Advertisement

தூறல் – 4

வாழ்வில் பல வண்ணம் உண்டு,
அதை நிரப்புவதும் நம் எண்ணங்களே;
இருளோ‌ ஒளியோ வாழ்வு மலர்வதும்,
அவரவரின் மனதின் உபயத்தாலே!

     “என்னம்மா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. இங்க வேலை பார்க்க வந்தியா, இல்லை ஓபி அடிக்க வந்தியா. சொல்ற வேலை ஒன்னு கூட சரியா செய்ய முடியாதா. நீ நேத்து பார்த்த வொர்க்ல அவ்ளோ மிஸ்டேக்.

       ஒழுங்கா இதுல இருக்க எல்லா தப்பையும் சரி செஞ்சு எனக்கு மெயில் பண்ணிட்டு, எவ்ளோ நேரம் ஆனாலும் இன்னைக்கு வொர்க்கும் கம்பிளிட் பண்ணிட்டு தான் போற புரியுதா” என சகட்டுமேனிக்கு வாங்கிய திட்டுகள் எல்லாம் மீண்டும் மீண்டும் மீராவின் காதிலே கேட்டது.

      இன்று வெள்ளிக்கிழமை. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அவள் டீம் லீடரும் வேலை முடிக்க வேண்டுமே என்ற கடுப்பில் கத்திவிட்டார். அவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தது முதல் ஆரம்பித்து விட்டாள் அவளது புலம்பல்களை.

     “இன்னைக்கு காலைல யார் மூஞ்சில முழிச்சனோ தெரியல. அந்த சொட்ட மண்ட என்னை பார்த்து என்னா திட்டு திட்டுரான், என்னா பேச்சு பேசுறான் ச்ச. சொட்ட மண்ட பரங்கிதலை” என இன்னும் தன் டீம் லீடரை வாய்க்குள் முணுமுணுப்பாக திட்டிக் கொண்டே தாம் எங்கே தவறு செய்தோம் என வேலைக்குள் சென்றாள்.

     அவள் நேற்று வேலை செய்யும் நேரம் யாரோ அவளை கூப்பிட திரும்பி பார்த்திருந்தாள். அந்த இடத்தில் தான் தவறு என்று காட்டியது. “தலையை திருப்பினது ஒரு குத்தமாடா. பாவி பய அந்த ராஜேஷ் குரங்கு பண்ணுன வேலை” என

       தன்னை கூப்பிட்ட தன் உடன் பணிபுரியும் நண்பனையும் உடன் திட்டினாள்‌. இதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தனர் தோழிகள். அவர்களை நோக்கி ஒரு முறைப்பை வீசி “பார்த்து சிரிச்சு சிரிச்சு வாய் சுளுக்கிக்க போகுது” என  தலையை சிலிப்பி விட்டு தன் வேலையை தொடர்ந்தாள் மீரா.

       மாலை நேரம் நெருங்கவே “என்னடி இன்னுமா உன் வேலை முடியல, நேத்து வொர்க் இன்னைக்கு வொர்க்கும் சேர்ந்தே நான் முடிச்சிட்டேன். நீ இன்னும் என்ன பண்ற. அவளுக ரெண்டு பேரும் போயாச்சு. நம்ம தான் லேட் தெரியும்ல” என ஆருத்ராவை கேட்டுக் கொண்டு இருந்தாள் மீரா.

      இன்று அவர்கள் தோழி ஒருத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உள்ளது. அனுவும் வனிதாவும் அவர்கள் வேலை முடியவும் கிளம்பி முன்பே சென்று விட்டனர். இவர்கள் இருவரும் தான் செல்ல வேண்டியது பாக்கி‌.

     “ஏன்டி பேச மாட்ட, நீ புலம்பின புலம்புல உனக்கு ஹெல்ப் பண்ண போய் தான் இப்ப என் வொர்க் பென்டிங்ல இருக்கு. ஓடிப்போயிரு ஒழுங்கா” என மீராவால் தான் தன் வேலை இழுத்துக் கொண்டதில் திட்டினாள் ஆரு.

      “இப்ப என்ன என்னால தான் எல்லாம் என்னால தான் போதுமா. சும்மா வெட்டி கதை பேசாம சீக்கிரம் வொர்க்க கம்பீளிட் பண்ணு” என மிதப்பாய் பேசினாள் மீரா.

     “எல்லாம் என் நேரம்” என முணுமுணுத்து விட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் “ஏய் மீரா நான் சொல்றத கேளுடி ப்ளீஸ். வொர்க் முடிய டைம் இழுக்கும் போல தெரியுது. நான் சொன்ன மாதிரி நீ மட்டும் போடா.

       நம்ம ரெண்டு பேருமே போகலனா சொல்லி வச்சிட்டு தான் வராம இருக்கோம்னு திட்ட ஆரம்பிச்சுருவாளுக டி. அதனால நீ போய் சாமாளிச்சுட்டு இருப்பியாம், நான் பின்னாடியே ஓடி வந்தருவனாம்” என தன் தோழியை அனுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தாள் ஆரு.

