“ஸார் ஸார்… அவ என்கிட்டயே சொல்லலை அதை. உங்களுக்காக யோசிக்கிறா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதனால திரும்பவும் உங்க லைஃப்ல ப்ராப்லம் வருமோன்னு பயப்படறா. மனசுல என்னை வச்சுக்கிட்டு நீங்க சொன்னதுக்காக…” என்றவன், குரலை செருமி, “உங்களுக்காகத்தான் எல்லாத்துக்கும் ஓகே சொல்லியிருக்கா” என்றான்.

 

“எப்டி ஸார், இதையெல்லாம் மதியே உங்கள்ட்ட வந்து சொன்னாளா?” என அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் கேட்டார் கணேசன்.

 

“அவ ஃபிரெண்ட் சஞ்சனா சொல்லித்தான் எனக்கு தெரியும். மனசுல வச்சுக்க முடியாம அந்த பொண்ணுகிட்ட சொல்லி அழுதிருக்கா மதி, யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னும் சொல்லிருக்கா, இவ மேல உள்ள அக்கறைல பாசத்துல அந்தப் பொண்ணு எனக்கு ஃபோன் போட்டு எல்லாத்தையும் சொல்லிடுச்சு” என்றான்.

 

வேகமாக பேத்தியிடம் சென்றார் பாட்டி. திகைப்பில் எழுந்த கணேசன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டு நடை போட்டார்.

 

பத்து நிமிடங்கள் கழித்து வெளி வந்த பாட்டி, “தம்பி சொன்ன அம்புட்டும் உண்மைதான்டா கணேசா, ரொம்ப அழுவுறாடா” என்றார்.

 

அவள் அழுகிறாள் என்பதில் பதறிய ரவியும் எழுந்து நின்றான்.  தன் அம்மாவையும் நம்பாமல் கணேசனே அவளை பார்க்க சென்றார்.

 

“இவன் ஒருத்தன் எப்பவும் இப்படித்தான் குழப்பியடிச்சுகிட்டே இருப்பான்” என சலித்தார் பாட்டி.

 

ரவியும் அறையின் வாயிலில் போய் நின்றான். சித்தப்பாவின் கைகளை பற்றிய படி அழுது கொண்டிருந்தாள் தண்மதி.

 

இங்கே ரவியால் தள்ளி நிற்கவே முடியவில்லை. ஓடிப் போய் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல பர பரத்த மனதை அடக்கி நின்றான்.

 

“அழுகையை நிறுத்திட்டு சித்தப்பாட்ட உள்ளதை சொல்லு” என தண்மையாக கேட்டார் கணேசன்.

 

“எனக்கு… எனக்கு…” என மேலே பேச முடியாமல் தேம்பினாள்.

 

“ம்ம்… சொல்லுடா, இப்ப நான் பார்த்திருக்க பையனை பிடிக்கலையா?”

 

சிறு தேம்பலும் ஈர விழிகளுமாக சித்தப்பாவை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அறைக்கு வெளியில் ரவி நின்றிருப்பது கவனத்தில் படவும், உடனே பார்வையை தழைத்துக் கொண்டாள். கணேசனும் பின்னால் திரும்பி பார்த்து விட்டு பெரிய மூச்சு விட்டார்.

 

மகளின் அருகில் அமர்ந்து, “இவர் பொண்ணு கேட்கிறார்டா உன்னை, என்ன சொல்லட்டும் நான்?” எனக் கேட்டார்.

 

“உங்க விருப்பம் சித்தப்பா” என்றாளே பார்க்கலாம்.

 

விழிகள் தெறிக்க அவளை பார்த்தவர், திரும்பி ரவியை பார்த்தார். அவனும் அதிர்ந்துதான் போயிருந்தான், ஆனால் அதிக நேரமில்லை, உடனே இலகுவாகி, “பொண்ணு பார்க்க அந்த பையன் வீட்லேருந்து கிளம்பிட்டாங்களாம் ஸார், என்ன சொல்லன்னு பாட்டி கேட்கிறாங்க” என சொல்லி, சற்று தள்ளி நின்றிருந்த பாட்டியின் கையை பற்றி இழுத்தான்.

 

உதடுகள் துடிக்க அவனை பார்த்தவள், மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

 

“வரட்டும் அவங்க, நாங்க என்ன ஏதுன்னு பேசிப்புட்டு அப்புறம் உங்களுக்கு பதில் சொல்றோம்” என வம்பாக சொன்னார் பாட்டி.

 

“என்னைய நினைச்சு பார்க்க மாட்டீங்களா பாட்டி, எவ்ளோதான் கெஞ்ச நான்?” அவளை பார்த்துக் கொண்டே பாட்டியிடம் கேட்டான்.

 

“அவ நெனப்பு என்னன்னு எங்களுக்கு தெரியாம எங்கள என்ன பண்ண சொல்றீக தம்பி?” என்றார் பாட்டி.

 

“எனக்கு இவங்கள பிடிச்சிருக்கு சித்தப்பா” என ஒரு வேகத்தில் சொல்லி விட்டவள், அவர் என்ன நினைப்பாரோ என பரிதவிப்பாக பார்த்தாள்.

 

இங்கே ரவியின் உடல் தளர்ந்து போக, நிலையில் சாய்ந்து கொண்டு அவளை பார்த்திருந்தான்.

 

அவள் வாய்மொழியாக சொல்வதற்கு முன்பே கணேசனுக்கு தெளிவாக தெரிந்து விட்டதுதான், இது எப்படி நல்ல விதமாக முடியும் என யோசித்த படி அமைதியாக இருந்தார். அவரின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டவள், “நீங்க வேணாம்னா சரிதான் சித்தப்பா, எனக்கு கல்யாணம் வேணாம். நானும் ஆத்தாவுமா இருந்துப்போம்” என்றாள்.

