ஜீவ தீபங்கள் -14

அத்தியாயம் -14(1)

பாலன் வாங்கவிருந்த இடத்தை தர மறுத்து கொண்டிருந்த மூன்றாவது உரிமையாளரும் சம்மதம் சொல்லி விட்டார். அந்த உரிமையார் எப்போது வேண்டுமென்றாலும் மனம் மாறலாம் அல்லது பூமிநாதன் வில்லங்கமாக ஏதாவது செய்யலாம் என்ற சந்தேகம் பாலனுக்கு இருக்க மிகவும் கவனமாக கண்காணிப்போடு இருந்தான்.

நரேன் நான்கு நாட்களாக கடைக்கு வரவில்லை. குடவுனில் இருந்து வந்த சரக்குகளில் கடை பெயரின் லேபிள் ஒட்டும் வேலை நடக்க பார்வையிட்ட வைத்தியநாதன் அண்ணனிடம், “சரக்கு வந்திடுச்சு, டேமேஜ் பீஸ் இருந்தா அதை இன்னிக்கே ரிட்டர்ன் பண்ணனும், நான் மத்த கடைக்கும் போய் பார்த்திட்டு வர்றேன்” என சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.

தம்பியை நிற்க சொன்ன பூமிநாதன், “நீதான் அந்த இடத்தை வாங்க வேணாம்னு அப்பாவை எங்ககிட்ட பேச வைக்கிறியா?” எனக் கேட்டார்.

வைத்தியநாதன் அமைதி காக்க, “அப்பான்னு உன்னை அவன் மதிக்கிறானா? இப்படி விட்டு கொடுத்தா உன் கூட இருக்க உன் புள்ள கரணுக்கும் ஒண்ணும் இல்லாம போய்டும். பாசம் தடுக்குதுன்னா பட்டுக்காம தள்ளி நில்லு” என காட்டமாக பேசினார்.

வைத்தியநாதன் எதிர்த்து பேசாமல் நிற்க, “போனா போகுதுன்னு அவனை இப்போ விட்டா நாம தொட முடியாத உசரம் போயிடுவான். இவ்ளோ அவன் வளர என்ன காரணம்னு நினைக்கிற? நம்மள மிதிச்சு நாசமாக்கதான். அதனால…” என்ற பூமிநாதன் சிறு இடைவெளி விட்டு, “நான் சொல்ற வேலைய மட்டும் செய், போதும்” என முடித்தார்.

எதுவும் பேச முடியாமல் தொங்கிப் போன முகத்தோடு வெளியேறினார் வைத்தியநாதன்.

பாலன் சந்தேகம் கொண்டது போலவே சில அடியாட்களை உடன் அழைத்து சென்று அந்த உரிமையாளரை மிரட்டினார் பூமிநாதன். பயந்து போனவராக அவர் பாலனுக்கு அழைத்து புலம்ப தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டான்.

ஆனால் அன்று இரவிலிருந்து அவர் காணாமல் போய் விட்டார். அவரின் மனைவியை வைத்து காவல் நிலையத்தில் பூமிநாதன் மீது புகார் கொடுக்க வைத்தான் பாலன். பூமிநாதன் மிரட்டியதற்கான ஆதாரம் இருக்க அவர்தான் கடத்தி விட்டதாக குற்றம் சுமத்த பட்டு கைது செய்ய பட்டார்.

இளங்கோவனும் வைத்தியநாதனும் அவரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் இருந்தனர். பூமிநாதனுக்கு காவல்நிலையத்தில் இருப்பது அவமானமாக இருந்த போதிலும் பாலன் இடம் வாங்குவது தடை பட்டது பற்றி ஆனந்தமே.

பாலன் இடம் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் மலையரசனும் ரமணியும் அவனுக்கு ஆறுதல் சொல்ல இறுக்கமாக காணப் பட்டவன், “அந்த இடம் குறிச்ச தேதியில என் பேருக்கு ரெஜிஸ்டர் ஆகும்” என மட்டும் சொன்னான்.

