குற்றாலம்.மெயின் ..அருவி ஆர்ப்பரிப்பில்,வெள்ளை புகை எழுந்தது….ஆண்கள் தண்ணீர் மூன்றாகப் பிரிந்து விழுந்தது..பெண்கள் பிரிவில் தண்ணீர் வரத்து போது மானதாக இருந்தது… கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த கும்பலில்,பச்சையும்,நிஷாவும் அடக்கம்..இருவரும் கைகளை கோர்த்திருந்தனர்….
‘’எப்டியிருக்கு எங்க ஊர் அருவி? என்று பச்சை பெருமையுடன் கேட்க…
‘’ஏதோ நீயே இந்த அருவிய கண்டுபிடிச்சாப்புல கேக்குற’’ என்று கிண்டலாய் சொன்னாள் நிஷா…
‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை எங்க ஊர் கோயில்னு தம்பட்டம் அடிச்சுக்கிரீகள்ல …அது போலத்தான்’’
‘’மதுரைக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது…இன்னும்,உனக்கு திருனவேலி பாஷை போகலியே’’
‘’ஏன் போகணும்?..எங்க மண் வாசனை அப்டி’’
‘’எப்டி’’
‘’மண்ணையும் ,பொண்ணையும் யாருக்கும் விட்டு தர மாட்டோம்…’’
‘’யாருக்கும் அசர மாட்டான் இந்த பச்சை…எத்தனை பேர் வேணாலும் வரச் சொல்லு…மோதிப் பாத்துரலாம்’’என்றான் பச்சை கை பூஜங்களை தட்டியவாறு…சுற்றியுள்ளவர்கள் திரும்பிப்பார்க்கும் அளவு அடக்க மாட்டாமல் சிரித்தாள் நிஷா…
‘’உன் பேரு காமெடியா இருந்தாலும், பேச்சு சீரியசாத்தான் இருக்கு…ஓகே…அது நடக்கறப்ப பார்த்துக்கலாம்…இப்ப என்ன செய்யலாம்..அதை சொல்லு…’’
‘’ஹூம்…நான்லாம் வளர்ந்ததே இந்த தண்ணியில தான்…நீ இது மாதிரி அருவிய எல்லாம் எங்க பாத்திருப்ப….போ…கூட்டம் ஏறுது பாரு…வாட்சை கழட்டி என்கிட்ட குடுத்துட்டு போ’’.
யாரும் பார்க்காமல் காதலிக்கு,குற்றால அருவியை காண்பித்து ஊருக்கு கூட்டி வந்து விட்டோம் என்று நினைத்தான் பச்சை…
ஆனால்,இரவு,அவன் வீட்டில் நடந்த கதையே வேறு…
மல்லிகாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனை சென்று வந்த ஆண்டவன் மனைவியிடம்,
‘’செல்லம் …குடிக்க ,தண்ணி எடுத்துட்டு ரூமுக்கு வா’’ என்றதும் மிரண்டு போன செல்லம்..டம்ளர் தண்ணீருடன்,அறைக்குள் சென்று
மன குழப்பத்திலேயே வேலை செய்தாள் செல்லம்..பச்சை பெயருக்குப் பொருத்தமாய் பச்சப் புள்ளை மாதிரி இருப்பானே….அவன் இப்படி ஒரு வேலை செய்திருப்பான் என்று நம்ப முடியவில்லை…நம்பிக்கைக்குரிய ஆள் தகவல் சொல்லியிருப்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை…வீட்டிற்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது…மல்லிகாவின் தொண்டை அழற்சி எத்தனையோ சிகிச்சைக்குப் பின்னும்,குணம் தெரியாமல்,இப்பொழுது கேன்சர் டெஸ்ட் வரை வந்து நிற்கிறது..ஆண்டவனின் பெரியம்மா ஒருவர் கேன்சர் நோயில் தான் இறந்து போனார்களாம்..பரம்பரைத்தன்மை வேறு சேர்ந்து கொண்டதால்,மல்லிகாவிற்கு கேன்சருக்கான வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்…அந்த வெப்பத்தில்,வீடு தள்ளாடிக்கொண்டிருக்கும் போது,இவன் வேறு எதையோ கிறுக்குத்தனமாக செய்து வீட்டின் கொதிநிலையைக் கூட்டுகிறான்….என்று மனதிற்குள் குமைந்தாள் செல்லம்…
