*15*

அன்று அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம். இரு நாட்களுக்கு நடைபெறுமென முன்னரே அறிவிக்கப்பட்டதால் சரியான நேரத்திற்கு சென்றால் போதுமென்று பொறுமையாகதான் எழுந்தான் ரத்னதீபன். அவன் எழுவதற்காகவே காத்திருந்தது போல் மருதுவும் அபிராமியும் சொல்லிக்கொண்டு கிளம்ப, மனைவிக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்தவன் பெருமூச்சுடன் அன்றைய நாளை துவங்கினான். 

“என்னைய்யா யாரும் எதிர்பார்க்காத மாதிரி அதிரடியா உள்ள வந்த, ஜெயிச்ச, இப்போ பெரிய பெரிய பேட்டியெல்லாம் கொடுக்குற…” என அவன் தோள் தட்டி மூத்த உறுப்பினர்கள் சிலர் பாராட்ட, சிலர் வஞ்சப்புகழ்ச்சி செய்ய, அனைத்தையும் சிறிய தலையசைப்புடனும் பணிய வேண்டிய இடத்தில் சற்று பணிந்தும் ஏற்றுக்கொண்டான்.

“அந்த மந்த்ரா பதவியேற்பு விழாவுக்கும் வந்ததா பேச்சிருக்கே. எப்படியா உனக்கு பழக்கம்? குதிரைக்கொம்பா புடிச்சிருக்க. பியூச்சர் செட்டில்ட்னு நினைக்காத. இந்த சினிமாக்காரங்களை நம்ப முடியாது. எப்போ வேணாலும் கழட்டி விட்டுட்டு போயிடுவாங்க.” என மந்த்ரா குறித்தான பேச்சும் சில நேரம் வந்தது. நட்புரீதியான பழக்கம்தான் ஊடகத்தினர் திரித்துவிட்டார்கள் என்று இவன் சமாளித்தாலும், உண்மை ஒருநாள் வெளில வரும்ல அப்போ பாக்கலாம் என்று கேலிப்பேச்சும் நடந்தது.

“எங்களுக்கெல்லாம் உன் பிரெண்டை அறிமுகப்படுத்த மாட்டியா? அடுத்த வாரம் நம்ம கொறடா வீட்ல பங்ஷன் இருக்கு. கூட்டிட்டு வா.” என்றார் ஒருவர்.

இப்படியாக அந்த நாளை முடித்துக்கொண்டு அப்பாடா என அலுவலகத்தில் அவன் அமர்ந்திருக்க, சோர்வாய் வந்து சேர்ந்தான் பிரபு. கூட்டத்தில் நடந்ததை பகிர்ந்துகொண்ட ரத்னதீபன், “மந்த்ராவை பாக்கணும்னு எல்லாம் வாயை தொங்க போட்டுட்டு நிக்குறாங்க. அடுத்த வாரம் பங்ஷனுக்கு வேற கூட்டிட்டு வரணுமாம். பொண்டாட்டி கூடவே இன்னும் எங்கேயும் போகல இதுல இதுவேற.” 

சலித்துக்கொண்டவனைப் பார்த்து சிரித்த பிரபு, “உங்களை யாரு அண்ணிகூட போக வேண்டாம்னு சொன்னா. போக வேண்டியதுதானே.” வேண்டுமென்றே உசுப்பேற்றினான்.

“இருக்குற இருப்புக்கு அது ஒன்னுதாண்டா குறைச்சல். என்னை பிளாக் பண்ணிட்டா போலடா உன் அண்ணி.” அதிகம் தன் சொந்த வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியிராத ரத்னதீபன் இன்று ஏதோ யோசனையில் மனதில் இருந்ததை சொல்லிவிட,

“வாழ்க்கைலேந்தா போன்லேந்தா?” இன்னுமே நக்கல் பேசினான் பிரபு. முடிந்த மட்டும் அவனை முறைத்த ரத்னதீபன், “நம்பிக்கையான இன்னும் ரெண்டு பேரை வேலைக்கு எடுக்கணும். உன்னால தனியா சமாளிக்க முடியாது.” என அப்படியே பேச்சை மாற்றிவிட்டான்.

“ஏன் புதுசா எடுத்துக்கிட்டு? நம்ம பசங்க இருக்காங்களே.”

