திகம்பரனின் திகம்பரி அவள் 6

பல்லவிக்கு மறுநாள் காலை ஒன்பது மணி போல தான் விழிப்பு வந்ததுதூக்கம் கலைந்து கண் திறக்கும் சில நொடிகளுக்குள் நேற்றிரவு நடந்தது நினைவிற்கு வர, உடல் வலியும் அதை உறுதி படுத்தியது

முழு வெறுமை. அதையும் மீறி கோவம். மனதின் ஓரத்தில் சிறு கசப்பும். சீறலான மூச்சை இழுத்துவிட்ட படி கண் திறந்தவளுக்கு மகளின் நினைவு. வேகமாக நிமிர்ந்து பெட்டை பார்க்க அங்கு அவள் இல்லை

எங்க போனா..?” நேரம் பார்க்க ஒன்பது என்றது. “வீட்ல யாரும் வந்து தூக்கிட்டு போயிருப்பாங்களா..? ஒருவேளை ஈஷ்வர்கிட்ட இருப்பாளோ..?குளித்தபடி  யோசித்தவள் கீழே வர, கோமதி அமர்ந்திருந்தார்

சில வருடங்களுக்கு பிறகு பாட்டியை பார்க்கிறாள். அவரும் படியில் இறங்கும் இவளை பார்த்தவர், படக்கென எழுந்து ரூமிற்குள் சென்றார். அதுவும்,  “காலையிலே யார் யார் முகத்தையோ பார்க்க வேண்டியிருக்கு..”  என்று சத்தமாக முணங்கி சென்றார்

அதிலே  அவர் மாறவில்லை என்பது புரிந்ததுபல்லவியின் நெகிழ்ந்த உள்ளம், சுருங்கி கொண்டது. ஒரு இரவிற்குள் பலமுறை இங்கு வந்தது தவறு என்று உணர்ந்துவிட்டாள்

பல்லவி எழுந்துட்டியா..?” ரத்னா மகளிடம் வர

அனு.. எங்கம்மா..?” கேட்டாள் மகளை தேடியபடி

மாப்பிள்ளை தான் வெளியே தூக்கிட்டு போயிருக்கார்.. நீ உட்காரு, சாப்பிடுவ..” உணவு எடுத்து வைக்க

இருக்கட்டும்மா, அனு வந்துரட்டும்..” வாசலுக்கு சென்றாள். ஹாலில் அமர்ந்து இவளையே ஏக்கமாக பார்த்து கொண்டிருக்கும் மூர்த்தியை கடந்து தான் சென்றாள். பேச தோணவில்லை

அன்றிரவு அவர் ஆடிய ஆட்டம், அவளை வீட்டை விட்டு வெளியே துரத்திய கோமதியின் மகனை, அவர் மகள் மறக்கவில்லை. அவர்தான் அப்படி என்றால் பார்த்தவுடன் அடித்த பரணி

அப்பா எப்போவும் அப்படித்தான், ஆனா என் அண்ணா பெஸ்ட் அண்ணா..” மனதுள் பெருமை கொண்டுதேடிய அண்ணன் என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் பார்த்தவுடன் கை நீட்டியது. அதுவும் இத்தனை வருடம் கழித்து பார்க்கும் போது

எல்லாம் போக அவளின் ஈஷ்வர்..”  நினைப்பதற்கே ஒன்றும் இல்லை. அந்த நொடி அவளை சுற்றி இருக்கும் ஆண்கள் அவளுக்கு வேம்பாக கசந்தனர். அந்த கசப்பு அவளின் முகத்திலும் தெரிய நின்றிருந்தாள். காரை நிறுத்திவிட்டு மகளுடன் வந்த ஈஷ்வருக்கு அவளின் முகம் சொல்லியது அவளின் மனநிலையை

ம்மா..” அம்மாவை பார்த்த நொடி அனு அப்பாவிடம்  இருந்து இவளிடம் தாவினாள்

ம்மா.. நானு ஈஷூ கூட காபி சாப்பிட்டேன்.. ஸ்வீட்டா இருந்துச்சு..” அனு சொல்ல, பல்லவி திரும்பி கணவனை முறைத்தாள்

காலையிலே எழுந்து உன்கிட்ட தான் வந்தா, நீ நல்லா தூங்கிட்டு இருந்த, சரின்னு  கீழே தூக்கிட்டு வந்தா யார்கிட்டேயும் போக மாட்டேன்னு சொல்லிட்டா.. அதான் என்னோட வெளியே கூட்டிட்டு போனேன், சாப்பிட அவளுக்கு என்ன வாங்கி கொடுக்கன்னு தெரியல, பால் பிடிக்கல, சோ காபி வாங்கி கொடுத்தேன்..”  தோள் குலுக்கினான்

காபி டேஸ்ட் பழகிட்டா பால் எப்படி குடிப்பா..?” பல்லவி அடிக்குரலில் கேட்டாள்

இன்னிக்கு ஒரு நாள் குடிச்சா  என்ன..?”

