Advertisement

தூறல் -7

வண்ணமயிலாக நீ வந்தாய் பெண்னே,

நான் நிலை இழந்த தோகை ஆனேன்;

வசந்தம் வீச நீ வந்தாய் முன்னே,

நான் வானில் சிறகாய் விரிந்தேன்‌ பின்னே!

     ஆருத்ரா சென்ற பின்னர் அங்கேயே அமர்ந்து விட்டான் கௌதம். அடுத்து என்ன செய்வது என அவன் மூளை நிதானமாக கணக்கைப் போட்டுக் கொண்டு இருந்தது.

     கௌதமின் பெரிய பலம் அவனின் நிதானம் என்று சொல்லலாம். ஆனால் சத்யாவோ வேகத்தை தத்தெடுத்தான். அதுவே அவனை இந்த நிலைக்கு தள்ளியது.

     இரண்டு மணி நேரம் யோசனையின் பிறகே அலுவலகம் வந்து சேர்ந்தான் கௌதம். பக்கத்து இருக்கையை பார்த்த கௌதமின் விழிகள் கலங்கி விட்டது.

     அதை காண காண அவனின் மனதில் உறுதி அதிகமாக ஏறியது.  தன் நண்பனின் இறப்பின் ரகசியத்தை கண்டு பிடித்து, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அவனின் மனது சித்தம் கொண்டது.

     இப்போது தன் இருக்கையின் புறம் திரும்பி அமர்ந்து தன் பணியை காண  முயன்றான். ஆம் முயற்சி மட்டுமே செய்தான்.

     ஆனால் அவனின் மனதின் உள்ளே பல்வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டு இருந்தது. அதை முழுவதும் ஆக்கிரமித்தது சத்யா அன்றி வேறு இலர்.

     மாலை அலுவலகம் முடிந்து ஒரு வித தெளிவுடன் வந்த மகனை கண்ட அன்னை ரேவதியின் மனதிற்குள் சற்று நிம்மதி.

     ஆனால் அது எதனால் வந்த தெளிவு என்று தெரிந்திருந்தால், தன் மகன் தன்னோடு சேர்த்து ஒரு பெண்ணுடன் சென்று விழப் போகும் ஆபத்தை தடுக்க முயன்றிருப்பாரோ?

     ஆனால் கௌதமின் தற்போதைய நிலையில் யாரின் சொல்லும் அவனின் காதை சென்று அடைய வாய்ப்பில்லை என்பது வேறு விஷயம்.

      “கௌதம் கண்ணா சாப்பிடலாமா பா” என்றார் ரேவதி பரிவோடு. ஏனெனில் மூன்று நாட்களாக அவனை சாப்பிட வைக்க திணறி விட்டார் ரேவதி. எனவே அவன் மனநிலை அறிய வேண்டியே கேட்டார்.

      தன் அன்னை சொன்னவுடன் அமைதியாக வந்து அமர்ந்த கௌதமை கண்டு, தன் மகன் ஓரளவு தெளிந்து விட்டதாக எண்ணினார் ரேவதி.

      தான் உண்டு பின் தன்னுடைய அன்னை உண்டபின் அவர் படுக்கையில் படுத்து உறங்கிய பின் தன் திட்டத்தின் முதல் காயை நகர்த்த முடிவு செய்தான்.

     ரேவதி மாத்திரை எடுத்து உறங்கி விட்டார் என்றால் விடிந்த பின்னே தான் எழுவார். எனவே அவர் உறங்கிய உடன் தன் வேலையில் இறங்க முடிவு செய்தான்.

     நள்ளிரவு நேரம் அந்த கட்டிடம் முழுக்க ஒரு சிறுவனின் வலிமிகுந்த அழுகுரல் வெகு அதிகமாக ஒலித்தது. அதை சிறிதும் பொருட்படுத்தாது அந்த சிறுவனை போட்டு அடித்துக் கொண்டு இருந்தான் ஒருவன்.

     “எவ்ளோ தைரியம் இருந்தா அந்த காரு காரன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி உன்னை காப்பாத்த சொல்லிருப்ப. இனிமே செய்வியா செய்வியா” என அந்த சிறுவனை இன்னும் அடித்தான் அவன்.

     “டேய் குமாரு விடுடா‌. நீ அடிக்கிறதுல அவன் செத்துரப் கித்தரப் போறான். அப்புறம் பாஸ் உன்னையே கொன்னு பொதச்சிட்டு போய்ருவாறு. பாத்துக்க” என்றான் உடன் இருந்த மணி.

     “அதுக்குன்னு இப்பிடியே விட்டா இவன் மறுபடியும் வேற யார்கிட்டயாவது சொல்லிடானா என்ன பண்ணுறது. அப்பவும் பாஸ் நம்மல தான் கொன்னு போடுவாறு. ஞாபகம் இருக்குல்ல” என்றான் அந்த குமார்.

