*8*

விழுப்புரம் இரயில் நிலையம். மக்கள் நடமாட்டம் அதிகமாவதை கவனித்த வண்ணம் அமர்ந்திருந்த ரத்னதீபனிடம் வந்த பிரபுவின் கையில் சுடச்சுட பாதாம் பாலும் டீயும் இருந்தது. ஆவி பறக்கும் பாதாம் பாலை வாங்கி ஒரு மிடறு உள்ளே இறக்கிய ரத்னதீபன், “அந்த டீயை எப்படிடா குடிக்குற? சக்கரை தண்ணி மாதிரி இருக்கு.” முகம் சுழிக்க,

“புலி பசிச்சாலும் புல்லை தின்னாது அண்ணே… என் உயிர் போற நிலைமை வந்தாலும் பாலை தொடமாட்டேன். தவிச்ச வாய்க்கு டீயை குடிச்சிட்டுதான் என் உயிரை விடுவேன்.” என்று வீராவசனம் பேசியவன் தலையில் தட்டிய ரத்னதீபன்,

“அது புலிக்கு எவ்ளோ பசிச்சாலும் அதோட புள்ளையைத் தின்னாதுடா. சிங்கம், பூனை எல்லாம் பசிச்சா அதோட குட்டியை சாப்பிட்டுடும்.” என விளக்கம் சொல்ல,

“என்னவோ ஒன்னு.” என முனங்கிய பிரபு, “உங்க மச்சான்தான் நியூஸ்ல போடுற மாதிரி தலைப்பு எல்லாம் போட்டு அந்த போட்டோ ரெடி பண்ணி அனுப்பியிருக்காரு.” 

பெரிதாக அதிராத ரத்னதீபன், “வேற எங்கேயும் நியூஸ் லீக்கான மாதிரி வீடியோ எதுவும் வரலைங்கவும் நினைச்சேன்டா. ஆர்வக்கோளாறு அந்த மனுஷனுக்கு.” 

“உங்க ரெண்டு மச்சானும் சேர்ந்துக்கிட்டு என்னவோ பண்றாங்களோ? வளவன் அண்ணன் சொல்லாம விமல் அண்ணனுக்கு அண்ணி பத்தின விஷயம் தெரிஞ்சிருக்காது.”

“பண்ணட்டுமேடா.” என்றவனின் இதழில் மெலிதான புன்னகை. 

“அப்போ அவங்க பண்ணனும்னுதான் நீங்க அமைதியா இருக்கீங்க. சரிதான்…” என ஒரு மார்க்கமாக பார்த்த பிரபுவிடம்,

“ரெண்டு பெட்ரூம் இருக்குற மாதிரி வீடு பாரு. ஒன்னு ஆபீஸ் ரூமா யூஸ் பண்ணிக்குற மாதிரி வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் இருந்தா நல்லா இருக்கும்.” 

“இப்போவாச்சும் தோணுச்சே… ஏற்கனவே ஒன்னு ரெண்டு வீடு பாத்து வச்சிருக்கேன், நீங்களா சொல்லதான் காத்திருந்தேன். நாளைக்கே போய் பாத்துடலாம்.” என்றதற்கும் ரத்னதீபன் இதழ் விரிக்க, நல்ல மனநிலையில் இருக்கிறான் என்ற தைரியத்தில், “நீங்க அண்ணிகிட்ட அப்படி பேசியிருக்க வேண்டாம். அவங்கதான் கோபமா இருக்காங்கன்னா அவங்களை சமாதானப்படுத்தாம இன்னும் ஏத்திவிடுறீங்க.” என பிரபு குறைபட்டுக்கொள்ள, ரத்னதீபன் முகம் சட்டென இறுக்கம் கொண்டது.

“அதெல்லாம் உனக்கு புரியாது. உன்கிட்ட சொன்ன வேலையை மட்டும் பாரு.” 

