Advertisement

தூறல் 5

வழியில் பெண்ணே விழியை வைத்தேன்,
வழிப்போக்கன் நான் உன் விழியில் விழ;
வீழ்ந்ததென்னவோ என் விழிகளே,
வியப்பூட்டும் உன் பேதை மொழியிலே!

      இரு நாட்கள் உறவினர்களின் வீடுகள் கோயில் பங்சன் என கௌதமை சுற்ற வைத்து விட்டார் ரேவதி. ஊர் முழுவதும் சொந்தங்கலாய் போய் விட தெரு தெருவாய் சுற்றினார் ரேவதி.

     ஏனெனில் இனி வேறு விஷேசம் என்றால் மட்டுமே ஊர் பக்கம் வர முடியும். அதனால் கிடைத்த நேரத்தை மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டார்.  இதில் கௌதம் தான் “எம்மா இதுக்கு மேல தாங்காதுடா சாமி” என அலறியே விட்டான்.

     இதில் அவன் நண்பன் சத்யாவை பற்றி நினைக்க நேரம் கிட்டவில்லை என்றே சொல்லலாம். ஒருவழியாக ஞாயிறு இரவு தன் தாயை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டான் கௌதம்.

     திங்கள் அன்று விடியற்காலை நான்கு மணி போல் வீடு வந்து சேர்ந்தான் தன் அன்னையுடன். நிம்மதியாக அப்போது தான் படுத்து உறங்கினான். சிறிது நேரத்தில் போன் அடித்து விட்டது.

      தன் தூக்கம் கலைந்த கடுப்புடன் போனை எடுத்து காதில் வைத்து “ஹலோ” என்றான் கௌதம். அந்த பக்கம் சொல்லப்பட செய்தியில் அவனின் தூக்கம் மொத்தமாய் பறிப்போனது.

      “என்ன சார் சொல்றீங்க. எப்போ ஆச்சு” என்று பதறி எழுந்தான். “உடனே கிளம்பி வரேன் சார். எங்க வரணும்” என கேட்டு விட்டு பதட்டத்துடன் கிளம்பி தன் வண்டியின் சாவியை எடுத்து கொண்டான்.

       போகும் முன் தங்கள் பத்திரிகையின் எடிட்டருக்கு தொடர்பு கொண்டு தனக்கு வந்த செய்தியை பகிர்ந்து உண்மையானதா என கேட்டான்.

     அவர் கூறிய பதிலும் ஒத்து போகவே மனம் முழுவதும் வருத்தத்துடன் கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

     தானும் வருவேன் என கூறிய அன்னையிடம் வந்து அழைத்து செல்வதாக சொல்லி விட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான் கௌதம்.

      “வணக்கம். நேற்று இரவு போலீசாரின் ரோந்து பணியின் போது சடலம் ஒன்றை கண்டு பிடித்து உள்ளனர். இறந்தவர் ஆண் என தெரிகிறது”

     “மேலும் இறந்த நபர் ‘தின ஒளி’ பத்திரிகையின் நிருபர் சத்யா என தெரிய வந்துள்ளது. ஆள் அரவம் அற்ற பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.”

     “அதே நேரம் அவரின் இல்லத்திலும் திருட்டு போய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் சடலம் கிடந்த இடத்தில் அவர் வண்டியும் சிதைந்து கண்டுபிடிக்க பட்டுள்ளது.

     இதனால் இது விபத்து என போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.”

     காலையில் எழுந்த உடன் வழக்கம் போல் தன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்த ஆருவின் காதில் இந்த செய்தி விழுந்த நிமிடம் முதல் ஒரு வித பயம் சூழ்ந்துக் கொண்டது.

     அதற்கு மேல் கேட்க முடியாமல் டீவியை அனைத்து விட்டாள் ஆருத்ரா. அவளுக்கு இனி தான் அலுவலகம் செல்ல முடியும் என்று தோன்றவில்லை.  வீட்டிலேயே இருந்து விட்டாள்.

     ஏன் என்று கேட்ட தோழிகளிடம் உடல் நலம் சரியில்லை என ஏதே வாய்க்கு வந்த காரணத்தை கூறி அனுப்பி விட்டாள்.

     அவளை புரியாத பார்வை பார்த்து சென்ற மீராவையும் அவள் கவனிக்கவில்லை கூடவே சென்ற அணு வினிதாவையும் கண்டுக் கொள்ளவில்லை.

     அந்த நாள் இரவு நடந்ததை மனதிற்குள் மீண்டும் நினைத்துப் பார்த்தால் ஆரு. வெள்ளி இரவு வேலை முடியவே நேரம் ஏழை தான்டி விட்டது. அதனால் அலுவலக காரிலே வந்தவள் பக்கத்தில் தான் அபார்ட்மெண்ட் என்று மெய்ன் ரோட்டிலே இறங்கி கொண்டாள்.

