சொல்லாமல்…

மௌனம் 06(ii)

 இன்று…

அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் முகத்தில் படர்ந்திருந்ய யோசனை ரேகைகள் அவளையும் குழம்பிடச் செய்தது.

“அத்தான்ன்ன்ன்..”

“ப்ச்ச்..என்ன..?”

“ஏதாச்சும் ப்ராப்ளமா..?”

“நத்திங்க்..”பட்டும் படாமல் வந்த அவன் பதிலில் அவள் முகம் ஒரு நொடி வாடி மறுநொடி இயல்பாகியது.

கேட்காமல் கிடைப்பதற்கு இங்கு மதிப்பு இருப்பதில்லையே.

“அத்தான்…எங்க வீட்ல மாப்ள பாக்குறாங்க..?”

“அதுக்கு நா என்ன பண்ணனும்..லுக் ஆர்த்தி..நா அப்போவே சொல்லிட்டேன்..உன் மேல எனக்கு அப்டி ஒரு தாட் இல்லன்னு..அப்றம் யேன் டார்ச்சர் பண்ற..?”

“உங்களுக்கு இல்லாம இருக்கலாம்..பட் எனக்கு இருக்கே..”

“லிஸின்..காதல கட்டாயப்படுத்தி வர வச்சுர முடியாது..மைன்ட் இட்..” என்றவனின் கடுமைக்கு காரணம் அவனின் நிலையும் அவளினதைப் போலவே என்பதை உணர்ந்ததாலோ..?

“இங்க பாருங்க அத்தான்..நீங்க என்ன சொன்னாலும் தா உங்கள தவிர யாரயும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..” புன்னகையுடன் சொன்னாலும் அவள் குரலில் அத்தனை உறுதி.

“அப்போ ஔவையாராத்தான் ஆகிருவ..”கடுப்பு தெறித்தது,

அவன் குரலில்.

“பரவால..” வாடாத புன்னகையுடன் பதில் சொன்னவளுக்கு தெரியாதா..?

இதை விட வாக்குவாதங்கள் காரசாரமாய் நடந்திருப்பது..?

ஒரு முறை தன்னை மீறி கை ஓங்கி அறைந்தும் இருக்கிறானே,

கன்னம் வீங்க.

ஏனோ அதைக் கூட ரசிக்கத் தான் விழைந்தது,

அவள் மனம்.

அதற்கே அசராமல் அவன் பின்னே வருபவளுக்கு இந்த சுடுசொற்கள் எல்லாம் எம்மாத்திரம்..?

அவளை பேரூந்து நிலையத்தில் இறக்கி விட்டு தன் அலுவலகத்தினுள் நுழைந்தவனுக்கு தன் வேலைப்பளுவில் தற்காலிகமாய் தர்ஷினியைப் பற்றியான சிந்தனைகள் பின்தள்ளப்பட்டிருந்தன.

அதே நேரம்…

விடியும் முன்னே விழிப்புத் தட்டியிருந்தாலும் எழச் சோர்வாய் இருக்கவே போர்வைக்குள் சுருண்டு கொண்டிருந்தாள்,

தர்ஷினி.

தலை கனக்க நெற்றியில் கொஞ்சமாய் சூடு இருக்கவே தொண்டை கட்டியிருந்தது,

நேற்று மழையில் நனைந்ததால்.

அடிக்கடி தும்மலும் எட்டிப் பார்த்திட எழுந்து அமர்வதே ஒரு வித வருத்தமாய்.

விழி திறந்து தன் அலைபேசியினை ஆன் செய்ய அதில் முகப்புப் படத்தில் கம்பீரமாய் நின்றிருந்தான்,

அவன்.

ஏனோ புன்னகை துளிர்க்க விழி மூடி  பேசாமல் சாய்ந்தே கிடந்தாலும் இதழ்கள் அவளை மீறி தன்னாலே அவன் பெயரை உச்சரித்து தொலைத்தன.

தனை மீறி இதழ்கள் விரிந்தும் கொடுத்தன.

ஏனோ அவனின் அருகாமை அவசியப்பட்டது,

அந்நொடி.

அவனறைக்குள் அவளை நுழையவிட்டதே இல்லை,

இதுவரை.