     “நீ சொல்றதும் சரி தான்டா. இந்த குட்டி சாத்தான அடிச்சது போதும். போய் அடச்சுப் போடு. இவ்ளோ அடி வாங்கி இருக்கான். இதுக்கு மேல எங்கையும் தப்பிக்க மாட்டானு நினைக்கிறேன்” என்று விட்டு அந்த சிறுவனிடம் திரும்பி

     “இங்க பாரு தம்பி இப்ப மாதிரி மறுபடியும் தப்பிக்க பாத்த இந்த மாதிரி அடிச்சிட்டு விடமாட்டோம். தலையை திருகிப் போட்டு போய்க்கிட்டே இருப்போம். நியாபகம் வச்சுக்க”

     என சிறு குழந்தை என்றும் பாராமல் இழுத்து சென்று பக்கத்து அறையில் இருந்த மற்றவர்களோடு தள்ளி விட்டு தங்கள் வேலையை பார்க்க சென்றனர்.

     அவன் உள்ளே வந்தவுடன் “சித்து நீ தப்பிச்சு வெளிய போனியே யாரையாவது பாத்தியா? ஹெல்ப் பண்றேனு சொன்னாங்களா” என்றான் உடன் இருந்த நண்பன்.

     உடன் இருந்த சிறுவர்கள் எல்லோரும் சுற்றி நின்று அவனையே ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். அனைவரையும் பார்த்தவன் தன் நண்பனிடம்

     “இல்லை டா. ஒரு கார் வந்துச்சு ஹெல்ப் கேக்கலாம்னு போனேன். நான் எல்லாம் சொல்லி நம்மல காப்பாத்த சொன்னேன்.

      அப்ப அந்த ஆளு வந்து நான் ஒரு லூசு. வீட்ல இருந்து தப்பிச்சு வந்துட்டேனு சொல்லி என்னை தூக்கிட்டு வந்துட்டான் டா.

     இங்க வந்து என்னை போட்டு அடி வெளுத்துட்டாங்க. உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்குது டா” என்றான் வலி தாங்க முடியாத அழும் குரலில்.

     “நீ அன்னைக்கு யாருக்கும் தெரியாம போய் ஒரு அண்ணன் கிட்ட ஹெல்ப் கேட்டியே. அந்த அண்ணன இன்னைக்கு எங்கையாவது பாத்தியா டா” என்றான் ஆதங்கமாய்.

     “இல்லை டா நானும் போறப்ப நல்லா சுத்தி பாத்தேன். ஆனா அவர காணோம். ஆனா அவர் நமக்கு கண்டிப்பா எதாவது உதவி செய்வேனு சொன்னாரு டா” என்றான் முகத்தில் ஓடிய கவலையுடன்.

     பின் அவனே “கவலைப் படாதீங்க. நான் எப்படியாவது மறுபடியும் தப்பிச்சு வேற யாரையாவது ஹெல்ப் பண்ண கூப்பிடுறேன்” என்ற‌ சித்து தன் காயம் சரியானதும் மீண்டும் வெளியேற முடிவு செய்தான்.

     உலகம் அறியா சிறு பாலகர்கள் வெளி உலகை இன்னும் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்றும் முழுவதும் தெரியவும் இல்லை.

     தங்களுக்கு என்றாவது விடியல் வந்து விடாதா என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக, ஏக்கம் சுமந்த விழிகளுடன் உள்ளே இருந்த அனைவரும் தங்களுக்குள் ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.

     கண்டிப்பாக தங்களுக்கு யாரேனும் உதவ அனுப்பி வை கடவுளே என என்றும் போல் இன்றும் கடவுளிடம் வேண்டுதல் வைத்து விட்டு படுத்தனர்.

     தன் அன்னையின் அறையை பார்த்து அவர் உறங்கியதை உறுதிப் படுத்தி அந்த நள்ளிரவு நேரம் வீட்டை விட்டு  கிளம்பினான் கௌதம் சத்யாவின் இல்லம் நோக்கி.

     அது ஒரு தனி வீடு. மாடியும் மற்றும் கீழேயும் என இரண்டு மாடி வீடுகளை கொண்டது. அதில் சத்யாவின் வீடு மாடியில். கீழே யாரும் குடியிருக்கவில்லை.

     அந்த வீட்டிற்கு காவலுக்கு இரண்டு காண்ஸ்டபுகள் கேட்டின் உள்ளேயே பேசிக் கொண்டு அமர்ந்து இருந்தனர். அந்த நேரம் வந்த கௌதம் தன் வண்டியை யார்‌ கண்ணிலும் படாதவாறு நிறுத்தினான்.

     சிறிது நேரம் அவர்களை பார்த்த கௌதம், பக்கத்து வீடுகளில் சிசிடிவி கேமரா எதுவும் இருக்கிறதா என முதலில் பார்த்துக் கொண்டான்.

     முன் எச்சரிக்கையாக அவன் முகத்தில் ஸ்கார்ப்பை காட்டியே வந்திருந்தான். வீட்டை சுற்றி வந்த கௌதம் வீட்டின் பின்புறம் உள்ள சுவற்றில் ஏறி தான்டி குதித்து உள்ளே வந்தான் யாரும் அறியாமல்.

