*12*

அடர்நிறச் சேலையுடத்தி ஆர்வமும் படபடப்புமாய் நின்றவளிடம் பேசத் துடித்த மனதை அடக்கிக்கொண்டு சுற்றத்தினரை பார்த்தான் ரத்னதீபன். ஜாதகங்கள் பரிமாறிக்கொண்டு ஒத்துப்போகிறது என்று இருக்குடும்பங்களும் பேசி இன்று பெண் பார்க்கும் வைபவம் நடக்கிறது. பெண்ணை பெயருக்கு காட்டி உள்ளே அனுப்பிவிட்டு இங்கு தங்களின் குடும்பப் பின்னணி குறித்து பேசிக்கொண்டிருந்தனர் பெரியவர்கள். 

அவன் அருகில் அமர்ந்திருந்த விமல் லேசாக ரத்னதீபன் புறம் சரிந்து, “என்ன மச்சான் பொண்ணுகிட்ட பேசணுமா?” என்று கேட்க, தலையை இப்படியும் அப்படியும் உருட்டினான்.

தொண்டையை செருமி விமல் தன் இருப்பை காட்ட முனைகையில் பெண்ணின் அப்பாவே முன்வந்து அவ்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க, உள்ளுக்குள் எழுந்த இனிய படபடப்பை மறைத்த வண்ணம் எழுந்து சென்றான் ரத்னதீபன்.

வீட்டின் கொல்லைப்புறம் இவர்கள் தனித்து விடப்பட, தனித்து விட்டது போல் இருக்கக்கூடாதென பெண்ணின் அண்ணன் இவர்களை விட்டு சற்று தள்ளி தன் பார்வை வட்டத்தில் இவர்கள் இருக்கும்படி நின்றுகொண்டான்.

“என்னை பத்தி வீட்ல சொன்னாங்களா? எனக்கு அரசியல்ல இன்ட்ரஸ்ட் அதிகம். அப்பாவுக்கு துணையா விவசாயம் பாத்தாலும் எதிர்காலம்  அரசியல்தான். உங்களுக்கு ஓகேவா?” என்று தான் கேட்க விழைந்த கேள்வியை சுற்றி வளைக்காது நேரடியாய் கேட்டுவிட, நிமிர்ந்து அவனைப் பார்த்த பெண் லேசாக தலையசைத்தது.

“நல்லா யோசிக்கோங்க. அரசியல் வாழ்க்கை கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கும்.” ஆரம்பமே அதிகத்திற்கும் சொல்லி பயப்படுத்தக்கூடாது அதே சமயம் பொது வாழ்வில் வரும் இக்கட்டுக்களை எதிர்கொள்ள மனதை தயார்படுத்திக்கொள்பவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் மீண்டும் வலியுறுத்த, வாழ்க்கை குறித்த தெளிவான புரிதலில் இருக்கிறான். குறிக்கோள் வகுத்துக்கொண்டு அதற்கு தன் ஆதரவு கிடைக்குமா என எதிர்பார்க்கிறான். தன் எண்ணங்களுக்கு அவனிடம் மதிப்பிருக்கும் என்றளவில் அதனை புரிந்துகொண்ட பெண் வெட்கச் சிரிப்புடன் தலையாட்டியது.

தன் இருப்பு அவளுள் விதைத்த நாணத்தை ரசித்துக்கொண்டே குரலை தழைத்தவன், “வாயைத் திறந்து சொல்லலாமே.”

“நாந்தான் சொல்லனுமா உங்களுக்கு சொல்ல ஒன்னுமில்லையா?” தயக்கம் இருந்தாலும் கேட்டுவிட்டது பெண்.

“அதான் சொன்னேனே?” என்றான் இவன் புரியாமல்.

“நீங்க என்கிட்ட கேள்வி கேட்டீங்க. எதுவும் சொல்லல.” என்று அவள் சொன்ன விதத்தில் லேசாக சிரித்துவிட்டவன், 

“விவரம்தான். செண்பகப்பூவை இன்னைக்குதான் முதல் முதலா நேர்ல பாக்குறேன். பாத்ததும் இங்க வந்து ஒட்டிக்கிச்சு.” என தன் நெஞ்சுப்பகுதியை காண்பிக்க, நாணமும் பூரிப்பும் போட்டிப்போட நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கும் ஓகேதான்.”