அவளறையை அவன் எட்டிப் பார்த்திருக்கிறானா என்பதும் தெரியாது அவளுக்கு.

ஆனால், அவனிடம் அவள் உணர்ந்த பாதுகாப்பு உணர்வை இதுவரை யாரிடமும் உணர்ந்தது இல்லை என்பது அவளுணர்ந்த சத்தியமான உண்மை.

ஒருவேளை மனம் முழுக்க காதலை நிரப்பிக் கொண்டு திரிவதும் காரணமாய் இருக்கலாம்.

இயலாமையின் விளிம்பில் அவன் அருகாமையைத் தொலைத்த வலியில் உடலும் சோர்வாய் இருக்கவே அவளின் விழிகள் சிவந்திற்று.

ஆனால், விழிநீர் மட்டும் துளிர்க்கவில்லை.

பிரிவென்று சொன்னது முதல் எத்தனையோ தடவை உடைந்து நொருங்கியிருந்தாலும் ஒவ்வோரு முறை அதை நினைவில் வந்திடும் போதும் உள்ளுக்குள் வலிக்கத் தான் செய்தது.

தாய் கதவை திறந்து கொண்டு உள் நுழைந்திடும் அரவம் கேட்டிட தன்னை சமப்படுத்திக் கொண்டு அப்பொழுது தான் எழுந்தமர்வது போன்று சைகை செய்தவளின் கரமோ போர்வையை தன்னில் இருந்து விலக்கியது.

“தர்ஷினி என்ன இன்னும் எழுந்துக்காம இருக்க..?” நெற்றியைத் தொட்டுப் பார்த்துக் கேட்டிட்ட தாயின் குரலில் அவளுக்கு சிரிப்பு வந்தது.

முன்பென்றால் எழுந்து கொள்ளாததற்கு விழும் திட்டுக்கள் இப்போது முற்றாக தொலைந்து போயிருந்ததே.

“என்னம்மா..வர வர ரொம்ப நல்லவரா மாறிட்டு வர்ரீங்க..இப்டி திட்டவெல்லாம் மாட்டீங்கன்னா நா அப்போவே கல்யாணம் பண்ணி இருப்பேன்…” கேலி இழையோடிய குரலில் சொன்னாள்,

அவள்.

“அது அப்டி தான்..சரி என்ன இது தொண்ட இப்டி கட்டி கெடக்குது..? நைட் குளிச்சியா..?”

“ச்சே..ச்சே..நைட்லாம் குளிக்கல..குளிருக்கு தொண்ட கட்டிருச்சு..”

“………..”

“நம்புங்க மா..எப்பா பாரு மொறச்சி பாத்துகிட்டு..”என்றவளோ அறையில் இருந்து வெளியேறி குளியலறைக்குள் நுழைந்திட்ட பின்னரே நிம்மதிப் பெருமூச்சொன்று.

முகம் கழுவி விட்டு வந்து காபியை பருகிட முயலும் நேரம்  எப்போதும் போல் கேளாமலே அவன் நினைவு.

அதனால் விழைந்த புன்னகையுடன் காலை உணவையும் முடித்தவளுக்கு சில வேலைகள் இருந்தாலும் தாய் எத்தனை மறுப்பு சொல்லியும் கேளாது கிளம்பியிருந்தாலும்அந்த புத்தக கண்காட்சிக்கு.

அந்த இடத்தில் ஆட்கள் சிதறிக் கிடக்க அந்த கட்டடத்தின் கட்டுமானத்தில் தோன்றிய பிரமிப்பை விழிகளில் தேக்கியவாறு உள் நுழைந்தாள்,

தர்ஷினி.

“தி பிக்கஸ்ட் புக் பெயார்..” என நுழைவாயிலின் அருகே கட்டப்பட்டிருந்த   பேனரில் பெரிதாய் எழுதப்பட்டிருந்தது.

ஏனோ அவளுக்கு கொஞ்சம் உடல் அசதி மட்டுப்பட்டது போன்றதோர் எண்ணம்.

நுழைவாயிலின் அருகே ஏதோ வேலைக்காக வந்திருந்த தேவேந்திரனை கண்டவளின் இதழ்கள் புன்னகை சிந்திட எதிர்பாரா சந்திப்பில் அவன் விழிகளும் விகசித்தன.

