழ்பபுறீங்க முகில்.
     ப்ளீஸ் தயவு செஞ்சு புரியிற மாதிரி சொல்லுங்க” என்றான் மாறன். “சொல்றேன் மாறன். உங்களுக்கு அங்க வேலை சொல்றவன் சக்தி பிரசாத்.
     மே பி அவன் பேசினது விஷ்ணு பிரசாத்தா தான் இருக்கனும்” என்று முடித்தான் முகிலன். “என்ன விஷ்ணு பிரசாத்தா. யாரு முகில் அது” என்ற மாறனின் கேள்விக்கு,
     “அந்த சக்தியோட தம்பி” என்றான் முகில். “என்னாது” என்று அதிர்ந்து விட்டான் மாறன். “எஸ் மாறா. அவன் ஒரு டாக்டர்.
      அன்ட் அவன் படிச்சது எல்லாம் வெளிநாட்டுல தான். அவன் இங்க வந்து கொஞ்ச மாசம் இல்லை ஒரு வருசம் இவ்ளோ நாள் தான் இருக்கும்னு நியூஸ் கிடைச்சிது.
     அவன் தான் யுனிக்கா இருக்கனும் அப்டின்னு எப்பவும் நினைப்பான்னு சொன்னாங்க. அதே சமயம் அவனை மட்டும் தான் எல்லாரும் பிரசாத்னு கூப்டனும்னு சொல்வானாம்.
      இப்ப அவங்க பார்மா கம்பெனிஸ் எல்லாம் அவன் தான் டேக் ஓவர் பண்ணி பாத்துட்டு இருக்கானாம்.
      அன்ட் அவன் எல்லாமே நேர்மையா இருக்கனும்னு பேசற டைப்னு சொல்றாங்க. இருந்தாலும் அவன்‌ அண்ணே பண்றது தெரியாம இருக்காது அப்படின்றது என் எண்ணம்.
      பிகாஸ் அவன் ரொம்ப ஷார்ப் அப்டின்னு தான் நான் கேள்விப்பட்டேன். சோ அதான் அப்படி சொல்றேன்.
       இனிமே என்ன பண்ணனும்னு டிசைட் பண்ண வேண்டியது உங்க வேலை தான் மாறன் புரியுதா” என்று தான் திரட்டிய தகவல்களை எல்லாம் சொல்லி முடித்தான்.
     தான் கேட்டவற்றை மெதுவாக உள்வாங்கியவனின் மனதிற்குள் சில முடிச்சுகள் அவிழ்க்கபட்டது போல் தோன்றியது.
      “என்ன மாறன் எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க” என்ற முகிலனின் கேள்விக்கு “நீங்க சொன்னதை தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்றவனது குரலே ஒரு மாதிரி தான் இருந்தது.
     “என்னாச்சு மாறன் உங்க வாய்ஸ் கூட சேஞ்ச் ஆன மாதிரி இருக்கு” என்றான் முகில். “இல்லை முகில் எனக்கே கன்பார்மா தெரியாத ஒரு விஷயத்தை நான் எப்படி சொல்றது.
     அதை தான் யோசிச்சேன் முகில். நான் கெஸ் பண்ணது கரெக்ட்னா உடனே இன்பார்ம் பண்றேன். ஓகே
      அன்ட் நான் கெஸ் பண்ணது கரெக்ட்னா அவன சீக்கிரம் பிடிக்கனும் முகில். அவன் ரொம்ப பெருசா ஏதோ பண்றானு தோனுது” என்று முடித்தான் மாறன்.
     சரி என்று முகிலும் அழைப்பை துண்டித்தான். மாறனும் தனக்கு இனி வேலை அதிகம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தான்.
     ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று யோசித்தவன் அந்த கும்பலுக்கு வந்து சேர்ந்தான்.
     சிறிது நேரத்தில் வந்த குமார் மற்ற அனைவரையும் அழைத்து தங்களுக்கு ஒரு புதிய வேலை வந்துவிட்டதாக கூறியவன் வெற்றியை ஒரு பார்வை பார்த்து செல்லலாம் என்றான்.
     ஆருத்ரா தன் அலுவலகத்தில் வேலையை முடித்தவள் தோழிகளோடு வெளியே வந்தாள். அங்கே அவர்களுக்காக காத்திருந்தது அலுவலக பேருந்து.
     தோழிகள் அனைவரும் ஏறி அமர்ந்தனர். அப்போது ஜன்னலில் வேடிக்கை பார்த்திருந்த ஆரு சட்டென்று ரோட்டில் யாரையோ பார்த்து விட்டாள்.
      பார்த்தவளின் பார்வை கூர்மையானது. இப்போது எப்படியாவது கீழே இறங்கி செல்ல முடியுமா என்று யோசித்தாள்.
      திரும்பி தன் தோழிகளை பார்த்தவள் திடீரென யோசனை வந்தவளாய் தன் பையை துழாவி விட்டு “ஹைய்யோ மீரா நான் என் மொபைல மேலையே வச்சிட்டு வந்துட்டேன்.
     நான் போய் எடுத்துட்டு வந்தர்ரேன். லேட் ஆனாலும் நான் வந்துடுறேன் ஓகே. நீங்க இறங்காதீங்க” என்று கூறி இறங்கி ஓடினாள் மீரா கூப்பிடுவதை கேட்காதது போல்.
     சென்றவள் ஒரு மரத்தில் அருகில் நின்று பேருந்து கிளம்பியதை உறுதிப்படுத்தியவள் எதிரே இருந்த கடையை பார்த்தாள்.
      அந்த ஆள் கிளம்பவும் தானும் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிக் கொண்டவள் அந்த நபரை பின்தொடர்ந்தது சென்றாள்.
      இதில் சிறிது தூரம் சென்ற பேருந்தில் இருந்து இறங்கிய தோழி மீராவை கவனிக்கவில்லை. ஆரு ஆட்டோவில் ஏறி செல்வதை கண்ட மீரா தானும் ஆட்டோ ஒன்றில் ஏறி ஆருவை பின்தொடர்ந்தாள்‌.
      ஒருபுறம் இவள் இங்கே செல்ல மறுபுறம் கௌதமோ தான் கண்டுபிடித்ததை சரியா என கண்டறிய தானும் தன் வீட்டில் இருந்து கிளம்பினான்.
      வழி முழுவதும் அவன் மனம் ஏனோ துடித்தது. நெருக்கமானவர் யாருக்கோ ஆபத்து என இதயம் உணர்த்த அதை விடுத்து மூளை சொல்லியதை கேட்டு தன் வழியில் தொடர்ந்தான்.
     இப்படி ஆளுக்கொரு திசையில் ஒரே திசையை நோக்கி பயணிப்பவர்கள் அவர்கள் எதிர்க்கொள்ள போகும் இக்கட்டை பற்றி அறியாமல் விட்டனர்.
-தொடரும்

Advertisement