ஒரு முறை ஒரே முறை, அவன் காலை மடியில் வைத்து, ஆசை தீர விரல்களை வருடி, சொடக்கெடுத்துவிட்டாள். மறுபடி அவன் தரவில்லை. அவள் என்னவன் என்று தான் பார்த்து ரசித்ததை இன்று ஷீத்தலும் சொல்கிறாள். நாளை அவனோடு திருமணமானால், உரிமையாக … “ அஹ்… உமட்டுது. இரு”, என்று வேகமாக ரெஸ்ட் ரூம் சென்றாள்.
வியர்த்திருந்த முகத்தில் குளிர்ந்த நீரை வேகமாக சில முறை அடித்து, மெல்ல நிமிர்ந்தாள். திகைத்து இருண்டு மருண்ட அவள் பிம்பம் தெரிந்தது.
“என்ன பண்ணிட்டு இருக்க கீர்த்தி? உனக்கு வேணாம் ஆனா வேற யாருக்கும் தரமாட்டேன்னு சொல்ற அளவுக்கா ஆகிட்ட?”, அவள் என்ன எதிர்பார்க்கிறாள், என்ன உணர்கிறாள் என்று கூட வரையறுக்க முடியவில்லை.
முழுதாய் சில நிமிடங்கள் தன்னைத் தானே திட்டி தீர்த்தாள். அடுத்து, அவனையும் திட்டினாள். “கண்காணாத இடத்துல யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு இருந்திருக்கலாமில்ல. எதுக்குடா என்கிட்ட வந்து கேட்ட? குடிகாரன் கண் எதிர்ல சரக்க வெச்சி வெறுப்பேத்தறா மாதிரி இருக்கே. இன்னும் ஆறு மாசம் எப்படி நெட்டித் தள்ளுவேன். கடவுளே!”, தலையை பிடித்துக்கொள்ள,
“கீர்த்தி? என்ன பண்ணுது கீர்த்தி? ஸ்கூல் நர்ஸ் கிட்ட போலாமா?”, கவலையாக வந்து நின்றாள் ஷீத்தல்.
“ஹான்?… இல்ல ஷீத்து, காலையில சாப்பிட்டது எதுவோ சரியில்லை போல. கொஞ்சம் உட்கார்ந்தா போறும். உனக்கு லாப் இருக்குல்ல? நீ போ. எனக்கு அடுத்த பீரியட்தான்”, அனுப்பிவிட்டு சற்றே வாடிப்போய் அவள் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
வெள்ளி கிழமைகளில் வகுப்புகள் சீக்கிரமே முடிந்துவிடும். அசைன்மென்ட் திருத்தம், டெஸ்ட் இருந்தால், அதை திருத்தி அதற்கான மதிப்பெண்களை இட்டு, பள்ளியின் வலை தளத்தில் அந்தந்த மாணவர் கணக்கில் பதிவிடுவது என்று முடித்துவிட்டுத்தான் கிளம்புவாள் கீர்த்தி.
அன்று மாலை பொறுமையாக பள்ளிவிட்டு வர, இதமாக மாலை காற்று வீசியது. பள்ளியின் ஒரு புறம் சிறிய பூங்கா ஒன்று இருக்கும். எப்போதாவது, துபாயின் குளிர் காலத்தில் சென்று அமர்ந்திருப்பாள். அன்றும் சரி கொஞ்ச நேரம் அமரலாம் என்று உள்ளே போனதும் ஷீத்தலின் சிரிப்பு சத்தம் கேட்டது.
எட்டி நடந்து முனை திரும்ப, ஷீத்தலைப் பார்த்தாள். உடன் சிரித்துக்கொண்டிருந்தது ஜோ. இருவரும் இடைவெளி விட்டுத்தான் அமர்ந்திருந்தார்கள். ஆனாலும் இருவரும் இப்படி தனிமையில் சந்தித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கிரகிக்கவே சில நொடிகள் பிடித்தது.
ஷாக்கடித்து நிற்பவளைப் பார்த்த ஷீத்தல், ஒரு நிமிடம் திகைத்து, அடுத்த நொடியே சமாளித்து, “அட, வா கீர்த்தி.”, என்று அழைக்க, கீர்த்தி தானும் சுதாரித்தாள்.