“நீ பெருசா நான் பெருசான்னு போட்டி போட்டுக்கிட்டு கோட்டை விட்டுருவானுங்க நம்ம பசங்க. இல்லையா நம்மளை மிஞ்சிக்கிட்டு கைமீறி போயிடுவானுங்க. நம்மளே அதுதானே பண்ணோம். வெளிலேந்து சேவை செய்யணும் நல்லது பண்ணனும்னு இருப்பாங்க பசங்க. அதுமாதிரி ஆளை புடி. குடுக்குற வேலையை ஒழுங்கா முடிப்பானுங்க.”

“அந்த மாதிரி பசங்க நமக்கு விசுவாசமா இருக்கணுமே அண்ணே. நம்ம கொள்கையை எதிர்த்துக்கிட்டு நம்மகிட்டயிருக்கிறதை வெளில கசியவிட்டா முதலுக்கே மோசமாகிடும்.”

“முக்கியமான டீலிங் எல்லாம் நம்ம கட்டுப்பாட்டுல வச்சிக்கிட்டு மத்ததை ஆள் வச்சுதான் பாக்கணும். இன்னும் கொஞ்ச நாளானா தொகுதி நிதி வரும் அதை முறையா மேனேஜ் பண்ணி உபயோகப்படுத்த தனி டீம் போடணும். மினிஸ்டருக்கு போக வேண்டிய கமிஷன் தவிர்த்து நம்மளோட பெர்ஸன்டேஜ் குறைச்சிட்டு தரமான சேவை கொடுக்கணும். டெண்டர் விடுறதுக்கு எல்லாம் பொட்டியை தூக்கிட்டு வந்தா வாங்காத.” என கட்டளை போல் சொல்ல, 

“நாம வாங்கலைனா அப்படியே போய்டுவாங்க பாருங்க. மினிஸ்டருக்கு ஒரு பொட்டியை பார்சல் அனுப்பி கான்ட்ராக்ட கன்பார்ம் பண்ணிட்டுதான் நம்மகிட்டயே வருவாங்க.” என்ற பிரபுவின் கூற்றும் ஏற்கவேண்டியாக இருந்தது. இங்கு இவன்மட்டும் நினைத்தால் எல்லாம் நடந்துவிடுமா என்ன. இவனுக்கு மேல் இருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் தாண்டிதான் இவனிடம் வரும். இவன் அளவில் சரியாக இருக்க வேண்டுமென எண்ணிக்கொண்டான்.  

“நேரா வீட்டுக்கு போகாம இங்க எதுக்கு உக்காந்திருக்கீங்க? நாளைக்கும் வேற போகணும்.” என்று கேட்பவனிடம் யாருமில்லா வீட்டிற்கு செல்ல தயக்கம் என்றா சொல்லமுடியும். பிடிக்கவில்லை என்றாலும் சென்றுதானே ஆகவேண்டும் என எழுந்துகொண்டவன் அலுவலகத்தை பூட்டிக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினான்.

வீடு செல்லும் வழியெல்லாம் மனைவியின் நினைவுதான். தன்னை புரிந்துகொள்ளாமல் விட்டு சென்றுவிட்டாள் என கோபம் கொண்டு ஒதுங்கிவிட்டவனுக்கு தான் அவளை புரிந்துகொள்ளவில்லையோ என முதல்முறையாக யோசனை சென்றது. அதுவும் மந்த்ராவின் வாசனை திரவியத்தின் நெடி தன்மீது இருக்கிறது என அவள் சொல்லிய செய்தி அவனுக்கே உவப்பானதாக இல்லை. 

‘இவள் ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறாள்.’ என்றுதான் இவன் மூளை யோசித்தது.

இன்றும் அழைப்பு விடுத்துப்பார்த்தவன் அழைப்பு செல்லவில்லை என்கவுமே கொஞ்சம் யோசித்து சமூக ஊடகமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளத்தில் இருக்கும் செண்பகாவின் பக்கம் வழியாக அழைப்பு விடுத்தான். உறங்கச் சென்றுவிட்ட செண்பகா இணைய இணைப்பை அணைத்துவிட்டதால் அழைப்பு செல்லவில்லை. சோர்வுடன் தோல்வியை ஏற்றுக்கொண்டு அன்றைய இரவை கழித்தவனுக்கு மறுநாளும் அதீத வேலைபளு இருந்தது. அன்றும் மனைவிக்கு முயற்சித்து பார்த்துவிட்டு இதய வடிவை அனுப்பிவைத்தான். அதுவும் சென்று சேர்ந்ததா என தெரியாமல் இருநாள் மீண்டும் மீண்டும் குறுஞ்செய்திகள் அனுப்பி காத்திருந்து பார்த்தவனுக்கு பதில் வரவில்லை. 