“உடனே கோச்சிப்பீங்களே. இருந்த வேலையெல்லாம் அப்படியே விட்டுட்டு டிரையின புடிச்சி இங்க வந்து இறங்கி அண்ணிக்கு எதிரா கேஸ் கொடுத்தவங்களோட ஹிஸ்டிரிய தேடிப்புடிச்சு எல்லாம் பண்ணிட்டு வர்றப்போ அப்படி ஒரு கிறுக்குத்தனம் தேவையா? என்னவோ போங்க.” என சலித்துக்கொண்டவன் அதன்பின் அப்பேச்சினை விட்டுவிட, ரத்னதீபனும் இயல்பாய் காட்டிக்கொண்டான். ஆனால் மனமோ மனைவியின் குற்றச்சாட்டில் எரிமலையாய் தகித்தது. பாறையென இறுகியது. பாலைவனமாய் அனல் வீசியது. வழமை போல் மனதின் தவிப்பை அழுத்தத்தின் பின்னே ஒளித்து வைத்துக்கொள்ள, சிறிது நேரத்தில் சென்னை செல்லும் இரயில் வந்தது. அதில் ஏறி பொதுவாக அரசியல் சம்பந்தமாக பேசிக்கொண்டே அவரவர் இடம் சென்றனர்.

விமல் மூலம் செண்பகாவை காவல்துறையினர் அழைத்துச் சென்றது, ரத்னதீபன் விழுப்புரம் சென்றது எல்லாம் அவன் குடும்பத்தினருக்கு தெரியவர, அலைபேசி வாயிலாக விசாரித்துக்கொண்டனர்.

“வீட்டுக்கு கூப்பிட்டா கூட வேலை வேலைனு வராம இருந்துக்குவான் ரத்தினம். உனக்கு ஒன்னுன்னதும் பதறியடிச்சு வந்துட்டான் பாரு. இன்னும் என்ன வேணும் உனக்கு? கிளம்பி அவனோட இருக்குற வழியப் பாரு.” என மருமகளிடம் தனியாக சொல்லவும் செய்தார் அபிராமி.

இவள் பதில் சொல்லாமல் அமைதி காக்க,  

“அப்படி என்ன இடும்போ தெரியல. அவனை இப்படி ஒத்தையில விடத்தான் கல்யாணம் கட்டி வந்தியா?” என்று அவர் வார்த்தைகளில் சற்று அழுத்தம் கொடுத்துவிட,

“நான் மட்டும் கூட ரெண்டு பேரோட ஜிங்கு ஜிங்குன்னு ரெக்கார்ட் டேன்ஸ் ஆடிட்டு இருக்கேனா?” என எதிர்த்து பேசிவிட்டாள் இவளும். எப்போதும் மனதிற்குள் தோன்றுவதுதான் அவர் மகன் என்னவோ தனித்து சிரமப்படுவது போலவும் இவள் மட்டும் மகிழ்வாய் இருப்பது போலவும் பேசுவதில் அவருக்கு அலாதி பிரியமோ. இன்று வார்த்தை வந்துவிட்டது.

“இப்படி பேசி பேசி ஒன்னும் ஆகப்போறது இல்லை. வயசுதான் ஓடுது பெரியவங்க பேச்சை ரெண்டு பேரும் கேக்குறது இல்லை. என் பொண்டாட்டிக்காக என் புருஷனுக்காகன்னு ரெண்டு பேருமே இறங்கி வர்றதில்லைனா கடைசி வரை இப்படியே இருக்க வேண்டியதுதான். ஆனா ஒன்னு நீதான் அவன் பொண்டாட்டி அதை நியாபகம் வச்சிக்கோ.” இதற்கு மேல் இவர்களிடம் முடியாதுடா என்று நினைத்துவிட்டார் போலும் அழைப்பை முடித்துக்கொண்டார்.

