*17*

ஆடி முடிந்த மறு முகூர்த்த நாளில் அந்த திருமண வீடே பரபரப்பாய் இருந்தது. பிரபலங்களும் கட்சிக்காரர்களும் தொழிலதிபர்களும் வந்தவண்ணம் இருக்க, அந்த மாபெரும் மண்டபம் கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது. எங்கு திரும்பினும் பளிச்சிடும் விளக்குகளும் அதற்கு தோதாய் பட்டுகளில் வலம் வரும் பெரிய தலைகளும் என பகட்டு வெளிப்பட்ட அவ்விடத்தை பார்வையிட்டுக்கொண்டே பிரபுவுடன் உள்நுழைந்தவன் தங்கள் கட்சியினர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றான்.

அவையில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்வதையும், கட்சியின் தலைமைக்கு எதிராக வாக்களிக்காமல் இருப்பதையும் கவனத்தில் கொண்டு மிக முக்கியமான மசோதாக்கள் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எவ்விதம் வாக்களிக்க வேண்டும் என உத்தரவை பிறப்பித்து கட்சியின் செயல்பாட்டை உறுதி செய்பவர் கொறடா. கட்சித் தலைமையால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர். அமைச்சருக்கு இணையான தகுதியுடையவர். அவர் இல்ல திருமண விழா விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டு பல கோடிகளை தன்னுள் சுருட்டி வைத்துள்ளார் என்பதை அம்மண்டபமே பறைசாற்றியது. 

இவனைப் பார்த்ததும் புன்னகைத்த முகங்களுக்கு பதில் புன்னகை கொடுத்தவன் ஓய்வாக இருந்தவர்களுடன் அமர்ந்து பேச்சு கொடுத்தான்.

“புது எம்.எல்.ஏ தொகுதியெல்லாம் எப்படி இருக்கு?” அங்கிருந்ததில் இவன்தான் இளையவன் என்பதால் பொதுவாக பேச்சு துவங்கியது.

இவன் தன் தொகுதி செயல்பாடுகளை பகிர்ந்துகொள்ள, சிலர் நல்லது செய்கிறாய் என்று பாராட்ட,

“பாராட்டுறோம்னு நாம செய்யுறதெல்லாம் சரியா இருக்கும்னு அசந்து இருந்துடுடாத. இப்போதான் வந்திருக்க, கவனமா இருக்கனும். கட்சிக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும். இந்த ஆட்சில எப்படி இருக்கியா அதை பொறுத்து அடுத்த எலெக்ஷன்ல அமைச்சர் கூட ஆகலாம். உங்கிட்ட அதுக்கான திறமை இருக்கு.” என்று அவனுக்கு சார்பாக உரையாடல்கள் நகர,

“ஏன்யா உசுப்பேத்தி விடுறீங்க. நாளைக்கு நமக்கே போட்டியா வந்துடப் போறான். இவங்க உசுப்புறாங்கன்னு பொங்கிடாத தம்பி. வேணும்னா உசத்தி புடிப்பாங்க வேண்டாம்னா தூக்கி ஒதுங்க போட்டுடுவாங்க.” என்றும் சிலர் நக்கலுடன் உண்மையை பேசினர்.

“கல்யாண வீட்டுக்கு வந்துட்டும் அரசியல்தானா? பேச வேற இல்லையா? வருஷம் முழுக்க இந்த கட்சிக்காரன் அப்படி பண்றான் அவன் அப்படி இருக்கான்னுதான் பேசிட்டு இருக்கோம்.”

“வேற என்னய்யா பண்றது? பெரியாளுங்க வராங்கனு மேடைக்கு போற லைனை நிறுத்தி வச்சிருக்காங்க. இல்லைனா இந்த பூங்கொத்தை பொண்ணு மாப்பிள்ளைகிட்ட கொடுத்து ஒரு போட்டோ புடிச்சிட்டு போயிட்டே இருக்க மாட்டோமா. ஆயிரம் வேலை கிடக்கு. நமக்கு தெரிஞ்சது எல்லாம் இந்த அரசியல்தான வேறென்ன?” அங்கலாய்த்தார் ஒருவர். 

