வார நாட்கள் வழமைபோல் ஓடியது. ஜோ கண்ணில் படவே இல்லை. வாரம் தொடங்கியபோது மதியம் அவன் வரவில்லை என்று பார்த்திருந்தவளுக்கு, “ஜோசஃப் சார் வரமாட்டாராம். மெசேஜ் அனுப்பியிருந்தார். எதோ வேலையாம், டெய்லர் மேடமோட”, என்று செய்தி சொன்னாள் ஷீத்தல்.
“உன் நம்பர் அவர்கிட்ட இருக்கா?”, ஆச்சரியமாகக் கேட்டாள். இரண்டு முறை சந்தித்தும் ஜோ இவள் கைப்பேசி எண்ணை கேட்கவில்லை.
“ம்ம்.. சர்ச் க்ரூப்ல சேர எங்கிட்டதான் நம்பர் குடுத்தார், அப்படியே என்னோடதும் வாங்கிக்கிட்டார். ஏன்?”
ஏனென்றே தெரியாத ஒரு ஆசுவாசம் ஒட்டிக்கொண்டது கீர்த்தியிடம். “ஓஹ்..சரி. நம்ம சாப்பிடலாம்”, என்றதோடு முடித்துக்கொண்டாள்.
நான்கு நாட்களாக அவர்களோடு அவன் வந்து அமரவில்லை. தொலைவில் ஓரிரு முறை பார்த்த போது மற்றவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தான். இவள் இருப்பை கண்டுகொள்ளவே இல்லை.
“அதுதான் ஷீத்தலை கன்சிடர் பண்ண சொல்லிட்டியே? இன்னும் என்ன எதிர்பார்க்கற?”, என்ற மனதின் குரலை அடக்க முடியவில்லை. விடுமுறை தினத்தன்று சந்திக்கக் கேட்பான் என்று நினைத்ததும் இல்லையென்றான பின் தனக்குத்தானே ஒரு நீண்ட உரை ஆற்றிக்கொண்டாள்.
“நீ சொன்னதுதான் செய்யறான். உன்னை தேடி வந்தான். நீ எல்லாமும் சொன்னதும், ஒதுங்கிப்போறான். ஷீத்தலை கன்சிடர் பண்றான், இல்லை, அது வேற விஷயம். உன் சாப்டர் முடிஞ்சுது. நீ சொன்னதுக்கு மரியாதை குடுத்து தள்ளிப் போறான். அப்ப நீ அதை மதிக்கணும். சும்மா கண்ணு அவனை தேடக்கூடாது. அவனுக்கு சொன்னதுதான் உனக்கும். ஸ்வீட் மெமரீஸ் ஆஃப் ஃபர்ஸ்ட் லவ்”, என்று என்னென்னவோ பேசிக்கொண்டாள். எல்லாம் விடுமுறை முடிந்து வாரம் தொடங்கும் வரைதான் நிலைத்தது.
“ஹேய் ஜோ சர் கன்யாகுமரி பக்கமாம். அம்மாவும் ஒரு தம்பியும் இருக்காங்களாம்”, என்ற அறிவிப்போடு ஷீத்தல் வகுப்புகள் இடைவெளியில் கூறும் வரைதான்.
“ஜோ சாரா?”, புருவம் உயர்த்தினாள் கீர்த்தி.
“ஹ்ம்ம்… அவர்தான் ஜோன்னு கூப்பிடுன்னார். இருந்தாலும் ஒரு சார் போட்டுக்கறேன்”, ஒரு பெரிய புன்னகை தவழ்ந்தது ஷீத்தல் முகத்தில்.
“சர்ச் வந்திருந்தாரா. அது முடிச்சிட்டு, ஃபாதர்கிட்ட அறிமுகப்படுத்தினேன். அப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். அப்போதான் அவர் குடும்பம் பத்தியெல்லாம் சொன்னார். என் ஃபாமிலி பத்தி கூட அக்கறையா கேட்டார் கீர்த்தி.”