மூக்கு விடைக்க மாமியார் சொன்னதை கேட்டு அமர்ந்திருந்தவள் இரண்டு நாட்கள் முகத்தை தூக்கி வைத்து சுற்றிக்கொண்டிருந்தாள். ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் போதும் சேர்ந்து வாழு என அனைவரும் இவளையே சூழ்ந்துகொள்ள, இந்த பேச்செல்லாம் அவன் செவி எட்டுமா என்றுகூட தெரியவில்லை. எட்டினாலும் எட்ட நிற்பவனை எவரும் அழுத்துவது போலவும் தெரியவில்லை. 

ஒருவாரம் சென்றிருக்கும் மேலாளர் அறைக்கு அழைத்து பணி மாறுதலுக்கான ஆணையைக் கொடுத்தார். வாங்கிப் படித்துப்பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

“என்ன சார் இது? நான் கேக்கவே இல்லையே. எதுக்கு இப்போ எனக்கு ட்ரான்ஸ்பர்?”

“உங்க மேல தப்பு இல்லைனாலும் போலீஸ் ஸ்டேஷன் வரை போனது பிளாக் மார்க் ஆகிடுச்சு. ரீஜினல் ஹெட் ட்ரான்ஸ்பர் பண்ண சொல்லிட்டாரு. அடுத்த வாரம் ஜாயின் பண்ற மாதிரி பாத்துக்கோங்க.” என்றதும் கலங்கிப் போனாள் செண்பகா. செய்யாத தவறுக்கு சென்னைக்கு மாறுதல் கிடைத்திருந்தது.

“எதுக்கு இப்போ இவ்ளோ டல்லாகுறீங்க? உங்களுக்கு பேவராதான வந்திருக்கு. உங்க ஹஸ்பண்ட் இருக்குற சென்னைல போஸ்டிங். இனி தனித்தனியா இருக்க வேண்டாம். என்ஜாய்.” என பெரிதாக அவளுக்கு உபயம் செய்துவிட்டது போல் பேச, உபத்திரம் செய்துவிட்டாயே என கடுப்புடன் பார்த்தவள் எதுவும் பேசாமல் வந்துவிட்டாள். 

“என்னடி மேனேஜர் எதுவும் சொல்லிட்டாரா? இப்படி கடுகடுன்னு இருக்க?” சுமிதா இவளை கவனித்துக்கேட்க, பணி மாறுதல் வந்ததை பகிர்ந்தாள்.

“அதுக்கு ஏன்டி உன் மூஞ்சு இப்படி இருக்கு. இது நல்ல சான்ஸ் அண்ணன் கூட பழம் விட்டுரு.” என இவளும் சொல்ல, உச்சந்தலைக்கு சுள்ளென்று ஏறியது. 

“உன் மூஞ்சி. வேற எதுவுமே சொல்லத் தோணலையா உனக்கு?” இருந்த தவிப்பிலும் ஆத்திரத்திலும் ஆதங்கத்திலும் முகம் காட்டிவிட, சுமிதாவும் கோபித்துக்கொண்டு முகம் திருப்பினாள்.

இவர்களே இப்படி பேசினால் வீட்டினர் இன்னும் பேசக்கூடும் என்று அப்போதே தவிப்பு வந்துவிட்டது. கொஞ்சமாவது நம்மை நிம்மதியாக இருக்க விடுகிறார்களா என சலித்துக்கொண்டவளுக்கு பிறந்தகத்தை விட்டு செல்ல வேண்டுமே என்ற கவலை அரிக்கத்துவங்க மனமும் முகமும் சேர்ந்து சுருங்கியது.