மூன்று மாடி கட்டடம் அதில் இரண்டாம் தளத்தில் இருந்தவளின் விரல்களோ சில புத்தகங்களை ஆர்வத்துடன் தடவிப் பார்த்தாலும் வாங்கும் அளவுக்கு அவள் கையில் பணம் இருக்கவில்லை.

அவள் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த புத்தகத்தின் ஒரு பிரதி மட்டுமே அவ்விடத்தில் இருக்க பார்த்தவளில் இருந்து ஏக்கப் பெருமூச்சொன்று. அதன் விலை ஆயிரங்களை கடந்திருக்க அதில் ஒரு பிரதியை வாங்குபவர்களுக்கு இலவசமாக “புக் லவர்” என எழுதப்பட்ட புத்தக வடிவிலான கீ செய்ன் வழங்கப்படும் என அறிவித்துக் கொண்டிருப்பதை கண்டவளின் இதழ்களில் அழகாய் இப்பொழுது ஒரு புன்னகை.

சிக்கனமாகவே வளர்ந்து பழகியவளுக்கு புத்தகங்கள் மேல் அதீத பற்று இருந்தாலும் நூலகங்களில் எடுத்தே படிக்க பழகியிருந்தாள்,

அவள்.

மூன்று புத்தகங்களை விரல்கள் கொண்டு ஏக்கத்துடன் பார்ப்பதை ஒரு சோடி விழிகள் தெளிவாய் படம் பிடித்துக் கொண்டன.

தங்கைக்கு தேவையான ஓரிரு புத்தகங்களை வாங்கிக் கொண்டு பேரூந்து நிறுத்தத்திற்கு வந்திடும் போது எதிர்ப்பட்டது,

அவனின் வண்டி.

விழிகள் விரிந்து அவனின் உருவத்தை தேடி பரபரவென சுழன்றன.

“அப்போ இவரு பாரின் போகலயா..?”

நினைக்கும் பொழுது மனதின் ஆழத்தில் ஒரு வித ஆனந்தத்தின் தூறல்.

விழிகளின் தேடல் அவன் விம்பத்தில் முற்றுப்பெற்றது.

அவள் நின்றிருந்த இடத்துக்கு நேரெதிரே இல்லாமல் சற்று முன்னே வண்டியை ஓரமாய் நிறுத்தி அதன் கதவில் சாய்ந்து அலைபேசியில் யாருடனோ கொண்டிருந்தவனின் பார்வை அவள் புறம் திரும்பவில்லை.

அவள் பார்வை அவனை விட்டு இம்மியும் நகரவில்லை.

ஆழமாய் சுவாசித்தவாறு

விழியெடுக்காது அவனையே பார்த்திருக்க அருகே நின்றிருந்த பெண்கள் தமக்குள் ஏதோ தன்னைப் பற்றி தவறாக கிசுகிசுப்பது புரிந்த நொடி சட்டென அவள் பார்வை வேறு புறம் தாவியிருக்க மனதில் சிறு துளியாய் ஒரு வலி.

அவனை ரசித்திட மொத்த உரிமையும் அவளுக்கு இருந்தாலும் அதை அவன் கொடுத்திடவில்லையே.

வாகனங்கள் அவ்வப்போது சென்று கொண்டிருக்க அலைபேசயில் பேசிக் கொண்டே பாதையை கடக்க முற்பட்டவனின் செயலில் இவளுக்கு உள்ளுக்குள் திக்கென்றது.

அவளைக் கவனித்தானா என்பது தெரியாது.

கண்டிருந்தாலும் காட்டிக் கொள்ளும் ரகமில்லையே அவன்.

தன் பாட்டில் பாதையை கடக்க முயன்றவனின் முகத்தில் எரிச்சலின் ரேகைகள் அதிகாமவே தேங்கியிருக்க மறுபுறம் மாறிட அடியெடுத்து வைத்தவனுக்கு கொஞ்சமா தள்ளி வந்து கொண்டிருக்கும் வண்டி அந்த திருப்பத்தில் தெரியாமல் போனது தான் விதியோ..?

அவன் புறம் இருந்து பார்க்கும் போது வண்டி வருவது தெரியாவிடினும் அவள் நின்றிருக்கும் புறத்தில் இருந்து பார்த்தால் தெளிவாய் தெரிந்திடுமே.