     “போனா ரெண்டு பேரும் போகலாம் இல்ல போகவே வேணாம். உன்னை தனியாலா விட்டு போக முடியாது. நீ பேசுற நேரம் வேலையை பாரு” என பதில் வாதம் செய்துக் கொண்டு இருந்தாள் மீரா.

      “சொன்னா புரிஞ்சுக்கடி. இப்போ நீ போனா நானும் வொர்க் முடிச்சுட்டு வரேனு தானே சொல்லுறேன். என்னமோ வர மாட்டேன்னு சொன்ன மாதிரி செய்ற” என மேலும் பத்து நிமிடம் பேசியே சம்மதிக்க வைத்தாள் ஆருத்ரா.

      ஒரு வழியாக அரை மனதுடன் “சரி நான் கிளம்பறேன். நீ பத்திரமா வந்துருவ தானே” என்ற மீராவிடம் “என்ன பார்த்தா எப்படி இருக்கு, சின்ன பிள்ளையா நான். அதுலாம் பத்திரமா வந்துருவேன். இப்ப நீ போ” என்றாள் ஆரு முறைப்பாக. இல்லையேல் மீரா மீண்டும் அமர்ந்து விடுவாளே.

      “எனக்கு என்னமோ பயமா இருக்கு டி. நீ தனியா வரேன்னு சொன்னத நெனச்சா. ரெண்டு பேரும் சேர்ந்தே போலாமே” என மீண்டும் மீரா ஆரம்பிக்க, ஆருத்ரா மேலும் முறைத்ததில்

      “சரி சரி முறைக்காத என் முறை மாமன் மாதிரி. இதோ கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன்” என தன் தோழியைப் பார்த்து “பார்த்து வா ஆரு என்ன” என ஒருவாறு மனமில்லாதே கிளம்பினாள்.

      மீரா என்றுமே அப்படி தான் ஆருத்ராவிடம். ஆருத்ராவை யாரும் நெருங்காமல் காவல் இருப்பாள் என்றால் அது தவறு, ஆருத்ரா யாரையும் நெருங்காமல் பார்த்துக் கொள்வாள் என்றால் சரியாக இருக்கும்.

       ஆரு சாதாரணமாக சாலையில் செல்லும் போது பக்கத்தில் உள்ளவர்களிடம் யாரேனும் வம்பு செய்தால் கூட தட்டிக் கேட்கிறேன் என சண்டையில் தான் முடிப்பாள், தானே வலிய சென்று வம்பை வாங்கியும் வந்து விடுவாள்.

     அப்படி எதாவது பிரச்சினையை கொண்டு வந்து விட்டால் என்ன செய்வது, அவள் பெற்றோர் அவளை கூட எதுவும் சொல்லாது உடன் இருக்கும் மீராவிடம் தான் “ஏன் மீரா கண்ணு அவளை பத்தி தெரிஞ்சும் எதுக்கு நீ அவளை தனியா விட்ட” என்பார்கள்.

        அதுவே மீரா இவ்வளவு தூரம் தயங்கி தயங்கி சென்றதற்கு காரணம். தன் தோழி எதற்காக இப்படி செய்தாள் என அறிந்த ஆரு அவளை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டே வேலையை தொடர்ந்தாள்.

      “அம்மா சன்டே தானே மேரேஜ். இவ்ளோ சீக்கரமா ஏன் மா இன்னைக்கே கிளம்பனும். நாளைக்கு போனா பத்தாதா” என இரு நாட்கள் முன்னதாக கிளம்ப சொல்லும் தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டு இருந்தான் கௌதம்.

      “ஏன்டா ஆபிஸ்க்கு நீ லீவ் சொல்லிட்ட தானே. அப்புறம் என்ன சும்மா நைநையின்னு பேசாம கிளம்புடா. இன்னைக்கு போனா நாம ஊருல சொந்தக்காரங்க எல்லார் வீட்டுக்கும் ஓரெட்டு போய் பாத்துட்டு வரலாம்.

     இப்படி எதாவது நல்ல நாள்னா தான் எல்லாத்தையும் பார்க்க முடியுது.‌
அதுக்கும் எதாவது சொல்லிக்கிட்டு. உன் துணியெல்லாம் எடுத்து வச்சுட்டல்ல. அப்புறம் அத மறந்துட்டேன் இத மறந்துட்டேனு அங்க வந்து புலம்பக் கூடாது பார்த்துக்க” என கௌதமை கிளப்பினார் ரேவதி.

      அந்த நேரம் அவன் கைப்பேசி ஒளி எழுப்பியது. சத்யா தான் அழைத்ததிருந்தான். “ஹலோ சொல்லு சத்யா. ஹலோ ஒன்னும் கேக்கல டா. சவுண்டா இருக்கு ஹலோ ஹலோ” என பேசிக் கொண்டு இருக்கும் போதே அவனின் கைப்பேசி கட் ஆகி விட்டது.