முதுகலை படிப்பு முடிந்தவுடனேயே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கத்துவங்கிவிட அவள் அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்னமே வரன்கள் வர ஆரம்பித்துவிட்டது. அதனால் வேலை பற்றி யோசிக்காமல் வருங்காலம் பற்றிய கனவுகளில் மிதந்தாள் பெண். ஒருவருடத்திற்குள்ளாகவே இருபத்திமூன்று வயதில் ரத்னதீபனுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டு அவர்கள் அளவில் நன்றாகவே திருமணம் நடந்தேறியது. புதுமணப்பெண்ணுக்கே உரித்தான ஆசைகளுடன் புகுந்த வீடு சென்றவள் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டாள். அதன் பின்தான் கவலைகளை மறந்து கோபத்தை கட்டுக்குள் வைக்கவென இந்த வேலையைத் தேடிக்கொண்டது. அன்றிலிருந்து ஒன்றரை வருடமாக பழக்கப்பட்டு பரிட்சயமான வேலையில் இன்று மாறுதல் கிடைத்திருக்கிறது. அதுவும் கணவன் இருக்கும் ஊரினில். நினைக்கவே கசந்தது. ஏற்கனவே காவல் நிலையம் வரை வந்து எளிதாக பிரச்சனையை முடித்துவிட்டான் என அவளை சுற்றி உள்ளவர்களே நேரம் காலம் பார்க்காமல் அவனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர். இப்போது இவளது வேலையும் அவன் அருகில் என்றால் இவளை பிடித்து அவனிடம் ஒப்படைத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என தீர்மானம் கொண்டாள். பரந்துவிரிந்த சென்னை மாநகரின் கீழ பல பகுதிகள் இருக்க, இவளுக்கு மாறுதல் கிடைத்திருக்கும் இடம் அவனது வசிப்பிடத்திற்கு எதிர்புறம் இருக்க வேண்டும் என அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்தாள். 

‘அந்த பொம்பளை பண்ண டிராமாவுக்கு எனக்கு தண்டனை.’ என மனதில் களவாட திட்டமிட்டிருந்த அப்பெண்ணை வறுத்தெடுத்துக்கொண்டே வீட்டிற்கு கிளம்பினாள். 

‘வேற ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருந்தா எப்படி இருந்திருப்ப அதே மாதிரி நினைச்சிக்கோ. முகத்துல எதையும் காட்டிடக்கூடாது இல்லைன்னா இதுதான் சாக்குன்னு அவன்கிட்ட கோர்த்து விட்டுடுவாங்க.’ மனதிற்குள் உருபோட்டுக்கொண்டே நடை போட, அவளை முறைத்துக்கொண்டே எதிர்புறம் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்றாள் சுமிதா. 

ஏதோ நினைப்பில் பார்வையை சுழற்றிய செண்பகாவின் முகத்தில் உர்ரென்று நிற்கும் சுமிதா தென்பட, மின்னலென யோசனை வந்து போனது. யோசியாமல் சாலையைக் கடந்து தோழியிடம் சென்றாள். தன்னை நோக்கி செண்பகா வருவதை கவனித்துவிட்ட சுமிதா கோபத்தில் முகம் திருப்பி தள்ளிப் போய் நின்றாள்.

“ரொம்பப் பண்ணாதடி… அந்த மேனேஜரும் நீ சொன்னதையேதான் சொன்னாரா பட்டுனு கோவம் வந்துடுச்சு.” செண்பகா சற்று தணிந்து சமாதானம் பேச, 

“இப்போ மட்டும் இந்த மூஞ்சு பரவாயில்லையாக்கும்…” செண்பகா சொன்ன வார்த்தையை நினைவுப்படுத்தி நொடித்துக்கொண்ட சுமிதாவின் முகத்தில் லேசாக இடித்த செண்பகா, “உன் அத்தை மக சென்னையில தான வேலை பாக்குறா? எங்க தங்கியிருக்கா? எனக்கு டிரான்ஸ்பர் போட்டிருக்குற பிராஞ்ச் பக்கத்துல இருக்குமா?” 

“எதுக்கு கேக்குற?” சுமிதா சந்தேகம் கொள்ள, 

“ப்ச் கேட்டு சொல்லு நீ.” காரணம் சொல்லாமல் செண்பகா அழுத்தம் கொடுக்க, எதற்காக இருக்குமென்ற யூகம் பிறந்தது சுமிதாவுக்கு.