     ஆருவிற்கு இது போல் இரவின் காற்றில் தனியாக நடப்பது என்றால் மிகவும் இஷ்டம். அதுவும் இந்த தெரு மிகவும் பாதுகாப்பான ஒரு இடம் தான். பத்து நிமிடத்தில் அப்பார்ட்மெண்ட்டும் வந்து விடும்.

     இரவு நேரம் அலுவலகம் முடிந்து வந்தால் தோழிகள் நால்வரும் சேர்ந்து நடந்து வருவதும் அவர்கள் வழக்கம். இன்று தோழிகளும் இல்லாததால் இரவின் குளுமையை அனுபவித்தபடி நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் ஆரு.

     அந்த நேரம் யாரோ ஓடி வந்து ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவற்றின் ஓரம் மறைந்ததை தூரத்தில் வரும் போதே கண்டு விட்டாள் ஆருத்ரா. திருடனாக இருக்கும் என எண்ணி முதலில் பயம் கொண்டே நெருங்கினாள்.

     ஆனால் அவன் பத்திரிகைகாரன் என தன்னை அறிமுகப்படுத்தி தன் ஐடி கார்டை காட்டவும் தான் நம்பினாள். அவன் உதவியென கேட்கவும் மிகவும் தயங்கிய படியே தான் உதவுவதாகவும் வாக்கு கொடுத்தாள்.

      இப்போது நினைத்தாலும் அன்று கண்ட அவனின் பதட்டம் சுமந்த முகம் இன்னும் மனதிலே நின்றது. ‘நீயாவது எனக்கு உதவுவாயா’ என கெஞ்சியது சத்யாவின் பார்வை.

          அவள் கொஞ்சமும் எதிர்பாராதது இன்றைய சத்யாவின் இறப்பு செய்தி. அதுவும் விபத்து என்பதை அவளால் ஏற்கவே முடியவில்லை. அவனை அப்போதே பலர் துரத்தி சென்றதை பார்த்து பயந்து வீடு வந்தது அவளுக்கு தெரியும் தானே.

      இப்போது அவளுக்கு முன்பு இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கங்களும் சத்யாவின் இறப்பு செய்தியை கேட்ட பின் துணிக் கொண்டு துடைத்து சென்று விட்டது எனலாம்.

      இரண்டு நாட்களும் எப்படி தோழிகளுக்கு தெரியாது அந்த கௌதமை போய் காண்பது என தயங்கியபடி தான் இருந்தாள். இப்போது நேரே போய் பார்க்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டாள் ஆருத்ரா.

      “என்ன சார் ஆச்சு. என் சத்யா எங்க சார்” என பதட்டத்துடன் அங்கே இருந்த போலீசாரிடம் கேட்டான் சத்யா.

     “நீங்க யாரு. பர்ஸ்ட் அத சொல்லுங்க” என்றார் அந்த காவல் அதிகாரி அதிகாரமாய். “சார் நான் கௌதம் சத்யாவோட ஃபிரண்ட்” என்றான்.

    “ஓ நீங்க தானா அது. இறந்தது உங்க ஃபிரண்ட் தானா அப்படினு நீங்க பர்ஸ்ட் கன்பார்ம் பண்ணுங்க சார். அவர்தானு தெரியும் இருந்தாலும் பார்மாலிட்டினு ஒன்னு இருக்கு அதுக்காக தான்.

     அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் இங்க இல்லை. அதனால நீங்க ஐடென்டிபை பண்ணுங்க. சீக்கிரம் சார். டிவி காரங்க வேற வந்துட்டாங்க” என்றுவிட்டு

     “ஏட்டு அவரை கூட்டிட்டு போய் பாடிய காட்டுங்க சீக்கிரம்” என அவர் வேலையை முடிக்கும் எண்ணத்தில் அவசரப்படுத்தினார் அந்த காவல் அதிகாரி.

     அந்த மார்ச்சுவரியை அடையும் போதே அவனின் நெஞ்சம் எல்லாம் அடித்துக் கொண்டது. அது தன் நண்பனாக இருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டே சென்றான்.

     ஆனால் அந்த கடவுள் அவனின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை போல். அங்கு இருந்த உடல் அவன் நண்பன் சத்யாவுடையது தான்.

     இத்தனை ஆண்டுகள் தன் உடன் சிரித்து சண்டையிட்டு கிண்டல் பேசிய நண்பன் தன்முன் உயிரற்ற உடலாக கிடப்பதை கண்டு நின்ற கண்ணீர் ஆறாக பெருகியது.