கேட்க உவப்பாக இல்லை கீர்த்திக்கு. “ஓஹ்… நல்லது. இரு அடுத்த க்ளாஸ் ஆரம்பிக்கறதுக்குள்ள வாஷ் ரூம் போகணும்”, என்று நகர்ந்துவிட்டாள்.
‘சர்ச், பாதிரியார் அறிமுகம் எல்லாம் சரிதான். அவ குடும்பத்தை எல்லாம் விசாரிக்கற அளவுக்கு பேசியிருக்கான். அப்ப நம்ம செலக்ஷன் கன்சிடர் பண்றானா?’ என்று எண்ணும்போதே புகைந்தது.
‘ம்ப்ச்… பழகிக்கோ கீர்த்தி. ஷீத்தல் அவனுக்கு சரியா வருவா. அவனுக்கு அவதான் உன்னைவிட எல்லாத்துலையும் பெட்டர். கொஞ்சம் குறும்பு, கலாட்டா அதே நேரம் நிறைய பொறுப்பு, பொறுமை, அக்கறைன்னு கரெக்ட் மாட்ச். அதுவும் அவங்க அம்மாவும் ஏத்துக்கற மாதிரி அதே இனம் கூட. மருமக இந்துன்னு சொன்னா வீட்டுல கொஞ்சம் சங்கடம்தான் அவனும் முன்னமே சொல்லியிருக்கானே. இருந்தாலும் பார்த்துக்கலாம்னு தைரியம் சொன்னான். இப்ப அந்த பிரச்சனையே இல்லை. ஊர்ல அவன் தம்பி கூட அவங்கம்மா இருந்தாலும் , இவங்க இங்கயிருந்தே இன்னும் கொஞ்ச வருஷம் சம்பாதிக்கலாம்’, எண்ணங்கள் அவளை மீறி தறிகெட்டு சாதகங்களை அடுக்கியது. ஆனால் கண்கள் மட்டும் கண்ணீரை பொழிந்தது.. ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன் செய்ய முயற்சித்தாள். “அவன் மனசை உடைச்சதுக்கு இதுதான் பிராயச்சித்தம்”, என்று உருப்போட்டுக்கொண்டே வெளியேறினாள்.
ஒரு வாரத்தை நெட்டித் தள்ள மூச்சு முட்டியது. முதல் முறை காதலை முறித்தபோது இருந்த வலி ஒரு மாதிரி என்றால் இப்போது வேறு மாதிரி உவா முள் குத்துவது போல இருந்தது. சரோஜினி அழைக்கவும் சென்ற வாரமே சண்டையிட்டு வைத்ததால், உடனே எடுத்து பேசினாள்.
வழக்கம் போல நலம் விசாரித்தவர், வரனைப் பற்றியோ இல்லை சென்ற வார சண்டை பற்றி எதுவும் பேசாது பொதுவாக வீட்டு நடப்பை பகிர்ந்துகொண்டார்.
“ப்ரீத்தி மாமியார் ஊர்ல கீழ விழுந்துட்டாங்களாம்.அவ வீட்டுக்காரன் லீவை போட்டுட்டு அங்க போகவும் இங்க வந்து இரண்டு நாள் இருந்தா. இப்ப அவளும் அங்க போயிருக்கா. இடுப்பு எலும்பு இரண்டு இடத்துல க்ராக் விட்டிருக்காம். ஆப்ரேஷன் பண்ணிக்க அந்தம்மா பயப்படுதுன்னு புத்தூர் கட்டு கட்ட கூட்டிட்டு போயிருக்காங்கடி”, செய்தி வாசித்தார்.
“ஓ…”, வேறு என்ன சொல்வது என்று தெரியாமல் ஓ போட்டு வைத்தாள்.
“வயசான காலத்துல சும்மா இல்லாம மழை வருதேன்னு துணி எடுக்க போயிருக்கு, வழுக்கி விழுந்துட்டுதாமாம். அந்த புடவை நினைஞ்சாதான் என்னாயிடப் போவுது? இருக்கற செலவு பத்தாதுன்னு இப்ப இது வேற. ஹர்ஷிக்கு ஸ்கூல் அனுப்பவே இழுத்து பிடிச்சு கட்டினாங்க.”, சரோஜினி புலம்பல் தொடர,
“காசு எதாவது அனுப்பட்டுமா?”
“வேணாம் வேணாம். அப்பா கூட கேட்டார். ஃப்ரெண்ட் கிட்ட வாங்கியிருக்கேன் மாமானுட்டார். நீ வேற இப்பதான் எங்க டாக்டர் செலவெல்லாம் பார்த்த. தங்கம் விலை வேற ஏறிகிட்டே போகுது. நகை நட்டு எதாவது வாங்கி வைடி.”, அறிவுரை படலம் தொடங்கவும்,
“சரி சரி. நான் பார்த்துக்கறேன். நீ வை. இனிதான் சமைக்கணும்”, வைத்துவிட்டாலும் விட்டத்தைப் பார்த்தே அமர்ந்திருந்தாள். இப்படியே இருந்தால் சரி வராது என்று கிளம்பி ஷட்டில் பஸ் எடுத்து பக்கத்து மாலுக்கு சென்று அந்த வாரத்திற்கு வேண்டியது வாங்கலாம் என்று கிளம்பினாள்.
ஞாயிறு மாலை ஷீத்தலை அழைத்தாள்.
“ஹே..ரொம்ப போர் அடிக்குது ஷீத்து. என்ன பண்ற?”
“ஹேய்… வில்லியம்ஸ் வீட்டுல கெட்டுகெதராம். ஜோ சார் போலாமான்னு கேட்டார். சரின்னு கிளம்பறேன்.”
“…”
“என்ன கீர்த்தி?”
“இல்ல, இதுக்கெல்லாம் போக மாட்டியே. என்ன திடீர்னு?”
“ஜோ சார் இருக்க தைரியம்தான். மேடம் டெய்லர், ஆனில்லாம் கூட வராங்க. நீயும் வாயேன் கீர்த்தி.”
“வேணாம் வேணாம். உன்னைதான கூப்பிட்டாங்க. நீ போ. நான் வரலை. வேலை இருக்கு”, ஜகா வாங்கினாள்.
“இப்பதான் போர் அடிக்குதுன்ன?”
“வேலை இல்லைன்னா சொன்னேன். உங்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போய் செய்யலாம்னு நினைச்சேன். நீ கிளம்பு”
“ஏய்.. இரு இரு… வந்து.. அந்த யெல்லோ சுரிதார் தான் போடறேன். அது ஓகேதான? எனக்கு அந்த கலர் நல்லா இருக்குன்னு நீதான சொன்ன?”
பல்லைக் கடித்தவள், “ஹ்ம்ம்… நல்லா இருக்கும். ஏன் ஜோ சார் பார்க்கறதனால ஸ்பெஷல் அலங்காரமா?”, என்று கேட்டாள்.
“ஏய்.. அப்படில்லாம் இல்லை…. ம்ம்.. கொஞ்சம் அப்படித்தான்னு வெச்சுக்கோயேன். முன்னாடி கல்லையும் மண்ணையும் பார்க்கற மாதிரி பார்த்த மனுஷன் இப்பதான் கொஞ்சம் சகஜமா பேசறார்.”, ஷீத்தல் குரல் சற்றே எதிர்பார்ப்புடன் வந்தது.
“ஹ்ம்ம்.. குட்லக். பை”, வைத்துவிட்டாள், ஆனாலும் லேசான வயிற்றெரிச்சல் இருந்தது.
ஜோவைப் பார்க்க வென்றே, ஆசையாக கிளம்பிய நாட்கள் தேவையில்லாமல் ஆஜரானது. அந்த க்ரீன் ஷர்ட் போட்டுட்டு வா ஜோ என்று இவளும், எங்க அந்த ஆரஞ்ச் சுடி போடவே இல்லை. ஃபான்ட்டா பாட்டில் மாதிரியே இருந்தாலும் கூட கண்ணுக்கு குளிர்ச்சியா இருப்பியே என்று அவனுமாக உரிமையாய் ஆசையை கேட்டு நிறைவேற்றிய காலம். கிரிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்குச் செல்பவன் அம்மா செய்தது என்று முந்திரிகொத்து எடுத்து வந்து தருவான். அவனோடு உண்ண இவள் கேக் துண்டுகள் வாங்கிச் செல்வாள். காவியக் காதல் என்று கவிதை வடிக்கவில்லை ஆனாலும் இனிமையான நாட்கள். இருவருக்கும் பேச எதாவது இருந்துகொண்டே இருந்தது.