“ஏன்டி பிரச்சனையை வளத்துட்டே போற? தேவையில்லாம வாழ்க்கையை கெடுத்துக்குற சொல்லிட்டேன்.”

“என் வாழ்க்கையில என்ன நடந்துச்சுனு என்னைவிட உனக்கு நல்லா தெரியுமாக்கும்? டீட்டியல்ஸ் விசாரிச்சு சொல்லுடி ப்ளீஸ். நீ என்னோட ஒரே பிரெண்டுல. நாளைக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடப் போலாம்.”

“சரி சரி ரொம்ப ஐஸ் வைக்காத. நான் கேட்டு சொல்றேன்.” என சுமிதா ஒப்புக்கொண்டதும் பாரம் இறங்கியது போல் நிம்மதி பெருமூச்சுவிட்ட செண்பகா சுமிதாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். 

சற்று நேரத்தில் பேருந்து வர, அதில் ஏறிக்கொண்டவள் அடுத்த வாரம் இந்த நேரம் இப்படி பயணிக்க முடியாதே என்ற ஆதங்கத்தோடு காதில் ஹெட்செட் போட்டுக்கொண்டு சுற்றத்தை கண்களில் நிரப்பி அப்பயணத்தை ரசிக்க ஆரம்பித்தாள். பல நேரங்களில் அவளது ஆதங்கங்கள், கோபங்கள், குமுறல்கள், எதிர்பார்ப்புகள் அது கொடுத்த ஏமாற்றங்கள், ஐமிச்சங்கள் என அவளது எதிர்மறை ஏக்கங்கள் அனைத்தையும் தாங்கி நின்றது அப்பயணம். வழமையாக வந்து செல்வதினால் உண்டான பழக்கங்களிடம் பெரிதாக பேசியிராதவள் சிறு புன்னகை மட்டும் உதிர்த்துக் கடப்பாள். இன்று தெரிந்தவர்கள் கண்ணில்படும் சமயம் அவர்களிடம் பேசி இருக்கலாமோ என்று கூட தோன்றியது. எண்ணங்கள் அலைபாய வீடு வந்து சேர்ந்தவள் தவறியும் மாற்றல் கிடைத்திருக்கும் விஷயத்தை வீட்டினில் பகிரவில்லை. இருநாள் கழித்து சுமிதா அவள் அத்தை மகளுடன் அறிமுகப்படுத்தி வைக்கவும் வீட்டில் தெரியப்படுத்தினாள்.

“இங்கிருந்து கிளம்புறேன்னு ஒருத்தருக்கு கூட வருத்தமில்லையா?” செய்தி கேட்டு மூவர் முகமும் பிரகாசமாகிவிட உர்ரென்று பார்த்தாள் செண்பகா.

“மாப்பிள்ளைக்கிட்டதான போற. சந்தோஷம்டா செண்பா.” என்று முந்திக்கொண்ட அம்மாவை கண்டமாக பார்த்து பல்லைக்கடித்தான் வளவன். அவளுக்கு இந்த பேச்சு பிடிக்காது என்று தெரிந்தும் அவளை தூண்டிவிடுவது போல் பேசுகிறாரே, இதற்கே வேண்டுமென்று வெளியே தங்குகிறேன் என சொல்வாள் என்ற ஆதங்கம் அவனுக்கு. 

“இந்த நினைப்பு வேற இருக்கா உங்களுக்கு?” அண்ணனின் கணிப்பு போலவே, “என் பிரண்ட் ஒருத்தி மடிப்பாக்கம்ல தான் பி.ஜில தங்கியிருக்கா. அங்கிருந்து நடக்குற தூரத்துலதான் என்னோட பிரான்ச் இருக்கு. அங்கதான் தங்க போறேன்.” என முடிவாய் சொல்ல, பெற்றவர்களிடமிருந்து மறுப்புகள் வந்தது.

“நீ பண்றது சரியே இல்லை பாப்பா.”

“என்ன நினைப்புல இருக்க நீ?”