“அரசியல் பொதுக்கூட்டத்துக்கு வந்த மாதிரி இங்கேயும் கூட்டமா? கல்யாணத்துல ஒரு கிளுகிளுப்பு வேணாம்…” என்று மற்றொருவர் சொல்லவும் சிரிப்பலை எழுந்தது.

“கிளுகிளுப்புதான வேணும். இதோ இருக்கானே தீபன்… ஏன்யா மந்த்ராவை கூட்டிட்டு வருவேன்னு பாத்தா ஒத்தையா வந்திருக்க? இந்நேரம் மந்திரம் போட்டிருக்க வேணாம்?” என்று பேச்சும் கவனமும் இவன் புறம் திரும்ப, அதுவரை இன்முகமாக பேச்சினில் கலந்துகொண்ட ரத்னதீபன் கடுப்பானான். ஆனால் காட்ட முடியாதே. அங்கே அத்தனை கேமராக்கள் கண்களாக செயல்பட இவனைவிட அனுபவசாலிகள் நிறைந்திருக்க, முயன்று முகம் அழுத்தம் கொள்வதை கட்டுப்படுத்தியவன், 

“அவங்களுக்கு அழைப்பு இருந்தா வருவாங்க அண்ணே.” 

“சும்மா நடிக்காதயா… சினிமால காசு ஏகத்துக்கு வருது இப்போவே வெளில சொன்ன வருமானம் போயிடும்னு தனித்தனியா இருக்குற மாதிரி காட்டிக்குறீங்களோ?” என பேச்சு அவர்களை சுற்றிச் செல்ல, சுத்தமாய் பிடிக்கவில்லை ரத்னதீபனுக்கு. மேலே வருவதற்கு மந்த்ராவை விளம்பரயுக்தியாக பயன்படுத்தியவனிடம் கேலியாக மறைமுகமாக இதுவரை பேசியது போய் இப்போது நேரடியாக கேட்க ஆரம்பிக்க, இது இன்னும் பெரிதாகுமோ என்ற அச்சம் பரவியது. 

“இதை கேட்டா என் பொண்டாட்டி என்னை வெளில துரத்திடுவா. உங்களுக்கு ஏன் இந்த ஆசை. இந்த மீடியாதான் ஏதோ பேசுறாங்கன்னா நீங்களும் ஏன்?” என நொந்துப்போன குரலில் கேலியாக பேசுவது போல் அப்பேச்சை தவிர்க்கப் பார்த்தான்.

“எதுவும் இல்லைங்குற அப்போ… பாப்போம் பாப்போம். உண்மை வெளில வரத்தான போகுது ஒருநாள்.” என அவர்களும் கிண்டலுடன் அதனை நிறுத்திக்கொண்டனர். 

“அண்ணே மினிஸ்டர் வேலுச்சாமி வந்திருக்காரு.” பிரபு அவன் காதுகளில் கிசுகிசுத்து மேடையைக் காண்பிக்க, சொல்லிக்கொண்டு எழுந்தவன் அவரை நோக்கி சென்று வணக்கம் வைத்தான். அறிமுகமாக சில வார்த்தைகள் போகிற போக்கில் பேசிவிட்டு சென்றார் அவர்.

“இவருக்கு வந்த வாழ்வை பாருங்க… போன ஆட்சில ஊழல் வழக்குல உள்ள போய்ட்டு வந்து கட்சி தாவி இப்போவும் அமைச்சரா இருக்காரு.” என பிரபு ரத்னதீபன் காதில் முணுமுணுக்க கண்டனமாய் பார்த்தான் அவன்.

