Advertisement

தூறல்-2

காற்று மீட்டும் குழலாய்
அவள் கார்மேக கூந்தலை
மீட்டிட மனம் ஏங்கிடுதே….

      ‘என்ன ஆச்சு இவனுக்கு ரொம்ப நேரமா தானா சிரிச்சுக்கிட்டு இருக்கான். என்னவா இருக்கும்’ என யோசனையோடு தன் மகனை ஒரு பார்வை பார்த்து சமையலறை சென்றார் ரேவதி.

       சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து தன் மகனை கண்டு ‘ஒரு வேளை எந்த பொண்ணு கிட்டையாவது லவ்ல சிக்கிட்டானோ. இருக்காதே நம்ம புள்ளைக்கு அவ்வளவு திறமை பத்தாதே. என்னவாக இருக்கும்’ என எண்ணினாலும் என்னவென்று தெரிந்து கொள்ள மனது பரபரத்தது. எனவே நேரே தன் மகனின் முன் சென்று நின்றார்.

      “கண்ணா, என்னடா ஆச்சு தனியா விட்டத்தப் பாத்து சிரிக்கிற.ஒருவேளை பையித்தியம் கியிதியம் ஏதும் பிடிச்சுக்கிச்சா டா. ஏதாச்சும் சொல்லுடா. ஐயோ எனக்கு இருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு நீ ஒத்தப் புள்ள.

      உனக்கு இப்படியா ஆகனும் நான் என்ன பண்ணனுவேன்” என மகனை பேச விடாது இவரே புலம்பிக் கொண்டு இருந்தார். இவரது அலம்பல்களை பார்த்து ” எதே! எம்மா நிறுத்துரியா நீ. விட்டா கையோட என்னை மென்டல் ஆசுபத்திரிக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்துர போல” எனறான் அவரின் புலம்பல்களில் தெளிந்த கௌதம்.

     “பின்ன என்ன டா. என் புள்ள நீ இப்படி இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது. பக்குனு ஆகுதுல்ல. நான் உன் முன்னாடி இப்படிக்கா அப்படிக்கானு நாலு தடவை நடந்துட்டேன். நீ கணவுல இருக்க மாதிரி சிரிக்கிற நெளியிற.

       நானும் என்னதான் பண்ணுவேன் எனக்குனு இருக்கிறது வேற நீ ஒரே ஒரு பிள்ளையாச்சே ம்ம். இவ்வளவு பேசுறேன் இப்பக் கூட பாரு நீ எதாவது பேசுறியா கம்முனு இருக்க ஐயோ நான் என்ன பண்ணனுவேன்” என அவன் பேச இடமே தராது நீண்ட வசனம் பேசி மூக்கில் வராத சளியை வேறு புடவையில் சிந்தினார் ரேவதி.

       தன் அம்மா ரேவதி பேசிய வசனத்திற்கு அவர் மகனுக்கு தான் தலைச் சுற்றியது “எம்மா என்னலாம் பேசுர. இவ்வளவு நேரம் மூச்சு விடாம பேசுரியே எங்கையாவது என்ன  பதில் பேச விட்டியா நீ.

      இதுல ஒரே ஒரு பிள்ளை ஒரே ஒரு பிள்ளைனு டயலாக் வேற. எம்மா என்ன பெத்த ஆத்தா மறுபடியும் ஆரம்பிக்காத என்ன ஆச்சுன்னு சொல்றேன்” என தன் அன்னை வாயை திறக்க போகவும் தன் அன்னையை பேச விடாமல் இவன் பேசினான்.

     “இருடா ஒரு இடத்தில உக்கார்ந்துகரேன். உன் கிட்ட நின்னுட்டே சண்டை போட்டதுல காலுலாம் வலிக்குது” என கதை கேட்கும் பாவனையில் அமர்ந்து கொண்டார். தன் அன்னையை முறைத்துக் கொண்டே ” காலையில் மால்ல ஒரு பொண்ணை பாத்தேன் மா” என தொடங்கும் போதே

      “கண்ணா ராஜா நான் கும்புடுர சாமி இப்போ தான் உனக்கு நல்ல புத்திய கொடுத்து இருக்காருடா. ஒரு வழியா ஒரு பொண்ணை பாத்து லவ் பண்ணிட்ட. இப்ப தான் நிம்மதியா இருக்கு. நீ பொண்ணு யார்னு மட்டும்  சொல்லு நான் நாளைக்கே அவங்க வீட்டுக்கு போய் ‌பொண்ண கேட்டுப்புட்டு வந்தர்ரேன்.