அந்த உரிமையாளர் கடத்த படவில்லை, கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் அவரே ஏறி சென்றிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை காட்டி ஒரு நாள் முழுவதும் போலீஸ் காவலில் இருந்த பூமிநாதனை வெளியில் எடுத்தனர்.

வீடு வந்த பூமிநாதனை கட்டிக் கொண்டு அழுதார் பாப்பாத்தியம்மாள். இனியாவின் புகுந்த வீட்டில் தங்களுக்கும் அவமானம் என என்னவோ போல பேசினர். ஊரில் கூட ஸ்டேஷன்ல இருந்திட்டு வந்திருக்கார் என தகவல் பரவியிருந்தது.

பாலன் முறுக்கியதில் கை இன்னும் சரியாகாத நரேன் என்ன செய்வது என அறைக்குள் சீறிக் கொண்டிருந்தான். ஆமாம் கோவத்தில் இன்னும் ஏதாவது செய்து அவனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என பயந்து போன வீட்டு பெண்கள்தான் அவனை அறையில் வைத்து பூட்டி இருந்தனர்.

மற்ற சிறியவர்களுக்கு நடப்பவை எதுவும் தெரியவில்லை.

சுயம்புலிங்கம் அவமானத்தில் கறுத்து போன முகத்துடன் அமர்ந்திருக்க, “என்னப்பா ஸ்டேஷன்தானே போனேன்? செத்தா போயிட்டேன்?” எனக் கேட்டார் பூமிநாதன். அவரின் மனைவி அமைதியாக அழ, பாப்பாத்தியம்மாள் நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தார். ஆக மொத்தம் வீடு ரணகள பட்டுக் கொண்டிருந்தது.

“என்ன செய்றதுன்னு சொல்லுங்க மாமா” என சுயம்புவிடம் கேட்டார் இளங்கோ.

“இன்னும் என்ன ஆகணும்? நான்தான் வேணாம் அமைதியா இருங்கன்னு சொன்னேன்ல, அந்தாளை போய் மிரட்டினதாலதான் செய்யாத குத்தம் செஞ்சதா ஆகிடுச்சு, எவ்ளோ அசிங்கம் இப்போ?” என அண்ணனை ஜாடையாக முறைத்துக் கொண்டே கேட்டார் வைத்தி.

“என்னடா அவனை நான் கடத்தலைங்கவும் உன் புள்ள அந்த இடத்தை வாங்கிடுவான்னு நினைச்சு உள்ளுக்குள்ள பூரிக்கிறியோ?” தம்பியை பார்த்து ஏளனமாக கேட்ட பூமிநாதன் தன் மச்சானை பார்த்து, “அந்தாளை கோயம்புத்தூர்லேயே வச்சு தூக்குங்க” என கட்டளை இட்டார்.

வைத்தி முறைக்க சுயம்புவும் அதுதான் சரி என இருக்க, “அந்தாளு இப்போ ஏன் அங்க போனாரு?” எனக் கேட்டார் இளங்கோவன்.

“நமக்கு பயந்து பாலனுக்கு இடத்தை கொடுக்க வேணாம்னு நினைச்சிருப்பான், இப்படி ஓடிப் போய் ஒளிஞ்சு இருந்து இன்னும் நம்மகிட்ட பணத்த கூட்டி கேட்க பிளான் போடுறான் அவன். அவன் பொண்டாட்டியே அங்க அவனோட சின்ன வயசு சிநேகிதன் இருக்கான்னு ஒத்துகிட்டே” என்றார் பூமிநாதன்.

“அந்தாளை தூக்கி நமக்கு என்ன லாபம்?”