“எங்க நின்னு என்ன பேசுற.” பற்களுக்கு இடையே கடித்துத் துப்ப, 

“சரி சரி உஷ்ணமாகாதீங்க. அங்க லைன் ஓபன் பண்ணிட்டாங்க. பொக்கே கொடுத்து வயிறுக்கு எதுவும் போடலாம் வாங்க.” என அழைத்துக் கொண்டு மேடைக்கு செல்ல, பாதி வழியில் வையாபுரியின் தம்பி இவர்களை பிடித்துக்கொண்டார். எதிர்க்கட்சியில் இருக்கும் இவருக்கும் அழைப்பு சென்றிருக்கும் போல.

“என்ன மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க?” ஆர்ப்பாட்டமாக ரத்னதீபனை வரவேற்றவர், “உங்க அரசு கொறடா நான் எல்லாம் அந்த காலத்துல ஒண்ணா கொடி புடிச்சவங்க. பழசை மறக்காம எனக்கும் பத்திரிக்கை அனுப்பிட்டான். எந்த உதவினாலும் அவன்கிட்ட என் பேர் சொல்லுங்க.” என சொல்லி அவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு நகர, இவர்கள் பின்னே வரிசையில் நின்ற இன்னொருவர்,

“இவரோட அண்ணன் பொண்ணைதான கட்டியிருக்கீங்க நீங்க?” என்றார் இவனிடம்.

இவன் ஆமாம் என்க, “அவர் அண்ணன் பொண்ணுக்கு மாப்பிள்ளை வேணும்னு சொல்லிட்டு இருந்தாரு. உங்க மாமனாருக்கு ரெண்டு பொண்ணா?” என கேட்கவும் அதிர்ந்து போனான்.

மாப்பிள்ளையா? விமல் இதையே சொன்னபோது அதிர்ந்தாலும் அவன் சில வார்த்தைகள் சேர்த்துப்போட்டு பேசுபவன் என்பதாலும் மனைவி மீது இருந்த நம்பிகையாலும் அமைதியாக இருந்தவனுக்கு இப்போது ஒப்பவே இல்லை. என் மனைவிக்கு இவர் மாப்பிள்ளை பார்ப்பாரா? என சின்ன மாமனாரை வறுத்தெடுத்தான்.

“எங்கண்ணன் அவர் வீட்டுக்கு ஒரே மாப்பிள்ளை. அவர் வேற அண்ணன் பொண்ணுக்கு தேடுறாரோ என்னவோ.” என பிரபு இடைபுகுந்து சமாளித்தான். 

அதன்பின் அங்கிருக்கவே இருப்பு கொள்ளவில்லை ரத்னதீபனுக்கு. வேகமாக பூங்கொத்தை கொடுத்து மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே செல்லத் துடித்தவனை நிறுத்திய பிரபு, “பெரிய விருந்து இருக்குண்ணே. சாப்பிட்டு போலாமே.” அவன் பார்வை உணவுக்கூடம் நோக்கி சென்றது.

“உனக்கு வேணும்னா நீ கொட்டிக்க.” என அவனிடம் எரிந்துவிழுந்தவன் அவனை விட்டுவிட்டு கிளம்பிவிட்டான்.

இந்த மனுஷனை வச்சிக்கிட்டு… புலம்பிய பிரபு ரத்னதீபனை சமாளித்துக் கொள்ளலாம் என உணவுக்கூடம் நோக்கி சென்றுவிட்டான். 

மண்டபத்திலிருந்து கிளம்பிய ரத்னதீபனின் வண்டி நேராக சென்று நின்றது என்னவோ செண்பகா வேலை செய்யும் கிளையில்தான். அலைபேசியில் தொலைபேசி எண்ணை தடுத்துவிட்டாள். விடுதிக்கு செல்லவும் முடியாது. அதற்கு வேலை செய்யும் இடமே மேல். எப்படியும் மண்டபத்திலிருந்து அங்கு சென்று சேர்க்கையில் மாலை ஆகிவிடும். அலுவலக வேலை முடியும் நேரம்தான் என யோசித்து அவளை பார்க்கச் சென்றுவிட்டான்.  

