“யூ கேன் ஷக்தி…” என்றான் பிடித்திருந்த கையில் அழுத்தம் கூட்டியவனாக.
“எஸ், ஐ நோ. பட்…” என்றவள் ஷேஷாவை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
எழுந்தவன் மீண்டும் அமர்ந்துகொண்டான் தனது இருக்கையில். ஷேஷா சென்றுவிடுவான் என வடிவழகி நினைத்திருக்க அவன் மீண்டும் அமர்ந்ததில் முகம் மாறியது.
“ஷக்தி நான் இங்க தான் இருக்கேன். நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோ. நீ மேனேஜ் பண்ணு. இது உனக்கான ஒரு டெஸ்ட் அப்படின்னு நினைச்சுக்கோ…”
மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் மென்மையாய் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான் அந்த அறையை விட்டு.
செல்லும் முன்னே எழிலை பார்த்தவன் அவனையும் தலையசைத்து வெளியேறுமாறு சொல்லி செல்ல எழிலால் மறுக்கமுடியவில்லை. தானும் வெளியே வந்து நின்றான்.
ஆண்கள் இருவரும் வெளியேறி இருக்க பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
ஷக்தியின் முகத்தில் படர்ந்திருந்த கோபச்சூட்டில் வடிவழகியின் கண்களில் எள்ளல் வந்தது.
தன்னை கண்டதினால் அவள் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் என்பதை அனுபவத்தில் பார்த்ததுமே கண்டுகொண்டார் அவர்.
“எப்போ வந்த ஷக்தி?…” என தானே பேச்சை தொடங்கினார்.
வடிவழகியின் அந்த எள்ளலை சரியாய் கண்டுகொண்ட ஷக்திக்குள் சக்தியாய் ‘யூ கேன் ஷக்தி’ எனும் ஷேஷா ஒலித்தான்.
அந்த நொடிநேர நிதானம் அவளை ஷேஷாவின் வழியில் நடக்க செய்தது. முயன்று மனதை ஒருமுகப்படுத்தியவள் விழிகளுக்குள் தாயும் தந்தையும் எழுந்தனர். ஷக்தி தன்னை மீட்டாள்.
“நான் எங்கயும் போகலை. இங்க தான் இருக்கேன்…” என்றாள் நிமிர்வாக.
“ஓஹ், ஆனா அஞ்சு வருஷமா எங்கையோ ஓடி ஒளிஞ்சிட்ட தானே?…”
“உண்மை தான். ஒளிஞ்சு தான் இருந்தேன். அஞ்ஞாத வாசம் மாதிரி அஞ்சு வருஷம் இருந்தேன். இதனால உங்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லையே. சொல்ல போனா நிறைய லாபம் தான். இல்லையா?…”
அந்த நிமிடம் வடிவழகியின் முகம் விழுந்துவிட்டது ஷக்தி பேசிய அர்த்தத்திலும், பேச்சிலும்.
“லாபமா? என்னவோ உன்னோட சம்பாத்தியத்துல நாங்க இருந்த மாதிரி சொல்றியே நீ?…” என்றார் உக்கிரத்துடன்.
“இல்லைன்னு சொல்ல முடியாது உங்களால? என் சொத்துக்களோட வருமானத்தையும் சேர்த்து தானே அனுபவிச்சீங்க?…” ஷக்தி விடவில்லை.
“உன்னோட இந்த வாழ்க்கை நாங்க விட்டு வச்சது? மறந்துட்டு பேசற ஷக்தி….”
“யாரும் யாரையும் விட்டு வச்சு வாழ விட முடியாது. என்னோட வாழ்க்கை நீங்க விட்டு வச்சதா? இல்லை. உங்களால என்னை தொட முடியாததனால. அது உங்க இயலாமை…”
உண்மையை சொல்லிவிட்டவளுக்கு பதில் கொடுக்க முயன்றார் வடிவழகி. முயற்சி வீணே.
“நான் எதையும் மறக்கலை. மறக்கவும் போறதில்லை. அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்…” என்றாள் ஷக்தி.