“அந்தாள் கையெழுத்து போடாம பாலனுக்கு அவங்களால இடத்தை விற்க முடியாது. அண்ணன் தம்பிக்குள்ள ஒத்துமை இல்லாட்டியும் பாசமும் இல்லாம போய்டுமா என்ன? இடம் நமக்கு கிடைச்சாதான் அந்தாள் உயிரோட கிடைப்பான்னு அவன் அண்ணனுங்களை மிரட்டி காரியத்தை சாதிச்சடலாம் நாம. ரெஜிஸ்டர் ஆகுற நேரம் அந்தாள வெளில கொண்டு வந்தா போதும்” அழகாக பூமிநாதன் தன் திட்டத்தை விவரிக்க அதற்கான ஏற்பாட்டை கவனிக்க சென்றார் இளங்கோவன்.

இளங்கோவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் கோயம்புத்தூரில் அந்த மனிதரை தேடத் தொடங்கியிருந்தனர்.

பாலன் எதற்கும் கலங்காமல் மிக ரகசியமாக பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருந்தான். பெரும் தொகையை வங்கியிலிருந்து எடுக்கும் போது கூட பூமிநாதனுக்கு விஷயம் கசியலாம் என்பதால் முன்கூட்டியே தனியாக வங்கி சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்து வீட்டில் வைத்திருந்தான்.

இன்னும் அந்த மூன்றாவது உரிமையாளர் வீடு வராமலே இருக்க எந்த நம்பிக்கையில் இதையெல்லாம் செய்கிறான் என அவனது தாத்தாவும் மாமாவும் குழப்பம் அடைந்தனர்.

அன்று காலையில் பதிவாளர் அலுவலகத்தில் முதல் டோக்கன் வாங்கியிருந்தான் பாலன். இடத்தின் மற்ற இரு உரிமையாளர்களும் “எங்க தம்பி வராம எப்படி பதிவு பண்ண முடியும்? எங்க நேரத்தையும் விரயம் பண்ணிகிட்டு” என புலம்பிக் கொண்டிருந்தனர்.

பதிவாளர் வந்து எல்லாம் சரி பார்த்து விற்பவர்களை அழைக்க முதல் இரு சகோதரர்கள் வந்தடைய மூன்றாவது நபரையும் அழைத்தார் பதிவாளர்.

சாட்சி கையெழுத்து போட வந்திருந்த மலையரசனுக்கும் ஆதவனுக்கும் கூட நல்ல பதற்றம்.

ஒரு கார் வந்து நிற்க அலட்சிய சிரிப்போடு இறங்கினான் வருண். அவனை தொடர்ந்து இறங்கினார் அந்த மூன்றாவது நபர்.

மற்றவர்கள் வியப்பில் வாய் பிளக்க, தன் தம்பி தோளில் தட்டிக் கொடுத்த பாலனின் பார்வையில் மெச்சுதல் இருந்தது.

எந்த பிசகும் இல்லாமல் சிவபாலன் பெயருக்கு இடம் மாற்றப் பட்டு விட்டது.

அந்த மூன்றாவது நபரை கோவை செல்வது போல பேருந்தில் செல்ல சொன்னதே பாலன்தான். ஆனால் தன் அண்ணன் சொல்படி வழியில் திருச்சியிலேயே அவரை இறக்கி தனது குடியிருப்பு வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான் வருண்.

இடம் விற்க அவர் சம்மதித்திருந்ததால் பாலன் அவரை தன் தம்பி கஸ்டடியில் வைத்திருப்பான் என யாருக்கும் சந்தேகம் எழவில்லை. பூமிநாதன் கைது செய்யப் பட்டதால் அவரை வெளியில் எடுப்பதிலேயே அவரது குடும்பத்தினரின் நேரம் சென்று விட்டது. சரியாக விசாரிக்காமல் விட்டதில் திருச்சியில் அவர் இறங்கியது அவர்களின் கவனத்திற்கு செல்லவில்லை.