மனம் முழுதும் அத்தனை பொருமல். இவள் சம்மதம் சொல்லாமல் எப்படி விஷயம் இவ்வளவு தூரம் வரும். அவ்வளவுதானா அப்போது. அவளுக்கு நான் வேண்டாமா? என்னை மீறிக்கொண்டு இன்னொருவனை அவளால் ஏற்க முடியுமா? வருத்தம், ஆதங்கம், ஆற்றாமை என தனக்கும் அதிருப்தி இருந்த போதிலும் இவளைத்தானே நினைத்துக்கொண்டு இருக்கிறேன். இவளுக்கு என்ன வந்ததாம்? எதற்கு இந்த முடிவாம்? இவ்வளவு நாள் இல்லாது எதற்கு இப்போது? அவளெதிரே மந்த்ரா வந்துவிட்டதாளா? அவ்வளவுதான் அவள் நம்பிக்கையா? இன்னும் இன்னும் யோசனைகள் தறிகெட்டு ஓட, ஆதங்கமும் கோவமுமாய் அவள் முன் சென்று நின்றான்.

முதலில் அதிர்ந்தவள், “என்ன வேணும் சார்?” என்று நிதானமாக கேட்க, சுற்றத்தினரை ஒருமுறை பார்த்துவிட்டு முன்னோக்கி சரிந்தவன் மென்குரலில், “என் பொண்டாட்டிகிட்ட பேசணும். முடியுமா?” பல்லிடுக்கில் கடித்துத்துப்ப மற்றவர்களுக்கு ஏதோ ரகசியம் பேசுவது போல் தெரிந்தது.  

“முடியாது. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க.” அவனைப் போலவே அடிக்குரலில் சீறினாள் செண்பகா.

“அப்போ என்னாலையும் முடியாது.” என வம்பாக சொன்னவன் பார்த்த பார்வையே சொல்லியது ஏடாகூடமாக எதுவோ செய்யப்போகிறான் என. சுதாரித்துவிட்ட மனைவி, “வொர்க்கிங் அவர்ஸ் இன்னும் முடியல.” என்றாள் சமாளிப்பாய். 

“பெர்மிஷன் நீயே வாங்குறியா இல்லை நான் வாங்கவா?”

அவனின் மறைமுக வற்புறுத்தலில் ஆத்திரம் பெற்றவளாய் எழுந்துவிட்டவள் விழிகளில் அனலைக் கக்க, “மனுஷனாயா நீ.”

“அது உன் கையிலதான் இருக்கு.”

கணினியை அப்படியே விட்டுவிட்டு மேலாளர் அறைக்குச் சென்று சீக்கிரம் வீட்டிற்கு கிளம்ப அனுமதி கேட்க, இருந்த இடத்திலிருந்தே ரத்னதீபன் செண்பகா இடத்தில் நிற்பதை பார்த்துவிட்டவர் மறுக்க முடியாமல், “அடிக்கடி இப்படி வந்து நிக்குற மாதிரி வச்சிக்காதீங்க. இங்க எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ்தான்.” கணவனுக்கு அரசியல் அதிகாரம் இருக்கிறது என சலுகை எதிர்பார்க்கக்கூடாது என்ற மறைமுக கட்டளையுடன் அனுப்பி வைத்தார். 

‘இவனுக்கு என்னை சிக்கல்ல மாட்டிவிடுறதே வேலையா போச்சு. இவனால நான் பேச்சு வாங்குறேன்.’ கணவனை மனதிற்குள் திட்டிக்கொண்டே வந்து கணினியை அணைத்துவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, விருட்டென வெளியேறி வண்டியை உயிர்ப்பித்து நின்றான். 

