திகம்பரனின் திகம்பரி அவள் 13

“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிக்க போற..? உன் ஆள் போயாச்சு..” அலையில் நின்றிருந்த ஈஷ்வரிடம் விஷ்ணு  வந்து சொல்ல, அவனின் முகத்தில் லேசான மலர்வு மட்டுமே. 

“என்னடா போயிட்டான்னு சொல்றேன் சிரிக்கிற..?”

“உனக்கு இது புரியாது..” ஈஷ்வர் தலையை கோதி கொண்டான். 

“க்கும்.. இது புரிஞ்சு என்ன யூஸ், இதுக்கு உன் லூசு தங்கச்சி ஏன் இன்னும் அரைவேக்காடா இருக்குன்னு தெரிஞ்சா கூட முழுசா வேக வைச்சுடலாம்.. ரொம்ப படுத்துறா..”  முணுமுணுத்து கொண்டவன் திரும்ப, அங்கு மகா நேராக நின்றபடி, முகத்தை மட்டும்  இவர்கள் பக்கம் நகர்த்தி கொண்டிருந்தாள். 

“அப்படி என்ன எனக்கு தெரியாத ரகசியம் பேசுறாங்க..? இந்த சுடுதண்ணி என்ன சொல்லுது அண்ணாகிட்ட..?”  மகா  உளவு பார்ப்பவள் போல நேராக பார்த்தபடி  காதை மட்டும்  இவர்களிடம் விட்டாள். 

“அடி கேடி.. இவளை..” உர்ரென்ற விஷ்ணு  முகத்தில் திடீர் குறும்பான சிரிப்பு. “இந்தா  வரேன் இருடி..” கருவி கொண்டவன், சத்தமே செய்யாமல் அவள் பின் சென்று நின்றான். 

“என்ன பேச்சு சத்தத்தையே காணோம்..?”  மகா ஈஷ்வர் பக்கம் திரும்பி பார்க்கும் நேரம், அவளின் முதுகில் கை வைத்து  வந்த பெரிய  அலையில் அவளை அப்படியே  தள்ளி விட்டான். 

“ஹா.. ஐயோ.. அம்மா..” அலறலாக கத்தி கொண்டே அலையோடு அலையாக சிறிது தூரம் சென்றுவிட்டாள். 

“மகா..” ஈஷ்வர் பார்த்து பதறி தங்கையின் பின் கடலுக்குள் செல்ல, விஷ்ணு நன்றாகவே சத்தம் போட்டு சிரித்தான். 

“ஏய் லூசு.. உனக்கு தான் நீச்சல் தெரியும் இல்லை, நீந்த வேண்டியது தானே..”  ஈஷ்வர் அலையில் பாய்ந்து சென்று அவளை பிடித்திருந்தவன் கரைக்கு கூட்டி வந்தான். 

“ஹ்ஹா.. ஹ்ஹா..”  மூச்சு வாங்க இருமி  கொண்டு நின்றவளை பார்த்து விஷ்ணு இன்னும் சிரிக்க, அவளுக்கு கொதித்தது.

“முதல்ல தண்ணிய எல்லாம் உதறு..” ஈஷ்வர் தங்கைக்கு உதவ, 

“டே.. டேய்.. அண்.. அண்ணா.. சிரிக்கிறாங்க பாரு..” மூச்சு வாங்கி கொண்டே கத்தினாள். 

“விஷ்ணு.. சிரிக்காதடா.. “ ஈஷ்வர் அவனை அதட்டியவன்,   “முதல்ல நீ நான் சொன்னதை செய்..” என, மகாவும் மூக்கில், காதில் சென்ற தன்ணியை துடைத்து உதறி கொண்டிருந்தாள்.

“இப்போ ஓகேவா..?” இருமல் குறைந்த  அவளின் முதுகை தடவி விட்ட ஈஷ்வர் கேட்டான். 

“ம்ம்.. ஓகே..” மகா   தீயாக விஷ்ணுவை பார்த்தவள், “நீங்க தானே என்னை தள்ளிவிட்டீங்க..?” மூக்கு விடைக்க கேட்டாள். 

“நான் எங்க தள்ளிவிட்டேன்.. நீ தான் பேலன்ஸ் மிஸ் ஆகி விழுந்த..?”

“என்ன பொய் இது..? எனக்கு என்ன பேலன்ஸ் மிஸ் ஆச்சு..?”

“பின்ன நீ நேராவா நின்றிருந்த, எங்க பக்கம் சாய்ஞ்சு இல்லை நின்றிருந்த..?”