      மாடியிலே வீடு என்பதால் பின்புறம் உள்ள பைப்புகளை பிடித்து, தாவி தாவி மேலே வந்து ஒரு வழியாக பால்கனியில் குதித்தான்.

     பால்கனியில் உள்ள கதவில் தான் கொண்டு வந்த ஸ்பேர் சாவிகளை வைத்து கதவை திறந்து உள்ளே சென்றான். தன் கொண்டு வந்திருந்த லைட்டை ஆன் செய்தான்.

     அந்த வீடு தன் நண்பனுடன் தான் கழித்த இனிய நினைவுகளை சுமந்து கொண்டு அலங்கோலமாக காட்சி அளித்தது. ஆம் போலீஸ் திருட்டு நடந்ததாக கூறப்பட்டது போல் வீடே கலைந்து கிடந்தது.

     தன் நண்பன் இருந்தால் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்து இருப்பான். ஒவ்வொன்றிலும் அவ்வளவு நேர்த்தி இருக்கும். தான் தரையில் குப்பை போட்டாலும் எடுத்து குப்பை கூடையில் போட்டு விடுவான்.

     இப்போது வீடு இருக்கும் நிலையை காண்கையில் மனது வலித்தது. சிறிது நேரத்திற்கு பிறகு தன் எண்ணங்களுக்கு தடை விதித்து ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என தேட துவங்கினான் கௌதம்.

     அது ஒரு சிறிய வீடு. ஒரு வரவேற்பறை கடைசியில் சிறு பால்கனி, சமயலறை மற்றும் படுக்கையறை. முதலில் வரவேற்பறையில் சோதனை செய்தான்.

     கையில் கிளவுஸை மாட்டிக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து நிதானமாக பார்த்தான். தினசரி நாளிதழ்கள், அவன் படித்திருந்த புத்தகங்கள் என அனைத்தும் சிதறி கிடந்தது.

     சத்யா புத்தகப் புழு என்றே கூறலாம் அவ்வளவு புத்தகங்கள் படிப்பவன். ஆருத்ராவை முதல் நாள் கண்ட போது அவளின் ரசனைகளின் மூலம் தன் நண்பனையே நினைவு கூர்ந்தாள்.

     அதுவே அவளை அவன் நெஞ்சில் நன்கு பதிய வைத்தது. தன் நண்பனை பற்றி எண்ணிக் கொண்டே அனைத்தையும் பார்த்து முடித்தான்.

     அங்கு சந்தேகிக்கும் படி வேறு வித்தியாசமாக எதுவும் இல்லை. கீழே அமர்ந்த போலீஸிர்க்கு மேலே ஆள் நடமாட்டம் தெரிந்தது. உடனே மேலே சென்று பார்க்க எழுந்தனர்.

     மேலேயோ வரவேற்பறை சமையலறை என தொடர்ந்து படுக்கையறையை அடைந்தான் கௌதம். இங்கு வந்ததில் இருந்தே அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.

     இதில் உள்ளே இருந்த இன்னொரு நபரை அவன் கவணிக்க தவறினான். அந்த நபர் வந்ததில் இருந்து இவனின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக் கொண்டு இருந்தார்.

     அவனை கண்டது முதல் அவனின் மனநிலையை ஊகித்து இருந்தார் வந்தவர். அப்போது இவன் படுக்கையறை உள்ளே நுழைந்த சமயம் போலீஸார் வீட்டை திறந்தனர். இதை கௌதம் கவனிக்கவில்லை.

     ஆனால் கவனித்த மற்ற நபரோ வேகமாக கௌதமின் அருகே சென்று அவனின் கையில் ஏந்திய டார்ச்சை பிடிங்கி அனைத்து விட்டு, அவனை இழுத்து சென்று கட்டிலின் அடியில் தள்ளி தானும் ஒளிந்து கொண்டார்.

     உள்ளே வந்த போலீசாரோ வீடு முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு யாரும் இல்லையென உறுதி செய்து பின்னரே சென்றனர். அவர்கள் சென்றதும் தான் பிடித்திருந்த கௌதமின் கையை எடுத்தார் புதியவர்.

    அவர்கள் சென்ற பின்னர் தான் இருவரும் வெளியே வந்தனர். சிறிது  நேரத்தில் நடந்த நிகழ்வுகளை இவ்வளவு நேரம் உணராத கௌதம் இப்போது தான் உணர்ந்தான்.

     கொஞ்சம் தாமதம் ஆகி இருந்தாலும் போலீஸ் அவனை கண்டிருப்பார்கள். தன்னுடைய அஜாக்கிரதையை எண்ணி நொந்த கௌதம்,

     தக்க சமயத்தில் தனக்கு உதவி புரிந்த நபரிடம் நன்றி கூற எண்ணி நிமிர்ந்து பார்த்தான். அப்போது தன் முன்னே இருந்த நபரை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் கௌதம்.

-தொடரும்

Advertisement