இப்படித்தான் துவங்கியது இவர்கள் உறவு. 

“இன்னைக்கு அப்பாவோட மாவட்ட செயலாளர் கூட்டுன கூட்டத்துக்கு போனேன். என்னை தெரிஞ்சிருக்கு அவருக்கு, வந்து நல்லா பேசுனாரு. எலெக்ஷன்ல நிக்க எல்லாம் இன்னும் தகுதியை வளத்துக்கனும் அதுஇதுனு அறுத்துட்டாரு. என்ன செய்ய அவங்களை எல்லாம் தாண்டி வரமுடியாமத்தான் அப்பா கீழேயே இருந்துட்டாரு. ஆனா எனக்கு அப்படி இருக்க விருப்பமில்லை. மேல வரணும். நம்ம பேரை நாலு பேர் சொல்லணும், சொல்ற அளவுக்கு நாமளும் நடந்துக்கணும்.” என அலைபேசியில் பேசும் சமயங்களில் தன் அரசியல் நகர்வுகளை பகிர்ந்துகொள்வான்.

‘இன்னைக்கு மீட்டிங் இருக்கு, உன்கிட்ட பேச முடியாது. வெயிட் பண்ணாம தூங்கிடு.’ என்று பல நாட்கள் குறுஞ்செய்தி வரும். அப்போதெல்லாம் அவன் ஓய்வு நேரத்தில் இணக்கமாக பேசியவற்றை நினைவு கூர்ந்து புதுப்பெண்ணிற்கே உரித்தான கனவுகளில் மிதப்பாள்.

பெண் பார்த்து முடிவு செய்து மூன்று மாதங்களில் திருமணத்தேதி குறிக்கப்பட்டிருக்க, அதில் கணிசமான நாட்கள் மட்டும் அவளுடன் பேச நேரம் கிடைத்தது ரத்னதீபனுக்கு. இரண்டு வருடங்களில் தேர்தல் வரவிருக்க, இப்போதிலிருந்தே தீவிரமாக உழைத்தால் கட்சியில் பெயர் சொல்லுமளவுக்கு உயர்ந்து அடுத்த தேர்தலில் போட்டியிட்டுவிடலாம் என்பதுதான் அவன் கணக்காக இருந்தது. அதனால் அதிக நேரம் கட்சிக்கூட்டங்களிலும் பொது சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். கட்சியில் முழுமூச்சாக தன்னை நிலைப்படுத்த என்னென்ன தேவையோ அனைத்தையும் முன்னெடுத்தான். 

திருமணம் நெருங்க நெருங்க வீட்டினரின் பிடிவாதத்திலும் உடன் இருந்தவர்களின் கேலி கிண்டலிலும் பொதுப்பணியைக் குறைத்து சுயப்பணியில் ஈடுபட்டான்.

“என்ன மேடம் கல்யாணத்துக்கு ரெடியா?”

“நான் எப்போவோ ரெடி. நீங்கதான் பிஸியாவே இருக்கீங்க.” என்று திருமணத்திற்கு முதல் வாரம் அவன் பேசுகையில் இவள் குறைபட,

“அடுத்த வாரம் பாரு உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்னையே சுத்தி சுத்தி வர்றீங்கன்னு கேட்கப்போற…” என சொல்லி சிவக்க வைத்தான்.

