Advertisement

தூறல் -6

வெற்றிடமாய் இருந்த என்னை,

விரும்பியே நிரப்பினாய் நீ;

விரல்கள் உன் கரம் சேர துடித்திடுதே,

விடிவு என்று கிடைத்திடுமோ?

      “என்னம்மா இப்படி பண்ற. உனக்கு நான் சொன்னது புரியுது தானே. மூனு நாளா நீயும் வந்து வந்து போற. ஆனால் கௌதம் சார் வரலையே.

      இங்க இருக்கவங்களுக்கு அவங்க வேலை பார்க்கவே நேரம் இல்லை. இதுல நீ வேற போமா. உனக்கு தான் கௌதம் சாரை தெரியும்னு சொல்ற.

     அப்புறம் என்ன. போய் போன் பண்ணி கேட்டுட்டு வாமா. சும்மா இங்கையே நின்னா உனக்கு தான் கால் வலிக்கும். ஆனால் ஒருத்தனும் ஏன்னு கூட கேக்க மாட்டான்” என தின ஒளி பத்திரிகையின் கேட் காவலாளி கூறிக் கொண்டு இருந்தார்.

     ஏனெனில் ஆரு மூன்று நாட்களாக கௌதமை காண பத்திரிகை அலுவலகம் வந்து செல்கிறாள். அவளின் நேரம் கௌதம் மூன்று நாட்களும் வரவில்லை.

     எப்படியாவது அவனை கண்டு தனக்கு தெரிந்தவற்றை தெரியப்படுத்த எண்ணி அவளும் முயற்சி செய்கிறாள். விடை என்னவோ பூஜ்யம் தான்.

      “சார் பிளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு போறேன். உங்கள நான் எதுவும் தொந்தரவு செய்யாம, ஒரு ஓரமாக தானே நிக்கிறேன்.

      நீங்க கௌதம் சார் வந்தா மட்டும் சொல்லுங்க” என்று விட்டு மரத்தடியில் போய் அமர்ந்து கொண்டாள்.

     மூன்று நாட்களாக அலைந்தது ஒரு சலிப்பை கொடுத்தது தான். அதுவும் அவள் தன் தோழிகளை சமாளித்து இங்கே வருவதற்கு பட்டபாடு அவளுக்கு தானே தெரியும்.

     அப்படி கஷ்டப்பட்டு வந்தால் இங்கே அந்த கௌதம் வரவில்லை என்ற செய்தி அவளை களைப்பு அடைய செய்தது. அவனை மனதில் நன்கு திட்டிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

     ஆனாலும் கடைசியாக அவள் கண்ட சத்யாவின் முகமே அவளை பொருத்துப் போக சொன்னது. அதுவே அவள் இப்படி திரும்பி திரும்பி வர செய்தது.

     அவள் பொருமை பறக்கும் நேரம் வந்து சேர்ந்தான் கௌதம். “கௌதம் சார் வந்துட்டார் மா. போ போய் சீக்கிரம் பேசு. உள்ள போய்ர போறாரு” என்ற காவலாளியின் குரலில் கௌதமை அடையாளம் கண்டு கொண்டாள் ஆருத்ரா.

     அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் அவனின் அந்த சோர்ந்த தோற்றம் கண்டு வெகுவாக குறைத்து விட்டது. அவன் உள்ளே போவதற்குள் பிடித்து விட வேகமாய் ஓடினாள் ஆரு.

     “ஹலோ மிஸ்டர் கௌதம் கௌதம்” என அழைத்து வேகமாக நெருங்கினாள் ஆரு‌. தன்னை யாரோ அழைப்பதை கேட்டு அசூகையாய் திரும்பினான் கௌதம்.

     அங்கே ஆருத்ராவை சிறிதும் எதிர்பாரத கௌதம், அதுவும் அவள் தன்னை அழைத்ததை கண்டு “ருத்ரா” என்றான் ஆச்சரியம் நிரம்பிய குரலில்.