கத்த முற்பட்டவளுக்கு  தெரியாதா..?

பொது இடங்களில் கத்தினால் அவனுக்கு கோபம் வரும் என்பது.

எதையும் சிந்திக்கவில்லை அவள்.

ஏன் அவளைப் பற்றிக் கூட.

சட்டென பாதைக்கு வந்து அலைபேசியில் ஐக்கியமாகி இருந்தவனை தள்ளி நகர்த்தவும் கடந்து சென்ற அந்த கார் அவளின் தோளை உரசிச் செல்லவும் சரியாய் இருந்தது.

நிகழ்வு தந்த அதிர்வில் வெடவெடத்து அவன் விழிகளில் தன் விம்பம் தேடிட அவள் கைகள் அவன் கைகளுடன் பிணைந்தே இருந்தது.

அவள் வந்திராவிடின் அவன் நிலை..

நினைக்கும் போது மனம் பதற இதயத் தாளம் எகிறி இருந்தது.

அவனோ அவளை அழுத்தமாக பார்த்தவாறு தன் கைகளை பிரித்தெடுத்த மறுகணம் அவனின் ஐவிரல்களும் அவளின் கன்னத்தில் பதியும் வண்ணம் ஓங்கி வைத்திருந்தான்,

கனல் மின்னும் விழிகளும்.

அவன் பார்வையில் அப்படி ஒரு கோபம்.

கன்னத்தை கைகளால் பொத்திக் கொண்டு அவனின் கோபத்துக்கான அர்த்தம் தேடியவளுக்கு காரணம் சிக்கவில்லையே.

“இடியட்ட்ட்ட்ட்ட்ட்..” கடுப்புடன் சூடான வார்த்தைகளை தூவி கதவை அடித்து சாத்தியவனாய் ஏறி விருட்டென வண்டியைக் கிளப்பிக் கொண்டு செல்ல சமைந்து நின்றவளின் விழிகளில் தான் மீண்டும் சிவப்பு.

ஆனால், கண்ணீர் மட்டும் வழியவில்லை.

ஓரிரு நிமிடங்கள் அவ்வாறே இருக்க அவளைத் தட்டி இயல்புக்கு மீட்டினாள்,

கார்த்திகா.

அவளும் புத்தக கண்காட்சிக்கு வந்திருக்கவே தோழி கிளம்பும் போது தான் கண்டு கொண்டாள்,

அவளை.

ஏதோ யோசனையுடன் நடந்து செல்பவளை பேரூந்து நிறுத்தத்தில் வைத்து சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நடையை மெதுவாக்கி வந்தவளுக்கு பார்வையில் விழுந்ததோ..

தோழி கன்னத்தின் அறை வாங்கும் காட்சி தான்.

எகிறிய கோபத்துடன் அவள் நடந்து தோழியை நெருங்கும் முன் அவனின் வண்டி தான் கிளம்பி விட்டிருந்ததே.

தோழியின் தோளைத் தொட அது கார்த்திகா தான் என்று ஓரவிழியால் பார்த்தவள் தோழியின் புறம் திரும்பும் போது அவள் விழிகளில் இருந்த நீரை விரல்கள் தமக்குள் இழுத்துக் கொண்டிருந்தன.

அவள் காப்பாற்ற தானே செய்தாள்..?

பின் ஏன் அவன் அறைய வேண்டும்..? யோசனையுடன் துழாவியவளுக்கு சற்றுத் தள்ளி மொத்தமாய் நொருங்கிப் போயிருந்த அவனின் உயர் ரக அலைபேசி தென்பட சுள்ளென்று எகிறிற்று கோபம்.

“ச்சைஐஐ..போனுக்காக இவளுக்கு அடிச்சிருக்கான்..என்ன ஜென்மமோ..” தனக்குள் நினைத்துக் தோழியை அழைத்துக் கொண்டு நகர்ந்தவளின் மனதிலும் சந்தேகத்தின் சிறு விதை.

வீட்டுக்கு வந்த தர்ஷினிக்கு விம்மி வெடித்துக் கொண்டு அழுகை வந்தாலும் அழவில்லை,

அவள்.

ஏனோ அவளுக்கு அழுவது பிடிக்காது.

பிடிக்கவே பிடிக்காது.