கனவுகளோடும் ஆசைகளோடும் புதிதாக முளைத்த உணர்வுகளின் இனிமையை ரசனையுடன் கழித்த நாட்கள் அவை. பார்க்கும் யாவும் அழகாய் தெரிந்தது. கேட்கும் பாடல்கள் அனைத்தும் தங்கள் துணையை நினைவுப்படுத்தியது. ஏதோ அவர்களுக்காவே அப்பாடல்களை கவிஞர்கள் இயற்றியது போன்றொரு பிரம்மை கேட்டலை சுவாரஸ்யமாக்கியது. நேரில் சந்திக்காது அலைபேசி வழியே கடத்தப்பட்ட உணர்வுகள் ஒன்றுகூடி ஊர்வலம் நிகழ்த்த காத்துக்கொண்டிருந்தது. அந்த நாளும் வந்து அனைவர் அகம் நிறைய திருமணம் கோலாகலகமாக நடந்தது. அப்பாவும் மகனும் கட்சியில் இருப்பதால் கட்சிக்கூட்டத்தினர் பலர் திருமணத்தில் பங்கேற்க, சோர்ந்துவிட்டாள் செண்பகா. 

மாலை போல் ரத்னதீபன் வீட்டிற்கு மணமக்கள் அழைத்து வரப்பட்டு அங்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் அனைத்தும் செய்து முடிக்கையில் என்னை விட்டுவிடுங்களேன் என கெஞ்சுமளவிற்கு வந்துவிட்டாள். ஆனால் புதிதாக சேர்ந்த சொந்தங்களுக்கு முன்னிலையில் வெளியே சொல்லமுடியவில்லை.

இரவு சடங்கு என்று அவளை அறைக்குள் அனுப்பி வைக்கையில் முற்றிலுமாய் ஓய்ந்து போனவள் அவன் கையிலேயே பால் சொம்பை கொடுத்துவிட்டு அக்கடாவென மெத்தையில் விழுந்தாள். விழுந்த வேகத்தில் அசதியில் உறக்கம் சொக்கிப் போய் தள்ளாட ஆரம்பித்துவிட்டாள். 

எதிர்பார்ப்புடன் இருந்த ரத்னதீபன் அவளது சோர்வில் இளக்கம் கொண்டவனாய் அவளை நன்றாக படுக்கச் சொல்லிவிட்டு விளக்கணைந்து அருகில் படுத்துக்கொண்டான். உறங்கும் மனைவி கண்களுக்குள் புகுந்து காந்தமென இழுக்க, ஆசையாய் அவளை நெருங்கியவன், ‘ச்சச்ச… தூங்குறப்போ என்ன செய்ய போறேன் நான். கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்னாகிடும் இப்போ?’ என்று தன்னைத்தானே கடிந்துக்கொண்டு சமத்து பையனாய் இருந்துகொண்டான். என்ன ஒன்று இதுவே தொடர்கதையாகும் என எதிர்பார்த்திருக்கவில்லை அவன்.

முதல் பத்து நாட்கள் மறுவீடு, விருந்து, ஊர் சுற்றுதல் என்று கழிய தனித்து விடப்பட்ட இரவுகளில் அவள் காட்டிய மிரட்சியில் இவன் தணிய வேண்டியதாகிவிட்டது.

“ஏன் இவ்ளோ பயப்படுற? என்னை பாத்தா பயப்படுற மாதிரியா இருக்கு? என்ன செஞ்சிடுவேன் நான்?” என கேட்டுக்கொண்டே அவன் அவளை அணைத்தால் அமைதியாக அவனுள் அடங்கிப் போனவள், அவன் முத்தம் என்று முன்னேறினால் முதலில் சிலிர்த்து பின் சித்தம் கலங்கிவிடுவாள்.

“என்னவோ ஒருமாதிரி படபடப்பா பயமா இருக்கு. ப்ளீஸ் இப்போ வேணாமே. இன்னொரு நாள்.” என்பதுதான் அவள் பதிலாக இருக்கும். பார்வை அவனிடம் மன்னிப்பு வேண்டி இறைஞ்சும். தன்னுடன் இணக்கமாக இருக்க மனைவிக்கு தயக்கம் அதை முதலில் சரிசெய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டவன் அதற்கான வேலையில் இறங்கும் முன்னமே கட்சிப்பணியில் தீவிரமாகிவிட்டான். 

மனம் கவர்ந்தவன் எனினும் அந்தரங்கம் என வரும்போது தன்னை ஒப்புக்கொடுப்பதில் சிறிது தயக்கமும் ஐயமும் கூச்சமும் கொண்டு சங்கடப்படுபவள் அதனை கலைய அவனிடம் நேரம் செலவழிக்க முயல்கையில் அவன் நேரங்கள் அவன் கனவுகளுக்கானதாக மாறிவிட்டது. 