     அடையாளம் காட்டிய பிறகு இடிந்து போய் அமர்ந்து விட்டான் கௌதம். அவன் மனதில் ஒன்றும் ஓடவில்லை. மீண்டும் மீண்டும் நண்பனின் நினைவே அவனை வருந்த செய்தது.

     அப்படியே அமர்ந்து இருந்தவனின் சிந்தையை கலைக்கவென அழைத்தான் வார்டு பாய். ஆக்சிடென்ட் ஆனதாலே இறந்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னது.

     அவன் வந்ததிலிருந்து இப்போது வரை அவனின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்த அந்த காவல் அதிகாரி அதை அப்படியே யாரிடமோ பகிர்ந்து கொண்டிருந்தார்.

     கௌதம் இருந்த மன நிலையில் இங்கு நடந்த எதையும் அவன் சிறிதும் கவனிக்கவில்லை. தன் நண்பனின் நினைவிலே மூழ்கி இருந்து விட்டான்.

     கொஞ்சம் கவனித்து இருந்தால் அவன் தெரிந்துக் கொண்டு இருப்பான் இது விபத்து இல்லையென. ஏதோ சதி வலை தன் நண்பனை சூழ்ந்து அழித்தது என கண்டு இருப்பான்.

     பின் எல்லா நடைமுறைகளையும் முடித்த உடன் சத்யாவின் உடல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அவனின் பெற்றோர் உடன் பணிபுரிவோர் என அனைவரும் வந்து விட்டனர்.

     சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து சத்யாவின் உடலுக்கும் நெருப்பு மூட்டப்பட்டது. தன் முன்னே சாம்பலாகும் நண்பனை வேதனையோடு பார்த்தான் கௌதம்.

     தன் மகனின் சடலத்தை கண்டு துடிதுடித்து நெஞ்சில் அடித்து கதறி அழுத அவனின் அன்னை தந்தை, இனிமேல் என்ன இருக்கு என வாழ்க்கையை வெறுத்தது போல் சென்றது கௌதமின் மனதில் வந்து வந்து சென்றது.

     “நீ கூட இருந்தும் இப்படி சாக விட்டுடியே பா” என்று அவன் அன்னை தன்னிடம் கேட்டது என மாற்றி மாற்றி நண்பனின் எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து இருந்தது.

     “கௌதம் கண்ணா வந்து ஒரு வாய் சாப்டுயா” என தன் அறையின் சுவற்றை வெறித்து பார்த்திருந்த கௌதமை அழைத்தார் ரேவதி.

     அமைதியாக இருந்த கௌதமை “எனக்கும் கஷ்டமா தான் கண்ணா இருக்கு. உன்னை மாதிரியே அவனையும் என் புள்ளையா தான்டா பார்த்தேன்”

     “அவனும் அம்மா அம்மானு தான் சுத்திட்டு இருப்பான். அதுக்காக இப்படி சாப்பிடாம கொள்ளாம இருக்கலாமாபா. வாப்பா ராஜா” என கண்ணீரோடு அழைத்தார்.

“முடியலமா நான் இருந்தும் அவனை சாக விட்டுட்டேன் மா. கடைசியா அவன் என்னை தான் தேடி இருப்பான் மா. அவனை விட்டுட்டேன் மா. போய்ட்டான் மொத்தமா போய்ட்டான் மா” என குழந்தையாக அன்னையின் மடியில் படுத்து ஆறுதல் தேடினான்.

      தன் மகனின் வேதனை அறிந்து மடி தாங்கினார் ரேவதி. அவன் தலையை கோதிக் கொண்டே ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தூங்க ஆரம்பித்த மகனின் தலையை கட்டிலில் கிடத்தினார்.

     இப்போது ஆறுதலுடன் நல்ல தூக்கம் அவசியம் என்பதை உணர்ந்த ரேவதி கௌதமை தூங்க விட்டு போர்வை போர்த்தி அறையை மூடி சென்று விட்டார்.

     மூன்று நாட்கள் கழித்தும் வீட்டில் சோகமே உருவாய் இருந்த மகனை ரேவதி கட்டாயப்படுத்தி இன்று அலுவலகம் கிளப்பினார். அங்கேனும் மகன் வேறு சிந்தனைக்கு மனதை செலுத்துவான் என.

     ஆனால் அலுவலகம் செல்லும் மகனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருப்பதை அறியாமல் விட்டார். அதை கொண்டே அவன் தன் நண்பனிற்கு நியாயம் செய்யப் போவதையும் அறிய மாட்டார்.

     அந்த அதிர்ச்சி அவனுக்கு ஒருவிதத்தில் இனிய அதிர்ச்சியாக அமைய போவதே அங்கு ஆச்சரியம்.

-தொடரும்

Advertisement