அவளும் அவன் கோபத்தை கண்டிருக்கிறாள் தான்.

ஆனால், இப்படி தனக்கு அறைந்து விடுவான் என்று துளியளவும் நினைக்கவில்லையே.

தலையும் கனத்திட முகத்தை நீரால் அடித்துக் கழுவிக் கொண்டு வந்து பேசாமல் உறங்கியவளின் உள்ளங்கை இறுகப் பொத்தியிருந்தது,

அவளதும் அவனதும் உருவமும் பெயரும் பொறிக்கப்பட்ட அந்த கீ செய்னை.

             ●●●●●●

மாலை நேரமதில் அங்குமிங்கும் பார்த்த படி அந்த வீட்டின் வெளியே பரந்திருந்த  புற்றரையில் அமைக்கப்பட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்தாள்,

கயல்விழி.

விரல்களோ “அக்னி..” என புனைப்பெயர் எழுதியிருந்த தன் நோட்டை தடவிப் பார்த்திட இதழ்களில் மென்னகை.

நேரத்தை பார்த்திட  அது ஐந்து எனக் காட்ட அவள் சந்திக்க வந்த நபரை இன்னும் காணவில்லையே.

கொஞ்சம் சலிப்புத் தட்டுவது போல் தோன்றிற்று.

விரல்களால் கல் இருக்கையில் தாளமிட்ட படி சுற்றும் முற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தவளை கூர்ந்து பார்த்த படி வந்த ஆரிணியின் முகத்தில் ஒருவித அதிருப்தி.

அவள் தோற்றம் அப்படி ஒன்றை தோன்ற வைத்திருக்கலாம்.

அதுவும் காதில் மாட்டப்பட்டிருந்த மெஷின் அவளுக்கு கேள்மையில் ஏதோ குறைபாடு என்பதை உறுதிப்படுத்திற்று.

“ஹலோ யார பாக்க வந்துருக்கீங்க..?”அவள் சாதாரண குரலில் கேட்டிட கயல்விழிக்கு அது மெதுவாகத் தானே கேட்கும்.

“அது..அது.. சாரதா மேடம்..” பதட்டத்தில் வார்த்தைகள் கோர்வையாய் வந்திடவில்லை.

“சரி வெயிட் பண்ணுங்க..வருவாங்க..” ஒரு வித அழுத்தம் குறையா குரலுடன் சொல்லி விட்டுச் சென்றவளின் ஏளனப் பார்வை அவளுக்கு புரியாமல் இல்லை.

ஒரு தோள் குலுக்கலுடன் பேசாமல் அமர்ந்து கொண்டவளுக்கு அது எல்லாம் பழகிப் போன விடயங்கள் தானே.

நிமிங்கள் தன்னால் கழியவே தன்னை சரிபார்த்துக் கொண்டு வெளிப்பட்டு அவளருகே வந்தார்,

சாரதா.

ஒரு ஓய்வுபெற்ற வைத்தியர் அவர்.

“சாரிமா..கொஞ்சம் லேட்டாயிடுச்சு..அதான் பாக்க சொல்லி பொண்ண அனுப்புனேன்..” வருந்தும் தொனியில் அவர் மன்னிப்புக் கேட்டிட தாயை மகளையும் ஒப்பிட்டுப் பார்த்தவளுக்குள் அத்தனை மலைப்பு.

“அதுக்கு பரவால மேடம்..ரொம்ப நன்றி நாங்க கேட்டோமுங்குறதுகாக உங்கல மீட் பண்ண டைம போட்டு தந்ததுக்கு..”

“பரவால மா..அதுல என்ன இருக்கு..? சரி நீ மீட் பண்ண வந்ததுக்கான காரணம்..?”

“அது மேடம்…எங்க ஸ்கூல்ல ஓல்ட் கேர்ள்ஸ் அசோஷியேஷனால உங்கள பத்தி ஒரு புக் எழுத இருக்கோம்..”

“என்னமா சொல்ற..”

“எங்க ஸ்கூல்ல படிச்ச ஒரு இன்ஸ்பயரிங்க கேரக்டர் நீங்க.. அதான் உங்கள பத்தி ஒரு புக் எழுதுனா ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது..அதுக்கு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண தான் மேடம்..”

தொடரும்.

🖋️அதி…!

2023.08.05