பத்து நாள் கழித்து தன் வழக்கத்தை தொடங்கியவன் விவசாயம், மக்கள் பணி, கட்சிப்பணி, கட்சியைத் தவிர்த்து தனக்கான அடையாளத்தை உருவாக்குவது என அவனையும் அறியாமல் தன் நேரங்களை பல இடங்களில் செலுத்தி சரியாக மேலாண்மை செய்யாமல் விட்டுவிட்டான்.

காலை நேரமே விழித்துக் கிளம்புகையில் மனைவிக்கு முத்தம் வைத்து கிளம்புபவன் இரவு வீடு திரும்புகையில் நள்ளிரவை தாண்டிவிடும். பத்து மணி ஆனாலே நடுசாமத்திற்கு சென்றுவிடும் செண்பகாவால் உறக்க கலக்கத்தில் அவனிடம் மனம் திறக்க முடியவில்லை. அகம் பூட்டிக்கொள்ள உடல் மட்டும் எங்கிருந்து அவனுக்கு ஏற்றது போல் ஒத்துழைக்கும். சில நேரங்களில் ஏமாற்றம் கொண்டாலும் மனைவியின் நிலை புரிந்து வெறுமென அவளை அணைத்துக்கொண்டு படுத்துவிடுவான்.

“சீக்கிரம் வரலாம்ல. டெய்லி லேட்டா வரீங்க. என்னால முழிச்சிருக்க முடியல.” என காலை வேளையில் அவள் சிணுங்கும் சமயங்கள் எல்லாம் அவளை இழுத்தணைத்து முகத்தில் இதழ் ஊர்வலம் நடத்தி சரிகட்டிவிடுவான்.

“எனக்கும் உன்கிட்ட சீக்கிரம் வரணும்னு ஆசைதான் செண்பா. ஆனா இந்த பசங்க ரீல்ஸ் எடுக்கணும், இந்த ஏரியாவுல கரெண்ட் இல்லை, அந்த ஏரியாவுல தண்ணி இல்லை, ரயில் நிக்க மாட்டேங்குது தர்ணா பண்ணனும், ரோட் சரியா இல்லை மனு எழுதுங்கனு என்னை உக்கார வச்சிடுறாங்க. நானும் எதையாச்சும் பாத்துட்டு இருந்துடுறேன்.” மன்னிப்பு என்றில்லாது தன் நிலையை மட்டும் எடுத்துரைப்பான். சுணக்கம் என்றாலும் அவள் சமாதானம் ஆகிவிடுவாள்.

“அதுதான் இப்போ இருக்கேனே. ஃப்ர்ஸ்ட் டே கொண்டாடுனா என்ன?” என்று கேட்பவனை முடிந்த மட்டும் முறைப்பவள், “இருட்டுலையே எனக்கு இன்னும் பயம் போகல. இதுல எல்லாரும் முழிச்சிருக்குற நேரத்துல… என்னால முடியாதுபா…” என அலறியடித்து சென்றுவிடுவாள். ஆனாலும் கணவன் ஆசையுடன் தன்னை நெருங்க முயல்வதை ரசிக்க ஆரம்பித்திருந்தாள். கொஞ்சம் விட்டிருந்தால் அவளாகவே நெருங்கியிருப்பாள். அப்போதுதான் அப்படி ஆனது.

சென்னையில் கட்சிக்கூட்டம். தங்கள் மாவட்டம் சார்பில் இத்தனை பேரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று தீவிரமாக வேலை பார்த்து ஆயிரத்தை தொடும் எண்ணிக்கையிலான மக்களை தலைநகருக்கு அழைத்துச் சென்றான். வரப்போகும் தேர்தலில் போட்டியிட கட்சி அளவிலான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பதற்காக கூட்டம் முடிந்து முக்கிய நபர்கள் மட்டும் அங்கேயே தங்கிக்கொண்டனர். ரத்னதீபன் இருப்பு அங்கு அவசியமில்லை என்றாலும் தன் வளர்ச்சிக்காக அங்கேயே தங்கிக்கொண்டான். இவனது மாவட்ட செயலாளருக்கு இவனது போக்கு நெருடலைக் கொடுத்தது.