“நீ ஏன் அமைதியா இருக்க? உன் பங்குக்கு நீயும் பேசு.” அமைதியாக இருந்த வளவனை செண்பகா சீண்ட,

ஆழ மூச்செடுத்தவன், “நீ நினைச்சதைதான் செய்ய போற. அதுக்கு ஏன் என் எனெர்ஜியை வேஸ்ட் பண்ணனும் பாப்பா?” என்றுவிட, அவளை எதிர்த்து பேசியிருந்தால் ஒன்றும் தெரிந்திருக்காதோ என்னவோ எப்போதும் கோபமென்றாலும் அதில் கொஞ்சம் தண்மை கலந்து பேசுபவன் இன்று விலகல் தன்மையுடன் பேச அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. முகம் சுருங்கிவிட கூம்பிப்போய் அமர்ந்துவிட்டவளை பெற்றவர்கள் இன்னும் பேசப்போக கண்காட்டி அவர்களை அமைதிப்படுத்தியவன் எழுந்து வீட்டின் பின்புறம் சென்றுவிட்டான்.

பெற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மகளைப் பார்க்க, அவளும் அண்ணனை தேடிக்கொண்டு பின்புறம் சென்றாள். திண்ணை போல் இருக்கும் இடத்தில் விளக்கை ஒளிரவிட்டு இருளை வெறித்தபடி அமர்ந்திருந்த வளவன் அருகில் சென்று அமைதியாக அமர்ந்தாள். பக்கவாட்டில் திரும்பி தங்கையைப் பார்த்தவன் ஒன்றும் சொல்லாது பார்வையை திருப்பிக்கொள்ள,  

“நீயும் நாந்தான் வீம்பு பண்றேன்னு நினைக்குறீல. இறங்கி போனா என்ன குறைஞ்சிடப் போகுது… சந்தோஷம் பெருசா ஈகோ பெருசா… இப்போ வாழாம எப்போ வாழுவ? வறட்டுப் பிடிவாதம் வறட்சியை தவிர எதுக்கும் பிரயோஜனம் இல்லை… வாழ்க்கைனா நெளிவு சுழிவு இருக்கும், ஏத்த மாதிரி வளைஞ்சி கொடுக்கணும். தனிச்சி இருந்து எதுக்கு தவிக்கணும்? அப்படி கோவம்தான் பெருசுன்னா கூட இருந்துகிட்டு சண்டை போடு. விட்டுட்டு இருக்குறதுல எந்த பயனும் இல்லை. இதுதான உன் நினைப்பும்?” விளக்கின் ஒளி எட்ட முடியாத தூரத்தில் இருக்கும் இருளை வெறித்தபடி இவள் பேச பேச, பெருமூச்சு எழுந்தது வளவனுக்கு. காயப்பட்டவளின் காயம் நாள்பட்டதால் தணிந்திருக்கும் என்ற நினைப்புக்கு மாறாக இன்னுமே ஈர வடுவின் தடயத்தை ஒட்டி அவள் பேச, அவளுக்கு ஆறுதல் சொல்லி அவள் முடிவுக்கு துணை நிற்கவும் முடியவில்லை அதற்காக அவளை கட்டாயப்படுத்தவும் தோணவில்லை.

“ஒன்னரை வருஷமா எனக்கு ஆறுதலா நிக்குறீங்க. என் முடிவை ஆதரிச்ச அதேசமயம் அதை எதிர்க்கவும் செய்யுறீங்க.”

“எங்களுக்கு நீ சந்தோசமா மனநிறைவோட வாழனும். அதுக்கு தணிஞ்சி போலாமேன்னு ஒரு எண்ணம் அவ்ளோதான் பாப்பா.” வளவன் மென்குரலில் பேசினான். 

