பெண்ணவள் நிமிர்ந்து கண்களில் கண்ணீரோடு.. “என்னை பிடிக்கலைன்னா.. நேரடியா சொல்லியிருக்கலாம். நான் உங்களை போர்ஸ் பண்ணேனா” என்றாள் குழப்பமான மனநிலையில். முகம் முழுவதும் குழப்பம்.. கண்ணில் அத்தனை ஆதங்கம். எங்கேனும் தன்னுடைய பேச்சோ.. செய்கையோ அவனை கட்டாயப்படுத்தியிருக்குமோ.. அப்படியா அவர் என்னோடு வாழ்ந்தார்.. என முதலில் அவளையே அவள் சந்தேகம் கொண்டாள்.
பசுபதிக்கு அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது. அவனோ, மனையாளின் பேச்சினை அரைகுறையாகத்தான் கவனித்தான்.
இப்போதும் கணவனின் இந்த பரபரப்பு.. தனக்கானது இல்லையே.. அவன் எண்ணம் போனில் இருக்கிறது.. என கவனித்தவளுக்கு அழுகைதான் வந்தது.. பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் சக்தியற்று.. அமர்ந்தாள் மீண்டும் சோபாவில்.
பசுபதி போனினை பார்த்துக் கொண்டே “உனக்கு, என்னதான் பிரச்சனை, ஏன் என்னென்னமோ பேசுற” என்றான், சமாதனப்படுத்தும் விதமாக.
நந்தித்தா, கணவனின் கவனம் தன்னிடம் இல்லாததை கண்டு “என்கிட்டே முன்பு கோவப்பட்ட மாதிரியே கோவப்பட்டிருக்கலாம். கோவத்தில் உண்மை இருக்கும். ஆனால், இப்படி என்கிட்டே நடிச்சி.. என்னை, நீயும் ஏமாற்றித்திட்டியா, கட்டாயத்தில் வந்தவள் தானே.. எப்படி வேண்டுமானாலும் இவளை நடத்தலாம்ன்னு நினைச்சிட்டியில்ல. நீ என்கிட்டே கோவப்பட்ட போது எல்லாம்.. நான் உன்னை நம்பினேன். ஞாயமான கோவம்.. நல்லவன்னு நம்பினேனே” என பேச பேச..
பசுபதி “என்ன டி.. உளற.. இரு பொறுமையா இரு..” என சொல்லிக் கொண்டு அவளின் அருகில் வந்து, அவளின் முகவாய் பற்ற எண்ணினான். பெண்ணவள் தன் முகத்தினை பின்னில் இழுத்துக் கொண்டாள்.
பசுபதி, போனினை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு.. இரு கைகளையும் மேலும் கீழும் அசைத்த வண்ணம்.. பொறுமையாக “என்னாச்சு உனக்கு, அது திவ்யா.. என்னோட ஜூனியர். நீ ஏன் இவ்வளோ.. பேசுற.. எனக்கு புரியலை” என்றான் ஒன்றுமே நடவாதது போல.
நந்தித்தாவிற்கு, கோவமாக வந்தது, பல்லை கடித்தாள்.. என்ன பேசுவது என தெரியவில்லை.. வலி வேறு ஒருபக்கம்.. மனதின் குழப்பம் அழுத்தம் எல்லாம் சேர.. இனி பேச முடியாது என எண்ணி.. எழுந்தாள்.
வேக வேகமாக லிப்ட் செல்ல.. அவளை பார்த்திருந்த பசுபதி, அவளின் உடைகள் பின்னால் கரைபடிந்திருப்பதை பார்த்தான். வேகமாக விரைந்தவன் அவளின் முன்னாள் நின்றான்.. அதற்குள் நந்தித்தா, லிப்ட் ஏறியிருந்தாள்.
பசுபதி எப்படி கேட்பது என தெரியாமல்.. “நந்து, என்னாச்சு உனக்கு.. என்ன ஏதாவது பிரச்சனையா” என இப்போதுதான் மனையாளை கவனித்தவன் பதறினான்.
நந்தித்தா திரும்ப ஒரு வார்த்தை பேசவில்லை.
பசுபதி “நந்து ப்ரீயட்ஸ்சா.. நீ என்ன டி பண்ற” என்றான்.
நந்தித்தாவிற்கு இப்போதுதான் என்ன ப்ரீயட்ஸ்சா.. என எண்ணி, திருதிருவென விழித்தாள்.
கீழ்தளம் வந்துவிட நந்தித்தா இறங்கினாள். கணவனோ.. என்ன இவள் இப்படியே செல்லுகிறாள் என எண்ணி.. அவளின் கையை பிடிக்க.. நந்தித்தா கணவனின் பிடியிலிருந்து விடுபட தன் கையை உதறினாள்.
