Advertisement

தூறல் – 22
கடைக்கண் பார்வை வீசி சென்றுவிடு பெண்ணே,
காத்திருந்து காயமடைந்த நெஞ்சை தேற்றிட;
சிறு ஊண் உறக்கம் இல்லாது அலையும்,
என் ஆற்றமையேனும் ஆறிடும்‌ பெண்ணே;
தரிசனம் காண ஏங்குகிறேன் வந்திடுவாயா முன்னே??
     கௌதம் கரும்பலகையில் தன் சந்தேகங்கள் கணிப்புகள் என்று ஒருபுறம் எழுதியவன் மற்றொரு புறம் தன் நண்பன் சத்யாவின் பெயரை எழுதினான்.
     ‘சத்யா அந்த சிறுவனை கண்ட பின்னே அவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது என்றால் அவனும் சென்று ஆராய்ந்து தான் ஆதாரம் தயாரித்து இருப்பான்.
     அப்படியானால் அவனின் இறப்பிற்கு ஒரு வார அல்லது இரண்டு வார தொலைபேசி சிக்னல் எங்கெல்லாம் பயணித்து இருக்கிறது என்று தெரிந்தால்
      நமக்கு சற்று எளிதாக இருக்கும்’ என்று கணித்த சத்யா இதை செல்போன் அலுவலகத்தில் சென்று கேட்கலாமா என்று யோசித்தான்.
     சில விநாடியில் அந்த முடிவை கைவிட்டான் காரணம் ருத்ரா. ‘கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு ஏன் நெய்க்கு அலைவானேன்.
     ருத்ரா வேறு இன்று காலை தான் லேப்டாப்பை திறந்து தரும் போது தனக்கு ஹேக்கிங் கை வந்த கலை என்று பெருமை பேசி சென்றிருக்கிறாளே.
     அவளின் உதவியின் மூலம் அதை எளிதாக கண்டு பிடித்து விடலாம்’ என்ற எண்ணத்தில் ருத்ராவிற்கு அழைத்து விட்டான்.
     அழைத்த பின் தான் உணர்ந்தான் இது அவளின் அலுவல் நேரம் என்று. எனவே உடனே அழைப்பை துண்டித்தான்.
      அலுவகத்தில் இருந்த ஆரு அவள் தோழிகளோடு கேன்டீனில் அமர்ந்து இருந்தாள். இப்போது தான் மீராவிடம் பேசி பேசி அவளை ஒருவாறு சமாதானம் செய்திருந்தாள்.
     அப்போது ஆருவின் கைபேசி அழைப்பு விடுக்கவும் அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர்.
     தோழிகள் ஒரு சேர திரும்பி பார்க்கவும் ‘அழைப்பது யார்’ என்று பார்த்தாள். .கௌதமின் பெயர் வரவும் திடுக்கிட்டாள்.
       ‘எப்படி இவர்கள் முன் எடுக்க’ என்று முழிக்கையிலே அழைப்பு நின்று விட்டது. ‘ஹப்பாடா’ என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள்.
     இதை எதிரில் இருந்து பார்த்த தோழிகள் “போன்ல யாரு ஆரு‌” என்றனர் அவளை குறுகுறுவென பார்த்தவாறு‌.
     “ஆ..ஆ அது சும்மா கம்பெனி கால்” என்று சமாளித்தாள் ஆரு‌‌. அதை தோழிகளும் நம்பியவுடன் நிம்மதி ஆனாள்.
     ‘ஆனால் இந்த நேரம் கௌதம் ஏன் தனக்கு அழைப்பு விடுத்தார்’ என்று மட்டும் தலைக்குள் குடைய ஆரம்பித்தது. தோழிகளை சமாளித்து எப்படி கௌநமை தொடர்பு கொள்ள என்று யோசித்தாள்.
     அப்போது ஆருவை அவர்கள் டீம் லீடர் அழைக்க இதுதான் சாக்கென்று ஓடினாள் ஆருத்ரா. டீம் லீடரை பார்த்து விட்டு வந்தவள் நேரே கழிப்பறை நோக்கி சென்றாள்.
     உள்ளே யாரும் இல்லை என்று உறுதிபடுத்தியவள் கௌதமிற்கு அழைப்பை விடுத்து எடுக்கும் வரை காத்திருந்தாள்‌.
     அந்த பக்கம் கௌதம் ‘ச்சே இது ருத்ரா ஆபிஸ்ல இருக்க டைம். இப்ப போய் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றோமே.
     சரி ஈவ்னிங் ஆக இன்னும் கொஞ்ச நேரம் தானே இருக்கு. அவ வீட்டுக்கு வந்த அப்புறம் போன் பண்ண சொல்லுவோம்” என்று போனில் குறுஞ்செய்தி அனுப்ப எடுத்தான்.
     அப்போது ஆருவே அழைக்கவும் அழைப்பை ஏற்றான். “சாரி ருத்ரா நான் இந்த டைம் உனக்கு கால் செஞ்சு டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றான் எடுத்தவுடன்.