     இவ்வளவு நேரம் இவர்களையே பார்த்திருந்த கேட் காவலர் கௌதம் ஆருவை தெரிந்தது போல் அவளின் பேரை சொல்லவும் தான் அவர் தன் தலையை திருப்பினார்.

     தன் பேரை சரியாக சொன்ன கௌதமை அதிர்ந்து பார்த்த ஆரு தனியாக சென்று பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள். ஏனெனில் சுத்தி இருந்த அனைவரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

     “கௌதம்?” என மெதுவாக இழுத்தாள் சந்தேகமாக. அதற்குள் சுதாரித்து கொண்ட கௌதம் “ம்ம் சொல்லுங்க நான்தான். என்ன வேனும்” என்றான்.

     இது வரை வந்த ஆருவிற்கு கௌதமிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்கவென தெரியவில்லை. அதற்கு சுற்றி இருந்தவர்களும் ஒரு காரணம்.

     அனைவரும் தங்களை தான் பார்க்கிறார்களா இல்லை தனக்கு தான் அப்படி தோன்றுகிறதா என புரியவில்லை ஆருவிற்கு. எனவே “வெளியே போய் பேசலாமா.

     இங்க பக்கத்தில ஏதாவது காஃபி ஷாப் இருந்தா பிளீஸ்” என்றாள் தயக்கமாக. திடீரென வந்து வெளியே கூப்பிட்டால் தவறாக எண்ணிவிடுவானோ என்று வேறு பயமாக இருந்தது.

     அதுவும் இந்த கௌதம் எப்படிப்பட்டவன் என இதுவரை தெரியவும் இல்லை. உள்ளே பயத்தை கொண்டே தான் பேசினாள்.

     அவளின் சங்கடம் புரிந்தார் போல் கௌதம் அவளை பக்கத்தில் உள்ள காஃபி ஷாப்பிற்கு அழைத்து சென்றான்.

     அவனுக்கு ஆச்சர்யம் ஒருபுறம் என்றால் எதற்கு தன்னை காண இவ்வளவு தூரம் வந்துள்ளாள் என்ற கேள்வியே மிகுந்து இருந்தது.

     இருவரும் அமைதியாக இருந்தனர். “சொல்லுங்க என்னை என்ன‌ விஷயமா பார்க்க வந்திருக்கீங்க” என்றான் கௌதம் அமைதியை கிழிக்கும் விதமாய்.

     “நான் ஆருத்ரா” என்று விட்டு “வந்து அது..” என இழுத்து “இதப் பாருங்க” என தன்னிடம் இருந்த சத்யாவின் ஐடி கார்டை நீட்டினாள் ஆரு‌. ஆரு கொடுத்ததை என்னவென்று  வாங்கி பார்த்தான்.

     அது தன் நண்பனின் ஐடி கார்டு என்பதை அறிந்த கௌதமின் முகம் பல உணர்வுகளை காட்டியது. ஆருவை பார்த்ததில் திசை திருப்பிய அவனின் நினைவுகள்,

      தன் நண்பனின் ஐடி கார்டை பார்த்ததும் வேதனை அடைந்தது. சிறிது நேரம் அவனின் அமைதியை பார்த்திருந்தவள் மெல்ல கௌதமை அழைத்தாள்.

     “கௌதம் சார்” என்றவுடன் ஆருவை ஏறிட்ட கௌதமின் மனதில் அப்போது தான் பல சந்தேகங்கள் முளைத்தது. அதன் பயனாக ஆருவை நோக்கி கேள்வி கணைகளை வீசினான்.

     “இது எப்படி உங்ககிட்ட வந்துச்சு ரு” என ஆரம்பித்து “ஆருத்ரா” என முடித்தான். அவன் தடுமாறியதை கவனியாத ஆரு முதலில் சுற்றி உள்ளவர்களை பார்த்து மெல்ல சொல்ல ஆரம்பித்தாள்.

