“உப்ப்ப்ப்ப்ப்..” ஈஷ்வர் அவனின் வீட்டிற்கே சென்றுவிட்டான். அதற்கு பிறகு அவளுக்கு போனே செய்யவில்லை. இரவு போல பல்லவி மொபைல் ஆன் செய்ய, அவ்வளவு மெசேஜ், மிஸ்ட் கால்.
“அச்சோ..” உடனே ஈஷ்வருக்கு அழைத்தாள். அவன் பார்த்தவன் எடுக்கவே இல்லை. இவளும் விடாமல் கூப்பிட, ஒரு கட்டத்தில் எடுத்துவிட்டான்.
“ஆமா.. இன்னும் ஒரு எக்ஸாம் மட்டும் இருக்கு, படிக்கணும்..”
“ஓகே.. நீங்க படிங்க..” எக்ஸாம் இருக்கு எனும் போது எப்படி பேச..?
“நான் வைக்கிறேன்..” ஈஷ்வர் உடனே வைத்துவிட, பல்லவிக்கு எப்படியோ ஆனது.
“என்ன உடனே வச்சுட்டார்..? இன்னும் கோவம் போலையா..? தப்பு உன்னது தான் பல்லவி.. நீ மொபைல் ஆன் பண்ணியிருக்கணும், அவர் கூப்பிடுவார்ன்னு நீயும் எதிர்பார்த்த தானே அப்பறம் என்ன..?” தன்னை தானே குட்டி கொண்டவள், அவனை சமாதானம் செய்ய யோசித்தாள்.
“ஏய் சூப்பர்.. இந்த சண்டே அவருக்கு பர்த் டே வருது இல்லை, அப்போ சர்ப்ரைஸ் கொடுத்து சமாதானம் செஞ்சிடலாம்..” குதூகலித்தவள், தன் காதல் சொல்லும் கிப்ட் என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
பல்லவிக்கு அவன் பிறந்தநாள் தெரியும். இருவரும் ஒரே ஸ்கூல் தானே. அவன் கொண்டாடி பார்த்திருக்கிறாள். அவளுக்கும் சாக்லேட் வரும். கொடுக்கும் போது இருபக்க நண்பர்கள் ஓஓஓ என்று கத்தி சிரிப்பதும் நினைவிற்கு வர, இப்போது முகம் பளபளத்தது.
அடுத்த இரண்டாம் நாள் ஈஷ்வர்க்கு எக்ஸாம் முடிந்துவிட, “மால் போலாமா..?” என்று வந்தான் விஷ்ணு.
“ஒன்னும் வேண்டாம் விடுடா..” அவன் பிறந்த நாளிற்கு உடை வாங்க தான் கூப்பிடுகிறான் என்று தெரிந்து ஈஷ்வர் மறுத்தான்.
“இதே பல்லவி நீ லவ் சொன்னதுக்கு ஓகே சொல்லியிருந்தா இந்நேரம் அவளோட மால்.. மாலா சுத்தியிருப்ப இல்லை.. நான் கேட்டா பிகு பண்ற, வாடா..” விஷ்ணு இழுத்து கொண்டு சென்றவன், டீசர்ட், ஷார்ட், பேண்ட் எல்லாம் வாங்க, ஈஷ்வர் சும்மாவே சுற்றி கொண்டிருந்தான்.
“வா காபி குடிக்கலாம்..” இருவரும் புட் கோர்ட் செல்ல , விஷ்ணு காபி வாங்க சென்றான். ஈஷ்வர் மேலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, “பல்லவி..” பார்த்தவுடன் கோவம் மறந்து உள்ளம் துள்ளியது.
“அவகிட்ட போலாம்..” என்று கீழிறங்க ஆரம்பித்தவன், உடன் இருந்த அந்த இளைஞனை பார்த்ததும் அப்படியே பின்னால் காலை வைத்தான். அவனே தான். அத்தை பையன். அவர்களுடன் பரணியும் தான் இருந்தான். ஆனாலும்.. அவளையே பார்த்து நின்றுவிட, மூவரும் கீழிறங்கி மால் வாசலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
“இந்தாடா..” விஷ்ணு அவனின் கையில் காபி கொடுக்க, சூடாகாவே குடித்து வைத்தான்.
“என்னடா..?” விஷ்ணு கவனித்து கேட்க,
“ச்சு.. ஒன்னுமில்லை, விடு.. கிளம்பலாம்..” என்றுவிட, விஷ்ணு எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான். இருவரும் ஈஷ்வர் வீட்டிற்கு தான் சென்றனர். இது உனக்கு தான்.. ஷாப்பிங் செய்த பைகளை ஈஷ்வர் ரூமில் வைத்த விஷ்ணு, கங்கா கொடுத்த ஸ்னேக்ஸ் சாப்பிட்டு கிளம்பிவிட்டான்.
