“இப்ப வாழ்த்திட்டு போன வாயெல்லாம் என்ன பேசும்னு தெரியும்தானே? வீட்டுக்கு மூத்தவ இப்படி வந்தா, அடுத்து உன் தம்பியை யோசிச்சியா?”, கேவினார்.
“அம்மா… கொஞ்சம் அமைதியா இருங்க. பேசலாம். அவனுக்கு அருமையான மருமக நம்ம சமூகத்துலேயே வருவா. நான் பார்த்து வெச்கிருக்கேன் அந்தக் கவலையை விடுங்க.”
“ஓ… அவனும் காதலிக்கறானா? “,முறைத்தார்.
“இல்லம்மா. அங்க என் கூட வேலை பார்க்கற ஒரு பொண்ணு ஷீத்தல்னு, ரொம்ப பொறுப்பான பொண்ணுமா. தம்பிக்கும் உங்களுக்கும் நல்லா ஒத்து வருவா”, என்று கூறும் பொழுதே,
“அப்ப அவளை நீயே கல்யாணம்…”, என்று ஆரம்பித்தவரை,
“ம்மா! “அதட்டினான். “தம்பிக்கு பார்த்திருக்கேன்னு சொல்றேன். அப்படி நினைக்கக் கூட கூடாது நீங்க. கல்யாணம்னு ஒன்னு என் வாழ்க்கையில் நடந்தா அது கீர்த்தியோடத்தான் மா. எவ்வளவு நாளானாலும். நீங்க வருத்தப்படுவீங்கன்னு தெரிஞ்சும், எனக்கும் கஷ்டமா இருந்தாலும், வேற என்னால நினைக்க முடியலை. ஊரை விடுங்க. இல்லை அதுதான் முக்கியம்னு நினைச்சா, என்னை ஒதுக்கிடுங்க, நான் வெளினாட்டுலேயே இருந்துக்கறேன். தம்பி இருக்கான் உங்களுக்கு”, பொறுமை பறக்க கடிந்துவிட்டான்.
“இல்லைம்மா…”, முகத்தை அழுந்தத் தேய்த்தவன், “ மகனை விட ஊரும் உறவும் பேசறது முக்கியமா பட்டா, உங்களுக்கு சங்கடம் தராம நான் விலகி நிக்கறேன்னுதான் சொன்னேன்.”, வருத்தம் தோய்ந்த குரலில் பேசும் மகன் முன் நிற்க முடியாது, தன் அறைக்கு சென்றுவிட்டார் ஜெயராணி.
தாயிடம் விஷயத்தைக் கூறிவிட்டதாகவும் எதிர்பார்த்தபடியே எதிர்வினை இருந்ததாக கீர்த்திக்கும் ஸ்டீஃபனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்துவிட்டு, மொட்டைமாடியை தஞ்சமடைந்தான் ஜோ.
அணைத்து ஆறுதல் தரும் ஒரு எமோஜி அனுப்பிய அவன் காதலி, பேசணும்னா கூப்பிடு ஜோ என்று அனுப்பியிருந்தாள். என்ன பேச முடியும். அவன் அன்னையின் கனவை கலைத்து மனசை உடைத்துவிட்டான். அப்படித்தான் எண்ணி கண்ணீர் சிந்துவார்.
குறுஞ்செய்தி கிடைத்த கால் மணி நேரத்தில் அரக்கப் பரக்க வந்தான் ஸ்டீஃபன். “ஜோ…. என்னாச்சு? திடீர்னு ஏன் சொன்ன?”
“ம்ப்ச்… சொல்லித்தானடா ஆகணும். அவங்க பேச்சை தொடங்கினாங்க. சொல்லிட்டேன். இப்பதான் உனக்கும் சொன்னதா சொல்லிக்கோ. பேச்சோட பேச்சா ஷீத்தல் பத்தியும் ஒரு வார்த்தை போட்டிருக்கேன். ஆனா அது பத்தி நீ எதுவும் தெரிஞ்சதா காட்டிக்காதே.”