அத்தியாயம்—16
துக்க வீட்டின் சாயல் அப்படியே படர்ந்தது ஆண்டவன் வீட்டில்…காரணம் மல்லிகாவிற்கு த்ரோட்
கேன்சர் உறுதி செய்யப்பட்டு விட்டதுதான்…ஆரம்ப நிலை அல்ல..முற்றிய நிலையும் அல்ல…உயிரை காப்பாற்ற முயன்று பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார் மருத்துவர்…மதுரை அப்பல்லோ மருத்துவமனையில்தான் சிகிச்சை நடக்கிறது…ரே டியேஷன் தெரப்பி முடிந்து,கீமோதெரப்பி சிகிச்சை நடக்கிறது…ஆண்டவன்தான் அக்காவைக்கூட்டிக் கொண்டு மதுரைக்கு அலைகிறார்…செல்ல த்திற்குதான் வேலை கூடி விட்டது…சோர்வு,மன அழுத்தம் காரணமாக ,மல்லிகாவால் அதிகம் நடமாட முடிய வில்லை…எனவே,நேரத்திற்கு,சாப்பாடு,காபி,வெந்நீர் ,ஜூஸ் என அவள் அறைக்கு எடுத்து சென்று,தர வேண்டியிருக்கிறது…வீட்டில் எந்நேரமும்,மாத்திரை,மருந்து,சிகிச்சை குறித்த பேச்சுகள் தான் ஓடுகிறது…ஆண்டவனின் நண்பர்கள்,உறவினர்கள்,அக்கம் பக்கத்தினர் என பார்வையாளர்களையும் ,கவனிக்க வேண்டியதாக உள்ளது…தனம் வந்தாள்…
‘’மல்லிகாவ பாக்க சங்கடமா இருக்கு…நல்ல வாழ்க்கை தான் இல்ல…கை,கால்,சொகத்தொட,நடமாடவாவது விட்டான் இல்ல இந்த கடவுள்’’
‘’ஆமாக்கா..அவுக படுத அவஸ்தைய கண் கொண்டு பாக்க முடியல’’
‘’வருத்தப்படாதீக..எங்க பெரியம்மா மகளுக்கு,மார்பகப் புற்று நோய்…ஆபரேஷன் பண்ணி இப்ப. நல்லாருக்கா…பொல்லாத நோய்தான் இது…ஆனா
வந்து குணமானவுகளும் இருக்கத்தான் செய்தாக…மல்லிகாவுக்கு என்ன வச்சிருக்கானோ கடவுள்’’ என்று ஆறுதல் சொல்லிப் போனாள் தனம்…
அந்த வாரம் வீட்டிற்கு வந்திருந்தான் பச்சை…அத்தையின் நிலையை பார்த்து பார்த்து அழுதான் பச்சை…அத்தைக்கு கொடிய நோய் வந்திருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..செல்லம்தான் ஆறுதல் சொல்லி தேற்றினாள்….பகலில் ஆண்டவன் மகனிடம் எதுவும் பேசவில்லை…இரவில்,மல்லிகா உறங்கிய பின்,மகனை தங்களது,அறைக்கு அழைத்து,விசாரித்தார்…
‘’ போன வாரம் குற்றாலத்துக்கு வந்திருந்தியால ‘’
என்ன பதில் சொல்வதென சிறிது நேரம் திகைத்தான்..’’நானா’’
‘’நீதான்’’
‘’யார் சொன்னா?’’
‘’அது எங்களுக்கு ஆளிருக்கு…வந்தியா…இல்லியா…அத மட்டும் சொல்லு..’’என்று மிரட்டும் தொனியில் சொல்ல…அப்பாவின் கடுமைக்குப் பின்னால் காரணமிருக்கிறது என்று தெரிந்து கொண்டவன்,இனி எதையும் மறைக்க முடியாது…மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று புரிந்து கொண்டான் பச்சை…
‘’ஆமா…வந்திருந்தோம்’’என்றான் உறுதியான குரலில்….செல்லம் அரண்டு போனாள்…பிள்ளை பயந்து விடுவான் என்று நினைத்தாள்….நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் பிள்ளையைக் கண்டு அவளுக்கு வியப்பு…ஆண்டவன் நிலையும் அதுதான்..எனினும்,அவர் வெளிக்காட்டிக்கொள்ள வில்லை..