“என் பர்த்டே மேடத்துக்கு ஞாபகம் இருக்குமா..?” ஈஷ்வர் யோசித்தவன் கேட்கவில்லை. அந்த நாளில் ஆயிரத்தெட்டு பிளான் வைத்திருந்தான். இப்போது எதுவும் தோன்றவில்லை. மாலை போல பல்லவியே கால் செய்தாள்.
“என்ன அதிசயம்..?” போன் எடுக்க, “எக்ஸாம் முடிஞ்சுதா..? எப்படி பண்ணியிருக்கீங்க..?” கேட்டாள்.
“ம்ம்.. முடிஞ்சது..” அவளின் கேள்விக்கு பதில் சொன்னவன், ஒருமுறை கேட்டு பார்க்கலாமா என்று தோன்ற, “இந்த சண்டே ஏதாவது கமிட்மென்ட் இருக்கா..?” கேட்டான்.
பல்லவிக்கு புரிந்தது. மறைத்த சிரிப்புடன் “அப்படி எதுவும் இல்லை..” என்றாள்.
“ம்ம்.. மீட் பண்ணலாமா..?”
“சண்டே.. எப்படி வெளியே வர..?”
“கொஞ்ச நேரம் மட்டும்..”
“நான் வீட்ல கேட்டுட்டு சொல்லவா..?”
“ஓகே.. பட் வர ட்ரை பண்ணு பல்லவி..”
“ம்ம்..” போனை வைத்தவளின் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது. அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்று தெரியாமலே அவனுடன் விளையாடி பார்க்க ஆசைப்பட்டாள் பெண்.
அந்த சண்டே பல்லவியின் அத்தை பையன்.. சரண்.. அவனுடைய முதல் ப்ரோமோஷனுக்கு இவர்களை வெளியே அழைத்து செல்ல கேட்டிருந்தான். மூர்த்தியுடன் பிறந்தவர் அவர் தங்கை மட்டுமே தான் என்பதால் இரு குடும்பத்திற்கும் நெருக்கம் அதிகம் தான்.
பங்க்ஷன், செலிபிரேஷன் என்றால் இரு குடும்பமும் சேர்ந்து தான் கொண்டாடுவர். அதன்படி சரணின் ப்ரோமோஷனுக்காக இரு குடும்பத்தையும் அவுட்டிங் போல அழைத்து செல்ல, பரணி, பல்லவியிடம் தான் இடம் கேட்டிருந்தான்.
பல்லவியோ ஈஷ்வர் அன்று எங்கு செல்வான் என்று விசாரிக்க நினைத்து கொண்டாள். அதன்படி இரவு அவன் போன் செய்ததும்,
“வீட்ல கேட்டேன்.. வெளியே போக வேண்டாம் சொல்லிட்டாங்க..” என்றவள். “உங்களுக்கு என்ன பிளான்..? ஏன் பார்க்கணும் கேட்டீங்க..?” தெரியாதது போல கேட்டாள்.
“ம்ப்ச்.. ஒன்னுமில்லை..” ஈஷ்வர் சொல்ல,
“ஒன்னுமில்லாம தான் பார்க்க கேட்டீங்களா..?”
“ச்சு.. விடு..”
“ஓகே.. நீங்க அன்னிக்கு வெளியே போறீங்களா என்ன..?” எப்படியும் நண்பர்களுடன் வெளியே செல்வான் என்று தோன்ற கேட்டாள்.
“ம்ம்.. கிளாஸ் ப்ரண்ட்ஸ் கூட ECR **** ரிசார்ட் போறேன்..”
“ஓகே.. நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க..”
“க்கும்.. ரொம்ப முக்கியம்..” கடுப்பானவன், “லாஸ்ட்டா ஒரு முறை கேட்டு பாரேன் வீட்ல..” மறுபடியும் கேட்டான்.
“கஷ்டம்.. திரும்ப திரும்ப கேட்டா பாட்டி பேசுவாங்க.. நான் வரல..”
“எவ்வளவு ஈஸியா சொல்றா..? முயற்சி பண்ணி வரலாம் இல்லை..”
“ஓகே.. பை..” அவன் வைத்துவிட, பல்லவி இங்கு சிரித்து கொண்டாள். அன்றிரவு பரணி மூலம் சரணுக்கு சொல்ல, அவனும் அன்றே அங்கு புக் செய்துவிட்டான்.