“ஹேய்… “ அண்ணனை தோளணைத்து விடுத்தவன், “இது திடீர்னு தெரிஞ்ச அதிர்ச்சியில பேசினதுடா. கொஞ்சம் யோசிச்சா அவங்களுக்குமே புரியும். நீ இதுனால ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதே.”
அடுத்த சில நாட்கள் அதிகம் பேச்சின்றி கடந்தது. ஜோவுடன் பேசவில்லை ஜெயராணி. ஓரிரு முறை பேச முயற்சித்த போதும், அகன்றுவிட்டார். அதன் பின், ஜோவும் அமைதியாக அவன் வேலைகளை கவனித்தான். இன்னும் ஒரு வாரம்தான். விடுமுறை முடிந்து செல்ல வேண்டும். கீர்த்தி பற்றி அவனிடமும் சரி, தம்பியிடமும் சரி, ஒரு வார்த்தை கேட்கவில்லை ஜெயராணி.
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை. தகப்பன் ஸ்தானத்தில் குடும்பத்தை தோள் கொடுத்து நிமிர்த்திய பிள்ளை. இது வரையிலுமே தனக்காக என்று பிரித்தரியாது, தம்பியை அரவணைத்து, வழி நடத்தும் பிள்ளை. உண்மையில் ஜோவின் இந்த ஆசையை அவரால் நிராகரிக்க முடியவில்லை. தந்தையின் இறப்பிற்கு பின் இதுதான் தனக்கென்று ஆசைப்பட்டிருக்கிறான். அதையும் துறக்க முனைந்து முடியாது என்னும்போது, என்ன சொல்ல முடியும்?
ஆனாலும், அவனது வாழ்க்கை பற்றி நிறையவே கனவுகள் கண்டிருந்தார், அதுவும் இந்த ஒரு வருடமாக ஜோ, குடும்பமாக தன்னோடு இருப்பது போலவும், மருமகளோடு மாஸ் செல்வதும், ஏன், குழந்தை பிறந்து, ஊரை அழைத்து ஞானஸ்தானம் செய்வது வரை அவரது கற்பனை பறந்து விரிந்தது.
வரும் மருமகள், குழந்தையை ஞானஸ்தானம் செய்ய விடுவாளா? முதலில் தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்ய முடியுமா? நிராசையாகிப்போன கனவுகளை நினைத்து, பொங்கிப் பொங்கி அழுகைதான் வந்தது.
அதைச் சொல்லி இளைய மகனிடம் ஜெயராணி புலம்ப, “மா.. அண்ணன் வாழ்க்கை நீ நினைச்ச மாதிரி அமையலைன்னு இவ்வளவு கஷ்டப்படறியே, வருஷக்கணக்கா, அந்த வலியோடதான வாழ்ந்திருக்கான். திரும்ப அவன் நினைச்ச வாழ்க்கையை வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. வேணாம்னு சொல்லாதேம்மா. நீ இப்படி இருக்கறதைப் பார்த்து அவனுக்கும் எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு புரியலையாம்மா?”
“ஓ… நீயும் அவனுக்குத்தான் ஏந்துகிட்டு பேசுவ? அந்தப் பொண்ணை நீ பார்த்திருக்கியாடா? இத்தனை வருஷம் அவங்க வீட்டுல எப்படி விட்டுவெச்சாங்க?”, ஸ்டீஃபனின் வாயை கிளறினார்.
இப்படி பிடிவாதமாய் இருக்கச் செய்யும் காதல் என்ன காதலோ? பெருமூச்சுதான் வந்தது.
ஜோ கிளம்பும் நாளும் வந்தது. ஊசலாடிய மனதை நிலைபடுத்தமுடியாது தவித்து, அமைதியாக அமர்ந்திருந்தார் ஜெயராணி.