‘ரொம்ப பண்றா. அவளா கண்டதையும் நினைச்சி அழுதுட்டு கிளம்பிப் போனதும் இல்லாம என்னையும் சுத்தல்ல விடுறா.’ என பால் காய்ச்சிய அன்று அவள் கிளம்பிச் சென்றது கொஞ்சம் கடுப்பும் வந்தது. 

‘நான்தானே கூட்டிட்டு வந்தேன் எங்கிட்ட சொல்லாம எப்படி போகலாம். கோவம்னா கூட இருந்து காட்டத் தெரியாதா இவளுக்கு. எப்போ பாத்தாலும் விட்டுட்டு போறதே வேலை.’ என்ற வசவுகளோடு ‘நானா இறங்கி வந்து கால்ல விழணும்னு எல்லாம் பண்றா.’ என்ற ஆதங்கமும் சேர்ந்துகொண்டது.

மறுவாரம் அவள் வேலை செய்யும் இடத்திற்கு அருகே இருக்கும் அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார் அப்பள்ளி தலைமை ஆசிரியர். இவ்விழாவின் மூலம் மற்ற மாணவர்கள் ஊக்கம் பெற்று ஆக்கப்பூர்வமாக வருவர் என்ற நம்பிக்கையில் அவரே முன்னின்று செய்தார். விழாவை சிறப்பிக்க இவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நிறைவாக அதில் கலந்து கொண்டு கிளம்பியவன் வேண்டுமென்றே அவள் வேலை பார்க்கும் கிளைக்கு வெளியே நின்றுகொண்டு அருகில் இருந்த கடைக்காரர்களிடம் குறைகள் கேட்டறிந்தான். இன்னும் என்னென்ன மேம்பாடுகள் தேவைப்படுகிறது அவர்களின் நீண்ட கால கோரிக்கைகள் என்ன என்று நிதானமாக கேட்க, கூட்டம் கூடியது. வாயிலில் கூட்டமாக இருக்கிறதே என்று நிதி நிறுவன கிளையிலிருந்தும் வெளியே எட்டிப்பார்த்தனர். அதில் செண்பகா புருவச் சுருக்கத்துடன் முன்னே வந்து எட்டிப்பார்க்க, அதற்காகவே காத்திருந்தவன் இவளைப் பார்த்து புருவம் உயர்த்த, பட்டென்று உள்ளே சென்றுவிட்டாள் செண்பகா.

‘வேணும்னே இங்க நின்னு கூட்டம் கூட்டிட்டு இருக்கான். சீன் போடுறான்.’ மனதிற்குள் வசைபாடியவள் அறையிலிருந்து வந்த மேலாளரிடம்,

“இப்படி நம்ம பிரான்ச் வாசல்ல நின்னு கூட்டம் போட்டா கஸ்டமர்ஸ் கஷ்டப்படுவாங்களே சார். பர்மிஷன் வாங்காம இவங்க இப்படி செய்யலாமா?” என நிதி நிறுவனம் மூலம் அவனை அப்புறப்படுத்த பார்த்தாள்.

“அவர்தான் இந்த தொகுதி எம்.எல்.ஏ. நாம போய் கலைச்சி விட்டா மக்கள் நம்ம பக்கம் பாய்வாங்க. பாத்துக்கலாம், நீங்க உங்க வேலையை பாருங்க.” என்றுவிட்டார் அவர்.

சிறிது நேரத்தில் மூவருடன் உள்ளே நுழைந்து நேரே இவளிடம் வந்து நின்றான் ரத்னதீபன். தன் எதிரே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள். அவசரமாக பக்கத்தில் இருந்தவர்களை பார்க்க, மேலாளர் வேகமாக இவர்களிடம் வந்தார்.

“சொல்லுங்க சார். என்ன விஷயம்?” 

“அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம்னு வந்தேன். இங்க இன்ட்ரஸ்ட் ரேட்ஸ் அதிகம் கொடுக்குறதா சொன்னாங்களே…” என கேள்வியாய் நிறுத்த, 

“பண்ணிடலாம் சார். நீங்க உள்ள வந்து உக்காருங்க.” என தன் அறைக்கு அழைத்தார்.

மனைவியை ஒரு பார்வை பார்த்தவன், “ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எல்லாம் வேண்டாம் சார். உங்க வாடிக்கையாளருக்கு என்ன ரூல்ஸோ அதே நானும் பாலோ பண்றேன். மக்களோட மக்களா இருக்கிறதுதான் என் பதவிக்கு அழகு.” என சிரித்துக்கொண்டே சொல்ல, இவனது நாடகத்தில் பல்லைக் கடித்தாள் செண்பகா.

அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினனே தங்கள் கிளைக்கு வந்து கணக்கு தொடங்க விருப்பப்படுவது எத்தனை பெரிய விளம்பரம். அருமையான வாய்ப்பிது என அதனை கப்பென்று பிடித்துக்கொண்ட மேலாளர் அவன் பதவிக்கே உரித்தான மரியாதையை கொடுத்து அவனை அமர வைத்தார், “பத்து நிமிஷத்துல பண்ணிடலாம் சார்.” 

மனைவியை கண்களில் நிரப்பிக்கொண்டு சிரிப்புடன் அவளெதிரே அமர்ந்தவன் கைகளை மேசையின் மீது வைத்து தாளம் போடுவது போல் விரல்களை மட்டும் மெல்ல மேசையில் தட்ட,

“என்னமா பாத்துட்டு இருக்கீங்க. சார் டீடைல்ஸ் எல்லாம் வாங்கி பார்ம் பில் பண்ணுங்க, நான் அப்ரூவ் பண்ணிடுறேன்.” செண்பகாவை முதலில் ஏவியவர் பின் தானே அருகில் வந்து ரத்னதீபனிடம் அவனது அடையாள அட்டை வாங்கி செண்பகாவிடம் கொடுத்து கணக்கு திறக்கச் சொல்லியவர் தங்கள் வங்கிகளில் இருக்கும் திட்டங்கள் பற்றி ரத்னதீபனிடம் விளக்கினார்.  

அனைத்தையும் கேட்டுக்கொண்டவன் பார்வை அவ்வப்போது செண்பகாவிடம் சென்று வர, முடிந்துவிட்டதா என கேட்டார் மேலாளர்.

“நாமினி டீடைல்ஸ் வேணும் சார்.” கணவனைப் பார்க்காது மேலாளரிடம் அவள் பதில் சொல்ல,

“என் வொய்ப் ஐ.டி இது. அவங்களையே நாமினியா போட்டிருங்க.” வேண்டுமென்றே தன்னிடம் இருந்த செண்பகாவின் அடையாள அட்டையை மேலாளரிடம் கொடுத்தான் ரத்னதீபன்.

அடையாள அட்டையில் இருந்த தகவலை கவனிக்காத மேலாளர் அதனை வாங்கி அப்படியே செண்பகாவிடம் கொடுத்து முடிக்கச்சொல்ல, அவனது அழுச்சாட்டியத்தில் திகைத்து அமர்ந்துவிட்டாள் பெண். திருமணமான புதிதில் எதற்கோ வேண்டுமென்று இவளது அடையாள அட்டையை இன்னொரு நகல் எடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டான். அது இன்னுமா இவனிடம் பத்திரமாக இருக்கிறது என்ற திகைப்பு மறைந்து தொல்லைக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் வந்து அமர்ந்திருக்கிறான் என கடுகடுத்தாள்.

“சீக்கிரம் பண்ணுங்கமா…” நாமினி தகவல்களை கொடுத்த பின் இந்த பெண் என்ன வேடிக்கை பார்க்கிறது என மனதிற்குள் கடிந்துகொண்ட மேலாளர் அவரே செண்பகா அமர்ந்திருக்கும் கணினி புறம் சென்று, “நகருங்க நானே பண்றேன்.” என களத்தில் இறங்க, இயல்புக்கு வந்தவள், “இல்லை சார் நானே…”

“அட செண்பகா உங்க வொய்ப்பா…” அதற்குள் செண்பகாவின் அடையாள அட்டையை பார்த்துவிட்ட மேலாளர் வியப்புடன் நிமிர, ரத்னதீபன் முகத்தில் அமர்த்தலான புன்னகை.