“ஓகே.. சண்டே லன்ச்.. கேம்ஸ்.. ஈவினிங் ஸ்னேக்ஸ் எல்லாம் முடிச்சிட்டு கிளம்பிடலாம்..” என முடிவானது.
******************
ஈஷ்வரின் பிறந்த நாளும் வர, “அட்லீஸ்ட் விஷ் மட்டுமாவது பண்ணுவாளா..?” அவளின் முதல் வாழ்த்திற்காக பிறந்த நாள் முன்னிரவு பனிரெண்டு மணி வரை விழித்திருந்தான்.
அவளை தவிர எல்லோரும் விஷ் செய்தனர். “கேட்டிடுவோமா..? மொபைல் எடுத்தவன் வைத்துவிட்டான். அவளுக்கு நான் முக்கியமானவனா இருந்தா தான் இதெல்லாம் ஞாபகம் இருக்கும்..?”
மறுநாள் காலையிலே குளித்து நரசிம்மன் எடுத்து கொடுத்த புது உடை அணிந்து கிளம்பியவன் பல்லவிக்காக வாங்கிய கிஃப்ட்டை எடுத்து பார்த்தான். “அவ வீடு பக்கம் போயாவது கொடுத்திடலாமா..? ஒன்னும் வேண்டாம்.. இப்போவரை ஒரு மெசேஜ் கூட இல்லை..” அங்கயே வைத்துவிட்டு கீழே வந்தான்.
நரசிம்மன் அவனுக்காக சோபாவில் காத்திருந்தவர் அவன் வரவும், “இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..” என்றார். அவரை தொடர்ந்து அம்மா, மகா விஷ் செய்தனர். தேங்ஸ்ப்பா.. என்றவன் அம்மா, அப்பா நிற்க வைத்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான்.
“ண்ணா..” மகா கை நீட்ட, அவளின் தலையில் கொட்டியவன், பர்சில் இருந்து பணம் எடுத்து கொடுத்தான்.
“க்கும்.. இங்க மட்டும் தான் இப்படி நடக்கும், கிப்ட் கொடுக்காம வாங்கிறது..” மகாவை நக்கலடித்தபடி வந்தான் விஷ்ணு. உடன் அவன் குடும்பம். அவர்களும் ஈஷ்வருக்கு விஷ் செய்ய, அத்தை, மாமா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான்.
“என்ன சொல்ற இவர் மட்டும் கை நிறைய கிப்ட்டோட தான் வந்திருக்கார்..” வெறுங்கையோடு வந்திருந்த விஷ்ணு பார்த்து மகா கடுப்பாக முணுமுணுத்தாள்.
“நானே என் மச்சானுக்கு பெரிய கிப்ட் தான்..” விஷ்ணு ஈஷ்வரை அணைத்து மட்டுமே கொண்டான்.
“விஷ் கூட பண்ணல..” மகா நக்கலடிக்க, ஈஷ்வர், விஷ்ணு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். விஷ்ணுவின் அணைப்பே அவனின் வாழ்த்து என்பது ஈஷ்வருக்கு புரியும்.
“கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம்..” நரசிம்மன் சொல்ல, எல்லோரும் கோவில் சென்றனர். மகனின் பிறந்த நாளிற்காக எல்லா வருடம் போல இந்த வருடமும் ஸ்பெஷல் பூஜை, அன்னதானம் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார் நரசிம்மன். அவர்களுக்கும் காலை உணவு அங்கேயே தான்.
முடியவும் வீட்டிற்கு வந்தனர். கங்கா அவனுக்கு பிடித்த ஸ்வீட் கொடுக்க, சாப்பிட்டவர்கள், வீட்டில் சொல்லிக்கொண்டு ரிசார்ட் கிளம்பினர். ஈஷ்வர் விஷ்ணு எடுத்து கொடுத்த உடை மாற்றி வந்தான்.
“உன் ப்ரண்ட்ஸ் யாரையாவது பிக் அப் பண்ணனுமா..?” காரை ட்ரைவ் செய்து கொண்டிருந்த விஷ்ணு கேட்க,
“ஓகே அப்போ சுப்பு மட்டும் கூப்பிட்டு கிளம்பிடலாம்..” என்று விஷ்ணுவின் நெருங்கிய நண்பன் சுப்ரமணிய கூட்டிக்கொண்டு கிளம்பினர்.
இங்கு பல்லவியின் இரு குடும்பமும் காரில் கிளம்பி ரிசார்ட் வந்தனர். பல்லவி கண்கள் இறங்கியதும் ஈஷ்வரை தான் தேடியது. உள்ளே செல்ல குடில் குடிலாக லன்ச் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்களை போல பலர் புக் செய்து வந்திருந்தனர்.