‘’வந்தோம்னா….யார் கூட வந்தே’’
‘’உங்ககிட்ட விஷயம் சொன்னவங்க அதை சொல்லலியாப்பா’’
‘’அது எதுக்கு உனக்கு?கேட்டதுக்கு பதிலை சொல்லு’’
‘’நிஷா வந்திருந்தா’’
‘’யார்ல நிஷா’’
‘’என் கூட வேலை பாக்கா’’
‘’ச்சரி…வேலை பாக்கட்டும்…உன் கூட குற்றாலத்துக்கு ஏன் வரணும்?’’
தன்னுடைய கற்பனை பொய்யாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையில்,ஒன்றும் புரியாதவர் போலவே கேட்டார் ஆண்டவன்..தகப்பனாரிடம் தனது காதல் சமாச்சாரத்தை கிடைத்த சந்தர்ப்பத்தில் போட்டு உடைத்துவிட,மனம் துணிந்து விட்டாலும் ,பயத்தின் காரணமாகவும், பழக்கத்தின் காரணமாகவும், வார்த்தைகள் வாய்க்குள் நொண்டியடித்தன….
‘’பதில் சொல்லுல…எவளோ ஒருத்தி எதுக்கு உன்கூட நம்ம ஊர் வரைக்கும் வரணும்?’’ என்று குரலை உயர்த்த…
ஊர் உலகத்தை மிரட்டி வரும் காதல் என் வீட்டிற்குள்ளும் வந்து விட்டதா??.மிரட்சியுடன் மனைவியைப் பார்த்தார் ஆண்டவன்.. கண்கள் விரிய மென்று விழுங்கினாள் செல்லம்….நான் வளர்த்த பச்சையா இது?? ஆண்டவன் சற்று ஓங்கிபேசி விட்டால்,கண்கலங்கும் என் பிள்ளையா இது?.
‘’என்னல பேசுத நீ?…நம்ம வீட்டு வழக்கம் என்னன்னு தெரியாதா உனக்கு….இப்டி ஒரு வேலை பண்ணி வச்சிருக்கே…’’
‘’எப்டியும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தானே போறீக…அது நிஷாவா இருந்துட்டு போறா’’
‘’என்னல ஏதோ கத்திரிக்கா வாழக்கா வாங்குதாப்புல ஈஸியா சொல்லுத…கல்யாணம்ங்கது ஆயிரம் காலத்துப் பயிறு..உனக்கு அவ்ளோ வெளையாட்டா இருக்கா.பி.காம்.லா இந்த காலத்துல ஒரு படிப்பா…மேல படிக்கணும்னு எண்ணமில்லையா … ..அந்த புள்ளைக்கு எந்த ஊரு? நம்ம ஆளுகளா?’’
‘’ம்…அதுக்காக நீங்க இப்டி கெளம்பிட்டீகளோ….நீ ஒரு உதாரணம் தான சொன்ன…கோர்ட்டுக்கு வா…காதல் கல்யாணம் பண்ணி ,நாலு வருசத்துல,நாலு மாசத்துல,நாலு நாள்ல கோர்ட்டுல வந்து நிக்கிற நூறு கேஸ் நான் காட்டுதேன்…என் கிட்டேயே வாதமாக்கும்,,,’’
‘’பேச பேச வளரும்…முடிவா என்னதான் சொல்லுதீக’’ ‘’உன் இஷ்டத்துக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது…ஆனத பாத்துக்கோ’’ என்று ஆண்டவன் முகத்தை திருப்ப…
‘’நீ என்னம்மா சொல்லுத’’
‘’அவ என்னல சொல்லுவா…என் முடிவுதான் அவ முடிவு’’
‘’அதான…என்னிக்கு பேச விட்டுருக்கீக…சரி…என் முடிவையும் கேட்டுகிடுங்க…என்னிக்கிருந்தாலும், நான் அவளைத்தான் கட்டுவேன்…இதுவும் மாறாது..’’என்று பச்சை சொல்லவும்,ஆத்திரம் மேலிட,அவனை அடிக்க கை ஓங்க ,செல்லம் வேகமாய் வந்து தடுத்தாள்..
‘’தோளுக்கு வளர்ந்த பிள்ளைய கை நீட்டாதீங்க…விட்டு பிடிப்போம்….கொஞ்சம் அமைதியா இருங்க…இப்ப பேசி பிரயோஜனமில்ல….நிதானமா எடுத்து சொன்னா புரிஞ்சுக்கிடுவான்’’ என்று அப்போதைக்கு ஆண்டவனை அமைதிப் படுத்தினாள் செல்லம்..