ஜோவை ஒரு நொடி நோக்க, அவளை அமைதியாகப் பார்த்தவன், “நீங்க உட்காருங்க. நான் கிளம்பிட்டு இருந்தேன்”, என்று அவளிடம் சொல்லிவிட்டு, ஷீத்தலிடம் தலையசைத்து விடை பெற்று அகன்றுவிட்டான்.
சங்கடமான சில நொடிகள் நின்ற கீர்த்தி தானும் செல்ல யத்தனிக்க, “ஏய்.. கரடி..கரடி… இரு எங்க போற?”, என்று சிரித்துக்கொண்டே எழுந்து வந்து கை பிடித்தாள் ஷீத்தல்.
“என்ன?”, என்று பாவமாகப் பார்த்தாள் கீர்த்தி. இன்னும் அதிர்விலிருந்தே மீளவில்லை.
“நான் பார்க் பக்கம் வர எதிர்க்க ஜிம் போகறதுக்கு வந்துட்டிருந்தார் ஜோ சர். இங்க பார்க் இருக்கான்னு கேட்கவும் கூட்டிட்டு வந்தேன். அப்படியே பேசி கடலை போட ஆரம்பிக்கறதுக்குள்ள மூக்கு வேர்த்து நீயும் வந்துட்ட”, என்று கன்னத்தில் செல்லமாக குத்தினாள்.
“ஹ்ம்ம்… வெதர் நல்லாருக்கேன்னு வந்தேன். நீ அவரோட இங்க இருப்பன்னு என்னக்கென்ன தெரியும்? அடுத்த வாட்டி மெசேஜ் போடு, கிட்டயே வராம இருக்கேன்”, முகத்தை சுளித்தவள் அவள் கூப்பிடக் கூப்பிட கிளம்பிவிட்டாள்.
வீட்டிற்கு வந்தும் இருப்பு கொள்ளவில்லை. “நான் கைகாட்டினா உடனே கட்சி மாறிடுவானா? அப்ப எதுக்கு இவ்வளவு தூரம் உன்னை தேடித்தான் வந்தேன்னு டயலாக் அடிச்சானாம்? உண்மையை சொல்லி விலகினா, உடனே அடுத்த ஆளுக்கு அடி போடுவானா? இன்னிக்கு இருக்குடா உனக்கு”, என்று கறுவியவள் வேகமாக ட்ராக் சூட் மாட்டி, ஷூ அணிந்து ஜிம்மிற்கு சென்றாள்.
வேறு யாரும் இல்லை அந்த சிறிய ஜிம்மில். ஷார்ட்ஸ், டீ-ஷெர்ட் போட்டு ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் ஜோ. வேகமாக அவன் அருகே சென்று முறைத்த வண்ணம் நின்றாள்.
சுற்றி ஒரு முறை யாரும் இல்லை என்று பார்த்தவன், தானாக ட்ரெட் மில்லின் கூல் டவுன் பட்டனை அழுத்தி, வேகம் குறைத்தபடியே, “என்ன கீர்த்தி?”, என்றான். லேசாக மூச்சு வாங்கியது. நெற்றியில் வியர்வை துளிகள் அப்போதுதான் அரும்பியிருந்தது.
“ஷீத்தலோட ஒரே கடலை போல? “, நக்கல் தெறித்தது குரலில்.
“நீதான அவளை கன்சிடர் பண்ணச் சொன்ன?”, நிதானமாக நடக்கும் அளவு வேகம் குறைந்திருந்தது ட்ரெட் மில். அருகிலிருந்த துண்டை எடுத்து முகம் துடைத்தான்.
“ஓ..சொன்னதும் உடனே ஆரம்பிச்சிடுவியா? எனக்கு எப்படியிருக்கும்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?”, கேட்கும் போதே அவள் உதடு லேசாக பிதுங்கியது.