கடுகடுவென வெளியே வந்தவள், “இங்கிதமே இல்லையா உங்களுக்கு. எதுக்கு நான் வேலை பாக்குற இடத்துக்கு எல்லாம் வரீங்க?” அவனிடம் பாய,

“வண்டில உக்காந்தா ஒழுங்கா வீட்டுக்கு போய் பேசலாம் இல்லைனா இன்னும் பத்து பேர் முன்னாடி பேசுற மாதிரி ஆகிடும் அப்புறம் அது லட்சணக்கான மக்களுக்கு செய்தியா போயிடும். எது வசதி?”

மீண்டும் மீண்டும் தன்னை கத்தி முனையில் வைத்து அவன் இழுப்புக்கு இழுக்கிறான் என கருவிக்கொண்டே வண்டியில் ஏற, சல்லென்று பறந்தது வண்டி. நெரிசலில் கூட லாவமாக வீட்டிற்கு கூட்டி வந்தவனை முடிந்த மட்டும் முறைத்தாள். பின்னே ஒற்றை பக்கமாய் அமர்ந்திருந்தவள் அவன் ஓட்டிய அழகில் எங்கே கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் வண்டிக்கம்பியை இறுக பற்றிக்கொண்டு வந்தாளே. கை அப்படியே சிவந்துவிட்டது. சொன்னால் தேவையின்றி ஏதாவது பேசுவான் என கம்மென்று அவனை பின்தொடர்ந்து சென்றவள் வீட்டை திறந்து உள்ளே நுழைந்ததும் கூடத்திலேயே நின்று அவனை அழுத்தமாக பார்த்தாள்.

“என்னடி பார்வை ஹான்? என்ன நினைச்சிட்டு இருக்க நீ?”

“அதை நான் கேக்கணும். என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? உங்க இஷ்டத்துக்கு நான் வேலை பாக்குற இடத்துக்கு வரீங்க, மிரட்டாத குறையா நடக்குறீங்க. என்னை என்னனு நினைச்சீங்க?”  

“அதை நான் கேக்கணும். என்னை என்னனு நினைக்குற நீ? நான் யாருடி உனக்கு?” அலட்சியமாகவோ, இதெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்பது போலவும் பேசுபவன் இன்று அவளுக்கு இணையாக சீறிக்கொண்டு முன்னேற, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன உளறுறீங்க?”

“உளறுறேனா? எவ்ளோ மெத்தனமா பதில் சொல்ற நீ.”

“உங்களை விடவா.” அவனைப் போலவே திருப்பிக் கொடுத்துவிட்ட நிறைவு அவள் கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தி நிதானமாக்கியது. அதுவும் எதையோ பிடித்துக்கொண்டு சண்டை தானே போடுகிறான் இங்கிருக்க வேண்டும் என வற்புறுத்தவில்லையே என்ற ஆசுவாசமும் சேர்ந்துகொண்டது.   

“கல்யாணத்துக்கு உன்னை பத்தி விசாரிக்குறாங்கன்னு மச்சான் சொன்னப்போ கூட உன் மேல இருந்த நம்பிக்கையில அமைதியா இருந்தேன்டி நான். ஆனா உனக்குத்தான் எப்போவுமே என் மேல நம்பிக்கை இல்லை. இப்போ மொத்தமாவே நான் உன் வாழ்க்கையில இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்ட இல்லை?”

“என்ன பேச்சிது? என்ன விசாரிச்சாங்க?” குழப்பத்தில் இவள் முகம் சுருங்கியது. 

“நடிக்காதடி.” ஆவேசம் வந்தவன் போல் அவளை நெருங்கி தன்னில் இழுத்தவன், “இன்னொருத்தனை கட்டிடுவியாடி நீ? என்ன நெஞ்சழுத்தம் இருந்தா நான் இருக்குறப்போவே மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருப்ப?”

“மாப்பிள்ளையா யாருக்கு?” அவளுக்கு இன்னுமே விளங்கிக்கொள்ள முடியவில்லை.