“இவன் என்ன தீயா உழைச்சி நம்மளை மீறிக்கிட்டு மேல வந்துடுவான் போலயே. இவன் அப்பாவே ரொம்ப வருஷமா கம்முனுதான் கிடக்காரு. இவன் துள்ளல் அதிகமா இருக்கே?”

“இளம் ரத்தம்ல அப்படித்தான் இருக்கும்.” 

“இப்போவே தட்டி வச்சிடனும் இல்லைனா நாம இவனுக்கு கூழ கும்புடு போடுற நிலைமை வந்துடும்.” என்று இவனுக்கு மேலிருந்த கட்சிக்காரர்கள் தங்களுக்குள் பேசி இவனை மேலே ஏறவிடாது செய்ய வேண்டுமென அவன் தன்மானத்தில் கைவைக்க நினைத்தனர். அதன்படி மாவட்ட செயலாளர் கட்சியின் தலைமையில் இரண்டாம் பொறுப்பில் இருந்தவருக்கு மிகுந்த நெருக்கம் என்பதால் அவரை கையில் போட்டுக்கொண்டு இவனை எடுபிடி வேலைக்கு அனுப்பினர்.

“நம்ம மாவட்டத்தோட கோரிக்கையை நேர்ல பார்த்து கொடுத்தாதான் மதிப்பாங்க. அதோட நம்ம பலத்தையும் கட்சிக்கு காமிக்கணும். நம்ம தலைவர் தங்கி இருக்குற ஹோட்டலுக்கு நேரா போய் இந்த மனுவை கொடுத்து பேசிட்டு வந்துரு. உங்களை மாதிரி இளரத்தம்தான் முன்ன நிக்கணும் இப்போ.” தலைவரை சந்திக்க இவனுக்கு நேரம் ஒதுக்கக்கூடாது என முன்னரே மேனேஜரிடம் பேசி வைத்துவிட்டு ரத்னதீபனிடம் லாவகமாக பேசி அனுப்பி வைத்தனர்.

அவர்களின் நரித்தனம் புரியாத ரத்னதீபன் ஆர்வமாக தலைவரை சந்திக்கச் செல்ல, அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காத்திருக்க சொன்னார்கள். மாவட்ட செயலாளரிடம் சொல்லி அனுமதிக்க சொல்லலாம் என அலைபேசி அழைப்பு விடுத்தால் அவர் எடுக்கவே இல்லை. இவனுடன் சேர்ந்து இளைய கண்ணாக துணைக்கு வந்தது பிரபு. இருவரும் அன்றைக்கு முழுதும் அந்த ஹோட்டலில் காத்திருந்து கிளம்பினர்.

“அவரை பாக்க இந்த மாநிலத்தோட மொத்த மாவட்டத்துலேந்தும் வருவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணி பாத்துட்டு வந்துடு.” என அவனை சென்னையிலேயே இருக்க வைத்து அவர்கள் ஊருக்கு கிளம்பிவிட்டனர். 

இரண்டு நாள் மூன்று நாள் என நேரம் கடந்தது. எப்போது வருவாய் என மனைவி ஏக்கமாக அழைக்கும் பொழுதுகள் மிகுந்த வேதனைக் கொடுக்க, வேண்டுமென்றே செய்கிறார்களோ என்ற யோசனையே அப்போதுதான் உதித்தது.