“என்னமா நீயும் சொல்லவே இல்லை.” என செண்பகாவிடம் கேட்க,

“இவங்கதான் அண்ணியா? இவ்ளோ நாள் காட்டாமயே வச்சிருந்துக்கீங்க.” என ரத்னதீபனுடன் வந்த கட்சி ஆட்களும் கேட்டனர்.

“ட்ரான்ஸ்பெர் ரெக்கமெண்டேஷன்ல வந்த பொண்ணை இங்க போடுறோம்னு ஹெட்ஆபீஸ்ல சொன்னாங்க. நீங்கதான் அந்த ரெகமெண்டேஷனு சொல்லவே இல்லை செண்பகாவும்.” வயதில் மூத்தவர் என்பதால் செண்பகாவை வார்த்தைக்கு வார்த்தை வாஞ்சையுடன் பேச, எல்லாம் ரத்னதீபன் பதவி செய்யும் மாயம் என புரிந்து கடிந்துகொண்ட செண்பகாவிற்கு அப்போதுதான் மேலாளர் சொல்லிய கடைசி செய்தி மனதில் பதிந்தது.

குழப்பமும் அதிர்வுமாக அவள் ரத்னதீபனை ஏறிட, தீவிரமாக மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தான் அவன். தேவையான ஆவணங்களை பதிவேற்றி மேலாளரே கணக்கு தொடங்கிக் கொடுத்தார். பெரிதான புன்னைகையுடன் அவருக்கு நன்றி தெரிவித்தவன் மனைவியிடம், “வரேன் செண்பா.” என ஏதும் அறியாதவன் போல் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

அவன் கிளம்பியதும் மேலாளர் அவளிடம் ரத்னதீபன் குறித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்தார்.

“உன் ஹஸ்பண்ட் எம்.எல்.ஏன்னு சொல்லவே இல்லை.”

“நம்ம எதுவும் ஃபேவர் கேட்டுருவோம்னு பயந்திருப்பாங்க.” 

“இங்க வந்து ஒருவாரம்தான ஆகுது. பொறுமையா சொல்லலாம்னு இருந்திருப்பாங்க. ஆனாலும் பெரிய ஆள் செண்பகா நீங்க…” 

“நாங்களும் பெருமையா சொல்லிப்போம் எம்.எல்.ஏவ எங்களுக்குத் தெரியும்னு.” என உடன் பணிபுரிபவர்கள் மாற்றி மாற்றி இவளிடம் ரத்னதீபன் பற்றி பேச, சங்கடமும் கோவமும் கலந்துகட்டியது செண்பகாவிற்கு. 

விழுப்புரத்தில் பெரிதாக யாருக்கும் இவனைப் பற்றி தெரியாது. இங்கு வந்தும் திருமணமாகிவிட்டது என்று மட்டுமே பகிர்ந்தவள் தன்னை பற்றி பெரிதாக வெளிகாட்டிக்கொள்ள விரும்பாத நிலையில் ரத்னதீபன் வேண்டுமென்றே வந்து தன்னை இக்கட்டில் மாட்டிவிட்டு சென்றுவிட்டான் என அவன் மீது கோபம் பெருகியது.

இனி இதைவைத்து ஏதாவது பேசுவர். பழையதை கிளறலாம் புதியது வெளிவரலாம். மந்த்ரா குறித்தும் கேட்கலாம் தற்சமயம் பிரிந்திருக்கும் தங்களைப் பற்றியும் இனி தெரிந்துவிடும் என நொந்தே போனாள். இவனை வைத்துக்கொண்டு நிம்மதியை தேடுவது என்பது மலையை புரட்டும் வேலையாய் தெரிந்தது. வேலை செய்யும் இடத்தில் மனதின் புழுக்கத்தை காட்டிவிடாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டுப் போனாள். 