“உன் அண்ணனுக்கா பாப்பாங்க. உன் சித்தப்பன் அவரோட அண்ணன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறாராம். என்கிட்ட விசாரிக்குறாங்க. உனக்கு இல்லாம யாருக்குடி?” அவன் தாடை இறுகி கோவத்தில் கண்கள் விரிந்து கருவிழிகள் அவளில் நிலைபெற்று சிவப்பு ஏறிக்கொள்ள தயாராகியது. 

அவன் சொன்ன செய்தியில் செண்பகாவிற்கு அதிர்வை விட குழப்பமே மிதமிஞ்சியது. சித்தப்பா மாப்பிள்ளை பார்க்கிறாரா? எனக்கா? வாய்ப்பில்லையே என்பது போல் இருக்க, அவளின் அமைதி அவனை உசுப்பியது.

“என்னடி அமைதியா நிக்குற? உனக்கு ஓகேதான்ல அப்போ? இன்னொரு கல்யாணம் பண்ணிடுவியா நீ? அவ்ளோ ஈஸியா போயிட்டேனா நானு?” அவனின் வார்த்தைகள் அவளையும் தூண்டியது. இவனாக எதையோ கேட்டு வந்து என்னை நிற்க வைத்து கேள்வி கேட்பானா? அதற்கு என்ன தகுதி இருக்கிறது இவனுக்கு? அப்படியே நான் இன்னொரு திருமணத்திற்கு சரியென்றால் என்ன செய்வானாம் இவன்? என்ற முரட்டுத்தனம் அவளுள்ளும் வந்துவிட, அவனை சீண்டிவிட்டு குளிர்காய அறிவுறுத்தியது அறிவு.  

“இதேதான நீங்களும் பண்ணீங்க?”

“பழிவாங்குறியா நீ?” ஆத்திரத்தில் கேட்டவனுக்கு அப்போதுதான் அவள் சொன்னது உரைக்க, “நான் எப்போடி இன்னொரு கல்யாணம் பண்ணிக்குறேனு சொன்னேன்?”

“சொல்ல மட்டும்தான் செய்யல.” என்றவளை சினத்தில் இன்னும் நெருக்கிப்பிடித்து நெஞ்சோடு மோதி நிறுத்தி வைத்துக்கொண்டவன் உறுத்து விழித்தான். என்னை உனக்குத் தெரியாதா? என்ற பார்வைக்கு தெரியாது என சளைக்காது பதில் கொடுத்தாள் அவளும்.

“என்னடி முழி இது? என்னவும் சொல்லு எனக்கு பிரச்சனையில்லைங்குற மாதிரி.” மனைவியின் எதிர்வினையை தாள முடியவில்லை. அவளை தனக்கு இணக்கமாக்கவும் முடியவில்லை என்ற ஆதங்கம் கூட ஆணவத்துடன்தான் வந்தது. 

“எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான். நான் இருந்தாலும் இல்லைனாலும் எனக்கொன்னும் பிரச்சனையில்லைங்குற மாதிரி இத்தனை நாள் நடந்துக்கிட்டது நீங்கதான்.”

“உனக்குத் தெரியுமா எனக்கொன்னுமில்லைனு?”

“பொண்டாட்டின்னு ஒருத்தியை கட்டுனோமே அவகூட இருக்கணும்னு இல்லாம சுத்துனது நீங்கதான்.” அவள் குற்றம் சாட்ட,

“பொண்டாட்டி கூட இல்லைனாலும் பொண்டாட்டி நினைப்போடதான்டி இருந்தேன்.” என்றான் நெஞ்சை நிமிர்த்தி. அவனை தன்னிலிருந்து தள்ளிவிட்டவள், 

“ஓ அப்போ நினைச்சிகிட்டே இருங்க. இன்னொருத்தன் பொண்டாட்டியா உங்க கண்ணு முன்னாடி…” மேலும் என்ன சொல்லியிருப்பாளோ செவி மடுக்க முடியாதவனாய் அவசரமாய் இதழ் அடைத்து நிமிர்ந்தவன், “இதுக்கு மேல பேசுன தொலைச்சிடுவேன்டி… கேக்கவே நாராசமா இருக்கு.”