“ஊருக்கு கிளம்பலாம் அண்ணே. ஹோட்டல்ல எல்லாரும் ஒருமாதிரி பாக்குறாங்க. ஊருக்கு போய் பாத்துக்கலாம்.” என்றான் பிரபுவும். தினம் நடையாய் நடந்து அனுமதிக்கு என மேலாளர்கள் பின் ஓடிக்களைத்து காலை முதல் மாலை வரை அந்த பெரிய நட்சத்திர விடுதியின் வரவேற்பு அறையில் அமர்ந்திருப்பது அங்கிருக்கும் கண்களை ஈர்க்க ஆரம்பித்திருந்தது. அதோடு அங்கு வரும் ஆட்களின் மேல்தட்டு பழக்கங்கள் நடுத்தர வர்க்கத்தினரான இவர்களுக்கு அசவுகரியம் கொடுக்க, ரத்னதீபனுக்கும் பிரபுவின் யோசனையே சரியெனப்பட்டது. தனக்கு நேர்மையாக இருக்கும் ஒருவனைப் பிடித்து மாவட்ட செயலாளரை கண்காணிக்கச் சொன்னான்.

“அங்க அவன் பாத்து சொல்லட்டும். இன்னும் ஒருநாள் இருந்துட்டு போகலாம்.” என்று மறுநாளும் அந்த விடுதிக்கு வர, பிரபு சொன்னது போல் வேண்டுமென்றே தங்களை காத்திருக்க வைக்கிறார்கள் என்று புரிந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதைத் தாண்டி அரசியலில் இருக்கிறோம் பொது சேவை செய்கிறோம் என்று அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்த கர்வம் அந்நொடி அடிவாங்கியது. கீழாய் நடத்தப்படுவதாய் உணர்ந்தவன் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கமென இங்குமங்கும் அந்த விடுதியின் காரிடாரில் நடக்க, ஓட்டமும் நடையாய் வந்த மந்த்ரா இவன் மீது மோதிவிட்டாள். அன்னிச்சையாக விழப்போனவளை இவன் பிடிக்க, அது பத்திரிக்கையாளர் ஒருவரின் கேமராவுக்குள் இடம் பிடித்துக்கொண்டது. மறுநாளே தினசரி நாளிதழில் ஒரு பக்கம் துணுக்குச் செய்தியாய் வந்துவிட்டது.

‘நடிகைக்கும் பிரபல கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பா?’ என்ற தலைப்பில் அப்புகைப்படம் வந்துவிட, உடனே எல்லாம் சலசலப்பாகவில்லை. 

முதல் முறை இது ரத்னதீபன் காதுகளுக்கு வந்தபோது கூட அவன் பெரிதுபடுத்தவில்லை. ஏன் ஊரிலிருந்து வந்தவுடன் மனைவி அவளாகவே வந்து கட்டியணைத்து வரவேற்பு கொடுத்ததில் மறந்தே போனான். ஆனால் சமூக வலைதளம் அதனை மறக்கவில்லை. அந்த நடிகையுடன் இணைந்ததால் இவன் முகமும் பரவலாக பரவியது. அதுவும் மறுநாளே மனைவியின் அலைபேசிக்கு வந்துவிட அதிர்வுடன் பார்த்தாள்.

முந்தைய நாள்தான் அத்தனை காதலாய் கணவனை நெருங்கும் சமயம் பார்க்க மாதவிடாய் வந்து அவளை தள்ளி நிறுத்தியது. இருந்தும் அவனை விட மனமில்லாதவளாய் அவளாகவே அவனை கட்டிக்கொண்டு படுத்திருந்தாள். 

“இப்படி வேலை வேலைனு ரொம்ப நாள் எல்லாம் போகாதீங்க.” என குழைந்தது எல்லாம் நெஞ்சில் வந்து அலைமோதி அவளை அசைத்துப் பார்த்தது. கட்சி வேலை என்று சொல்லிக்கொண்டு சென்றவன் ஒரு நடிகையுடன் எப்படி? என்று மனதை போட்டுக் குடைய கணவனுக்கு உடனே அழைத்துவிட்டாள். 

அவனுக்கும் இது பிரபலமாவது தெரிந்திருக்கும் போல, பதட்டமாக பேசியவன் வீட்டிற்கு வர தாமதமாகும் என்றான்.