“ஏன் டல்லா இருக்க செண்பகா? உடம்புக்கு எதுவும் முடியலையா? லீவ் போட்டு உன் ஹஸ்பண்ட் கூட போயிருக்கலாம்ல?” அப்படியும் அவள் முக வாட்டம் கண்டு ஒருவர் கேட்டுவிட, தலைவலி என சமாளித்தவள் அந்த நாள் எப்போது முடியும் என காத்திருந்து அறைக்கு ஓட்டமாய் வந்தவள் கைப்பையை தூக்கி வீசினாள். உடை கூட மாற்றாது கணவனை விளாசும் எண்ணத்துடன் ப்ளாக்கை நீக்கிவிட்டு அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அவன் எடுக்க வேண்டுமே. தான் தொடர்புகொள்ள முடியாத தூரத்திற்கு அவள் சென்றால் அவளே தன்னை தேடி வர வைக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டவனாய் அதில் வெற்றியும் பெற்றுவிட்டவன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அழைப்புகளுக்கு கொடுக்காமல் விட்டுவிட்டான். 

‘நம்ம கூப்பிட்டா எடுக்க மாட்டான். ஆனா அவன் மட்டும் அவன் இஷ்டத்துக்கு செய்வான், வந்து நிப்பான். தேவைப்பட்டா யாரை வேணும்னாலும் கூப்பிடுவான். என்னை பத்தின அக்கறையே கிடையாது. நிக்கவே முடியாத இடத்துல என்னை நிக்க வச்சிட்டு போறதே இவனுக்கு வேலை.’ மனதிற்குள் பொருமித் தீர்த்தவள் அங்குமிங்கும் நடைபோட, தலைவலி வந்ததுதான் மிச்சம். சூடாக காபி குடிக்கலாம் என்றால் விடுதியில் தரும் காபி அத்தனை ருசியாய் இருக்காது என தலையை பிடித்துக்கொண்டவள் பர்ஸ் எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்று குடித்தாள். அருகில் இருக்கும் பூங்கா சென்று நடைபயின்று அங்கு விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பியவளுக்கு அழுத்தம் சற்று மட்டுப்பட்டது போல் இருக்க, அதனை கூட்டவே அழைப்பு விடுத்தான் அவள் கணவன். கோபமாய் இவள் அழைப்பை ஏற்க, 

“சொல்லு செண்பா. வேலை முடிய இவ்ளோ நேரமா? நான் வந்து அழைச்சிக்குறேன்.” என எடுத்ததும் எதுவும் நடக்காதது போல் இயல்பாய் ரத்னதீபன் பேச, பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. இவன் வந்து அழைத்துச் செல்ல காத்திருப்பேன் என்ற நினைப்பா இவனுக்கு… 

“இன்னைக்கு எதுக்கு நான் இருக்குற பிராஞ்ச்சுக்கு வந்தீங்க?”

“எதுக்கு வந்தேன்னு பாக்கலையா நீ? அக்கவுண்ட் ஓபன் பண்ண வந்தேன்.” அவள் ஆத்திரமாய் கேட்க, இவன் அதற்கு எதிர்ப்பதமாய் நின்றான்.

“சாதுர்யமா பேசுறதா நினைப்பா?”

“நீ கேட்ட நான் சொன்னேன் செண்பா.” என்றவன் மட்டும் அவளெதிரில் இருந்திருந்தால் தலையில் நங்கென்று கொட்டியிருப்பாள் இல்லையா எதையாவது எடுத்து அவன் மீது வீசியிருப்பாள். அத்தனை ஆத்திரம். அவன் நினைத்ததை நடத்திக்கொள்கிறான். எண்ணம் போல் செயல்படுகிறான். தன்னால் அப்படி முடியவில்லையே என அத்தனை கழிவிரக்கம் தன்னைக்குறித்தே. 

“செண்பா நான் வரேன் வெய்ட் பண்ணு.” 

இவன் சொன்னால் நான் கேட்க வேண்டுமா? எங்கு வருவானாம்? எங்கு அழைத்துச் செல்வானாம்? செண்பா அத்தனை எளிது என நினைத்துவிட்டானா? என தன் அனலை தணிக்காமல் அதற்கு தூபம் போட்டுக்கொண்டவள்,

“என் மேனேஜர் என்னவோ சொல்றாரு. என்ன பண்ணி வச்சீங்க?” தான் அழைத்த காரணத்தை பட்டென கேட்டுவிட்டாள். இல்லையென்றால் பேச்சை திசைதிருப்பி என்னவும் சாதித்துக்கொள்வான் இந்த அரசியல்வாதி என்ற கசப்பான பிம்பம் அவள் மனதினில் பதிந்து போயிருந்தது. 