கோவை பேருந்தில் ஏறியதை இளங்கோவன் நிரூபிக்க கோவையில்தான் தன் கணவர் இருப்பார், இப்படி அடிக்கடி தன்னிடம் சண்டை போட்டு அங்குதான் செல்வார், கைபேசியையும் அணைத்து வைத்து விடுவார், அப்புறம் அவரே வருவார், இவர்கள் வந்து மிரட்டியதில் நான் அதை மறந்தே போனேன் என அந்த மனிதரின் மனைவியும் புகாரை வாபஸ் பெற்று விட்டார்.

கோவையில் இருக்கும் அவரது கணவரது நண்பரின் முகவரியை கேட்டதற்கு, “அது எனக்கு தெரிஞ்சா அடிக்கடி அங்க போய் ஒளிஞ்சுக்க முடியாதுன்னு என்கிட்ட அந்த மனுஷன் சொன்னதே இல்லைங்க” என சொல்லியிருந்தார்.

யாருக்கும் எங்கும் சந்தேகமே வரவில்லை.

பணம் கைமாற்ற பட்ட உடன் அந்த மூன்றாவது நபரிடம், “ஒரு நாள் ஸ்டேஷன் போயிட்டு வந்ததால அந்த பயமிருக்கும், இனி உங்களை எதுவும் செய்ய மாட்டாங்க. அவங்க கோவம் என் மேலதான் இருக்கும் இனிமே. பயப்படாதீங்க” என சொல்லி அனுப்பி வைத்தான் பாலன்.

இந்த விஷயத்தில் சிவபாலன் சாதித்துக் கொண்டதை நினைத்து ஆதவனுக்கு கூட மகிழ்ச்சிதான். கூடவே தன் விஷயம் தெரிய வந்தால் என்ன செய்வானோ என்ற யோசனையும் வராமல் இல்லை.

அண்ணனுக்கு பத்திரம் சொன்னான் வருண்.

“என்னை தொட்டா இன்னும் வெறி வந்து அவனுங்கள நாசம் பண்ணுவேன்” கண்களில் பழி வெறி மின்ன சொன்னான் பாலன்.

“நரேன் ஒரு பிக்காலி பய ண்ணா. அவன் அப்பனை தாண்டினவன், எது செய்யவும் தயங்க மாட்டான். நான் கொஞ்ச நாள் உன் கூட இருக்கவா?”

“நீ என்ன சொந்த தொழிலா பண்ணிட்டு இருக்க அடிக்கடி இங்க வந்து உட்கார? நீ பயப்படாம போடா. ஆனா எனக்கொண்ணுன்னு வச்சுக்க… என் இடத்திலேர்ந்து மிச்சம் வைக்காம முடிச்சு வைக்கணும் நீ” என்ற அண்ணனை கலக்கமாக பார்த்தான் வருண்.

தன்னிலை அடைந்த பாலன், “ஏதோ எமோஷனல் ஆகி சொல்லிட்டேன். விடு அந்த அளவுக்கு வராது. நீ பயப்படாம போ. பழி வாங்குறது எல்லாம் என்னோட போகட்டும்” என சொல்லி அன்றே வருணை திருச்சிக்கு அனுப்பி வைத்தான்.

மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருக்கும் உணவகம் வந்திருந்தாள் பிரியா. ஒரு நோயாளிக்கு செய்து கொண்டிருந்த செயல்முறையில் பிரியாவுக்கு தாமதமாகி விட அவள் வகுப்பு நண்பர்கள் முன்னரே வந்து சென்றிருக்க அவள் மட்டும்தான் தனியாக வந்திருந்தாள்.

சப்பாத்தி வாங்கி சாப்பிட்டு முடித்தவள் காபி ஒன்று சொல்லி விட்டு கைபேசி பார்த்து கொண்டு அமர்ந்திருக்க யாரோ தன் முன்னால் அமரும் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

நிச்சயமாக அவள் கௌதமை எதிர்பார்த்திருக்கவில்லை.

இளைத்து போய் தாடி வைத்துக் கொண்டு ஆள் கொஞ்சமாக மாறி தெரிந்தான். திகைத்து போய் பிரியா பார்க்க, “எப்படி இருக்க?” என மெலிதான குரலில் கேட்டான்.