லிப்ட் கதவு திருந்திருக்க.. அமுதா ஹாலில் அமர்ந்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
பசுபதி அன்னையை பார்த்துவிட்டு, கையை விட்டான். நந்தித்தா “அத்தை” என முந்திக் கொண்டு அழுகையோடு.. நின்றாள்.
நந்தித்தா “அத்தை, அவர்.. அவர் என்னை.. அவருக்கு, என்ன பிடிக்கலை அத்தை. அவர் எப்போதும் ட்ரிங்க் பண்ணிட்டு வரும் போது.. திவி திவின்னு புலம்புவார் அத்தை. க்கும்.. இப்போ.. இப்போ கூட அதே நினைப்பில் இருக்கார் போல அத்தை.. பாருங்க.. இன்னமும் கால் வந்துட்டே இருக்கு..” என்றாள். திக்கி திணறி.. தன் கணவனின் முகத்தை பாராமல், அவனின் போன் அழைப்பினை பற்றி விவரித்தாள்.
பசுபதிக்கு அதிர்ச்சி, நான் உளறினேனா?.. அப்போ இவளுக்கு என்னை பற்றி எதோ தெரிந்திருக்கா.. என அரண்டு போனான்.
அன்னை இப்போது, தன்னை எரிப்பது போல் பார்க்க.. பசுபதி “அம்மா, அவளுக்கு எதோ முடியலை ம்மா.. பாரு அவளின் ட்ரெஸ்’சினை பாரும்மா முதலில்.” என்றான்.
அமுதாவிற்கும் பயம்.. நந்தித்தாவிற்கும் கணவனின் வார்த்தைகள் புரியவில்லை.. “அத்தை நீங்க.. கேளுங்க அத்தை.. அவருக்கு என்னை பிடிக்கலையா கேளுங்க” என்றாள் பரபரப்பாக.
பசுபதி மனையாளின் கையை பிடித்துக் கொண்டான்.. “இரு இரு..” என மனையாளிடம் சொன்னவன் “அம்மா.. அவளை பாருங்க” என்றான். அமுதாவிற்கு மகனின் வார்த்தைகள் புரிய.. “நந்து இங்கே வா” என கைபிடித்து அழைத்து சென்றார் தனதறைக்கு.
பசுபதி அமர்ந்தான் ஹால் சோபாவில். அவனுக்கு மனையாளுக்கு தன்னை பற்றி தெரிந்திருக்கிறது.. என்பதிலேயே மனது நின்றது.
மீண்டும் பசுபதிக்கு, திவ்யா அழைத்தாள்.
பசுபதிக்கு மனது தெளிவானது.. ‘திவ்யா உன்னை’ என அவசரமாக முடிவெடுத்துக் கொண்டு.. அப்படியே கிளம்பி காரெடுத்து கிளம்பினான்.
நந்தித்தாவிற்கு இப்போதுதான் தனக்கு என்ன நேர்ந்தது என புரிய.. அழுகையாக வந்தது.. மீண்டும் அழுதாள். அமுதா, அவளை அமரவைத்துவிட்டு, குடிக்க ஏதாவது எடுத்து வரலாம் என வந்து பார்க்க.. மகன் அங்கே இல்லை.
நந்தித்தாவிற்கு குடிக்க.. ஜூஸ் கொடுக்க.. நந்தித்தா அதை வாங்க மறுத்து அழுகை.
சமாதானம் செய்தும், நேரம்தான் கடந்தது. நந்தித்தாவிற்கு, வலி அதிகமாக சோர்ந்து போக தொடங்க.. அமுதா, மருமகளை மருத்துவமனை கூட்டி வந்துவிட்டார்.
பசுபதி, திவ்யாவை சென்று பார்த்தான்.
திவ்யா காரிலேயே அமர்ந்திருந்தாள். அப்படியே சீட்டில் சாய்ந்துதான் உறங்கியிருப்பாள் போல.. கலைந்த தலை சிவந்த கண்கள் என பசுபதியை பார்த்தாள்.
பசுபதிக்கு, இந்தமுறை திவ்யாவை எந்த இரக்கமும் கருணையும் பிறக்கவில்லை. அத்தனை கோவம்.. அதே ஸ்ருதியோடு அவளிடம் கேட்டான் “இப்ப என்னதான் வேண்டும் திவ்யா உனக்கு” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாத குரலில்.
திவ்யாவிற்கு, இவனை பார்த்ததும் வந்த ஆனந்தம்.. அவன் பேசியதும் காணாமல் போனது. திவ்யா “என்ன பஷூ.. உனக்கு என்ன ஆச்சோன்னு நினைச்சிட்டேன். நீ என்கிட்டே சொல்லியிட்டு போயிருக்கலாமில்ல” என்றாள்.
பசுபதி “காரிலேறு” என அதட்டியவன், அவளிடமிருந்து கார் சாவி வாங்கிக் கொண்டு வண்டியை எடுத்தான்.
நேராக வண்டி ஒரு பெரிய ஹோட்டலின் முன் நின்றது.