“உடனே வரணும் நீங்க.” பிடிவாதம் செய்தாள் பெண். வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக கணவன் நிற்பதை அவளால் ஏற்கவே முடியவில்லை. தவிப்புடன் அங்குமிங்கும் அறைக்குள்ளேயே நடை போட்டாள். அவன் வர தாமதமாகும் ஒவ்வொரு கால்மணி நேரத்திற்கும் கணவனுக்கு அழைப்பு விடுத்தாள். துவக்கத்தில் அழைப்பை ஏற்று சமாதானமாய் பேசியவன் ஒருகட்டத்தில் தொந்தரவு செய்யாதே என கத்திவிட்டான்.

“நான் தொந்தரவு செய்றேனா?” என கொதித்தவள் நடு இரவில் அவன் வீடு வரவும் பிடிபிடியென பிடித்துவிட்டாள். 

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. கட்சி வேலைனு தான போனீங்க. அங்க எப்படி ஒரு ஹீரோயினோட இருக்கீங்க? இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.” என படபடக்க, அவனுக்கு என்ன ஆனதோ இறுகிப் போனவன்,

“என்னை சந்தேகப்படுறியா?” 

“அந்த போட்டோ பார்த்ததும் எனக்கு படபடன்னு இருக்கு. உங்களுக்கு அப்படியெல்லாம் ஒன்னுமில்லையா? எப்படி இப்படி இருக்கீங்க.” என்றவளுக்கு இன்னுமே படபடப்பு குறையாமல் தவித்துப் போயிருந்தாள். பெற்ற தகப்பனாலும் சரி உடன்பிறந்தவனாலும் சரி குறிப்பிட்ட வயதிற்கு பின் பெண்பிள்ளை என இவளை தொட்டுப் பேசுவதையே தவிர்க்கும் குடும்பத்தில் வளர்ந்தவளுக்கு மேலை நாகரீகமென்ன தெரியாமல் அந்நியருடன் இதுபோன்ற எதிர்பாரா நெருக்கங்கள் கூட எளிதாக கடக்க முடியாததாய் இருந்தது.  

“கேட்டதுக்கு பதில் சொல்லு செண்பா.”

“உங்களை இப்படி பார்க்க எனக்குப் புடிக்கல. அதுவும் அவளை அப்படி புடிச்சிருக்கீங்க.” என்றவள் முகம் சுருங்க, நடப்பவை தனக்கு ஒப்பவில்லை என்ற நிலைப்பாடு மட்டுமே அவளது. அத்தனை நேரம் இறுக்கத்துடன் இருந்தவன் அவளது இறுதி வாக்கியத்தில் லேசாக முறுவலித்தான்.

ரத்னதீபன் நடந்ததை சொல்ல அமைதியாக கேட்டுக்கொண்டவள் முகம் அப்போதுதான் தெளிவுபெற, குறுப்புக் கூத்தாட, 

“ஏன் உன்னை மட்டும்தான் அப்படி புடிக்கணுமா என்ன?” என சட்டென கணவனாக மாறிப்போய் மனைவியை தன்னை நோக்கி இழுக்க, வாகாக அவன் மீது சாய்ந்துகொண்ட செண்பகா அவனை இறுக அணைத்துக்கொண்டு, “இனிமே யார் கீழ விழுந்தாலும் விழட்டும்னு விட்டுரனும்.” என்ற செல்ல மிரட்டலில் அவளது உடமை அவன் என்ற அன்பு மீகியிருந்தது.

அன்றோடு அந்த பிரச்சனை முடிந்தது என்று அவள் நினைக்க, இல்லை இனிமேல் தான் அனைத்தும் என்பது போல் ரத்னதீபனே அவனும் மந்த்ராவும் இருக்கும் படத்தை மறைமுகமாக பிரபலப்படுத்தினான். அடிக்கடி அவளை சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனால் விளைந்த எதிர்மறை விளம்பரத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்டான். விளைவு கொந்தளித்து பிரிந்து சென்றுவிட்டாள் செண்பகா. இன்று மீண்டும் அதே மந்த்ரா கண் முன் வந்து நிற்க, முதல் முறை அவளை நேரில் பார்த்தாலும் அப்படி முறைத்து நின்றாள் செண்பகா.