     “அதுலாம் ஒன்னும் இல்லை கௌதம். நான் என்ன ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கனா நீங்க போன் பண்ணா பேசாம இருக்க.
     நான் கேன்டீன்ல தான் இருந்தேன். நீங்க கால் பண்ணவும் யாருக்கும் தெரியாம இந்த பக்கம் ஓடி வந்துட்டேன்” என்றாள் சிரிப்புடன்.
     “சரி சரி எதுக்கு கால் செஞ்சீங்க அதை பர்ஸ்ட் சொல்லுங்க” என்றாள் காரியத்தில் கண்ணாக. அவளின் ஆர்வம் உணர்ந்த கௌதம் சிரித்துக் கொண்டே
     “ருத்ரா ஒரு முக்கியமான விஷயம் உன் கூட டிஸ்கஸ் பண்ணனும். அதுதான் இப்ப கால் செஞ்சேன். போன்ல பேசறது அந்த அளவு சேப்னு சொல்ல முடியாது ருத்ரா.
      இன்னும் சொல்லனும்னா நேர்ல பேசறது தான் சேப். அப்படி இல்லைனா நீ உன் வீட்ல இருக்கிறப்ப  நான் வீடியோ கால் செய்வேன்.
     அது கொஞ்சம் பெட்டர். பட் நீ இப்ப ஆபிஸ்ல இருக்க. இங்க வச்சு நீ பேசுறது நாம ரிஸ்க் எடுக்கிறம்னு அர்த்தம் ருத்ரா.
     சோ நீ வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டு எனக்கு கால் பண்ணு ஓகே. அன்ட் உன் லேப்டாப் ரெடி பண்ணி வச்சுக்கோ” என்று முடித்தான் கௌதம்.
     அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஆரு‌ “ஓகே கௌதம். நான் வீட்டுக்கு வந்து உடனே உங்களுக்கு கால் செய்றேன்” என்று அழைப்பை துண்டித்தாள்‌.
     ஆரு இப்போது எப்படி வீட்டிற்கு கிளம்பலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள். ஏனெனில் இப்போது சென்றால் தான் மட்டும் தான் வீட்டில் இருப்பாள்.
     மாலை நேரம் என்றாள் தோழிகளும் உடன் இருப்பர்‌. அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டே இருப்பர்.
     சிறிது நேரம் என்ன காரணம் சொல்லி கிளம்பலாம் என்று யோசித்தவள் வெளியே வந்தாள். தன் இருக்கையில் அமர்ந்தவள் மீராவிடம் மெல்ல
     “மீரா எனக்கு ரொம்ப ஸ்டமக் பெயினா இருக்கு பா” என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.
     அவளின் வித்தியாசமான செய்கையை பார்த்திருந்த மீரா அவளை நம்பவில்லை. இருந்தும் “சரி ரெஸ்ட் எடுக்குறீயா. இல்லை வீட்டுக்கு போறியா” என்றாள் அவளின் எண்ணத்தை அறிய.
     இதை எதையும் கண்டு கொள்ளாத ஆரு தன் மதி ஒன்றே குறியாய் “என்னால சுத்தமா முடியலை மீரா. நான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்றாள்‌.
     சிறிது நேரம் முன்பு வரை நன்றாக பேசிக் கொண்டு இருந்தவள் இப்போது இப்படி சொல்வது பொய் என்று நன்கு தெரிகிறது.
     ஆனால் இதை சொன்னால் நிச்சயம் சண்டை வரும் என்ற எண்ணத்தில் “சரி ருத்ரா நீ சொல்லிட்டு கிளம்பு” என்றாள் மீரா  வீட்டிற்கு போய் கேட்டு கொள்வோம் என்ற எண்ணத்தில்.
     பின் ஆருவும் அலுவகத்தில் சொல்லி விட்டு வீட்டை நோக்கி கிளம்பி விட்டாள். ஒரு ஆட்டோ பிடித்து வீட்டை அடைந்த ஆரு‌ கதவை சாத்திவிட்டு தன் அறைக் கதவையும் தாள் போட்டு விட்டாள்.
     உடனே கௌதமின் எண்ணிற்கு அழைப்பும் விட்டாள். ஆரு பேசி முடித்து வைத்த உடன் கௌதம் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க தொடங்கினான்.
     அவன் யோசனையில் இருக்கும் போது வந்து எட்டி பார்த்த ரேவதி கூட அவனை தொல்லை செய்யாது தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.
     அப்போது அவன் சிந்தையை கலைக்கும் வண்ணம் கௌதமின் கைப்பேசி அலறியது. கடுப்புடன் “யாருடா அது” என்று எடுத்தவன் அது ருத்ராவிடம் இருந்து வருகிறது என்றதும் உடனே எடுத்தான்.
     “ஹே என்ன ருத்ரா. நான் தான் வீட்டுக்கு வந்த அப்புறம் கால் பண்ணா போதும்னு சொன்னேன்ல. என்ன இப்பவே கால் பண்ற” என்றான் அவள் பேசும் முன்.
     “கௌதம் நான்‌ சொல்றத கொஞ்சம் கேளுங்க. நான் வீட்டுக்கு வந்துட்டேன் அதான் கால் பண்றேன்” என்றாள் சிரித்துக் கொண்டே. அவள் பதிலில் ஆச்சரியமடைந்த கௌதம்
     “என்ன அதுக்குள்ள வந்துட்டியா. ஹே உண்மைய தான் சொல்றியா ருத்ரா” என்றான் மகிழ்வுடன். அவன் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்த ருத்ரா “ஆன் உண்மை தான் நான் வீட்டுக்கு வந்துட்டேன்.
     வந்த உடனே உங்களுக்கு கால் செய்றேன் போதுமா. நீங்க வேற முக்கியமான விஷயம் அப்படின்னு சொன்னீங்களா அதான் உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்லிட்டு வந்துட்டேன்” என்றாள் ஆரு‌.
     பின் அவளே “என்ன அவ்ளோ இம்பார்ட்டன்ட் மேட்டர் சொல்லுங்க சொல்லுங்க” என்றாள் ஆர்வமுடன். அவளை நினைத்து தலையில் அடித்து கொண்ட கௌதம்
      “நீ இருக்க பாரு” என்றுவிட்டு “எனக்கு ஒரு விஷயத்தை ஹேக் பண்ணி சில டீடெயில்ஸ் எடுக்கனும். அதான்” என்றான் இழுத்துக் கொண்டே.
     “ஓ… ஹேக்கிங்கா அதலாம் சும்மா தூசி மாதிரி அப்படி லெஃப்ட் ஹேன்ட்ல தட்டிட்டு போய்ருவேன். சொல்லுங்க என்ன பண்ணனும்” என்றாள் கெத்தான குரலில்.
     ஆனால் கௌதம் கூறியதை கேட்ட ஆரு‌ அலறிவிட்டாள் “ஏதே விட்டா நீங்க என்னை போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் உக்கார வச்சிருவீங்க போல” என்று.
      “ஹையோ ருத்ரா இது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம்லா இல்லை. ஜஸ்ட் நீ சத்யாவோட மொபைல் நம்பர் இந்த ஒன் மந்த்ல எந்த எந்த இடத்துக்கு மூவ் ஆகி இருக்குனு மட்டும் பாத்து சொல்லு அது போதும் மா” என்றான் சமாதானமாக.
      “என்ன போதுமா இது ஒன்னும் சிசிடிவி கேமராவோ இல்லை யார் வீட்டு ஸிஸ்டமோ இல்லை ஹேக் செய்றதுக்கு கௌதம்.
      ஒரு கம்பெனி சர்வர் உள்ள பூந்து ஒரு பர்சனல் நம்பரோட டீடெயில்ஸ் எடுக்க சொல்றீங்க கௌதம். இது கொய்ட் ரிஸ்கி. மாட்டுனா அவ்ளோ தான்‌. கேஸ் ஆகிரும்” என்றாள் புரிய வைக்கும் முனைப்பில். “நீ சொல்றது எல்லாம் சரி தான் ருத்ரா.
      பட் நீ தான் ஹேக்கிங்ல புலி, நான் அப்படி நான் இப்படி, நான் அத செஞ்சேன் இத செஞ்சேன்னு சொன்ன. ஆப்டரால் சத்யா நம்பர் லொக்கேஷன்ஸ் டிரேஸ் பண்ணி சொல்ல முடியாதா.
     இதை என்னமோ ரொம்ப பெருசா பேசுற” என்றான் கௌதம் நக்கலாக. ‘ஐயோ சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிட்டோம் போலையே’ என மனதிற்குள் அலறிய ஆரு
       “என்ன கிண்டலா நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா கௌதம்” என்றாள் இயலாமையுடன்.
     “அதுக்கூட எனக்கு புரியாதா. ஏன் மாட்டிக்காம உன்னால எடுக்க முடியாதா” என்று இன்னும் அவளை கடுப்பேத்தினான். “ஐயோ கௌதம் நான் இந்த மாதிரி இல்லீகலா எதுவும் செஞ்சது இல்லை.
     சோ எனக்கு பயமா இருக்கு. வேற எதாவதா இருந்தா கூட செஞ்சு தரேன். இது என்னால முடியாது. பிளீஸ் கௌதம்” என்றாள் கெஞ்சலாக.
      அதற்கு கௌதம் “இங்க பாரு ருத்ரா. இப்ப நம்ம நிலை என்னன்னு உனக்கு தெரியும். கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு. அன்ட் உன்னால இது முடியும் அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.
      நீ மனசு வச்சா இதுக்கு ஒரு வழிய என்னால கண்டிப்பா கண்டுபிடிக்க முடியும். சோ பிளீஸ் மா பிளீஸ்” என்று அவனும் கெஞ்சினான்.
     ருத்ரா மனம் மாற வேண்டும் என்று அவள் மனதை மாற்ற கௌதமும் தன்னால் முடிந்த அளவு பேசி கரைத்து கொண்டு இருந்தான்.
-தொடரும்

Advertisement