சிந்தை நிறை தண்மதியே -5

அத்தியாயம் -5

வெள்ளி இரவு வீடு போய் சேர்ந்திருந்த ரவி அடுத்த நாள் காலையே தன் பெற்றோரிடம் கணேசன் – பாரதி விஷயத்தை பற்றி சொல்லி விட்டான்.

என்ன செய்யலாம் என சீனு யோசிக்க, அவரின் மனைவி பூர்ணிமாவோ கணேசன் பக்கம் நியாயம் இருப்பதாக சொன்னார். உடனே மனைவியை முறைத்தார் சீனு.

“என்னை முறைக்கிறதால நான் சொல்றது பொய்ன்னு ஆகிடாது. சின்ன பிரச்சனைய வீட்டு பெரியவங்க ஊதி பெரிசாக்கி… ஒரு புருஷன் பொண்டாட்டியை பிரிச்சதும் இல்லாம பச்ச புள்ளைய அப்பா இல்லாம வளர விட்ருக்காங்க” என குற்றம் சுமத்தினார் பூர்ணிமா.

இவர்கள் பேசிக் கொள்வதை கேட்ட படி உள்ளே வந்து விட்டார் சீனுவின் தாயார் சொர்ணம்.

“யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க? என் புருஷனும் புள்ளயும் செத்து போக காரணமா இருந்த கடங்காரனை பத்தியா?” என கோவமாக கேட்டார்.

‘பார் பேச்சை’ என்பது போல மகனை பார்த்தார் பூர்ணிமா.

சீனுவின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள பெரிய மகனின் வீட்டில்தான் இருக்கிறார் சொர்ணம். சின்ன மருமகள் மீது ஆரம்பத்திலிருந்தே துவேஷம், இருவருக்கும் ஒத்து போவதே இல்லை. ஆகவே எப்போதாவதுதான் இங்கு வந்து போக இருப்பார். இன்றும் பேரன் வந்திருக்கிறான் என அறிந்து அவனை பார்க்க வந்து, இப்படி அவருக்கு பிடிக்காத நபர் பற்றிய பேச்சை கேட்க நேரிட்டு விட்டது.

மூச்சு விடாமல் புலம்பிக் கொண்டிருந்த அம்மாவை சமாதானம் செய்ய பார்த்தார் சீனு, அவரால் முடிந்த காரியமா அது? அப்படியிருந்தால் அவர் திருமணம் செய்து கொண்ட போதே வீட்டினருடன் சேர்ந்து வாழ்ந்திருப்பாரே.

ரவிதான் தன் பாட்டியின் வாயை கையால் மூடி,  கண்களை உருட்டிக் கொண்டு அவரை முறைத்து அடக்கினான். பேரனின் கையை விலக்கி விட பார்த்தார் சொர்ணம்.

“மிஸஸ் கோல்டம்மா! இப்படி சத்தம் போட்டா வீசிங் வந்திடும். ரெண்டு நாள் லீவ்ல உன்னை கூட்டிட்டு ஹாஸ்பிடல்ல சுத்தி பார்க்க வந்தேன்னு நினைச்சியா?” எனக் கேட்டான் ரவி.

பேரனின் கையை தட்டி விட்ட சொர்ணம், “அதுக்காக வாயை அடைச்சு மூச்சு விடாம செஞ்சு ஒரேயடியா என்னை முடிச்சி விட்ரலாம்ன்னு முடிவு பண்ணிட்டியாடா?” என மூச்சு வாங்க கேட்டார்.

ரவி தன் அம்மாவை பார்க்க, அவர் வேகமாக போய் சுடுதண்ணீர் எடுத்து வந்து தந்தார். பாட்டியை பருக வைத்த ரவி, நிதானமாக கணேசன் இன்னும் பாரதியின் நினைவில் இருப்பதை சொன்னான். ஷஷ்டி பற்றி சொல்லாமல் விட்டதும் பெரும் தவறு எனவும் சொன்னான்.

சொர்ணம் பாட்டியிடம் யாரும் நீதி நியாயமெல்லாம் பேச முடியாது, எதையும் காதில் வாங்காமல் தான் பேசுவதுதான் சரி, தான் வைத்ததுதான் சட்டம் என்பது போல மூச்சு விடாமல் பேசும் ரகம் அவர். இப்போதும் அப்படியே பாரதியின் கணவர், மாமியார் என அவர்களை பற்றி திட்டி குமிக்க ஆரம்பித்தார்.

இடையில் தண்மதி குறித்தும் அவர் பேச, எரிச்சல் கொண்ட ரவி பாட்டியை விட்டு தள்ளி சென்று விட்டான். மாமியாரின் அருகில் அமர்ந்திருந்த தன் கணவரை முறைத்துக் கொண்டே மகனிடம் சென்று விட்டார் பூர்ணிமா.