மந்த்ரா வரவேற்பாக தன்னை அணைத்து நகரவும் பின்னடைந்த ரத்னதீபன் மனைவியின் தோளில் கையிட்டு தன்னருகில் நிறுத்தி,

“என் வொய்ப் இவங்க. செண்பகா. நீங்க பார்த்தது இல்லையே மந்த்ரா.” என மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தான்.

“ஹை பிளவர்… இப்போதான் உங்களை நேர்ல பார்க்க சான்ஸ் கிடைச்சிருக்கு. நைஸ் டூ மீட் யூ.” விரிந்த புன்னகையோடு செண்பகாவிடம் பேசினாள் மந்த்ரா.

அவளை அறவே வெறுக்கும் செண்பகா முகம் திருப்பி ரத்னதீபனின் கைவளைவில் இருந்து வெளியேற முனைய, மனைவியின் செயலை முன்கூட்டியே கணித்து தன் பிடியை தோளிலிருந்து தளர்த்தி அவள் இடைக்கு இறக்கினான். அத்தனை உரிமையாய் செண்பகாவின் இடையில் விரல்கள் பதித்து தன்னோடு அவளை ஒட்டவைத்துக்கொண்டவன் மந்த்ராவிடம் பார்வை செலுத்தி, “நீங்க ஏன் இவ்ளோ தூரம் வந்து கஷ்டப்படணும்? பக்கத்துல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சா கூட்டம் கூடிடும்.” 

“யா ஐ க்னோ… பட் என்னோட விஷஸ் சொல்லணும்னு தோணுச்சு அதான் வந்தேன்.” என்று அவள் சொல்ல, ரத்னதீபன் தாயைப் பார்த்து தலையசைத்தான். 

வேகமாக உள்ளே சென்று பால் கொண்டு வந்து கொடுத்தார் அபிராமி. குடும்பத்தினர் அவரை முறைக்க அவர் மகனைப் பார்த்தார். டயட்டில் இருப்பதாக சொன்னாலும் அபிராமி நீட்டிய பாலை வாங்கி குடித்துவிட்டு வாழ்த்து தெரிவித்து அனைவரிடமும் விடைபெற்றாள் மந்த்ரா. 

மந்த்ரா வெளியேறியது தான் தாமதம் ஆவேசமும் ஆங்காரமுமாய் கணவனை உதறித் தள்ளிய செண்பகா அழுகையும் கோபமுமாய், “அதுதான் வரவேண்டியவங்க வந்துட்டாங்கல்ல அப்புறம் எதுக்கு என்னை வம்படியா கூப்பிட்டு பால் காய்ச்ச சொன்னீங்க. அவங்களையே வச்சிக்க வேண்டியதுதானே…”

அவள் வார்த்தை பிரயோகம் பிடிக்காமல் அவன் கடினமாக, “வார்த்தையை பார்த்து விடு செண்பா.” 

“ஓ நான் சொல்றதே உங்களுக்கு கோவம் வருதா. அப்போ அவ வந்து கட்டிப்புடிச்சால்ல அப்போ சொல்ல வேண்டியதுதானே இங்க எல்லாம் பாத்து நடக்கணும்னு.”

“அவங்க பிரெண்ட்லியா ஹக் பண்ணாங்கடி லூசு.” குடும்பத்தினர் முன்னிலையில் வாதிடுகிறோம் என்பது நினைவில்லாமல் அவன் பேச, அது செண்பகாவை ஆழமாய் பாதித்தது.

“யாரு நான் லூசா… கட்டிப்புடிச்ச அவளோட சென்ட் வாசனை உன் மேல வீசுது. அந்த வாசனையே எனக்கு கொமட்டுது.” எனச் சொல்லி அவன் சட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனையை துடைத்தெறிவது போல் செய்ய, அவனுக்கு உருகிப்போனது. மனைவியின் மனம் படும்பாடு அப்போதுதான் புரிவது போலிருந்தது. ஆதரவாய் ஆறுதலாய் அவளை இழுத்தணைக்க முனைய, அவனை தள்ளிவிட்டு அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட்டாள் செண்பகா.