“நான் சாய்ஞ்சு நின்றிருந்தாலும் ஸ்டெடியா தான் நின்னேன்..?”

“ஆமா.. பார்த்தேன்.. பார்த்தேன்.. சாய்ஞ்சு காதை மட்டும் எங்களுக்கு வாடகைக்கு விட்டு நின்னிருந்த..”

“இதையும் பார்த்துட்டானா..?” மகா முறைப்பை குறைக்காமல் பார்த்தாள். 

“ம்ப்ச்.. என்ன மகா இது..?” ஈஷ்வர் தங்கையிடம் கேட்க, 

“ண்ணா.. எனக்கு தெரியாம அப்படி என்ன ரகசியம் பேசுறீங்கிற கியூரியாசிட்டில தான் நான்  அப்படி செஞ்சேன், தப்பு தான், சாரி கேட்டுக்கிறேன்..  ஆனா அதுக்காக இவர்  என்னை இப்படி கடல்ல தள்ளிவிடுவாரா..?”  விஷ்ணுவிடம் பாய்ந்தாள். 

“ம்ம்.. நீ பண்ண தப்புக்கு பனிஷ் பண்ணேன்..” அலட்சியமாக சொன்னான். 

“எது இப்படி கடல்ல  தள்ளிவிடறதா..? அப்படியே போய் சேர்ந்திருந்தா..?”

“என் அத்தை குடும்பம் தப்பிச்சிடும் உன் இம்சையிலிருந்து..”

“ண்ணா..”

“அவன்கிட்ட ஏன் கத்துற..?”

ஈஷ்வர் நனைந்த உடையை சரி செய்தவன், “நான் கிளம்புறேன்.. ரெண்டு பேரும் சண்டையை முடிச்சிட்டு வந்து சேருங்க..”  வீட்டிற்கு நடையை கட்டினான்.

“ண்ணா.. நானும் வரேன்..” விஷ்ணுவை முறைத்து நங்கு நங்கென ஈஷ்வர் பின்னால் மகா செல்ல, விஷ்ணு நக்கலாக சிரித்தபடி அவளை வெறுப்பேற்றி கொண்டே வந்தான்.

“விஷ்ணு வீட்டுக்கு வா..” ஈஷ்வர் சிக்னலில்  சொல்ல, 

“இல்லைடா.. சின்னுவை டின்னர்க்கு கூட்டிட்டு போலாம்ன்னு இருக்கேன், ரொம்ப நாள் ஆச்சு அவனோட வெளியே போய்.. பை..”  அடுத்த ரைட் எடுத்து கிளம்பிவிட்டான். 

“ஒரு கர்ட்டிசிக்காவது எனக்கு பை சொல்லுதா பாரு பாய்லர்..” மகா மனதில் அவனை தாளித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

“என்ன ரெண்டு பேர் ட்ரேஸும் ஈரமாயிருக்கு..” கங்கா பிள்ளைகளை கவனித்து கேட்க, 

“எல்லாம் அந்த ஹீட்டரால தான்.. உடம்பெல்லாம் திமிர்.. சரியான தந்தூரி அடுப்பு..” மகா அவரிடம் விஷ்ணுவை திட்ட ஆரம்பிக்க, ஈஷ்வர் ரூமிற்கு மேலேறிவிட்டான். 

குளித்து உடை மாற்றி வந்தவன், மொபைல் எடுத்தான். வழக்கம் போல நண்பர்கள் மெசேஜ் இருக்க, பார்த்து கொண்டிருக்க, நரசிம்மன் கார் சத்தம் கேட்டது. நேரம் பார்த்தவன், ஒரு பத்து நிமிடம் கழித்து கீழிறங்கினான். 

இரவு உணவு குடும்பத்துடன் முடிக்க, நரசிம்மன் மகனுக்கு எலெக்ஷன் பற்றிய விஷயங்களை பேசினார். அவன் கேட்டு கொண்டான், சிலவற்றுக்கு மட்டும் சரியா என்று  கேட்டான். பலது ம்ம்.. என்று மட்டும் சொல்லி கொண்டான். 

ஆட்சி மாற்றத்திற்கான எலெக்ஷனில் வழக்கம் போல அவரின் தொகுதி MLA சீட் அவருக்கு தான் கிடைத்திருந்தது. அதற்கான வேலைகள் முழு வீச்சில் சென்று கொண்டிருக்க, எப்போதும் போல குடும்பம் அதில் இருந்து ஒதுங்கியே இருந்தது. 