     “உங்க ஃபிரண்ட் தான் இத என்கிட்ட தந்து உங்கள வந்து மீட் பண்ண சொன்னார். அவர் ஏதோ பிராப்ளம்ல இருந்த மாதிரி தான் இருந்தாரு. அவரை கொஞ்ச பேர் துரத்திட்டு வேற வந்தாங்க” என்று அவள் அன்று நடந்தவற்றை கூற தொடங்கினான்.

     அனைத்தையும் கேட்ட கௌதமிற்கு இரண்டு நாட்களாக அவனுள் எழுந்த சந்தேகம் அப்போது ஊர்ஜிதம் ஆனது. சத்யா இறந்த சோகத்தில் முதல் நாள் அவன் சரியாக எதையும் யோசிக்கவில்லை.

     ஆனால் அடுத்த நாளே அவன் சிந்திக்க தொடங்கி விட்டான். எதற்கு தன் நண்பன் வீட்டை விட்டு அவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்று.

     அதுவும் இல்லாமல் அவன் சிறிது நாட்களாகவே சரியில்லாது தானே இருந்தான். தான் அப்போதே கேட்டிருக்க வேண்டுமோ என பலவாறு யோசனை செய்து கொண்டு தான் இருந்தான்.

     இப்போது ஆருத்ரா கூறிய அனைத்தையும் கேட்ட பின் தன் நண்பனின் இறப்பு ஒரு விபத்து இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டான்.

     அவன் புருவம் நெறித்து யோசிப்பதை பார்த்த ஆரு “கௌதம் அன்னைக்கு உங்க ஃபிரண்ட் திரும்ப திரும்ப சொன்னது என்னன்னா. அது உங்கள பார்க்க சொன்னது தான்.

     நீங்க எல்லாத்தையும் நிச்சயம் சால்வ் பண்ணுவீங்க அப்டின்னு நம்பிக்கையா சொன்னாரு‌.

     கடைசியாக அவர் முகம் அந்த பதட்டத்திலையும் நான் உங்களை பார்க்கறேன் அப்படினு சொன்னதுல அப்படியொரு நிம்மதி அடைஞ்சுது” என்றாள்.

     “ஆனால் டூ டேஸ்க்கு அப்புறம் அவர் டெத் நியூஸ் எனக்கு ரொம்ப ஷாக். அதுக்கு அடுத்த நாள்ள இருந்து மூனு நாளா உங்கள பார்க்க தினமும் காலைல வரேன். பட் நீங்க‌ இன்னைக்கு தான் வந்தீங்க” என்று முடித்தாள்.

     அனைத்தையும் கேட்ட கௌதமிற்கு தான் எப்படி உணர்கிறோம் என்று தெரியவில்லை. தன் நண்பன் தன் மீது இந்த அளவு நம்பிக்கை வைத்ததற்கு தான் எதுவும் செய்யலாம் என்று தோணியது.

     “ரெம்ப தேங்க்ஸ் ஆருத்ரா. நீங்க செஞ்சது யாரும் செய்ய யோசிப்பாங்க. இங்க வந்து சொல்லனும்னு உங்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

     அந்த ஐடி ய அங்கையே தூக்கி எறிந்திட்டு போய் இருக்கலாம். ஆனா நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு என்கிட்ட வந்து இத சொல்லி இருக்கீங்க” என்றான் நெகிழ்ச்சியாக.

     “அதை விடுங்க. முதல்ல என்ன செய்ய போறீங்க அதை சொல்லுங்க. ஏனா உங்க ஃபிரண்ட் சத்யா யாருக்கோ தண்டனை வாங்கித் தரனும் அப்டின்னு சொன்னாரு‌” என்றாள் கேள்வியாக.

     “அதை இனிமேல் தான் யோசிக்கனும் ருத்ரா. ஆ உங்களை அப்படி கூப்பிடலாம்ல” என்றான் கேள்வியாக.