      கௌதம் மறுபடியும் முயற்சி செய்து பார்த்தான். ஆனால் அழைப்பு போகவில்லை. தன் அன்னை அழைக்கவும் “சரி அப்புறம் ட்ரைப் பண்ணுவோம்” என தன் சட்டையில் போனை வைத்து விட்டு அன்னையுடன் கிளம்பினான் கௌதம்.

      நேற்று அன்னையை மருத்துவமனை அழைத்து செல்லும் போது தான் சத்யாவை கௌதம் பார்த்தது. இன்று காணலாம் என்று எண்ணி இருந்தான். ஆனால் அவர் அன்னை இன்று அவனை ஊருக்கு கிளப்பி விட்டார். ஊருக்கு போய் வந்து பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டான்.

     ஆனால் அவன் ஊரிலிருந்து வரும் போது அவன் நண்பனை காண முடியாது என அறிந்திருந்தால் இப்பவே சென்றிருப்பானோ. ஒரு வழியாக அன்னையை அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து புறப்பட்டான் சொந்த ஊரை நோக்கி கௌதம்.

     அதே நேரம் அங்கு சத்யாவோ தன் உயிரைக் கையில் பிடித்து ஓடிக் கொண்டு இருந்தான்.  வெகு தூரம் ஓடி வந்ததில் அவன் முழுவதும் வியர்வையில் குளித்திருந்தான். கௌதமிடம் பேசும் பொழுதே அவன் கைப்பேசி உயிரை விட்டிருந்தது.

     ஓடி வந்தவன் இப்போது யார் கண்ணிலும் படாமல் ஒரு இடத்தல் மறைந்து நின்றுக் கொண்டான். அப்போதும் அவன் உயிரை பற்றி கவலைப் படவில்லை. தனக்கு தெரிந்த உண்மை உலகிற்கு தெரிய வேண்டும் என எண்ணினான். அவர்கள் எப்படியும் தன்னைப் பிடித்துவிடுவார்கள் என தெரியும்.

     ஆனால் அதற்குள் தான் எப்படியாவது கௌதமை தொடர்பு கொண்டு உண்மையை கூற வேண்டும் என எண்ணினான். அல்லது யாரிடமாவது தான் சொல்லும் செய்தியை அவனிடன் சேர்ப்பிக்க வழி செய்ய நினைத்தான்.

     அதுவரை அவர்கள் கையில் சிக்கிவிடக் கூடாது என உறுதி கொண்டான். ஏனெனில் கௌதம் நிச்சயமாக அந்த அநியாயக்காரர்களுக்கு தண்டனை கிடைக்க செய்வான்.

     தன்னை போல் அவசரப்பட்டு மாட்டிக் கொள்ள மாட்டான். அவனிடம் முன்பே எப்படியேனும் கூறி இருக்க வேண்டும் என காலம் கடந்து எண்ணினான். அப்போது அந்த வழியாக யாரோ வரும் அறவம் கேட்க திரும்பினான்.

      வந்த நபரிடம் கௌதமிடம் செல்ல சொல்லி உதவி கேட்டான். முதலில் தயங்கிய அந்த நபர் பின் ஒருவாறு ஒத்துக் கொண்டார். தன் ஐடி கார்டை கொடுத்து தன் நண்பனிடம் உதவி கேட்க சொன்னான்.

     “எல்லா டீடெல்ஸ்ம் சேபா வச்சிருக்கேன் அதை எடுக்க சொல்லுங்க. அப்புறம் அது எங்கன்னா” என ஆரம்பிக்கையில் ஆட்கள் அருகில் வரும் சத்தம் கேட்கவே அந்த நபரை அனுப்பி விட்டு எதிர் திசையில் ஓட்டினான் கண்டிப்பாக தன் நண்பன் கண்டுபிடித்து விடுவான் என்ற நம்பிக்கையோடு.

     திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற மீராவிற்கோ கடுப்பாக இருந்தது. ஏனெனில் ஆருத்ரா இன்னும் வரவில்லை. இப்போது தான் வேலை முடிந்து அலுவலகம் விட்டு வீட்டிற்கு கிளம்புவதாய் செய்தி அனுப்பினாள்.

     எனவே தான் வரவில்லை என்றும் கூறிவிட்டாள். அதனால் அவளால் அங்கே முழுமனதுடன் இருக்க முடியவில்லை. ஏனோதானோ என்று உணவை கொரித்து விட்டு தோழிகளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

     அடித்து பிடித்து ஒருவழியாக ஒரு மணி நேரத்தில் வீட்டை வந்து அடைந்தாள் மீரா. தன்னிடம் உள்ள சாவியை கொண்டு உள்ளே வந்த மீரா கண்டது நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த ஆருவை தான்.

     “அப்பாடா இவள முழுசா பார்க்கவும் தான் நிம்மதியா இருக்கு. ஆபிஸ்ல வொர்க் அதிகம்ல அதான் டயர்ட்ல தூங்கரா போல” என எண்ணிய மீரா தானும் படுத்து உறங்கி விட்டாள். தூங்கிய மீராவை பார்த்துக் கொண்டே எழுந்த ஆரு தன் கையில் இருந்த ஐடி கார்டை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

-தொடரும்

Advertisement