ஆனால் தந்தைக்கு மனம் விட்டு பேச, அலச, தெளிவு ஏற்பட அவருக்கு பேச நான் இருக்க வேண்டும் என்று ஈஷ்வர் நினைக்க, நரசிம்மன் அவனுடனான நேரத்தை விரும்பினார். வளர்ந்த ஆண் மகனுடான கலந்துரையாடல் அவருக்கு தெம்பை, மகிழ்ச்சியை கொடுத்தது. இப்படியே வெகு நேரம் கடந்துவிட, கங்கா வந்து தான் இருவரையும் தூங்க கிளப்பினார். 

ஈஷ்வர் சோம்பலுடன் ரூம் வந்தவன், பெட்டில் விழுந்தான். கண் மூட பல்லவி தான் மனதில் வந்தாள். கோவிலில் வைத்து இருவரும்  எதிர்பாராமல் பார்த்தது, அவளின் ஆச்சரிய பார்வை, கீழே வரும் போது அவளும் என்னை தேடி வந்தது, பீச்சிலும் என்னையே பார்த்து கொண்டிருந்தது, கிளம்பும் போதும் என்னை பார்த்து கிளம்பியது என்று அவளுக்கே தெரியாமல் அவளை நோட்டம் விட்டிருந்தவன், படுத்தபடி முழுதும் மனதில் ஒட்டி பார்த்து கொண்டிருந்தான். 

“அவங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்கிறாங்க போல..” பீச்சில் வைத்து பரணியும், இன்னொரு பெண்ணும் தனியே பேசுவதை வைத்து கணித்திருந்தான். 

“எப்போவும் பொண்ணுக்கு தானே முதல்ல பார்ப்பாங்க, என்ன சொல்லி தப்பிச்சிருப்பா..?” கேட்டு தெரிந்து கொள்ள ஆசை தான். 

“ஆனால்.. விடு.. ஈஷ்வர்.. நீ பண்ணதும் கொஞ்சம் தப்பு தானே..?”  முன்பிருந்த கோவம் குறைந்திருக்க, தன் மீதான தவறு லேசாக புரிந்திருந்தது. இருப்பினும் அவனுள் இருக்கும் காதலன் விழித்து கொண்டு உன் மீது தவறு இல்லை என்று வாதாடினான். 

“அதெப்படி நீ தப்பு..? உன் பர்த்டே தானே அவளுக்கு முக்கியமா இருந்திருக்கணும்..? அதுவும் அவளுக்கு உன் பர்த்டேன்னு தெரிஞ்சும் நீ கூப்பிட்டு வரல, அத்தை மகன் ப்ரோமோஷன் தான்  முக்கியம்ன்னு  செலிபிரேட் பண்ண போயிட்டா..”

“ஓகே.. இருக்கட்டும், விடு, பேமிலியை மீறி எதுவும் செய்ய முடியாது, ஒத்துக்கிறேன், ஆனா அதுக்காக ஒரு விஷ் கூட பண்ண கூடாதா..? அந்த முழு நாள்ல உன்கிட்ட பேச அவளுக்கு ஒரு அஞ்சு செகண்ட் கூட கிடைச்சிருக்காதா..?” பல்லவி மீதான அவனின் கோவங்களை பட்டியலிட்டபடியே தூங்கி போனான். 

அடுத்த  இரு வாரங்கள்  ஒருவித மௌனத்துடனே முடிய, நரசிம்மனின் எலெக்ஷன் பிரச்சாரங்கள் முழு வீச்சில் சென்றது. அவரின் கட்சி தொண்டர்கள் தீயாக வேலை செய்தனர். 

மொத்த தொகுதியிலும் ஒரு தெரு கூட விடாமல் பிரச்சாரம் செய்தார். பல்லவி தெரு சென்ற நேரம் பல்லவி வெளியே வரவே இல்லை. நரசிம்மனுக்கு அந்த வீடு தான் என்று தெரிந்திருக்க மேலோட்டமாக பார்த்தவர், பிரச்சாரத்தில் கவனம் செலுத்தினார். 

கத்தி பேசி பேசி தொண்டை கமறி போனது அரசியல்வாதிக்கு. மெடிசின் எடுத்து விடாமல் பேசி மக்களை தன் பக்கம் கவரும் தீவிரத்தில் சுற்றினார். எலெக்ஷனுக்கான நாள் நெருங்க நெருங்க நரசிம்மனிடம் பரபரப்பு இன்னும் கூடியது. வீட்டிலும் அதே நினைப்பில் சுற்றி கொண்டிருந்தார் மனிதர். 