“அம்மா. உங்களை வருத்தபட வெச்சது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. பொறுமையா யோசிங்க. உடம்பை பார்த்துக்கங்க. உங்க மனசு மாறும்னு நம்பிக்கை இருக்குமா. வேற மதம்ன்ற ஒரு விஷயத்தை தவிர கீர்த்தி பத்தி ஒரு குறையும் சொல்ல முடியாது. அவளைப் பத்தி தெரிஞ்சிக்க தோணும்போது சொல்லுங்க. பேச வைக்கறேன்”, என்று மறைமுகமாக, அவள் மட்டும்தான் என்று மீண்டும் உணர்த்திவிட்டு, அவர் கால் பணிந்து எழுந்தவன், ஒரு தலையசைப்புடன் வெளியேறினான்.
விடுமுறை முடிந்து ஒரு மாதம் போல் உருண்டோடிவிட்டது. வேலையில் தன்னை புகுத்திக்கொண்டு ஸ்டீஃபனிடம் தாயின் நலனை கேட்டறிந்து கொண்டான் ஜோ.
ஜெயராணி அவனோடு இன்னமும் பேசவில்லை. இவன் அழைத்த போதும் இளைய மகனை விட்டே அழைப்பை ஏற்பார். மகன்கள் இருவரும் உரையாடுவதை ஸ்ப்பீக்கர் வழியாக கேட்டுக் கொள்வார். அது தெரிந்து வேண்டுமென்றே அன்னையிடம் ஜோ கேள்வி எதுவும் கேட்டாலும் ஸ்டீஃபன் மூலமாகவே பதில் வரும்.
“மா… நீ ஜாடை காட்டி, எனக்கு புரிஞ்சு, நான் சொல்றதுக்கு பதிலா, நீயே எங்கிட்ட பேசற மாதிரி பேசிடேன்?”, ஸ்டீஃபன் ஒரு நாள் வெறுத்துப் போய் கேட்க நங்கென்று மண்டையில் கொட்டு வாங்கியதுதான் மிச்சம்.
ஜோ வழமையாக அழைக்கும் நேரம் அழைக்கவில்லையென்றால் ஸ்டீஃபனை துளைத்து எடுத்துவிடுவார், ஆனால் அவனை அழைக்க மட்டும் செய்ய மாட்டார்.
“இன்னும் எத்தனை நாள்டா அம்மா இந்த மாதிரி கண்ணாமூச்சி விளையாடிட்டு இருப்பாங்க?”, ஜோவும் பொறுமை இழந்து கேட்டான்.
“ம்க்கும்… நானும் அதைத்தான் தினமும் கேட்கறேன், எங்க பதில் சொல்றாங்க? முணுக்குன்னு கண்ல தண்ணிதான் வருது. அப்பறம் நான் என்ன கேட்க?”
“கீர்த்தி பத்தி எதுவும் கேட்டாங்களா?”
“இல்லை. ஆனா சர்ச்சுக்கு போய் ஃபாதர் கிட்ட இரண்டு நாளா பேசிட்டு வராங்க. இப்பதான ஒரு மாசம் ஆகிருக்கு. கொஞ்சம் பொறு ஜோ.”
“டேய்… வெயிட் பண்றதெல்லாம் பிரச்சனையே இல்லை. அம்மா எங்கிட்ட பேசாம இருக்கறதுதான் கஷ்டமா இருக்கு. திட்டறதுக்காவது என்னோட பேசினா தேவலாம்”, ஏக்கமாக பேசும் அண்ணனை என்ன சொல்லி தேற்றுவது என்றுதான் ஸ்டீஃபனுக்கும் புரியவில்லை.
ஒரு ஞாயிறு மாலை ஸ்டீஃபனிடமிருந்து குறுஞ்செய்தி வந்து குதித்தது. “அம்மாக்கு கீர்த்தி அண்ணியோட பேசணுமாம். வீடியோ கால் பண்ணச் சொல்றாங்க ஜோ.”
அடுத்த வாரம் வேண்டிய துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருந்தவன் தான் படித்தது சரிதானா என்று இரண்டாம் முறை படித்து பரபரப்பானான்.