‘இத்தனை வருஷம் அவன் இல்லாமதான வாழ்ந்த? அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஆசை இருக்கு. அப்பறமென்ன? எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு போ. எதுக்கு பொறாமை?’, அவளையே திட்டிக்கொண்டாலும் உடலும் மனமும் படுக்கையை விட்டு எழுவேனா என்று சண்டித்தனம் செய்தது.
பசிக்கவும் எழுந்து எதாவது இரவு உணவு செய்வோம் என்று செல்ல போனில் மெசேஜ் வந்ததற்கான பீப். எடுத்தவளுக்கு ஏன் எடுத்தோம் என்றாகிவிட்டது.
பார்ட்டியிலிருந்து க்ரூப் போட்டோ. ஷீத்தல்தான் அனுப்பியிருதாள். ஜோ இருக்கவும் ஜூம் செய்தாள். வெளிர் மஞ்சள் ஜிப்பா, ஜீன்ஸ் போட்டிருந்தவன், காலை ஜூம் செய்ய கோலாப்பூரி செருப்பு.
“இரண்டு பேரும் சேர்ந்து ஒரே மாதிரி கோலாபூரி செருப்பு வாங்கலாம் ஜோ. உன் காலுக்கு அழகா இருக்கும்” என்று இவள்தான் டி.நகர் அழைத்துச் சென்றாள். தேடிப்பிடித்து வாங்கிக்கொண்டு, வடக்கத்திய ஃபாஸ்ட் புட் ஒன்றில் பானி பூரி பேல் பூரி என்று பங்கிட்டு ஒரே தட்டிலிருந்து உண்டதெல்லாம் நேற்று நடந்தது போல இருந்தது.
மறு நாள் இருவரும் ஒரே மாதிரி செருப்பு அணிந்து வர, இவர்களை பார்த்து தோழிகள் கிண்டல் செய்ததும், இலகுவாக தோளை குலுக்கியவன், “இப்பவே பழகிக்கறேன். சோ வாட்?”, என்று அவர்கள் வாயடைத்தான்.
மறு நாள் குதித்துக்கொண்டு வந்தாள் ஷீத்தல். “ஹே… நான் யெல்லோ சுரிதார் போட்டுட்டு போனா, அவரும் லைட் ஷேட் யெல்லொல வந்தார். போட்டோ அனுப்பினேன் பார்த்தியா? அப்படியே ஜிவ்வுனு இருந்துச்சு”, என்றவளின் மகிழ்ச்சி இனிப்பும் கசப்புமாக இருந்தது.
சின்ன சிரிப்போடு, “ம்ம்.. பார்த்தேன்”, என்று நகரப்போனாள். கை பிடித்து இழுத்த ஷீத்தல்,
“இரு கீர்த்தி. நேத்து அவர் அந்த ட்ரெஸ்க்கு கோலாபூரி செருப்பு போட்டுட்டு வந்தாரா, நீட்டு நீட்டா அளவெடுத்த மாதிரி விரல், லேசா சிவப்பு படர்ந்த நகம்னு அழகா இருந்துச்சு. அதுவும் அந்த சுண்டு விரல் பிரிக்கற மாதிரி ஒரு குட்டி வார் இருக்குமே, அது கூட எவ்ளோ க்யூட் தெரியுமா? இது வரைக்கும் முகத்தை பார்த்தேன், தொப்பை இருக்கா, முடி இருக்கான்னுதான பார்த்தேன்? இது என்ன இப்படி கால் விரலெல்லாம் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சிட்டேன் கீர்த்தி?”, கொஞ்சம் கவலையாக ஷீத்தல் கேட்க கீர்த்தியின் முகமே இருண்டது.