“அப்போ பாத்த எனக்கு?” கணவனை இன்னொருத்தியுடன் பார்ப்பது தனக்கு எப்படியான தண்டனையாக இருந்தது என்பதை இதைவிட தெளிவாக அவனுக்கு உணர்த்த முடியாது. தான் பட்ட வேதனைகளின் மிச்சங்கள் கூட அவன் அனுபவிக்கும் உணர்வுகளுக்கு அருகில் வராது. ஆனாலும் அவனையும் ஏதோ ஒரு வகையில் அப்படியான சூழலில் நிறுத்திவிட்ட சின்ன சந்தோஷம் அவள் அகம் நிறைய, அவன் காட்டும் முக மாறுதல்களை உன்னிப்பாக உள்வாங்கிக்கொண்டாள் செண்பகா. 

அத்தனை நேரம் கொதித்துப்போய் இருந்தவன் சட்டென தண்ணீர் பட்ட நெருப்பானான். சுரீரென எங்கேயோ வலித்தது. செய்த செயலின் வீரியம் புரிய, தானாகவே அவளை விட்டு இரண்டடி பின்னெடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தான். 

“என்னதான் சொல்ற இப்போ?” குரல் தணிந்து வர, 

“எனக்கு ரூமுக்கு போகணும்.”

“அடிங்க இங்க நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீ என்ன சொல்ற?”

“என்ன சொல்லணும்? நீங்க கேட்டது உண்மைனா இல்லை உண்மையாகாதுன்னா?” புருவம் உயர்த்தி அவள் அழுத்தமாய் பார்க்க, அவன் அலைபேசி அடித்தது.

“ப்ச் இதுவேற தொல்லை.” கடிந்துகொண்டே அழைப்பை துண்டித்து அவளைப் பார்க்க, அழைப்பு மீண்டும் வந்தது. கோபத்துடன் அதனை துண்டிக்க, வீட்டின் வாயிற்கதவை திறக்கும் சத்தம் கேட்டது. யோசனையுடன் அவன் எட்டிப்பார்க்க, வேகமாக உள்ளே நுழைந்தான் புதிதாக இவனிடம் சேர்ந்திருக்கும் உதவியாளன்.

“என்ன விஷயம்?” முயன்று ரத்னதீபன் பொறுமையாய் நிற்க, என்னவோ சொல்ல வந்தவன் செண்பகாவை கவனித்துவிட்டு அண்ணி என அவளிடம் நலம் விசாரிக்க, பதில் கூறியவள் ரத்னதீபனை ஒருபார்வை பார்த்துவிட்டு வாசல் நோக்கி நடக்க,

“செண்பா நில்லு. நான் இன்னும் பேசி முடிக்கல.” என்றான் உதவியாளனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே. வேற்று மனிதன் முன் தன்னை விட்டுக்கொடுத்து சென்றுவிடுவாளா என்ற கர்வத்தில் அவன் நிற்க, அதனை உடைத்துப்போட்டு சென்றுவிட்டாள் அவள். அப்போ அவளுக்கு நான் வேணாம்… முணுமுணுத்த மனதில் மெல்ல வலி பரவ, அங்கிருந்தவனை மனதில் கொண்டு உணர்ச்சிகளை அடக்கினான். 

“அண்ணியோட இருக்கீங்கன்னு தெரியாது அண்ணே. நம்ம தொகுதிக்கு கீழ வர ஒரு பஞ்சாயத்து இடத்துக்கு பஞ்சாயத்து வந்திருக்கு. உங்ககிட்ட பேசிட்டுதான் கிளம்புவோம்னு கூட்டமா நம்ம ஆபீஸ் முன்னாடி உக்காந்திருக்காங்க. போலீஸ் எல்லாம் வந்துட்டாங்க. நீங்க உடனே வாங்க.” என கூட்டிச் சென்றான். பொதுப் பிரச்சனை அவனை அழைக்க சொந்தப் பிரச்சனையை ஒதுக்கி வைத்துக் கிளம்பினான் ரத்னதீபன்.

அறைக்கு வந்த செண்பகாவுக்கு கணவனை எதிர்த்து நின்றுவிட்ட திருப்தி இருந்தாலும் அவன் சொன்ன செய்தி அவளை பதட்டம் கொள்ள செய்ய, உடனே அமுதாவுக்கு அழைத்துவிட்டாள்.

“என்னம்மா ஏதேதோ சொல்றாங்க. சித்தப்பா என்ன பண்றாங்க?” படபடப்புடன் கேட்க,

“அவர் என்ன பண்றாருனு எனக்கு என்னடி தெரியும். என்னாச்சு ஏன் குரல் ஒருமாதிரி இருக்கு.” சாவுகாசமாக அவர் பேச, இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை.

“ஏதோ எனக்கு மாப்பிள்ளை பாக்குறாராம். எதுக்குமா? ஒதுங்கித்தானே இருந்தாரு இப்போ என்னவாம்?”

“இதை பத்தி நானே பேசலாம்னு இருந்தேன் பாப்பா… அன்னைக்கு அந்த ஹீரோயின் பொண்ணை நேர்ல பாத்துட்டு வந்ததுக்கு அப்புறம் மனசே கேக்கல. அப்பாவும் நானும் ரொம்ப சோர்ந்துட்டோம். சித்தப்பாதான் ஒனக்கு ஒரு நல்லதை பண்ணிட்டா வளவனுக்கும் ஒரு பொண்ணு இருக்கு முடிச்சிடலாம்னு சொன்னாரு. இவ்ளோ நாள் உன் கஷ்டம் எங்களுக்கு புரியல. இனியும் பாரத்தை சுமக்க வேண்டாம் நீ. இறக்கி வச்சிடலாம்.” என்று சொல்ல, உலகம் தட்டமாலை சுற்றியது போல் இருந்தது. விடுவதா? அதற்கா இத்தனை கோபத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறாள்? என்றைக்கேனும் தன் கோபத்தை தணிக்க கணவன் வந்துவிட மாட்டானா என்றுதானே ஒவ்வொரு நாளும் செல்கிறது.

“அம்மா…”

“பொம்பளை புள்ளை தனியா ரொம்ப நாள் இருக்க முடியாதுடா. உன் விருப்பப்படி நீ இனிமே அந்த வீட்டுக்கு போக வேண்டாம்.” என்று மகளுக்காக பரிந்து பேச, மகளுக்கு அது இனிக்க வேண்டுமே. கசப்பென உள்ளிறங்க,

“அதெல்லாம் எதுவும் வேண்டாம்.” என்றாள்.

“அதான் பாப்பா நீ விருப்பப்படாத எதுவும் இனி உனக்கு வேண்டாம். அப்பாவும் வளவனும் பேசிப்பாங்க. நீ கவலைப்படாம இரு.” என்று சொல்ல, கவலையே அப்போதுதான் ஆரம்பித்தது. 

தன் கை மீறிப் போகிறதோ வாழ்க்கை, இதுவரை சேர்ந்திரு என்று அழுத்தம் கொடுத்தது போல் இனி பிரிந்திருப்பதுதான் உனக்கு நிம்மதி என்று பிரியச் சொல்லி அழுத்தம் கொடுப்பார்களா. அப்படி ஏதும் நடந்தால் தன்னால் அதனை எத்தனை தூரம் எதிர்க்க முடியும் என்றெல்லாம் பயம் லேசாக எட்டிப்பார்க்க, நொடி நேரம்தான், முடிவெடுத்துவிட்டாள்.