அத்தியாயம்-17
மல்லிகாவின் உடலில்,முன்னேற்றம் தெரிந்தது…எனினும் சிகிச்சைகள் தொடர்ந்த படியேதான் இருந்தன..நோய்வாய்ப்பட்ட அக்காவை நினைத்து ஆண்டவனும் நலிந்து போனார்…மகனின் காதல் விவகாரம் வேறு மனதை அரித்துக் கொண்டிருந்தது…மல்லிகாவிடம் பச்சையின் காதல் பற்றி கணவன் மனைவி இருவரும் வாய் திறக்கவில்லை…ஆனால்,இரண்டு மூன்று வாரமாக,மருமகன் வீட்டிற்கு வரவில்லையே என்று புலம்பிக்கொண்டுதான் இருக்கிறாள்…செல்லம் ஏதோ சொல்லி சமாளித்து வந்தாள்…வர வர மல்லிகாவின் பேச்சும் சரியாகப் புரிவதில்லை…கவனித்துக் கேட்டால்தான் என்ன சொல்கிறாள் என்பது தெரிகிறது…தான் திடீரென்று முடங்கி விட்டதை நினைத்து வருத்தம் வேறு அவளுக்கு.சிகிச்சையின் சூடு தாங்காமல் ..தலை முடியில் பாதி கொட்டிவிட்டது …. வாயில் புண்கள் வேறு….ஆகையால் காரமில்லாமல்,கவனமாய் சாப்பாடு தயார் செய்ய வேண்டியிருக்கிறது…அக்காவும்,தம்பியும்,மதுரைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்….சாப்பாடு,தண்ணீர்,வெந்நீர்,என எல்லாவற்றையும்,பார்த்து பார்த்து,எடுத்து வைத்தாள்,செல்லம்….இரவு வீட்டுக்கு திரும்பி விடுவார்கள் என்பதால்,அதற்கு ஏற்ற முறையில்,தேவை யானவற்றை கொடுத்தனுப்பினாள்…ஆனால்,அன்று ஆண்டவன் ஃபோன் செய்து,
‘’செல்லம்,,டாக்டர்,அக்காவை ஆஸ்பத்திரியில சேர்க்க சொன்னாரு’’
‘’ஏன்?என்னவாம்?’’ செல்லம் பதற,
‘’ஒண்ணுமில்ல,,ஒரு நாள் என் கண்காணிப்புல இருந்தா நல்லதுன்னுட்டாரு…நாளைக்கு திரும்பிருவோம்…நீ தனம் அக்காவை துணைக்கு கூப்பிட்டுக்கோ..’’ என்றார்…இரவு துணைக்கு ஆள் தேவையில்லை…படுத்தால்,அலுப்பில் தூங்கி விடுவாள்….ஆனால்,தனம் அக்காவுடன் இரவு பிரீயாகப் பேசலாம் என்ற எண்ணத்தில்,இரவு தனத்தை அழைத்தாள்…அவளிடம்,அவள் பிள்ளைகள் இருக்கும் இடம் பற்றி தெளிவாகக் கேட்டு தெரிந்து கொண்டாள்…
‘’அதான் எல்லாருக்கும் தெரியுமே…’’என்றவள்,பச்சையின் காதல் கதையை சொன்னாள்….வாய் பிளந்து விட்டாள் தனம்..
‘’எக்கா…பச்சையா இந்த வேலை பாத்துட்டான்…என்ன ஒரு அமைதி…அடக்கம்..அவனா இப்டி’’
‘’ஆமாக்கா…அவன் காலேஜ்ல,கால் எடுத்து வைக்கவுமே எங்க வீட்டுக்காரரு பயந்தாக…அது மாறியே ஆயிட்டு…நீங்க சொன்னாப்புல,தலையில அடிச்சுட்டு கைல குடுத்தா வாங்கி வாயில போட்டுக்கிடுவான்,,,அப்டி ஒரு அப்பாவிதான்…இப்டி செய்வான்னு யாரு நெனச்சா?’’ இருவருக்கும் படுக்கை போட்டவாறே சொன்னாள் செல்லம்…தண்ணீர் செம்பு எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டாள்…இருவரும் படுத்துக் கொண்டே பேச்சை தொடர்ந்தார்கள்…