உடனே ஸ்டீஃபனுக்கு அழைக்க, அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“இங்கதான் உட்கார்ந்திருக்காங்க. எனக்கும் என்ன ஆச்சுன்னு தெரியலை. திடீர்னு பேச கேட்கறாங்க. நீ அண்ணி போன் நம்பர் தந்தா, நான் கால் செய்து தரணுமாம்.”, என்று பதில் மட்டும் வந்தது.
பல்லைக் கடித்தவன், “அவகிட்ட பேசிட்டு நானே உன் நம்பருக்கு கூப்பிட சொல்றேன். ஒரு அரை மணி நேரம் ஆகும்னு சொல்லு அம்மாகிட்ட”, என்று டைப்பித்தபடியே கீர்த்தியின் அப்பார்ட்மென்ட்டை நோக்கி வேக நடையிட்டான்.
“அச்சோ வீடியோ காலா?”, முகத்தை கண்ணாடியில் பார்த்தவள் வேகமாக குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
தலை வாரிக்கொண்டிருந்தவளிடம் ஹாலில் இருந்தபடியே, “அம்மா எதாவது எடக்கா கேட்டாலும் அமைதியாவே பேசு கீர்த்தி. என்ன நினைச்சு திடீர்னு பேசறாங்கன்னு தெரியலை. அப்பவும் எங்கிட்ட பேசாம நேரா உன்னை கூப்பிட நம்பர் கேட்டிருக்காங்க. என் மகனை விட்டு விலகிடு அது இதுன்னு சொன்னாலும் நீ பயந்துடாத, பதிலுக்கு பேசிடாத, முக்கியமா விலகிடறேன்னு ஒத்து கித்து தொலையாத புரியுதா?”
பின்னலை முடித்து சீப்பை அதனிடத்தில் வைத்தவள், அவன் அருகில் வந்து, “ஜோ… என்னை பாரு. நீதான் எனக்கு தைரியம் தரணும். நீ இப்படியெல்லாம் பேசினா எனக்கு இன்னும் பயம்தான் வருது. ப்ளீஸ் காம் டவுன்”, என்று அவன் இரண்டு தோளிலும் கைவைத்து உலுக்க,
ஒரு புன்னகையோடு அவள் கைகளைப் பிடித்தவன், ஒரு ஆழப் பெருமூச்சோடு, “ஹ்ம்ம்… நீ எப்பவும் போல இரு கீர்த்தி, அம்மாக்கு உன்னை பிடிக்கும்” என்றான்.
“ம்ம்.. அது. ஒரு ஃபைவ் மினிட்ஸ். வேற சல்வார் மாத்திட்டு வந்து வீடியோ கால் பேசறேன். நீ ஸ்டீஃபனுக்கு சொல்லிடு” , என்று படுக்கை அறைக்குள் புகுந்து கொண்டாள். முன்பு போல தயக்கமெல்லாம் இல்லை.
ஜோவின் அனேக உறவுகளை சென்ற புதுமனை புகுவிழா புகைப்படங்களின் வாயிலாக பார்த்திருந்தாள். அதில் ஒரு வெண்பட்டுப் புடவையில் சந்தோஷ முகமாக இரு மகன்களின் அணைப்பில் புது வீட்டின் முன் நின்றிருந்த புகைப்படம் அவளை கவர்ந்திருந்தது. மகன்கள் இருவரிடத்திலும் அவரின் சாயல். சாந்தமாகத்தான் தெரிந்தார் அப்போது. ஆனால் மகனிடமே கோபித்துக்கொண்டு பேசாமல் இருப்பவர் தீடீரென்று தன்னிடம் என்ன பேச நினைக்கிறார்?
மகனை திருப்பிக் கொடுத்துவிடு என்று கேட்டால் தன்னால் முடியாதென்று கூற முடியுமா? இல்லை தன்னால் தாய்க்கும் மகனுக்கு மேலும் பிணக்கு பெரிதானால் அதை பொருட்படுத்தாமல் இருக்க முடியுமா?
ஜெயராணியோடு பேசும் முன்னரே கீர்த்தியின் தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது.