Advertisement

தூறல் – 16
விண்மீனே உன் மைவிழியிலே‌
வீழ்ந்து தான் போனேனே,
மீண்டிட பலநூறு வழி கிட்டினும்,
கறையேறாது கிடக்கவே மனம் ஏங்கிடுதே;
ஒருமுறை கைக் கொடுத்து ஏற்றி விடுவாயா??‌
கௌதம் தன் அறையில் அமர்ந்து இன்று நடந்த அனைத்தையும் மறுபடியும் ஓட்டிப் பார்த்தான். ருத்ரா தன்னிடம் கூறியது அனைத்தும் சரியே என எண்ணினான்.
     கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சத்யாவே அவனுடைய உயிர் நண்பன். வேறு நண்பர்கள் இருந்தாலும் தனக்கு நடக்கும் அனைத்தையும் தன்னிடம் தான் கூறுவான்.
     ‘அதனால் அவனின் ஒவ்வொரு நகர்வும் தனக்கு அத்துப்படியே. அப்படி இருக்கையில் அவன் தனக்கு சொல்ல நினைத்த செய்தியை கண்டுபிடிப்பது சாத்தியமே’ என்று எண்ணினான்.
     இவ்வளவு நாள் தன்னுடைய மன உளைச்சலால் சரியான வழியில் யோசிக்காது விட்ட தன்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான். இத்தனை நாட்கள் அவன் செய்த தவறை சரி செய்ய நினைத்தான்‌.
     இப்போது அவன் சத்யா அன்றாடம் என்ன செய்வான் என்று யோசிக்க ஆரம்பித்தான். “காலைல எழுந்து பின் உடனே ஜிம்க்கு போவான்‌.
     அப்புறம் அவன் வீட்டுக்கு வந்து கிளம்பி ஹோட்டல் போவான். பிரேக் பாஸ்ட் முடிச்ச அப்புறம் ஆபிஸ் வந்துருவான்.
      புல் டே ஆபிஸ்ல தான் இருப்பான். ஏதாச்சும் புது புராஜெக்ட் வந்தா வெளியே நியூஸ் கலெக்ட் பண்ண போவான். தென் லஞ்சும் வெளிய தான்.
      டின்னரையும் வெளிய முடிச்சிட்டு தான் வீட்டுக்கே போவான். சோ நைட் டைம் தான் வீட்டுலையே மோஸ்ட்லி இருப்பான். இதுல எங்க எவிடென்ஸ மறைச்சு வச்சிருப்பான்.
     வேற என்ன ஹேபிட் அவன்கிட்ட இருக்கு” என பலவாறாக யோசித்து கொண்டு இருந்தான் கௌதம். “ஒரு வேளை ஜிம்ல அவன் ரேக்ல வச்சிருப்பானோ.
      சேச்..சே இருக்காது” என்று சொல்லி விட்டு “வேற எங்க வச்சிருப்பான்” என்று யோசித்தவன் ஹோ கௌதம் இதை எப்படி மறந்த” என தன் தலையில் தட்டிக் கொண்ட கௌதம்,
     சத்யா அறையில் இருந்து எடுத்து வந்த மடிக்கணினியை அப்போது தான் நினைவு கூர்ந்தான். தான் கொண்டு வந்ததை எங்கு வைத்தோம் என தன் அறையை ஆராய்ந்தான்.
      அவனை சொல்லியும் குற்றம் இல்லை. சத்யா இறந்ததில் இருந்து தான் அவன் சிந்தனை ஓட்டம் சரியான திசையில் செல்ல மறுக்கிறதே.
     தன்னை நிதானப்படுத்திய கௌதம் சத்யாவின் மடிக்கணினியை தன் அறையின் கப்போர்டில் இருந்து எடுத்து அமர்ந்தான்‌‌.
      சத்யா பழைய கடவுச்சொல்லை மாற்றியதால் புதியது என்னவாக இருக்கும் என்று மண்டை காய்ந்து. ‘சரி தன் தாய் தந்தை அல்லது தன் பேரை எதுவும் வைத்திருக்கிறானா’ என்று போட்டு பார்த்தான்.
      எதுவும் திறக்கவில்லை. இதற்கு மேல் முயற்சி செய்து எல்லாம் அழிந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தவன் மூடி வைத்து விட்டான்.
      இதை கணினி பொறியாளர்கள் யாரிடமாவது கொடுத்து திறந்து தரும்படி கேட்போமா என்று எண்ணினான். பின் அந்த முடிவை நொடியில் மாற்றிக் கொண்டான்.
      ஏனெனில் அவனுக்கு தற்போது உள்ள நிலையில் யாரையும் நம்ப மனம் மறுத்தது. அதுமட்டும் இல்லாது யாரையும் தன் பிரச்சினையில் இழுத்து விட அவன் விரும்பவில்லை.
      கௌதம் இதை தற்போது தன்னுடைய பிரச்சினை என்றே முடிவு செய்து விட்டான். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்து விட்டான்.
     அதே நேரம் ஆருத்ரா அங்கே தன் தோழிகள் முன் அவர்களின் கேள்விகளால் விழி பிதுங்கி முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
      கௌதம் இல்லத்தில் இருந்து கிளம்பிய ஆரு நேராக தன் அப்பார்ட்மெண்டை தான் வந்தடைந்தாள். எப்போதடா வருவாள் வைத்து செய்வோம் என காத்திருந்தனர் அவள் தோழிகள்.
      ஆரு உள்ளே நுழைந்த உடன் ஆரம்பித்து விட்டனர் அவளின் தோழிகள். மீரா தான் முதலில் ஆரம்பித்தாள்.
      “எங்க போய்ட்டு வர ஆரு‌” என்றாள் முறைப்புடன். தன் தோழிகள் ரவுண்டு கட்டி அமர்ந்து இருப்பதை பார்த்த ஆரு‌ ‘இவளுங்க ஏன் இப்படி உக்காந்திருக்காளுக’ என்று யோசித்தாள்.
      அப்போது தான் அவள் தன் தோழிகளை கௌதமை பார்த்த உடன் பாதியில் கலட்டி விட்டு சென்றது நினைவு வந்தது. ‘போச்சு போச்சு பாதில விட்டுட்டு போய்டோம்ல.
     இவளுக கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறோம்னு தெரியலையே’ என்று உள்ளுக்குள் உதறினாலும் வெளியே தன்னை தைரியமாக காட்டிக் கொண்டு
     “சொல்லு மீரா. எதுக்கு கூப்பிட்ட” என்றாள் ஏதும் அறியாதது போல். ஆருவின் முகத்தை கண்ட மீராவிற்கு தான் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறியது.
     ‘இவளை’ என பல்லை கடித்த மீரா தன் மூச்சை இழுத்து விட்டுவிட்டு “இங்க பாரு ஆரு‌‌ எங்க பொறுமைய நீ ரொம்ப சோதிக்கிற. நாங்க ஏன் உன்னை கூப்டோம்னு உனக்கு தெரியாது” என்றாள் பல்லை கடித்து கொண்டு.
     ‘இன்னைக்கு சூடு ரொம்ப இருக்கும் போலவே. நம்ம என்ன பண்றோம்னு இவங்க கிட்ட சொன்னா அவ்ளோ தான்.
     வீட்ல நான் பண்றத அப்படியே போட்டு குடுத்துருங்க குட்டி பிசாசுங்க. இப்ப என்ன பண்றது. சரி ஏதாவது சொல்லி சமாளிப்போம்’ என யோசித்த ஆரு‌
     “புரியல மீரா. என்னை என்ன கேள்வி கேக்குறனு ஒன்னும் புரியல டி” என்றாள் இன்னும் தன் நடிப்பை தொடர்ந்தபடி‌. “சரி நேராவே கேக்கறேன்.
     நாம பீச் போனோமே அங்க இருந்து பாதியில நீ அவ்வளவு அவசரமா எங்க போன. யாரை பாக்க போன்” என்றாள் மீரா. அதே கேள்வியை தங்கள் கண்களில்  தாங்கியபடி மற்ற இரு தோழிகளும்.
     மூவரையும் பார்த்த ஆரு‌ “நான் எங்க போறேன்னு சொல்லிட்டு தானே போனேன். மறுபடியும் கேக்கறீங்க” என்றாள் தன் தோழிகளிடம்.
      பின் மீண்டும் அவளே தொடர்ந்தாள். “என் புது ஃபிரண்ட். அவரை நான் லைப்ரரியில தான் மீட் செஞ்சேன். அவரும் நிறைய புக்ஸ் படிப்பார்.
      அப்படி தான் எனக்கு இன்டர்டுயூஸ் ஆனார்‌. அன்ட் நான் கொஞ்சம் புக்ஸ் கொண்டு வந்தேனே அது அவர் கொடுத்தது தான். அவரை தான் பீச்ல பார்த்தேன்.
     சோ அவர் போறதுக்குள்ள பேசலாமே அப்படினு வேகமா போய்டேன். அதுக்கு போய் இப்படி நிக்க வச்சு கேள்வி கேக்குறீங்க.
     என்ன கைஸ் இது. நான் இதுவரைக்கும் யாரையும் இப்படி பார்த்தது இல்லையா என்ன. நீங்க பண்றது தான் புதுசா இருக்கு.
      என்னை சந்தேகப்படுற மாதிரி இருக்கு. இத உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை. நீயும் இப்படி செய்றது இட்ஸ் ரியலி அப்செட்டிங் மீரா” என்றுவிட்டு அறையினுள் சென்று கதவை சாற்றி விட்டாள் ஆருத்ரா.
     அவள் சொன்னதை கேட்ட பின் “ஹேய் மீரா நம்ம தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டோமா. அவ சொல்ற மாதிரி அவ எப்பவாவது இப்படி யாரையாவது ஃபிரண்ட்னு சொல்லி பாக்க போவா தானே.
     நாம தான் அத ஓவரா சீன் ஆக்கிடோமா” என்றாள் அவள் தோழி அணு. அவள் மற்றோரு தோழி வினிதாவும் “எனக்கும் அதே தான் தோனுது மீரா.
     ஆரு கரெக்டா தான் இருக்கா போல. நாம தான் ஓவரா இமஜின் பண்ணிக்கிட்டோம் பா. விடு மீரா அவ நார்மல் தான்” என முடித்து அவர்களும் சென்றனர்.
     ஆரு என்னதான் சொல்லி சென்றாலும் மீராவின் மனது சமன் ஆகவில்லை. ஏனெனில் ஆருவை பற்றி மற்றவர்களை விட நன்கு அறிந்த மீரா இதை நம்ப மறுத்தாள்.
     இன்னும் சொல்ல போனால் முன்பை விட இப்போது தான் அவளின் சந்தேகம் அதிகரித்தது. அவள் அறிந்த ஆரு இப்படி இல்லை.
     தான் சண்டையிட்டால் தன்னை சமாதானம் செய்யாமல் செல்ல மாட்டாள். இப்போது அவள் சென்றதை காணும் போது அவள் ஏதோ தன்னை சமாளித்து தப்பி சென்றது போலே தெரிந்தது.
      இவள் அப்படி என்னதான் செய்கிறாள் என கண்டுபிடிக்க வேண்டும். எனவே அவள் வெளியே ஏதும் சென்றால் பின்னால் தொடர்ந்து சென்றாவது கவனிக்க வேண்டும் என முடிவு செய்தாள்.
      ஆருவின்‌ செய்கையை யோசித்து கொண்டு அமர்ந்திருந்த மீராவை மற்ற தோழிகள் வந்து தான் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தனர். பின் மீராவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
     உள்ளே வந்த பிறகு தான் ஆருவிற்கு‌ நிம்மதியாக இருந்தது. எங்கே தன் தோழிகளிடம் தெரியாமல் ஏதும் உளரி விடுவோமோ என உள்ளுக்குள் உதறல் இருந்தது.
     அதனாலே அவர்களை திட்டி விட்டு வந்து சேர்ந்தாள். ஆனாலும் உள்ளுக்குள் சிறு குற்ற உணர்ச்சி எழுந்தது தோழிகளிடம் மறைப்பதால்.
     ஒரு நல்லது நடக்க சின்ன சின்ன பொய் சொன்னால் தவறு இல்லை என தன் மனதை தேற்றிக் கொண்டாள் ஆரு‌. பின்பே அவள் மனம் சமன் அடைந்தது.
     தன் மனதை சமாளித்து ஒருவாறு எழுந்து சென்று குளித்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தாள். கௌதமின் வீட்டிலே உண்டு முடித்து வந்து விடவும் உண்ண கூட வெளியே செல்லவில்லை.
      சரி வெளியில் உண்டு வந்திருப்பதாள் என்று உணர்ந்த தோழிகளும் அவளை தொல்லை செய்யாமல் விட்டனர்.
     ஆருவிற்கு தூக்கம் வராததால் வழமை போல் புத்தகம் படிக்கலாம் என்று முடிவு செய்தாள். சத்யாவின் புத்தகத்தை படிக்க எடுத்து அதை அப்படியே விட்டு சென்றதால் அது படுக்கையில் கிடந்தது.
     ‘ம்ம் என்ன என்ன புக்லாம் இருக்குன்னு முதல்ல பார்ப்போம். அப்புறம் எதை படிக்கிறதுன்னு டிசைட் பண்ணலாம்’ என்று எண்ணிய ஆரு ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து பார்த்தாள்.
     சத்யாவின் ரசனை என்னவென்று அந்த புத்தகங்கள் கூறியது. அப்போது அந்த புத்தகங்களின்‌ நடுவே கிடைத்த ஒரு பொருள் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
     ‘இதை கௌதம் கிட்ட சொன்னா கண்டிப்பா யூஸ் ஆகும்’ என நினைத்தவள் நேரத்தை கூட காணாது அழைப்பை விடுத்தாள்.
      அங்கே சத்யாவின் மடிக்கணினியை திறக்க என்ன செய்யலாம் என்ற யோசனை செய்து தலை மீது கை வைத்து அமர்ந்திருந்தான் கௌதம்.
     அப்போது அவன் அலைப்பேசி அழைக்கவும் மணியை பார்த்தான். அது இரவு 11:30 என்றது. எனவே ‘இந்த நேரத்தில யாரு’ என்ற கேள்வியுடன் தன் போனை பார்த்தவன் அதில் ஆருவின் எண் வரவும் பதட்டமானான்.
      “ஹலோ ருத்ரா என்னாச்சு இந்த நேரம் கால் செஞ்சுருக்க. எதாவது எமர்ஜென்சியா‌ மா. வீட்டுக்கு பத்திரமா போய்ட தானே” என்றான் எடுத்தவுடன். அப்போது தான் நேரம் பார்த்தாள் ஆரு.
     ‘ஐயோ இவ்ளோ நேரம் ஆச்சா’ என்று தன்னையே நொந்தவள் “எமர்ஜென்சி எதுவும் இல்லை கௌதம். ஒரு முக்கியமான விஷயம் பேசலானு கால் செஞ்சேன்.
     நான் வீட்க்கு வந்துட்டேன். சாரி டைம் பார்க்கல. தூங்கிட்டு இருந்தீர்களா. டிஸ்டர்ப் பண்ணிட்டனா” என்றாள் தயக்கமாக.
      “ஓஓ ஓகே ருத்ரா. நோ இஸ்யூஸ். நான் முழிச்சு தான் இருந்தேன். சொல்லுங்க என்ன விஷயம்” என்றான் சோர்வாக.
அதை அவன் குரலில் உணர்ந்த ஆரு
     “நீங்க ஏன் டல்லா பேசுறீங்க கௌதம். உங்க வாய்ஸ்ல அப்படியே தெரியுது என்ன ஆச்சு” என்றாள் தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு.
     ‘எப்படி என் குரலை வைத்தே கண்டு பிடிச்சா’ என்று வியந்த கௌதம் தான் மடிக்கணினியை திறக்க முயன்றதை சொல்லி முடித்தான். பின் “இப்ப என்ன செய்றதுனு எதுவும் தோனலை ருத்ரா.
     யாரையும் நம்பவும் முடியல, யாரையும் இந்த பிராப்லம்ல இழுத்து விடவும் மனசு வரலை. அதான் அதை யோசிச்சிட்டு இருந்தேன் ” என்றான் அயர்வாக தன் நிலையை விளக்கி.
     “கௌதம் அதை நான் ஓபன் செஞ்சு தறேன்” என்ற ஆருவின் வார்த்தைகள் அவன் காதில் இருந்து மனதை அடைய சில விநாடிகள் எடுத்தது.
     அடைந்த உடன் அவன் காதில் விழுந்தது சரிதானா என்று உறுதிபடுத்திய கௌதம் மனம் இறகை போல் மென்மையானது. அதை அளித்த ஆருவின் மேல் பாசமும் அதிகமாகியது.
-தொடரும்

Advertisement