“இனியாம்மா அப்பயி திருந்த போகுது? இந்த பிரச்சனை எப்படி சால்வ் பண்ணலாம், நீ என்ன சொல்ற?” என அம்மாவிடம் கேட்டான் ரவி.

“இது சம்பந்தமா பேச முதல்ல பாரதியை பிடிக்கணும், இல்லைனா வேலைக்கு போயிடுவா. என்கிட்ட கூட எதையும் முழுசா சொல்லலை பாரேன். என்ன இருந்தாலும் ஷஷ்டிக்கு அப்பா பத்தியும் அவ அப்பாக்கு பொண்ணை பத்தியும் சொல்லியிருக்கணும். இந்த குடும்பமே இப்படித்தான். இந்த வீட்ல பொறந்தவங்களுக்கு மட்டும் கொம்பு இருக்கும், வெளியிலிருந்து வந்தவங்கன்னா கிள்ளு கீரைன்னு நினைச்சிடுவாங்க” என்றார் பூர்ணிமா.

அம்மாவை பார்த்து கிண்டலாக சிரித்தான் ரவி.

“என்னடா?” என அதட்டினார் பூர்ணிமா.

“சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் இங்க உள்ளவங்கள வாரி விடணும் உனக்கு”

“ஹையோ ஆசை பாரு, உள்ளதைதான் சொல்றேன் நான். உன் அப்பயி பேசுறத பார்த்தியா? ரெண்டு பேரும் செத்து போனதுக்கு சம்பந்தமே இல்லாம ஷஷ்டி அப்பாதான் காரணம்னு சொல்ல வாயும் கூசல, மனசும் கூசல”

“ம்மா!”

“சரி சரி, நடக்கிறத பார்ப்போம். பாரதியை போய் பாரு. உன் அப்பாகிட்ட சொல்லி இந்தம்மாவை இங்கேயே புடிச்சி வைக்கிறேன், இல்லைனா அங்கேயும் வந்து வால் வால்னு பேக் கிரவுண்ட் மியூசிக் போட ஆரம்பிச்சிடுவாங்க”  என அம்மா சொல்லவும், வேடிக்கையாக அவருக்கு இரண்டு கைகள் குவித்து வணக்கம் வைத்து விட்டு சென்றான் ரவி.

காலையே விடுப்பு எடுத்துக் கொள்ள சொல்லி அக்காவுக்கு செய்தி அனுப்பியிருந்தான் ரவி. தனது திருமணம் குறித்து எதுவோ என நினைத்த பாரதி, முக்கிய வேலை இருப்பதாக சொல்லி மறுத்திருந்தாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த பாரதி, ரவியை காணவுமே வேகமாக சாப்பிட்டாள்.

“ஹையோ எனக்கு வேணாம் உன் சாப்பாடு, பிடுங்கிக்கவும் மாட்டேன், பொறுமையாவே சாப்பிடு” என சொல்லிக் கொண்டே பாரதியின் எதிரில் அமர்ந்தான் அவன்.

“அப்படிலாம் விட முடியாது, எதை பத்தியும் பேச நான் ரெடியில்லை, அதனால எந்த கேள்வியும் கேட்டு என்னை நீ இம்சை பண்ணாம இருக்க சாப்பாடு போட்டு உன் வாயையும் அடைக்கலாம்னு இருக்கேன்” என்றவள் அவனுக்கும் தட்டு வைத்து பரிமாறினாள்.

ஷஷ்டிகாவுக்கு இன்று பள்ளி உண்டு, எப்போதோ  சென்று விட்டாள். ரவியை வா என அழைத்து ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு உள்ளே சென்று விட்டார் பாரதியின் அம்மா கோசலை.

அக்காவின் கைப்பேசி எடுத்து, “லீவ் மெசேஜ் உன் மேனேஜருக்குதானே அனுப்பனும்?” எனக் கேட்டான்.

“ரவி!” கண்டனமாக அழைத்தவள் தன் கைப்பேசியை பிடுங்கிக் கொண்டாள்.

தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுண்ட் பிரிவில் வேலை செய்கிறாள் பாரதி. தம்பியின் கடின பார்வையில் வேண்டா வெறுப்பாக அவளே தன் மேனேஜருக்கு அழைத்து விடுப்பு சொன்னாள்.

சாப்பிட்டு முடிந்ததும் வீட்டின் பின்பக்கம் அக்காவை அழைத்து சென்றான் ரவி. அழுத்தமாக நின்றிருந்த அக்காவை அவனும் அழுத்தமாக பார்த்தான்.