      அப்படியே நம்ம ஜோசியரையும் பார்த்து நல்ல நாளா குறிச்சு வாங்கிட்டு வந்தர்ரேன். சட்டு புட்டுன்னு கல்யாண வேலையை ஆரம்பிச்சுடலாம்‌ல. இரு போய் உன் ஜாதகத்தை இப்பவே எடுத்து வைக்கிறேன். காலைல சுலபமா இருக்கும்ல” என வழமை போல் தன்னை பேச விடாது பேசும் தாயை வெட்டவா குத்தவா என முறைத்துக் கொண்டு இருந்தான் கௌதம்.

      ” எம்மா ஒரு நிமிஷம் நில்லு. ஆமாம் நீ நாளைக்கு யார் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்க போற” என்றான் முறைப்போடு. தன் மகனின் முகத்தை சரியாக கவனியாத ரேவதி “இதென்னடா நீ லூசு மாதிரி கேள்வி கேக்குற. இப்ப தானே நீ ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொன்ன. அந்த பொண்ணு வீட்டுக்கு தான்” என்றார் ரேவதி.

     “ஓஓ, ஆமா நீ எங்கனு போய் பொண்ணு கேட்ப?” என்ற மகனின் கேள்விக்கு “அட ஆமால அதை மறந்துட்டேன் பாரேன். சொல்லுடா அந்த பொண்ணுனோட பேரு அட்ரஸ்லா போய்ட்டு வந்தர்லாம்” என்றார் அப்பாவியாய்.

      “நீ போனா நல்லா நாலு அடி வேனா கிடைக்கும். என்ன இழுத்துட்டு போனா உன் கூட வந்த பாவத்துக்கு எனக்கு நல்லா நாலு கிடைக்கும். ஆனால் பொண்ணுலா கிடைக்காது” என்று முழு விவரம் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் ரேவதி ஆரம்பித்து விட்டார்.

     ” என்னடா அந்த பொண்ணு வீட்ல பிரச்சினை பண்ணுறாங்கலா. கவலைய விடு என் மருமகள தூக்கிட்டு வந்துடலாம் மவனே. நீ கவலைப்படாதே உன் காதலை சேர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடது” என்று கடத்தல் வரை முடிவு எடுத்தார் ரேவதி.

     ” எம்மா எம்மா ஒரு நிமிஷம். நீ உன் ஃப்ளிங்ச கட்டுபடுத்திட்டு நான் சொல்றத கொஞ்சம் கேளு. அதுலாம் நடக்குனும்னா மொதல்ல அந்த பொண்ண நான் லவ் பண்ணனும் அட்லீஸ்ட் அந்த பொண்ணு யாரு அப்படிங்கறதாவது தெரியனும் புரியுதா” என்றான் கடுப்பாக. ” என்னடா சொல்ற” என அமர்ந்து விட்டார் ரேவதி.

     “நீ இவ்வளவு நேரம் பேசுனியே நான் பேசுனத ஒழுங்கா கவனிச்சியா. நான் ஒரு பொண்ணை பாத்தேன் அப்படினு தான் சொன்னேன் லவ் பண்ணுறேன் அப்படினு எங்கையாவது நான் சொன்னேனா?” என்று இன்னும் நீங்காத கடுப்புடன் கேட்டான் கௌதம்.

     “என்னாதுஉஉஉ” என அதிர்ச்சியாகி பின் “இத நீ முன்னாடியே சொல்றதுக்கு என்னடா. எவ்வளவு ஆசையா பிளான் போட்டேன் எல்லாத்தையும் இப்படி நிமிஷத்தில காலி பண்ணிட்டியே டா” என்றார் சோகமாக.

      ” எதே, என்னை பார்த்தா உனக்கு எப்படிமா தெரியுது எப்ப நீ என்னை பேச விட்ட இப்ப பேச விட. கொஞ்சம் கூட பொறுமையே இல்லை உனக்கு. நான் தூங்க போறேன் போ. நீ என்னமோ பண்ணு” என வேகமாக தன் அறை நோக்கி சென்றான்.

     ” என் ராஜா வாடா நான் இடைல பேசவே மாட்டேன். முழுசா செல்லிட்டு போடா இல்லை என் மண்டை வெடிச்சுரும்னு தெரியாதா உனக்கு. பாவமில்லையா நான் வாடா கண்ணா பிளீஸ்” என்றார் இன்னும் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

       “வரேன் முகத்தை இப்படி வைக்காத பார்க்க சகிக்கவில்லை” என தன் அன்னையை பற்றி தெரிந்தவனாக வந்தான். ஏனெனில் அவன் தாய்க்கு தான் ஒரு விஷயம் சொல்லி பாதியில் விட்டால் மண்டை உடைந்து விடுமே.

      கௌதம் மாலில் நடந்த நிகழ்வுகளை சிரிப்புடன் சொல்ல ஆரம்பித்தான். ஆருத்ரா பேசியதை சொன்னவுடன் ” ஏன்டா அந்த பொண்ணு அதுக்கு புடிச்சத சொன்னதுக்கா அப்படி சிரிச்சிட்டு இருந்த” என்றார் ரேவதி.