 

எவ்வளவு அழகாக அவனை தவிர வேறு யாரையும் ஏற்க மாட்டேன் என சொல்கிறாள் என நினைத்த பாட்டி, “இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கிற நான் உனக்கு துணையா?” எனக் கேட்டார்.

 

அம்மாவையும் அண்ணன் மகளையும் மாறி மாறி பார்த்தார் கணேசன்.

 

“போதும் ஸார், இன்னும் என்ன தேவை படுது உங்களுக்கு? அவ படிக்கட்டும், எங்க கல்யாணத்துக்கு லேட் ஆகும், மெதுவா நடத்திக்கலாம, அதனால இப்ப உங்க விஷயத்தை என்ன ஏதுன்னு பார்க்கலாம்” என்றான் ரவி.

 

அப்போதும் வாய் திறக்கவில்லை கணேசன், அவளோ சித்தப்பாவின் வார்த்தைக்காக காத்திருந்தாள்.

 

பாட்டி வந்து பேத்தியின் அழுத முகத்தை துடைத்து விட்டு, ஈரத் தலையை துவட்டி விட்டுக் கொண்டே, “ஏதாவது சொல்லி அவங்கள தடுத்து நிறுத்துடா” என மகனிடம் சொன்னார்.

 

நேரத்தை பார்த்த கணேசனும் பதறிக் கொண்டு எழுந்து வெளியே செல்ல, ரவியும் அவருடன் சென்றான்.

 

 இப்போது கல்யாணம் வேண்டாம் என தண்மதி சொல்வதாக கூறி, மன்னிப்பு கேட்டுக் கொண்டார் கணேசன். அவர்கள் விடுவதாக இல்லை, பெண்ணை பையனுக்கு மிகவும் பிடித்து விட்டது, நாங்கள் காத்திருக்கிறோம் என்றனர்.

 

ரவிக்கும் இந்தப் பேச்சுக்கள் காதில் விழத்தான் செய்தது. அவரிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் கொண்டவன் தன்னை மதியின் மாமா என அறிமுகம் செய்து கொண்டே தள்ளிச் சென்றான்.

 

“நான்தாங்க அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன், பெரியவங்க விஷயம் தெரியாம இவ்ளோ தூரம் கொண்டாந்து விட்டுட்டாங்க” என்றான்.

 

முதலில் அந்தப் பக்கத்திலிருந்து அதிருப்தி பட்டு கொண்டாலும் இறுதியில் சண்டையில்லாமல் இணக்கமாகவே பேசி முடித்துக் கொண்டனர்.

 

“இந்த ஊர்லதானே ஸார் நான் வேலை பார்க்கிறேன், இவங்களுக்கு ஒன்னுன்னா நான் பார்த்துக்கிறேன், நீங்க டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு அக்காகிட்ட போங்க, பாவம் ஷஷ்டி உங்களுக்காக ஏங்குறா ஸார்” என்றான் ரவி.

 

மதியை பற்றி நினைத்துக் கொண்டிருந்த கணேசன் அப்படியே நின்றிருந்தார்.

 

“பேங்க் போக டைம் ஆகுது ஸார் எனக்கு” என்றான் அவன்.

 

அவர் இன்று அரை நாள் விடுப்பு எடுத்திருக்கிறார், இப்போது அவரும் விடுப்பை ஏன் வீண் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க, “ஒரு வார்த்தை மதிகிட்ட சொல்லிட்டு கிளம்பிடுறேன்” என்றான்.

 

“ஸார்… சின்ன பொண்ணு ஸார் அவ, உங்களோட  பழகாமலே அழுதிட்டு உட்கார்ந்திருக்கா, ஆசை பட்டது நடக்கலைனா தாங்க மாட்டா ஸார் எம்பொண்ணு” என்றார்.

 

“என்ன ஸார், நான் ஏமாத்திடுவேன்னு சொல்ல வர்றீங்களா?”

 

“உங்க குடும்பம் எனக்கு கொடுத்த அனுபவம் அப்படி ஸார்” என அவர் சொல்லவும் அவரையும் அழைத்துக் கொண்டு விடு விடுவென உள்ளே சென்றான்.

 

 பாட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தாள் தண்மதி. இவர்களை கண்டதும் அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர்.

 

“ஒவ்வொருத்தருக்கா சொல்லிட்டு இருக்க கஷ்டம் இல்லையா? அதான்…” என்ற ரவி, “மதி படிச்சு மேரேஜ்க்கு ரெடியாகி நிக்கிறப்போ நான் வந்து நிப்பேன், யாருக்கும் எந்த சந்தேகமும் வேணாம்” என்றான்.

 

பின் தண்மதியை மட்டும் பிரத்யேகமாக பார்த்தவன், “உன் சித்தப்பா எப்ப எப்டி யோசிப்பார், முடிவெடுப்பார்னு தெரியாது. அவர் எப்படி இருந்தாலும் நீ இன்னிக்கு சொன்ன மாதிரி ‘நீங்க சொன்னா சரிதான் சித்தப்பா, கல்யாணம் வேணாம்’ அப்படிலாம் வசனம் பேசக்கூடாது, அப்படி சொன்னாலும் என்கிட்ட எடுபடாது, சொல்லிட்டேன்” என குரல் உயர்த்தாமல் கறாராக சொன்னான்.

 

தண்மதி விழிக்க, என்னடா இது என்பது போல கணேசன் பார்க்க, பாட்டிக்கு மட்டும் வாயெல்லாம் பல்.

 

தன் அன்பை பார்வையாலேயே அவளுக்கு கடத்தி விட்டு சென்றான் அவன். அவனை மனதில் சிறை படுத்திக் கொண்டாள் அவள்.