“நான் மட்டும் தணிஞ்சி போனா போதுமா? அழையா விருந்தாளியா போங்குறீங்க. என் பீலிங்ஸ் காயப்பட்டிருக்கப்போ அதுக்கு மருந்து போடாம மேல மேல அதை டிஸ்டர்ப் பண்ற மாதிரி இறங்கி போ முடிவெடுனா எப்படி? இன்னும் அந்த காயம் எரியுதே. ஈரமா பச்சையா சீல் புடிச்சி இருக்கே. காயம் கொடுத்தவர் அதை சரிபண்ண என்ன முயற்சி எடுத்தாருன்னு நான் இறங்கிப் போய் அவர் கால்ல விழணும்னு நினைக்குறீங்க? நான் மட்டும் முயற்சி எடுத்து இந்த உறவை கொண்டு போகணும்னா எப்படி சரியா வரும்? ரெண்டு பேர் சேர்ந்த உறவுல ரெண்டு பேரும் முயற்சி எடுத்தாதான் நமக்காக அவர் இதை பண்ணியிருக்காரு நாமளும் கொஞ்சம் விட்டுக்கொடுத்தா என்னனு தோணும். அப்படி எதுவும் இல்லாம நீ இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி என் வேலையை நான் பாப்பேன்னு அவர் இருந்தா என்னாலையும் என் வேலையை பாத்துட்டு இருந்துக்க முடியும். அதுதான் யாரையும் எதிர்பாக்காம என் பிரெண்டோட அத்தை பொண்ணை கான்டேக்ட் பண்ணி தங்குறதுக்கு இடம் ஏற்பாடு பண்ணிக்கிட்டேன்.” என நீளமாய் பேச, தங்கையின் மனதில் இருப்பது புரிந்தது வளவனுக்கு.

கணவன் வேண்டும் என்று இவள் முடிவெடுக்க வேண்டுமென்றால் அவரும் மனைவி என்று இவளுக்காக சிலதை விட்டுக்கொடுத்து வர வேண்டும் என எதிர்பார்க்கிறாள். புரிதலின்மையோ வெட்டி வீரப்போ என்னவும் இருக்கட்டும் இருவருக்கும் இடையில் அதற்காக இவளை விட்டுக்கொடுப்பது போல் அவர் கண்டுகொள்ளாமல் இருப்பது தங்கையை பாதிக்கிறது என்று புரிந்த பின் அவள் மனம் இறங்கவென தானும் தன் பங்குக்கு பேசி வருத்தக்கூடாது என முடிவெடுத்தவன் அவள் உச்சந்தலையில் கைவைத்து ஆதுரமாய் வருடிவிட்டான்.

நீயாவது புரிந்து கொண்டாயே என்பது போல் பார்த்தவள் அவன் கைபிடித்து அவன் தோளில் சாய்ந்துகொள்ள,

“எப்போ போகணும்டா பாப்பா? அந்த பி.ஜி நம்பர் கொடு நான் பேசுறேன். நானே உன்னை கொண்டு வந்து விடுறேன். நீ தனியா எல்லாம் இல்லை.” 

“இந்த வீக்கென்ட் கிளம்புனா மண்டே ஜாயின் பண்ணிடுவேன்.” என்றவளிடம் அவள் தங்கப் போகும் விடுதியின் முகவரியை வாங்கிகொண்டவன் மறுநாளே நேரில் சென்று பார்த்து வர கிளம்பிவிட்டான். 

தென்சென்னையின் வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான மடிப்பாக்கத்தில் அவள் சொன்ன தங்குமிடம் திருப்தியாகவே இருந்தது. உணவுக்கும் பாதுகாப்புக்கும் அச்சறுத்தல் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டபின் தங்கையிடம் கூட சொல்லாது முன்பணம் கட்டிவிட்டான். சொன்னால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பாள். 

நெரிசலான சாலையில் சற்று ஒதுங்கி பேருந்து நிறுத்தம் எங்கு என்று கேட்டுக்கொண்டு அங்கு சென்று பேருந்துக்காக காத்திருக்க, விமல் அழைத்துவிட்டான்.