“என்ன சொன்னாரு?” தெரியாதவன் போல் ரத்னதீபன் தேர்ந்து நடிக்க, 

“ரெகமண்டேஷன்னு ஏதோ சொன்னாரே?” காரியம் பெரிதே அதனால் ஒழுங்காக பேசினாள் செண்பகா. 

குரலை செருமிக்கொண்டவன், “நீ எனக்கு முக்கியமில்லைனு நீயே சொல்லிகிட்டா உண்மையாகிடுமா? நீ எவ்ளோ முக்கியம்னு உனக்கு காட்டணும்னா அதுக்கு முதல்ல என்கிட்ட இருக்கணும் நீ.”

“அதுக்கு?”

“என்ன அதுக்கு? அந்த கோல்ட் லோன் பிரச்சனை வந்ததும் உனக்கு ட்ரான்ஸ்பெர் கொடுக்க சொல்லி கேட்டேன்.” இவன் சாதாரணம் போல் சொல்வது கூட அவளை அதிகத்திற்கும் உசிப்பியது. இவன் வேலையும் இவன் முடிவு என் வேலையும் இவன் முடிவா? 

“நீங்க யாரு இதெல்லாம் முடிவு பண்ண?”

“ரெண்டு வருஷம் முன்னாடி இதை கேட்டிருந்தா யாருமில்லைனு சொல்லியிருப்பேன். இப்போ யாருனு நான் சொல்லனும்னா என்கிட்ட வாடி…” உரையாடல் செல்லும் திக்கில் இவனும் பல்லைக்கடித்தான். 

உனக்கு சளைத்தவள் நானில்லை என்று மல்லுக்கு நின்றாள் அவளும், “பண்றது எல்லாம் பண்ணிட்டு ட்ரான்ஸ்பர் கிடைச்சதை நான் சொல்லலைனு பால் காய்ச்சுற அன்னைக்கு ஹாஸ்டல் முன்னாடி வந்து குதிச்சீங்க. எல்லாம் நடிப்புல்ல?”

அதுவரை பதிலுக்கு பதில் பேசியவன் இப்போது கப்பென்று வாயை மூடிக்கொள்ள, இவள் துணுக்குற்றாள்.

“என்ன பேச்சையே காணும்? எதர்ச்சையா உங்களுக்கு பக்கத்துலேயே ட்ரான்ஸ்பர் கிடைச்சதும் அதை நீங்க பண்ண மாதிரி நல்ல பேர் எடுக்க பார்த்துட்டு இப்போ என்ன சொல்லி சமாளிக்கனு யோசிக்குறீங்களா?”

“ரொம்ப பேசாதடி. நாந்தான் உன்னை இந்த பக்கம் மாத்த சொல்லி கேட்டுக்கிட்டேன். ஹெல்ப் பண்ணதால உன் மேனேஜரும் பாக்குறேனு சொன்னாரே ஒழிய உன் ட்ரான்ஸ்பரை கன்பார்ம் பண்ணல. என்கிட்ட எதுவும் சொல்லவும் இல்லை. வேலை பிஸில நானும் கேட்டுக்காம விட்டுட்டேன். அப்புறம் உன் அண்ணன் சொல்லித்தான் இங்கேயே உனக்கு கிடைச்சது தெரியும்.” 

“அதானே பாத்தேன். எப்போவும் உங்களுக்கு நான் முக்கியமில்லை. இதுவே வேற வேலைனா அதை முடிக்குற வரைக்கும் பத்து தடவை ஆளுங்களை புடிச்சி விசாரிப்பீங்க. எனக்குங்கவும் இதை அப்படியே விட்டாச்சு. உங்க வாழ்க்கையில எனக்கான இடம் அவ்ளோதான். இது தெரிஞ்சும் ஏதோ நினைப்புல உங்களை கூப்பிட்டேன் பாருங்க என்னை சொல்லணும். இனி உங்க அரசியல் பணியை நல்லா செய்யுங்க. என்னை விட்டுருங்க.” பட்டென்று அவள் அழைப்பை துண்டிக்க, மீண்டும் முயற்சித்துப் பார்த்தான். அவள் உடனே அவன் எண்ணை கருப்பிவிட்டாள்.

‘இவளை என்னனு நான் சமாளிக்க. இவளுக்கு இந்த எதிர்க்கட்சி தேவலாம்.’ அலைபேசியால் நெற்றியில் தட்டிக்கொண்டவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மீண்டும் வழிகள் அடைபட்ட உணர்வு.