ஜெயித்து விடுவோம் என்று நம்பிக்கை நிச்சயம் இருந்தாலும், எதிர்த்து போட்டியிடும் ஆட்கள் என்ன செய்து மக்களை அவர்கள் திருப்பி விடுவார்கள் என்று எந்நேரமும் கண் விழித்தே கிடந்தார். கங்கா, ஈஷ்வர் தான் மருத்துவர்கள் பரிந்துரைபடி மைல்டான தூக்க மாத்திரை கலந்து கொடுத்து இரவில்  தூங்க செய்தனர். அதுவும் அவருக்கு தெரியாமல் தான். 

இப்படியே நாட்கள் செல்ல, எலெக்ஷனுக்கான நாளும் வந்தது. நரசிம்மன் காலையிலே குடும்பத்துடன் சென்று தங்கள் ஓட்டை பதிவு செய்துவிட்டு, வீட்டிற்கு திரும்பினர். ஈஷ்வர் அவருடனே இருக்க, அவர் போனில் கட்சி ஆட்களுடன் பேசி கொண்டே இருந்தார். 

மதியம் வரை நன்றாக சென்று கொண்டிருக்க, ஒரு பூத்தில் பிரச்சனை கிளம்பியது. வோட்டிங் நிறுத்தி வைத்தனர். “என்னன்னு சீக்கிரம் பாருங்க..” நரசிம்மன் ஆட்களை விரட்ட, இரண்டு மணி நேரம் கழிந்தது தான் மிச்சம். பிரச்சனை தீரவில்லை. 

“நானே வரேன்..” என்று மனிதர் ஆக்ரோஷமாக கிளம்ப, ஈஷ்வருக்கு அவரை தனியே விடமனதில்லை. 

“தம்பி நாங்க பார்த்துகிறோம்..” உடன் இருக்கும் கலையரசு சொல்ல, 

“இருக்கட்டும்.. நான் வரேன்..” என்று கிளம்பிவிட, நரசிம்மனுக்கு மகன் வருவது வேண்டாம் என்று தோன்றியது. அங்கு சூழ்நிலை எப்படி இருக்குமோ..? 

“நீங்க இருங்க.. நான் பார்த்துகிறேன்..” மகனிடம் சொல்லி பார்த்தார். 

“நீங்க வாங்க போலாம்..” அவருக்கு முன் காருக்கு செல்பவனை என்ன சொல்ல நிறுத்த..? மகனுடன் அந்த பூத்திற்கு சென்றார். 

“இருக்கிறதுலே இந்த பூத் தான் பெரிசு, அதோட நமக்கு ஓட்டு அதிகம் வர பூத்தும் இது தான்..”  கலையரசு சொல்ல, புரிந்து போனது இது திட்டமிடபட்டது என்று. அது புரிந்து தான் ஈஷ்வரும் கிளம்பி வந்திருந்தான். 

அவன் எதிர்பார்த்தது போல, இவரை கண்டதும் மேலும் பிரச்சனை வலுத்தது. போலீஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட, ஆட்கள் மீறி எகிறினர். “இங்க கள்ள ஒட்டு போடுறாங்க, நாங்க வோட்டிங் நடக்க விடமாட்டோம்..” என்று ஆர்ப்பாட்டம் செய்ய, 

“இங்க பாருங்க நீங்க தேவையில்லாம பிரச்சனை பண்றீங்க, வோட்டிங் பூத்ல உங்க  கட்சி ஆளுங்க இருக்காங்க, மத்த கட்சி ஆளுங்களும் இருக்காங்க, ஆபிசருங்க இருக்காங்க, போலீஸ் இருக்காங்க, எல்லாரையும் மீறி இங்க யார் கள்ள ஒட்டு போட்டாங்கன்னு சொல்லுங்க, ஒரே ஒருத்தரை காட்டுங்க பார்ப்போம்..” நரசிம்மன் ஆர்ப்பாட்டம் செய்பவர்களிடம் பேச, அவர்களுக்கோ அவர் பேசுவதை கேட்டு பதில் சொல்லும் எண்ணமே இல்லை போல, 

“வோட்டிங் நடக்க கூடாது அவ்வளவு தான்..” என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கத்தி கொண்டிருந்தனர். 

நரசிம்மனுக்கு ரத்த அழுத்தம் எகிறியது. “பொட்டைபசங்க.. முதுகுல குத்துறானுங்க..” கோவத்தில் பேச, கேட்டுவிட்ட எதிர்க்கட்சி ஆட்களில் ஒருவன்,   

“யாரு பொட்டை பசங்க சொல்ற..”  என்று பக்கத்தில் முன்னமே பார்த்து வைத்திருந்த கல்லை எடுத்து அவரை நோக்கி வீசினர். 

அவர்களையே கூர்மையாக பார்த்து கொண்டிருந்த ஈஷ்வர், மின்னலாக தனக்கு முன்னால் நின்றிருந்த நரசிம்மனை விலக்க, பின்னால் நின்றிருந்த அவன் நெற்றியை  அந்த கல் பதம் பார்த்தது. 

“தம்பி..” நரசிம்மன் மகனின் நெற்றியில் வழிந்த ரத்தத்தை பார்த்து துடித்து போய் எறிந்தவனிடம் பாய போக, அவரால் நகரவே முடியவில்லை. ஈஷ்வர் அவரின் கையை பிடித்திருந்தவன்,  

“ப்பா.. யாரும் எதுவும் செய்ய கூடாது, இங்க கட்சி ஆளுங்க மட்டுமில்லை, பப்லிக்கும் இருக்காங்க, உங்க சண்டையிலே அவங்களுக்கும் அடிப்பட வாய்ப்பிருக்கு..” வோட் போட வந்திருந்த மக்களை காட்டி சொல்ல, நரசிம்மனுக்கு மகனின் வார்த்தையை மீறமுடியவில்லை. அவன் சொல்வதும் நியாயம் என்ற காரணமும் ஒரு காரணம். 

“சரி.. வாங்க.. நாம முதல்ல ஹாஸ்பிடல் போலாம்.. இவங்க என்னமும் செய்யட்டும்..”  மகனின் நெற்றில் ரத்தம் வடிய, அழுத்தி பிடித்தபடி காருக்கு செல்ல, போலீஸ் நடக்க வேண்டியதை பார்த்து கொண்டனர். 

விஷ்ணுவின் அம்மா துர்கா  மருத்துவமனைக்கு தான் நரசிம்மன் மகனுடன் சென்றார். ஈஷ்வர் அங்கு தான் போக வேண்டும் என்றுவிட, தங்கைக்கு போன் செய்து விஷயத்தை சொன்னவர், சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் சென்றுவிட்டனர். 

விஷயம் கேள்விப்பட்டு குடும்பத்தினர் ஹாஸ்பிடல் வந்தனர். எல்லோருக்கும் அன்று எலெக்ஷன் விடுமுறை இருக்க, விஷ்ணு  முதல் ஆளாக ஹாஸ்பிடலில் இருந்தான்.  இவன் சென்ற நேரம் உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருக்க, நேரே கதவு திறந்து கொண்டே உள்ளே சென்றான். 

“யார் அது ட்ரீட்மெண்ட் நடக்கும் போது உள்ள வரது..?” அதட்டலுடன் கேட்ட துர்கா  விஷ்ணுவை பார்த்ததும் சலிப்பாக தலையை ஆட்டிவிட்டு சிகிச்சையை தொடர்ந்தார். 

ஈஷ்வர் சத்தம் கேட்டு கண் திறந்து பார்த்தவன், விஷ்ணு எனவும் லேசாக சிரிக்க முயன்றான். 

அவனோ, “சிரிச்சிடாத, அப்பறம் தலையை மொத்தமா பொளந்திடுவேன்..” கோவத்தில் எச்சரிக்கையாக சொன்னான். 

“விஷ்ணு..  என்ன பேச்சு இது..? அவன் இப்போ பேஷண்ட், ஒரு டாக்டரா இருந்துகிட்டு இப்படி தான் பேஷன்ட்கிட்ட பேசுவியா..?” துர்கா மகனை கண்டித்தார். 

“நீங்க இப்படி தான் பேஷண்ட்க்கு ட்ரீட்மெண்ட் பண்றதை விட்டுட்டு அட்வைஸ் பண்ணிட்டு இருப்பீங்களா..? முதல்ல நீங்க உங்க வேலையை பாருங்க..”  மகன் அவர்க்கு மேல் பேசியவன், 

“யார் அவனுக்கு பெயின் கில்லர் இன்ஜெக்ஷன் போட்டது, டோஸேஜ் பத்தலை..” அங்கிருந்த நர்ஸை பார்த்து கோவமாக கேட்டான்.