கண்களை அதிலிருந்து வலுக்கட்டாயமாக நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்த ஜோ, “ஒரு வேளை செட் ஆகாதுன்னு தோணினா, அடுத்து வேற பொண்ணு பாருன்னு சொல்லணும் இல்ல? அதுக்குத்தான்…” என்று சொல்ல,
“என்ன பார்த்தா உனக்கு என்ன மாமி மாதிரி தோணுதா?”, மூக்கு விடைக்க சிம்மினாள்.
“மாமி..” என்று புருவம் சுருக்கியவன், “ஓ… மாமா வேலைக்கு பதிலா பெண்பால் மாமி”, என்று புன்னகைக்க,
“சிரிக்காத…”, என்று இரு கைகளையும் முஷ்டிகளாக்கி குத்துச் சண்டையிட தயாராக நின்றாள்.
ட்ரெட் மில் நின்றிருக்க, இரு கைகளையும் உயர்த்தி அமைதி என்பது போல சைகை செய்தவன், இறங்கி,
“இங்க பாரு கீர்த்தி. உன்னை தேடி வந்தேன். உனக்கு நடந்ததெல்லாம் சொன்னப்பறம், உன்னை என்னால வற்புறுத்த முடியாது. அதுவும் உன் முடிவு, நீதான் எடுக்கணும்னு உறுதியா இருக்க. சரின்னு உன் விருப்பத்துக்கு மதிப்பு குடுத்து விலகினேன். நீயேதான் எனக்கு வேற பொண்ணு பார்க்கறேன்னு சொன்ன. அப்ப கோவமா போனேன் அப்பறம், யோசிச்சேன். நீ சொன்னதும் கரெக்ட். எல்லா காதலும் கல்யாணத்துலையா முடியுது? அதுக்கப்பறமும் வாழ்க்கை இருக்கே. எங்க அம்மாவும் அனத்திட்டே இருக்காங்க. நான் கல்யாணம் முடிச்சு அடுத்து தம்பி இருக்கான். எனக்கும் முப்பது தாண்டியாச்சு. அவங்களா எதாவது ஒரு பொண்ணை பார்க்கறதுக்கு, நானே இங்க நீ காட்டுற பொண்ணை பார்க்கலாமேன்னுதான் ஷீத்தல்கிட்ட பேசினேன். நீ சொன்ன மாதிரி நல்ல பொண்ணுதான். பேசி பழகினாதான எனக்கு செட் ஆகுமான்னு பார்க்க முடியும்?”, யதார்தத்தைப் பேசியவன் முகரையை பெயர்க்க வேண்டும்போல இருந்தது கீர்த்திக்கு.
அவளது அதீத மரியாதையில் புருவம் உயர்த்தியவன், “என் ஃபர்ஸ்ட் லவ் சொன்னா, என் காலுக்கு அது அழகா இருக்குன்னு. அதுலர்ந்து அப்பப்ப போட்டுட்டு போவேன். ஏன்?”, என்று கேட்க,
“ம்ம்… உன் கால் அழகை அந்த கிறுக்கி எங்கிட்டயே வந்து வர்ணிக்கறா. கொன்னுடுவேன் இனியொரு தரம் கோலாபூரி போட்டினா!”, மிரட்டிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.
வாசல் வரை சென்றவள், அங்கிருந்தே, “இரு இரு. உன் கண் எதிர நானும் வேற எவனுக்காச்சம் கடலை போடறேன்”, என்று பொறும, இரண்டெட்டில் அவளருகே வந்தவன்,
“சங்கறுத்துருவேன்! என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு வேற ஒருத்தனுக்கு கழுத்த நீட்டினா வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நினைக்காதே. நிஜமா உன்னால கல்யாண வாழ்க்கையை யோசிக்க முடியலைன்னு புரிஞ்சு விலகிப் போறேன். அதை மிஸ்யூஸ் பண்ணன்னு தெரிஞ்சுது…”, நாக்கை மடித்து மிரட்டியவன், ஒரு விரல் நீட்டி பத்திரம் என்று காட்டிவிட்டு, திரும்பி ட்ரெட் மில்லில் ஏறி ஓட ஆரம்பித்தான்.
அவள் பார்த்திராத அவனது இந்த முகம் கண்டு சில நொடிகள் விகித்து நின்றவள், விருட்டென்று கிளம்பி வீடு வந்து சேர்ந்தாள்.