“நான்.. நான் தான் சார்..”

“என்ன புதுசா..?”

“இல்லை சார்..”

“அப்பறம் என்ன..? இதை கூட சரியா பார்க்காம மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது, நீங்க தள்ளுங்க..” துர்காவை விலக்கிவிட்டு தானே ஈஷ்வரிடம் சென்றவன், 

“ஸ்டிச் பண்ணும் போது வலிச்சா சொல்ல மாட்டியா..? அப்படியே வலியில படுத்திருக்க..?” அவனுக்கும் கொட்டு வைத்து ஸ்டிச்சிங் செய்தான். 

“துர்கா முடிஞ்சுதா..? தம்பி எப்படி இருக்கார்..?” தங்கை வெளியே வர நரசிம்மன் கேட்டார்.  

“விஷ்ணு பார்த்துட்டு இருக்கான்ண்ணா.. பயப்பட ஒன்னுமில்லை, கல் ஆழமா வெட்டியிருக்கு, ரத்தம் அதிகமா போயிடுச்சு.. மத்தபடி ஒன்னும் பிரச்சனையில்லை..”

“இல்லை துர்கா எதுக்கும் நாம தலைக்கு ஒரு ஸ்கேன் எடுத்துடலாமா..?”

“ ண்ணா.. தேவையில்லை, பயப்படாதீங்க.. ஈஷ்வர் நல்லா தான் இருக்கான்..” அண்ணனுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்க, நர்ஸ் முடிந்தது என்று வெளியே வந்தார். 

எல்லோரும் சென்று பார்க்க, ஈஷ்வர் சோர்வில் கண் மூடி படுத்திருந்தான். விஷ்ணு அவனுக்கு அருகிலே சேர் போட்டு அமர்ந்திருக்க, மறுபக்கம் சுவர். மகனின் அருகில்  சென்று பார்க்க நினைத்த நரசிம்மன், “விஷ்ணு..” என்று அவனை கூப்பிட, அவனோ காது கேட்காதவன் போல அமர்ந்திருந்தான். 

“விஷ்ணு.. கொஞ்சம் நகருடா, நாங்க அவனை பார்க்கிறோம்..” கங்கா சொல்ல, 

“ஒன்னும் தேவையில்லை, அங்க இருந்தே பார்த்துட்டு போங்க..” முடித்துவிட்டான். 

பேச்சு சத்தத்தில் கண் திறந்த ஈஷ்வர், “விடுடா..” என மென் குரலில் விஷ்ணுவிடம் சொல்ல, 

“நீ தூங்காம என்ன பேசிட்டு இருக்க, தூங்குடா..” அதட்ட, 

அவன் பெற்றவர்களிடம், “எனக்கு ஒன்னுமில்லை, நான் தூங்குறேன், நீங்க பயப்படாம இருங்க..” என்றான்.  

“சரிப்பா.. நீங்க தூங்குங்க, நாங்க வெளியே தான் இருக்கோம், எதாவது தேவைன்னா கூப்பிடுங்க..” நரசிம்மன் சொல்ல, 

“எதுக்கு நீங்க இங்கேயே இருந்து திரும்ப கட்சி ஆளுங்க வந்து அவன் மண்டைய உடைக்கவா..? முதல்ல நீங்க இங்கிருந்து  கிளம்புங்க, போங்க..” விஷ்ணு அவர்களை தயவு தாட்சனை பார்க்காமல் விரட்ட, ஈஷ்வருக்கு மருந்தின் வீரியத்தில் தூக்கம் இழுக்க, தூங்கியே விட்டான்.  

நரசிம்மனுக்கோ விஷ்ணுவிடம் எதுவும் பேச முடியாத நிலை. மகனை பார்த்துவிட்டு அமைதியாக வெளியே வந்துவிட, கங்கா விஷ்ணு தலையில் ஒரு கொட்டு கொட்டியே வெளியே சென்றார். அவருக்கு அவனிடம் கோவம் வந்தால் அதை தான செய்வார் என்பதால் விஷ்ணு அதை கண்டுகொள்ளவே இல்லை. 

அதுவரை உர்ரென்ற நின்ற மகா, பெற்றவர்கள் வெளியே செல்லவும், “என்னமோ என் அண்ணன் பொண்டாட்டி மாதிரி  அவன் பக்கத்துலே உட்கார்ந்துகிட்டு ஓவரா அதிகாரம் பண்றீங்க..?  நீங்க என்ன எங்களை வெளியே போக சொல்றது, நான் இங்க தான் இருப்பேன்..” சட்டமாக அங்கேயே அமர்ந்துகொண்டாள். விஷ்ணு அவளை மிகவும் அலட்சியமாக பார்த்து தோள் குலுக்கியவன், மொபைல் பார்க்க ஆரம்பித்துவிட்டான். 

ஈஷ்வர் அடிபட்ட விஷயம் அவர்கள் தொகுதி முழுதும் பரவியிருக்க, கடைக்கு பால் வாங்க வந்த பரணி காதில் விழுந்தது. “ம்மா.. இந்தாங்க பால்..” வீட்டில் சென்று கொடுத்தவன், “நம்ம தொகுதி MLA மகனுக்கு அடியாம்..” என்றான் சோபாவில் அமர்ந்தபடி. பல்லவி டிவி பார்த்து கொண்டிருந்தவள் அதிர்ந்து போய் அண்ணனை பார்த்தாள். 

“என்னடா சொல்ற..?” மூர்த்தி கேட்க, 

“பக்கத்து வோட்டிங் பூத்ல பிரச்சனையாச்சுன்னு சொன்னாங்க இல்லை, அதுல ஒருத்தன் MLA மேல கல் தூக்கி போட்டிருக்கான், அது அவர் மகன் தலையிலே விழுந்து நல்ல பெரிய காயம் போல, கடையில பேசிக்கிட்டாங்க..” என்று சேனல் மாத்தி கொண்டிருக்க, பல்லவிக்கு நிலை கொள்ள முடியவில்லை. 

“பெரிய காயமா..?” கண்கள்  கலங்கியது. எழுந்து ரூமிற்கு சென்றவள், ஈஷ்வர் மொபைலுக்கு அழைத்துவிட்டாள். அந்த பக்கம் எடுக்க ஆள் இல்லை. இரண்டு, மூன்று முறை அடித்தவள்,  எப்படி எடுப்பான்.. என்று தன்னை தானே குட்டி கொண்டு  அவனுக்காக வேண்ட ஆரம்பித்தாள்.

இரவு போல தான் ஈஷ்வர் கண் முழிக்க, அருகில் சென்று பார்த்த மகாவிற்கு நிம்மதியானது. விஷ்ணு அவனை ஒருமுறை செக் செய்தவன், சாப்பிட கொண்டு வரச்செய்து கொடுத்தான். முடிக்கவும் டேப்ளெட் கொடுத்தவன், அங்கேயே அமர்ந்து அவன் உணவை சாப்பிட ஆரம்பித்தான்.  

“இப்போ ஓகேவாண்ணா..?” மகா அதுவரை அமைதியாக பார்த்திருந்தவள், அண்ணனிடம் கேட்டாள். 

“ஓகே தாண்டா.. அப்பா, அம்மாவை வரச்சொல்லு..” என, அவள் சென்று கூட்டிவந்தாள். அவர்கள் மகனிடம் பேசி நலம் விசாரிக்க, விஷ்ணு சாப்பிட்டு முடித்தவன், எழுந்து வெளியே சென்றான். 

அங்கு பல்லவியோ  ஈஷ்வரின் நலம் பற்றி அறிய  துடித்து கொண்டிருந்தாள். எந்நேரமும் மொபைல் கையிலே இருந்தது. ஏதேனும் ஒரு வாய்ப்பாக அவன் ஆன்லைன் வந்தாலோ, அழைத்தாலோ பேச வேண்டும் என்று அதையே பார்த்து கொண்டிருந்தாள். இரவு உணவுக்கு கூட செல்லவில்லை. பசிக்கல என்று பால் மட்டும் வாங்கி வைத்து கொண்டாள். 

“பேசி முடிச்சாச்சா..? போதும் வீட்டுக்கு கிளம்புங்க.. அவன் ரெஸ்ட் எடுக்கட்டும்..” வெளியே சென்றிருந்த விஷ்ணு உள்ளே வரவும் சொன்னான்.  

“சரிப்பா.. நீங்க ரெஸ்ட் எடுங்க, நாங்க வெளியே இருக்கோம்..” நரசிம்மன் சொல்ல, அவர்களை சமாதானம் செய்து  வீட்டிற்கு அனுப்பி வைத்தான் ஈஷ்வர்.  நரசிம்மன் செல்லும் முன் விஷ்ணுவிடம் மொபைல் கொடுத்து ஏதோ சொல்லி சென்றார். 

“தூங்கலையா..? வலிக்குதா..?” ஈஷ்வர் முழித்திருக்கவும் விஷ்ணு கேட்க, 

“வலிக்க எல்லாம் இல்லை, நீ கொஞ்சம்  அமைதியா இரு முதல்ல..”

“அதை நீ சொல்லாத, உன்னை யார் அங்க எல்லாம் போக சொன்னா..?”

“அவங்க அப்பாகிட்ட வேணும்ன்னு பிரச்சனை பண்றாங்க தோணுச்சு, அதான் போனேன்..”

“பண்ணா பண்ணிட்டு போகட்டும், அரசியல்ல இருக்கிற அவருக்கு இதை எல்லாம் ஹாண்டில் பண்ண தெரியாதா..? உனக்கு என்ன..?”

“ம்ப்ச்.. விடு விஷ்ணு..” கண் மூடியவனுக்கு பல்லவி ஞாபகம் வர,  “என் மொபைல் எங்க..?” என்று கேட்டான். 

“எதுக்கு..?”

“விஷ்ணு.. ப்ளீஸ்டா..”

“இந்தா மாமா கொடுத்துட்டு போனாங்க.. பல்லவி போன் பண்ணியிருப்பா போல, மாமா சொன்னார்..” கொடுக்க, வாங்கி உடனே அவளுக்கு அழைத்தான். 

ஒரு ரிங் கூட செல்லவில்லை. ஆரம்பிக்கும் போதே எடுத்தாள். அதிலே அவளின் தவிப்பு புரிந்த ஈஷ்வர், “லவி.. நான் நல்லா இருக்கேன்..” என்றான் எடுத்தவுடன். அந்த பக்கம் அமைதி. மிக மெலிதாக கேவல் சத்தம். 

“லவி.. எனக்கு ஒன்னுமில்லை, நான் நல்லா இருக்கேன், ஏன் அழற..?”

“புரிஞ்சது, ஆனா பயம்..” தேம்பி தேம்பி சொல்ல, ஈஷ்வருக்கு உருகி போனது. திரும்பி விஷ்ணுவை பார்க்க, அவனோ அங்கேயே நின்றான். 

“ப்ளீஸ்டா..” வாய் அசைத்து கேட்க, 

“எப்படியும் சண்டை தானே போட போறீங்க, நான் இருந்தா என்ன..?” சத்தமாகவே கேட்க, பல்லவிக்கு முகம் கசங்கி போனது. 

போனை மூடி கொண்ட ஈஷ்வர், “அநியாயம் பண்ணாதடா.. போடா..” என்றான். 

“க்கும்.. கேட்டதுக்கு அப்பறம் போனை மூடுறான் பாரு..” நக்கலடித்து கொண்டே வெளியே சென்றான். 

“லவி..”

“ரொம்ப பெரிய காயமா..?”

“கொஞ்சம் தான்..”

“உங்களை பார்க்கணும்..” அவனை பார்க்க ஏங்கினாள். 

“வா..”

“எப்படி வர..? வீட்ல என்ன சொல்ல..? அங்க உங்க வீட்லயும்  இருப்பாங்க..”

“ஏன் இவ்வளவு வருத்தம், நான் வீடியோ கால் வரேன்..” என்றவன், உடனே  வீடியோ கால் அழைக்க, அவனை  ஆராய்ந்தாள். 

“பார்த்தாச்சா..?”

“ம்ம்..” பெரிய கட்டுடன் சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். 

“ரொம்ப வலிக்குதா..?”

“கொஞ்சம் கூட இல்லை.. உண்மையா தான்..”

“சாப்பிட்டிங்களா..?”

“நீ ஏன் இப்படி இருக்க..? சாப்பிட்டியா..?” தலை முடி கலைந்து, கண்கள், மூக்கு எல்லாம் சிவந்து, மிகவும் வாடி போய் இருந்தாள். 

“ம்ப்ச்.. என்னை விடுங்க, நீங்க சொல்லுங்க..”

“லவி.. கேட்டதுக்கு பதில் சொல்லு, சாப்பிட்டியா..?”

“சாப்பிட்டேன்..”

“என்கிட்ட பொய் எல்லாம் சொல்வீங்களா மேடம்..”

“பசிக்கல..”

“நான் போன் வைக்கிறேன்..”

“ஈஷ்வர்..”  அவசரத்தில் பேர் சொல்லி கூப்பிட, அவன் கண்கள் மின்னியது. 

“இதுக்காக விடுறேன், போய் சாப்பிட்டு வா..”

“நான் பால் வச்சிருக்கேன், பிஸ்கட் இருக்கு போதும்.. ப்ளீஸ்..” கண் சுருக்கி கேட்க, 

“சரி அதையாவது சாப்பிட்டுட்டு பேசு..”

“இல்லை.. நீங்க பேசுங்க..”

“ச்சு.. என்னடி நீ, சரி அப்படியே சாப்பிடு..” என, பல்லவி பால், பிஸ்கட்டுடன் அமர்ந்தாள். 

“உன் ரூம்ல இருக்கியா..?”

“ஆமா.. UPSC எக்ஸாம்க்கு ப்ரீபேர் பண்றேன் சொல்லி இருக்கேன், தூங்க பாட்டி ரூம் போயிடுவேன்..”

“ம்ம்..” என்றவன் அவளையே பார்த்திருந்தான். அவ்வளவு கோவமாக சண்டை போட்டு பேசாமல் இருந்தவர்கள் போல இல்லை.

“முடிச்சிட்டியா..? இனி இப்படி செய்ய கூடாது..” கண்டிப்புடன் சொன்னான். 

“ம்ம்.. நீங்க சாப்பிட்டீங்க தானே..?”

“நான் சாப்பிட்டு, டேப்ளெட் எல்லாம் போட்டாச்சு, உன்கிட்ட பேசிட்டு தூங்க வேண்டியது தான்..”

“சரி.. நீங்க தூங்குங்க..”

“இருடி..” அவனுக்கு போதவில்லை அவளை பார்த்ததும் பேசியதும். 

“சரி  சொல்லுங்க..” பெட்டில்  சம்மணமிட்டு அமர்ந்தாள்.

“நீ தான் சொல்லணும்..” ஸ்கர்ட், ஷார்ட் டாப்பில்  மிகவும் இயல்பான தோற்றத்தில் இருந்தவளை ரசித்து பார்த்தான். 

“என்.. என்ன சொல்லணும்..?” அவனின் பார்வையில் மெலிதாக கேட்டாள்.

“மூணு வருஷத்துக்கு முன்னாடி சொன்னதுக்கு இன்னும் பதில் வரல மேடம்..”

“பதில் சொல்ற எந்த கேள்வியும் நீங்க கேட்கல..”

“ஓஹ்.. அப்படி.. இப்போ கேட்கவா..?”

“இப்போவா..?”

“ஏன் கேட்டா என்ன..?  நான் கேட்பேன்..”

“என்ன கேட்க போறீங்க..?”

“உன்னை தான்..”

“ஆஹ்..”

“ஏன் இவ்வளவு ஷாக்..? உன்னை தவிர எனக்கு வேறென்ன வேணும்.. நீ.. நீ மட்டும் தான் இந்த ஈஷ்வர்க்கு வேணும்.. எனக்கே எனக்குன்னு என்னோட பொண்டாட்டியா வேணும்..” அவன் ஆழ்ந்து காதலாக சொல்ல, பல்லவிக்கு சிலிர்த்தது. 

இறுதியாக அவளிடம் அவனின் உள்ளத்தை சொல்லியே விட்டான் திகம்பரன். பல்லவியால் அவனை நேராக பார்க்க முடியவில்லை. கன்னங்கள் சிவக்க, பார்வை அலைபாய்ந்தது. 

“லவி.. என்னை பாரு..”

“ம்ம்.. சொல்லுங்க..”

“என்னை பாருடி ப்ளீஸ்..”

“ஈஷ்வர்..” அவள் காதலாக சிணுங்க, 

“நீ இப்படி  என் பேர் சொல்லும் போது உன் லிப்ஸை பிடிக்கணும் போல கை  பரபரக்குது..”

“ஆஹ்ன்..”

“ஏன் பிடிக்க கூடாதா..? அப்போ வேறென்ன செய்யட்டும்..?” 

“உங்களை..”  அவனின் காதல் பேச்சுக்கள் தொடர, அதில்  விரும்பியே மூழ்கினாள் திகம்பரி