“எதுக்காக என்னை பார்க்கனும்னு சொன்னீங்க? அதை சொல்லிட்டு கிளம்புங்க…”
“நீ வந்தது தப்புன்னு சொல்ல வந்தேன். எந்த உரிமையில திரும்ப சொத்துக்களை கேட்டு நின்ன?…”
“நான் எங்க வரனும், இருக்கனும்னு நீங்க முடிவு பண்ண கூடாது. அதோட அடுத்தவங்க சொத்து எனக்கு அவசியமில்லை. அது என்னோடது. எனக்கானது. அதை உங்களுக்கு விட்டுக்குடுக்க முடியாது…” என்றவள்,
“கஷ்டமா இருக்கா? நான் ஒன்னும் உங்களை மாதிரி உதவின்னு கேட்டு நிக்கும் போது செய்யாம விரட்டி அடிக்க மாட்டேன். நடுத்தெருவுல அனாதையா அநாதரவா விடமாட்டேன். கேளுங்க…” என்றவளின் பார்வையில் வடிவழகி மிரண்டு தான் போனார்.
ஷக்தியை சந்திக்காமல் இருந்திருந்தால் கூட அவள் என்ன நினைத்திருப்பாளோ? ஆனால் சந்தித்து அவளின் மொத்த மாற்றத்திற்கும் காரணகர்த்தாவாக மாறினார் வடிவழகி.
ஷேஷாவின் பேச்சுக்கள் கொடுத்த தைரியத்தில் துணிந்து நின்றவளில் படிந்திருந்த கசடுகள் எல்லாம் வடிவழகியின் பேச்சில் அடித்து செல்லப்பட்டது.
“பெத்த தகப்பனை பறிகுடுத்து, உயிருக்கு போராடற அம்மாவை காப்பாத்த உங்ககிட்ட வந்து நின்னேன் பாருங்க. அந்த ஷக்தி இல்லை. அவ அன்னைக்கே பிறந்து அன்னைக்கே இறந்துட்டா…” என்றவள்,
“இப்ப வரைக்கும் உங்ககிட்ட கெஞ்சி கையேந்தினதுக்கு வெக்கப்பட்டுட்டு இருக்கேன். உதவின்னு வந்தவங்களை காப்பாத்த கை தூக்க கூட அருகதை இல்லாத உங்ககிட்ட நான் கேட்டிருக்கவே கூடாது…”
“அதுக்குத்தான் திரும்ப என்னை பார்க்க முடியாதுன்னு சொன்னியா?…”
“முடியாதுன்னா சொன்னேன்? இஷ்டமில்லைன்னு தானே சொன்னேன்? இதை கூட உங்களுக்கு ஏத்த விதமா மாத்திருவீங்க இல்லையா?…”
“ஷக்தி…”
“இப்போ எதுக்கு வந்தீங்க? அதை மட்டும் சொல்லிட்டு கிளம்புங்க….” என்றவளை வெறித்து பார்த்தார்.
“சொத்துக்கள் பத்தின்னா நிச்சயம் அது உங்களுக்கு கிடைக்காது. எங்கப்பாவை தட்டி பறிச்சிருக்கலாம். ஆனா அவர் எனக்கு கொடுத்ததை உங்களால வாங்க முடியாது…”
“தெரியும், உன் பிறப்பு அப்படி. இப்படித்தான் அடுத்தவங்க சொத்துக்கு அலையும்…” என வடிவழகி சொல்ல,
“என் பிறப்பு எப்படின்னு இன்னைக்கு தான் உங்களுக்கு தெரிஞ்சதா? உங்களால ஏன் அன்னைக்கே உங்க புருஷனை கண்டிச்சு வைக்க முடியலை? அதை விட்டு என்னை என் பிறப்பை பேசறீங்க…”
“உண்மையை தானே சொன்னேன்?…”
“எது உண்மை? நான் ஒன்னும் அப்பா பேர் தெரியாம பிறக்கலை. நான் பிறக்கும் போதே இன்னார் பொண்ணுன்ற அடையாளத்தோட தான் பிறந்தேன். அதை கூட உங்களால தடுக்க முடியலை…”
“ஷக்தி…”
“என்னை ஒன்னும் செய்ய முடியாதப்போ நீங்க எடுக்கற கடைசி ஆயுதம் என்னோட பிறப்பு. அங்கயும் கூட உங்களுக்கு தோல்வி தான். கெட் லாஸ்ட்…” என்றாள் அறை கதவை கை நீட்டி காண்பித்து.