நன்றாக இருப்பதாக அவள் தலையாட்ட, “எல்லாம் என்னாலதானே? ஸ்மூத்தா நடக்க வேண்டியதை எங்க கொண்டு வந்து நிறுத்திட்டேன்?” கலங்கிய குரலில் கேட்டான்.

“இல்ல அதெல்லாம் இல்ல. நீங்க இங்க எப்படி? நான் கிளம்பறேன்” என பிரியா எழ காபியை வைத்து சென்றான் சர்வர்.

காபியை அவளை நோக்கி அவன் நகர்த்தி வைக்க அமர்ந்தவள் காபியை எடுத்துக் கொள்ளவே இல்லை.

“எவன்கிட்டேயோ நீ சிரிச்சு பேசுறதை தாங்க முடியாம அன்னிக்கு அப்படி ஆனது. இப்போ என் இடத்துல இன்னொருத்தன்…” விரக்தியாக சிரித்தான்.

“ஸ்டாப் கெளதம். எல்லாம் முடிஞ்சு போச்சு, இனிமே பழசை பேசாதீங்க, இதுவே நாம சந்திகிறது லாஸ்ட்டா இருக்கட்டும். நீங்க போய்டுங்க” என்றாள்.

“நான் பண்ணின தப்பால எவனோ ஒரு காட்டானை கட்டி வச்சிட்டாங்களா உனக்கு? அவன்… அந்த… ச்சே… உனக்கு போய் அவன் ஜோடியா?”

“எது வேணா பொறுத்துப்பேன், அவரை ஏதாவது சொன்னா என்னால பொறுமையா போக முடியாது. இப்படி சொல்லாதீங்க” கெளதம் கண்டு பயம் என்றாலும் பாலனை சொன்னதும் கோவப்பட்டாள்.

“ம்ம்… சொல்லலை. இனிமே அவன் பேச்சு நமக்கிடையில வேணாம். அவனும் நமக்கிடையில வேணாம். வந்திடு, என்கிட்டேயே வந்திடு பிரியா, நாம எங்கேயாவது போய்டலாம்”

“ச்சீ! போடா இங்கேர்ந்து” என சீறிய பிரியா எழ, “மனசுல நான் இருக்கும் போது அவன் கூட வாழ்ந்து நீ கஷ்ட பட வேணாம் பிரியா” என்றான் கெளதம்.

அவனை முறைத்த பிரியா, “என் கல்யாணம் முன்னாடி வரை நான் யாரையும் லவ் பண்ணல. நீ என் பின்னால சுத்திட்டே இருந்ததால வீட்ல பேசுன்னு சொன்னேன், லவ் எல்லாம் இல்ல. என் ஹஸ்பண்ட்ட ரொம்ப விரும்பித்தான் கல்யாணம் பண்ணினேன், தப்பா புரிஞ்சுக்கிட்டு தேவையில்லாம எதுவும் பிரச்சனை செய்யாத” என்றாள்.

அவள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை எனும் பார்வை பார்த்த கெளதம், “தாலிக்கு இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் கொடுப்பியா நீ? எனக்கு இது பெரிய விஷயம் இல்ல, அதை கட்டிட்டாங்கிற காரணத்துக்காக அவன் கூடவே வாழணும்னு அவசியம் இல்ல பிரியா, நீ எனக்கானவ” என்றான்.

திருமணமான தன்னிடம் இப்படி வந்து கெளதம் பேசுவதை அவளால் நம்பவே முடியவில்லை. உள்ளத்தோடு சேர்ந்து உடலும் வெட வெடப்பில் நடுங்கியது. எப்படியாவது இங்கிருந்து சென்றால் போதும் என்ற நினைவோடு ஆற்றலை திரட்டி அங்கிருந்து நடந்து சென்றாள் பிரியா.

உதடுகள் வளைந்த கோணல் சிரிப்போடு அவளை பார்த்திருந்தான் கெளதம்.