“விஷயம் தெரியுமா வளா? மச்சான் வீடு பார்த்துட்டாரு. இன்னும் ஒரு வாரத்துல பால் காய்ச்சலாம்னு இருக்காங்க. எப்படியும் செண்பாவை கூப்பிடுவாங்க அப்போ ஏதாவது பண்ண முடியுதான்னு பாக்கலாம்.” ஆர்வமாக அவன் சொல்ல, இவனுக்கு முன்பிருந்த ஆர்வம் இப்போதில்லை. 

“மாப்பிள்ளை கூப்பிட்டாதான் செண்பா வருவா.” 

“என்ன வளா நீங்க? அது செண்பா வீடு. யாரும் கூப்பிட்டுதான் போகணுமா என்ன?”

“செண்பா வீடுன்னு நீங்களோ நானோ நம்ம குடும்பமோ சொன்னா போதுமா? உரியவர் சொல்லணும்.” என அழுத்தம் திருத்தமாய் சொன்னான் வளவன்.

“என்னாச்சு உங்களுக்கு?” அங்கு விமலுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்களை சேர்த்துவைக்க வேண்டும் என்று கேட்டுவிட்டு இப்போது அவனது தங்கை போலவே பேசுகிறானே என்று தலை சொரிந்தான். 

“செண்பா கோவத்தை சரிபண்ண மாப்பிள்ளை எந்த முயற்சியும் எடுக்கலையே. அவர் கொஞ்சம் இறங்கி வந்தா செண்பா தானா தணிஞ்சிடப் போறா.” தங்கை பேசியதை சொல்லாமல் மேலோட்டமாக பேசியவன், “செண்பாவுக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிருக்கு. இப்போதான் அவ தங்குறதுக்கு பி.ஜி பாத்துட்டு ரிட்டர்ன் ஆகுறேன்.”

“இவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ லேட்டா சொல்றீங்க. தங்கச்சி இருக்குற இடத்துக்கு பேக் சைட்தான் மச்சான் இருக்காரு. எல்லாம் ரொம்ப பக்கம் பக்கம்தான். இதை சாக்கா வச்சே ரெண்டு பேரையும் சேத்துடலாம்னு பிளான் போடாம நீங்க என்ன செண்பாவை வெளில தங்க வைக்க பாத்துட்டு இருக்கீங்க.” என கடிந்துகொண்ட விமல், “அவங்களாவே பக்கம் பக்கம் வந்துட்டாங்க. இனி நாம கொஞ்சம் பிரஷர் பண்ணா போதும்.”

“அந்த பிரஷரை நீங்க உங்க மச்சானுக்கு கொடுங்க. இனி செண்பாவை எதுவும் சொல்ல என்னால முடியாது.” என வளவன் நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டான். 

“தங்கச்சி வாழ்க்கை மேல அக்கறையே இல்லை.” என குறைபட்டுக்கொண்ட விமல் பேச்சிற்கு இம்முறை செவி சாய்க்கவில்லை வளவன்.

“உங்க தங்கச்சி என்னமோ மந்திரம் போட்டுடுச்சு. அதான் இப்படி பேசுறீங்க. நானே பாத்துக்குறேன். வைங்க போனை.” என்று வைத்துவிட்ட விமலுக்கும் இவர்களை சேர்த்து வைக்கும் ஆவல் கொஞ்சம் குறைந்தது போலானது.

‘அத்தை காதுல விஷயத்தை போட்டு வைப்போம். பால் காய்ச்சணும் சொன்னது அவங்கதான… இனி அவங்களாச்சு அவங்க புள்ளையாச்சு அவங்க மருமகளாச்சு.’ என நினைத்துக்கொண்டே அபிராமிக்கு அழைத்து இவன் விஷயம் சொன்னான். என்ன கொஞ்சம் யோசித்து மாமியார் காதில் போட்டதற்கு பதில் மச்சினனிடம் சொல்லியிருந்தால் வேலை இன்னும் எளிதாகி இருக்குமோ என்னவோ… கொஞ்சம் சறுக்கிவிட்டான்.