“உன்னை நான் சாதாரணமா விட்டு வச்சுட்டேன்…”
“ஹாங், அப்படியா? ஆனா நீங்க இங்க வந்து எனக்கு பெரிய உதவி பண்ணிருக்கீங்க…”
“இப்பவும் நீ வாழறது எங்களோட உதவில தான் ஷக்தி. நீ சொல்றியே சொத்து. அதை என் மகன் பல மடங்கா பெருக்கிருக்கான்…”
“இப்படி சொல்ல நீங்க வெக்கப்படனும். அந்த சொத்தால நிறைய பலனை அனுபவிச்சுட்டீங்கன்னும் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்…”
“ஷக்தி…”
“எனக்கு நிறைய வேலை இருக்குது. இன்னைக்கு தான் நான் சார்ஜ் எடுத்திருக்கேன் இங்க. இந்த ட்ரஸ்ட் மட்டுமில்லை, என்னோட ப்ராப்பர்ட்டீஸ் பத்தின இன்கம் எல்லாம் நான் இனி தான் வெரிஃபை பண்ணனும். பதில் சொல்ல ரெடியா இருக்க சொல்லுங்க உங்க பிள்ளையை…”
வடிவழகியின் முகத்திலடித்ததை போல சொல்லிவிட்டு ஷக்தி இருக்கையில் அமர்ந்துகொண்டு அவரையே உறுத்து விழிக்க அவரால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை.
அவர் பேச வந்த விஷயமும் இன்னும் முடியாமல் இருக்க இங்கே பேசி சென்றதில் இன்னுமே ஆத்திரப்பட்டு போனார்.
அந்த ஆத்திரத்தின் விளைவு ஷக்தியை ஏகத்திற்கும் தூண்டிவிட்டிருக்க அங்கே மாட்டிக்கொண்டது என்னவோ அகத்தியனும், எழிலும் தான்.
அகத்தியனின் துரோகத்தின் உச்சங்களை ஷேஷாவும், ஷக்தியும் கண்டறிய வடிவழகியும் காரணமாகி போனார்.
அவர் வெளியேறிய அடுத்த நொடி ஷேஷா கை தட்டியபடி உள்ளே வந்தான் ஷக்தியிடம்.
“வாவ் வாவ் வா…” என சொல்லவும் இன்னும் ஷக்தி தன்னை நிலைநிறுத்த முயன்றுகொண்டு இருந்தாள்.
“ஷேஷா…” என்றவளின் வார்த்தைகளை தன் விரல் கொண்டு நிறுத்தியவன்,
“அவங்க பேசினதை நான் கவனிச்சேன்…” என்றான்.
“இவங்க எல்லாம் மனுஷங்களே இல்லை ஷேஷா. அன்னைக்கு ஒரு பொண்ணா இவங்க கொஞ்சம் மனம் இறங்கியிருந்தா…” என்றவளுக்கு அதை நினையாமல் இருக்கமுடியவில்லை.
“கூல்…” என்றவனின் வார்த்தையில் இன்னும் தெளியவில்லை.
அடுத்தகட்டமாக ஷக்தியின் வேலை எழில் கவனித்த பொறுப்புகளில் இருந்த குளறுபடிகளையும், அங்கே நடப்பவற்றையும் ஆராய்வதில் தொடங்கியது. உதவிக்கு கிருஷ் அவளுக்கு துணையாக இருந்தான்.
வரவுகளையும், செலவுகளையும் அவள் பெரிதாய் நினைக்கவில்லை. ஆனால் அங்கே என்ன நடக்கிறது நடந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்தாகவேண்டுமே?
நடப்பதை பற்றி கவனித்தவளின் கவனம் சற்று பின்னோக்கி நடந்தவற்றை ஆராயும் முயற்சியில் ஷேஷாவும் துணை வர அங்கே ஏற்கனவே நடந்தவையோ அதிர்ச்சிகரமானது.
ஷேஷாவின் வேலை கண்ணுக்கு தெரியாமல் இருந்தால், ஷக்தியின் வேலை அப்பட்டமாய் தெரிந்து எழிலை எரிச்சல் படுத்தியது. அகத்தியனை நடுங்க செய்தது.
“இவ ஏன் இதை எல்லாம் நோண்டறா மருமகனே?…” என நடுக்கத்தை மறைத்தபடி எழிலிடம் கொந்தளித்தான் அகத்தியன்.
அவள் மீதான மயக்கம் மழுங்கி இப்போது ஷக்தியின் மேல் கொலைவெறி வந்தது.
எத்தனை ஆவேசம் இருந்தாலும் எதையும் அசைக்கமுடியாமல் அகத்தியனின் செயல்பாடுகளை முடக்கி இருந்தான் ஆதிஷேஷன்.