      “இல்லை மா அந்த பொண்ணு பத்தி நான் ஒன்னும் சொல்லல. இன்பேக்ட் அந்த பொண்ணோட ரசனை ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்சும் கூட இருந்தது.

     நான் சொன்னது அந்த பையன பத்தி. ருத்ரா பேச பேச அந்த பையன் மூஞ்ச பாக்கனுமே, எப்படி விழுந்தடிச்சு ஓடுனா தெரியுமா. அங்க வச்சே  அவளோட ப்ரண்ட் ஒரு பொண்ணு செமயா ஓட்ட ஆரம்பிச்சிடுச்சு.

      அப்புறம் அதோட கடைசியா அந்த பொண்ணுங்கலாம் சாப்பாடு தான் முக்கியம்னு சொன்னத நீ கேட்டு இருக்கனும் பாரு செம காமெடி மா. இன்னும் வீட்ல வச்சு எப்படிலா கிண்டல் பண்ண போறாங்களோ” என்றான் சிரித்தபடி.

     “என்னடா காமெடி சாப்பாடு இல்லாம நீ இருந்துருவியா‌ என்ன. அது இருக்கட்டும், அது யாருடா ருத்ரா” என்றார் ரேவதி பாயின்டாக. ” ஐயோ போச்சுடா அம்மா ஓட்டியே கொல்ல போறாங்க” என நாக்கை கடித்து கொண்டான். தன் அன்னையை பற்றி தெரிந்தும் வாய் விட்ட தன்னை நொந்து கொண்டு சமாளிக்க முயன்றான்.

      “அம்மா அது” என்று இழுத்து விட்டு “ஆமா நீ சாப்டல்ல மாத்திரை போட்டுடியா உனக்கு சுகர் இருக்கு நியாபகம் இருக்குல்ல” என தன் தாயை திசை திருப்ப முயன்றான். “இந்த டகால்டி வேணாம் மகனே! ஒழுங்கா சொல்லு” என்றார்.

      “அந்த பொண்ணோட போரு தான் மா” என்றான் பிடிபட்ட பாவத்தில். ” ஆனா ஆருத்ரானு தானே சொன்ன” என சிறிது யோசித்து “ஓஓ, செல்ல பேரா. டேய் மகனே என்னடா இது அப்ப உனக்கு அந்த பொண்ணு பிடிச்சிருக்கா? சொல்லுடா” என்றார் ஆசையாக.

      தன் அன்னையின் முகத்தை கண்டு சிரித்து விட்டு ” அதுலாம் ஒன்னும் இல்லை. ஜஸ்ட் அந்த பேரு மைன்ட்ல பிக்ஸ் ஆகிருச்சு. நல்லா இருக்குல அதான் விடே” என்று தன் மனம் அறியாமல் பேசிக் கொண்டு சென்றான்.

       தன் மகன் தன் மனதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அது நடக்க இன்னும் சிறிது நாள் காத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார் ரேவதி நல்ல அன்னையாக. பின் தன் அன்னை மாத்திரை எடுத்துக் கொண்டாரா என பார்த்து விட்டே தன் அறை சென்றான் கௌதம்.

    கௌதம் சொன்னது போல் அங்கே தோழிகள் மூவரும் ஆருவை வளைத்து வளைத்து கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். “ஏன்டி அது எப்படி டி பேசியே அவன துரத்தி விட்ட.  ஆனா அவன் முகத்தை அப்ப நீங்க பார்த்து இருக்கனும்.

      சும்மா பத்து பேய் படம் பார்த்த எபக்ட். சும்மா தெரிச்சு ஓடுனான் பா” என சொல்லி சொல்லி சிரித்து அவளை ஓட்டி தள்ளி விட்டனர் தோழிகள்.  ” ஏ விடுங்கப்பா எனக்கே அங்க போக பிடிக்காம தான் போனேன். அவனே வேணாம்னு போய்ட்டான்” என்றாள் ஒரு வித நிம்மதியுடன்.

     “ஒரு சின்ன திருத்தம் வேணாம்னு போகல ஓடிட்டான்” என்றனர் தோழிகள் கிண்டலுடன். “சரி ஓடிட்டான் இப்ப என்ன. நாளைக்கு ஆபிஸ் இருக்குல வாங்க போய் தூங்கலாம்” என தன் தோழிகளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

       ஒரு வழியாக கிண்டலுடன் உணவை முடித்துக் உறங்க சென்றனர். கௌதமை ஆருத்ரா காண வைக்க அடுத்து என்ன செய்யலாம் என விதி தன் விளையாட்டை துவங்க தூங்காது யோசித்து கொண்டு இருந்தது.

-தொடரும்

Advertisement