ஒருநேரம் குடிச்சாலும் டேஸ்ட் பழகிட்டா மாத்துறது கஷ்டம், அதுவும் இவளுக்கு பால் பிடிக்காதுன்னு போதும் எப்படி மறப்பா..?”

ஏய் என்னடி ஒரு காபிக்கு இவ்வளவு பேசுற..?” 

உன்கிட்ட பேச முடியாது..” பல்லவி  முகம் திருப்பினாள்

மாப்பிள்ளை வாங்க சாப்பிடலாம்..” ரத்னா வர

எனக்கு வேண்டாம்.. நான் கிளம்புறேன்..” என்றான் மருமகன்

என்ன மாப்பிள்ளை இது..? சாப்பிட்டு போங்க, பல்லவி.. சொல்லும்மா..” மகளிடம் கேட்டார்

இல்லை.. எனக்கு வேண்டாம்..” ஈஷ்வர் உறுதியாக மறுத்தவன், “பார்க்கலாம்..” என்று அர்த்தமான சிரிப்புடன், மகளிடம் சொல்லி கொண்டு கிளம்ப,  பல்லவிக்கு புரிந்து போனகு இன்றிரவும் வருவான் என்று. 

“பல்லவி.. உள்ள வாம்மா, சாப்பிடலாம்..” ரத்னா கூப்பிட, சாப்பிட சென்றாள். மூர்த்தியும் அப்போது தான் சாப்பிட அமர்ந்தார். பரணி மகளுடன்  கடைக்கு சென்றிருந்தவன் வர, அவர்களும் சாப்பிட அமர்ந்தனர். 

“அனு குட்டிக்கு என்ன பிடிக்கும் இட்லியா..? பூரியா..?” ரத்னா பேத்தியிடம் கேட்க, அவள் அம்மாவின் கழுத்தில் முகம் மறைத்தாள். 

“இட்லி வைங்கம்மா..”  பல்லவி அதையே மகளுக்கு ஊட்டினாள். 

“இப்படி தான் நாங்களும் மடியிலே வச்சு வளர்த்தோம், கடைசில என்ன கிடைச்சுது..?  ஊர் உலகத்துக்கு முன்னாடி எங்க மான, மரியாதை போனதை தவிர..”  கோமதி சோபாவில் அமர்ந்தபடி வார்த்தைகளை கொட்டினார். இட்லி எடுத்த பல்லவி கைகள் அப்படியே நின்றது. ஏன் கண்ணீர் கூட வரும் போல இருந்தது. 

“பாட்டி என்ன பேசுறீங்க..?” பரணி கோவமாக பேச, 

“என்னடா தப்பா பேசிட்டேன், யாரையோ நம்பி ஓடி போனவ தானே, பிள்ளையோட  திரும்பி வந்தா எல்லாம் மாறிடுமா..?”

“அத்தை.. உங்களை கெஞ்சி கேட்கிறேன், தயவு செஞ்சு எதுவும் பேசாதீங்க..”  ரத்னா கெஞ்ச, 

“நீங்க இப்படி இருக்கிறதால தான் அவ இப்படி எல்லாம் நடந்துகிறா..? இங்க நம்ம விட்டு தான் ஓடி போனான்னு பார்த்தா, அங்கேயும் புருஷனை விட்டு போய் எங்கேயோ வருஷ கணக்கா இருந்திருக்கா.. அவ்வளவு திமிர், தைரியம்..” அவ்வளவு தான் பல்லவி எழுந்தேவிட்டாள். 

“இதுக்கு தான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா..?” கத்த வாய் துறுதுறுத்தது. மகளுடன் வேகமாக மேலேறினாள். வந்த ஒரு நாளிலே அவள் எடுத்த முடிவு தவறு என்று உறுதியாக  புரிந்துவிட்டது. 