“என்னடா இப்போ? ஆளாளுக்கு ஏன் என் கல்யாணத்தை பத்தியே பேசுறீங்க, இந்த உலகத்துல பொம்பளையால தனியா வாழ முடியாதா? மெண்டல் டார்ச்சர் பண்றீங்க எல்லாரும்” கடுப்பாக சொன்னாள் பாரதி.

“இப்ப நான் பார்த்திருக்க பையன்… ம்ஹூம் பையன்னு சொல்ல முடியாது, நாப்பது வயசு இருக்கும் அவருக்கு. பாவம் அவர் வைஃப்  அவரை நல்லா வச்சி செஞ்சிட்டாங்க. குழந்தை இருக்கிறத கூட மறைச்சிட்டாங்கன்னா பாரேன். அவருக்கு ஏதும் தெரியாம இன்னும் வைஃப் ஃபோட்டோவை பார்த்து பார்த்து சோக பாட்டா பாடிக்கிட்டு இருக்காராம்” என்றான் ரவி.

தன் கணவனின் நினைவில் சுருக் என இருக்க, தம்பியின் பேச்சிலும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவள், “யார் கதையும் எனக்கு வேணாம்” என்றாள்.

“ஏன் ஓபனா பேச பயப்படறக்கா, குழந்தை மேல அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் ஈக்வ்ல் ரைட்ஸ் இருக்கு, நீ செஞ்சது தப்புன்னு கொஞ்சமும் உறுத்தல் இல்லையா உனக்கு? இப்ப அவர் கோர்ட் போனார்னு வை…” என பல்லை கடித்தான் ரவி.

கணேசன் பற்றிய பேச்சுதான் என தெளிவாக புரிபட, தம்பியை எதிர்கொள்ள இயலாமல் உள்ளே ஓடிச் சென்று அறைக்குள் முடங்கினாள் பாரதி.

பத்து வருடங்களுக்கு முன்பு பாரதியிடம் நிறைந்து போயிருந்த அளவுக்கதிகமான பிடிவாதக் குணம்தான் கணவரிடம் இறங்கி செல்ல தடையாக இருந்தது.

 அண்ணன் மகள் அனாதாரவாக நிற்கிறாள் என்பதற்காக அவளை வீட்டிற்கு அழைத்து வந்தார் கணேசன். அவளையே தத்து எடுத்துக் கொள்வோம், நமக்கு குழந்தை வேண்டாம் என்றெல்லாம் மனைவியிடம் அவர் பேசப் போய்தான் சிறு பெண் மீது பாரதிக்கு வெறுப்பு பிறக்க ஆரம்பித்தது.

ஏதோ தண்மதி பற்றிய கவலையில் மனைவியிடம் நமக்கு குழந்தை வேண்டாம் என சொல்லி விட்டவர் அதற்காக சமாதானம் செய்யதான் வெளியில் அழைத்து செல்வதாக கூறியிருந்தார். கணவன் மனைவி பிரச்சனை தெரியாமல், பேத்தியையும் உடன் அழைத்து போ என பரமேஸ்வரி சொல்லி, அது மிகப்பெரிய பிரச்சனையில் முடிந்தது.

தன் பிறந்த வீட்டில் தன்னிடம் சமாதானம் பேச வந்த கணவரை அலட்சிய படுத்தினாள். கருவுற்றிருப்பது தெரிந்த போதும் வீட்டினரின் அறிவுரையை கேளாமல் கருவை தொடர்ந்தாள். குழந்தை வேண்டாம் என்றவருக்கு எதற்காக குழந்தை பற்றி சொல்ல வேண்டும் என நினைத்து குடும்பத்தினரின் அநியாயத்துக்கு உடன்பட்டாள்.

காலம் கடந்துதான் வாழ்க்கையை சரியாக வாழத் தெரியாமல் இழந்து விட்டோம் என புரிகிறது. மீண்டும் கணவனிடம் சென்று நிற்க ஈகோ தடுக்கிறது, அவரை தவிர வேறு யாரையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை என யாரிடமும் சொல்ல கூச்சமாக இருக்கிறது.

மகள் பிறந்ததை சொல்லாமல் இப்போது கணவனை ஏறிடவே அச்சமாக இருக்கிறது. குழம்பிய மனதுக்கு என்ன செய்வது என புரியவில்லை, சமாளிக்க முடியாத விஷயங்களை எதிர்கொள்ள பயமாக இருக்கிறது.

சத்தமே இல்லாமல் அழுகையில் கரைந்து தன் இயலாமையை மறைத்துக் கொண்டிருந்தாள் பாரதி.