பசுபதி சென்று அமர்ந்தான் ஒரு டேபிளில்.
திவ்யாவிற்கு, இப்படி பசுபதி கடிந்துக் கொள்வான் என எதிர்பார்க்கவில்லை. அமைதியாக வந்து அமர்ந்தாள்.
உணவுகளை ஆர்டர் செய்தனர் இருவரும்.
அதன்பின்தான் பசுபதி மீண்டும் அந்த கேள்வியை கேட்டான் “உனக்கு என்னதான் வேண்டும்” என்றான்.. நேராக அவளின் கண்களை பார்த்து.
திவ்யாவிற்கு, பசுபதியை எதிர்கொண்டு.. “பெருசா எதுமில்ல.. உங்களை தோணும் போது பார்க்கனும்.. பேசணும்..” என்றாள்.. பழைய காதலியாக.
பசுபதி ஒருமிடறு தண்ணீர் குடித்தான். தெளிவாக “அஹ.. நான் என்ன ப்ராப்ட்டியா.. ம், எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி, உனக்கு தெரியும். எதோ மீட் பண்ணோம், ஓகே.. இனி என்னை நீ பார்க்காத. அஹ.. நான்இனி, இப்படி எல்லாம் பார்க்க வரமாட்டேன்.” கடுமையாக பேசியவன்.. திவ்யாவின் கலங்கிய பார்வையை கண்டு.. தணிந்தான்.
ஏதும் பேசாமல் உண்டான்.
திவ்யாவிற்கு உணவு இறங்கவில்லை.
பசுபதி அதை கவனித்து “சாப்பிடு திவ்யா, எனக்கு நிறைய வேலையிருக்கு. நான் கிளம்பனும்” என்றான், கொஞ்சம் சரி செய்துக் கொண்ட குரலில்.
பசுபதியின் உடல்மொழியில் நிறைய மாற்றம் இன்று.. திவ்யா எதிர்பார்த்திருக்கவில்லை போல, அவளின் கண்களில் கண்ணீர்தான் நின்றது. பசுபதி, முன்பு எல்லாம்.. அதாவது திவ்யாவை காதலிக்க தொடங்கியது முதல்.. நேற்று பார்த்தவரை.. தன்னை கண்டால் அவனின் கண்களில் தெரியும் ஒளியைதான் கவனித்திருக்கிறாள் பெண், இன்றுதான் அவன் தன்னை பார்வையால் கூட உதாசீனப்படுத்துவான்.. என உணருகிறாள்.
பசுபதி சொன்னதோடு சரி உண்ணத் தொடங்கிவிட்டான்.
திவ்யாவிற்கு உணவு இறங்கவேயில்லை. அத்தோடு சோர்வு வேறு.. பசுபதியையே பார்த்திருந்தாள்.
பசுபதி உண்டு முடித்து எழுந்து கைகழுவிக் கொண்டு வந்தான்.
திவ்யா அப்படியே அவனை பார்த்தாள்.
பசுபதிக்கு, அவளை அப்படியே விடவும் மனதில்லை. அதனால் “நான் டிரைவர் ஏற்பாடு செய்துகிறேன்.. நீ கிளம்பு ப்ளீஸ்.. உன்னை என்னால் ஹர்ட் செய்யவும் முடியலை.. ப்ளீஸ் போய்டு.. நீ இப்படி வரது தப்பு..” என்றான் மிக மிக உணர்வுபூர்வமாக.
திவ்யாவிற்கு, அவனின் இந்த குரல் கொஞ்சம் பிடித்திருந்தது.. ம்.. அங்கிருந்து வந்திருக்கிறாள்.. பசுபதி இப்படி முகம் கொடுக்காமல் இருப்பதை உணர்ந்தவள், இந்த அளவாகினும் தன்மேல் கரிசனம் கொண்டானே என எண்ணியவள் லேசாக புன்னகைத்தாள்.
பசுபதி “என்ன டிரைவர் ஏற்பாடு செய்யவா.. வீட்டில் உன்னை தேடமாட்டாங்களா” என கேட்டுக் கொண்டே யாருக்கோ.. போனில் அழைத்தான்.
திவ்யா புன்னகையோடு உணவினை உண்ண தொடங்கினாள்.
நந்தித்தாவிற்கு சிகிச்சைகள் தொடங்கியது.
அமுதா தன் மகனுக்கு அழைக்க.. அவன் எடுக்கவில்லை. அதனால். தன் கணவன் கெளவ்ரவுக்கு, அழைத்து சொல்லிவிட்டார்.
பெரியவர்கள் இருவருக்கும்.. வேதனையானது.
நந்தித்தாவை அரை மணிநேரம் சென்று பார்க்கலாம்.. மற்றபடி அவள் நன்றாக இருக்கிறாள் என சொல்லிவிட்டு சென்றனர், மருத்துவர்கள்.