தேவாலாவில் இருந்து வந்தே இருக்க கூடாது. அவளின் ஹாண்ட் பேக்கில் எப்போதும் இருக்கும் பிஸ்கெட் எடுத்து மகளுக்கு ஊட்டி கொண்டிருக்க, அப்பா, அம்மா, அண்ணா எல்லோரும் மேலே வந்துவிட்டனர். 

“பல்லவி.. அம்மா பேசினது தப்பு தான்மா, அதுக்காக சாப்பிடாமலே வந்திட்டா எப்படி..? குழந்தைக்கு  பசிக்குமே..”  பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டிருந்த அனுவை  பார்க்க மூவருக்கும் மனம் பிசைந்தது. 

“பல்லவி.. பாட்டி பேச்சை மனசில ஏத்திக்காத, சாப்பிட போலாம் வா..” பரணி கூப்பிட, ரத்னா மகளை கூப்பிட கூட வாய் வராமல் நின்றார். பல்லவியின்  மனம் இப்போது என்ன பாடுபடும் என்று அம்மாவாக புரிவது விட, ஒரு பெண்ணாக புரிந்தது. 

“பல்லவிம்மா உன்னை நாங்களே வற்புறுத்தி கூட்டிட்டு வந்து இப்படி பேச்சு வாங்கறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, ஆனா பாட்டி பத்தி தெரியுமேடா, எங்களுக்காக வாடா..” மகளின் வயிற்றுக்காக கூப்பிட்டார் ரத்னா. 

பல்லவியால் எதுவும் பேச முடியும் என்று தோன்றவில்லை. அவள் மேலும் தவறு தான் பெற்றவர்களின் நம்பிக்கையை உடைத்திருக்கிறாள். அதையும் மீறி அவள் மேல் அவர்கள் வைத்த பாசம் தான் அவளை தேடி வரவும் வைத்தது. இங்கு கூட்டி வரவும் செய்தது.

“ம்மா.. ப்ளீஸ்,  நான் சரியாகிடுவேன்..” மிகவும் இறுக்கமாக பேச, மூவரும் எடுத்து வந்த உணவை சாப்பிடும் படி சொல்லிவிட்டு கீழிறங்கினர். 

ஸ்மிதாவிற்கு அன்று விடுமுறை நாள் என்பதால் அனுவிடம் விளையாட வந்தாள். உடன் வந்த மகிளா அவளிடம் பேச பல்லவி நல்ல முறையில் பேசவே விரும்பினாள். ஆனால் அண்ணியின் பேச்சு ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை. 

“இங்கிருந்து எங்க போன..? ஏன் போன..? என்ன பிரச்சனை..? அங்க போன இடத்துல சாப்பாட்டுக்கு என்ன பண்ண..? மினிஸ்டர் வீட்ல உன்னை சேர்த்துக்கலயா..?” இது போல கேள்விகள். 

இடையிடையே எள்ளலுடன்  வேற பேச, பல்லவி அமைதியாகி போனாள். மருமகளின் குணம் அறிந்து ரத்னா வந்து அவளை அழைத்து செல்வதற்குள் பல்லவிக்கே தலை வலியே வந்துவிட்டது.  

அடுத்த ஒரு மணி நேரத்தில்  பல்லவியை தேடி ஒருவர் வந்தார். நரசிம்மன் அனுப்பியதாக சொல்ல பல்லவி மகளுடன் கீழிறங்கி வந்தாள். “பெரியம்மா உங்ககிட்ட கொடுங்க சொன்னாங்கம்மா..” கங்கா கொடுத்ததாக சொல்லி ஒரு பார்சலை நீட்டினார். 

“வெளியே கார் இருக்கும்மா, ட்ரைவர் இங்கேயே இருப்பார்..”  பல்லவி மறுக்க இடம் கொடுக்காமல் கிளம்பிவிட்டார். அந்த பார்சலில் இருந்து சத்தம் வர, பல்லவி அதை பிரித்தாள். உள்ளே அனுவிற்கு டாய்ஸ், மற்றும் ஒரு மொபைல் இருந்தது. அது தான் அடித்து கொண்டிருக்க, பல்லவி எடுத்தாள். வீடியோ காலில் கங்கா இருந்தார். 

“நல்லா இருக்கியாம்மா..? சாப்பிட்டியா..? அனு எங்க..?”  கேட்டு பேத்தியிடம் பேச ஆரம்பிக்க, கோமதி, மகிளா அமைதியாக பார்த்து நின்றனர். பல்லவி அனுவிற்கு பேச சொல்லியபடி மகளுடன்  மேலேறிவிட்டாள்.