     “அது பிராப்ளம் இல்லை கௌதம். நீங்க அப்படியே கூப்டுங்க” என்றுவிட்டு “முதல்ல உங்க ஃபிரண்ட் வீட்டுக்கு போய் பாருங்க. ஏனா அங்க திருட்டு நடந்ததா சொன்னாங்க. எதாவது க்ளூ கிடைக்கலாம்” என்ற ஆருவை பார்த்து கௌதம்,

     “நீங்க சொல்றதுலாம் சரிதான். இனிமே நான் பாத்துக்கிறேன். நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி” என்றான். “இல்லை நானும் உங்களுக்கு ஹெல்ப் செய்யலாம்னு பாத்தேன் அதான்” என்று இழுத்தாள் ஆரு.

     அவளை பார்த்த கௌதம் “இதை நான் பார்த்துப்பேன். நீங்க உங்க வேலையை பாருங்க. வீனா பிரச்சினைல வந்து விழாதீங்க” என்றான்.

     “உங்ககிட்ட சொல்ல முடியலைனா நானே எப்படியாவது கண்டு பிடிக்க டிரை பண்ணனும்னு இருந்தேன். உங்க ஃபிரண்ட் சொன்னதுக்காக தான் வந்தேன்.

     உங்களுக்கு நானும் கூட வந்து ஹெல்ப் பண்றேன். சத்யாவ கடைசியா வெள்ளிக்கிழமை பார்த்தேன். ஆனால் அவரோட டெத் மண்டே.

     ஒரு வேளை முன்னாடியே உங்கள கான்டாக்ட் செஞ்சிருந்தா அவரை காப்பாற்றி இருக்கலாம்னு எனக்கு கில்டியா இருக்கு. அட்லீஸ்ட் அவர் டெத்கு காரணம் யார் அப்டின்னு கண்டுபிடிக்கயாவது நான் ஹெல்ப் செய்றேனே” என்றாள்.

     இவ்வளவு நேரம் அவள் மேல் தோன்றிய நன்றி உணர்ச்சி இப்போது மதிப்பாக மாறியது. “உங்களோட பீளிங்ஸ் எனக்கு புரியுது.ஆனா இது எவ்ளோ பெரிய பிரச்சினை அப்டின்னு நமக்கு தெரியாது.

     ஒரு உயிரே போயிருச்சு. யாராலயாவது உங்களுக்கு பிரச்சினை வந்தாலும் வரலாம். சோ இங்க வந்து நீங்க சொன்னதே பெரிய ஹெல்ப். அதுவே போதும்.

     நீங்க தேவையில்லாத பிராப்ளம்லாம் இதுல பேஸ் பண்ணனும். அதனால விட்ருங்க நான் பாத்துக்கிறேன்” என்றான் கௌதம். ஆருவும் எல்லாவற்றையும் கேட்ட பின் அமைதியாக கிளம்பி விட்டாள்.

     அவள் சென்ற பின் அவளுக்கு இதுதான் நல்லது என எண்ணினான் கௌதம். அவள் எந்த பிரச்சனையிலும் சிக்கக் கூடாது என எண்ணினான். ஆனால் அது ஏன் என யோசிக்க தவறினான்.

     யோசித்து இருந்தால் அவன் தன் மனதை அறிந்து இருப்பான். அதற்கு முன் அவன் நண்பனே அவனின் சிந்தையை நிறைத்தான்.

     அதன் பின் அன்று இரவு போலீஸ் பாதுகாப்பை மீறி எப்படி சத்யாவின் வீட்டிற்கு செல்வது என திட்டமிட ஆரம்பித்தான். ஆனால் அங்கேயும் வந்து நின்ற ஆருவை கண்ட கௌதமின் நிலை தான் நிலை தவறி சென்றது.

-தொடரும்

Advertisement