சிந்தை நிறை தண்மதியே -4

அத்தியாயம் -4

வங்கியிலிருந்து இரவு வீடு வந்த மகன் ஏதோ போலவே இருக்கிறானே என கவலையில் இருந்தார் பரமேஸ்வரி. 

கணேசனிடம் பேசி விட்டதாக தண்மதிக்கு தகவல் சொல்லியிருந்தான் ரவி. ஆகவே அவளுக்கு தன் சித்தப்பாவின் மனநிலை புரிந்தது. 

கவலையோடு இருந்த பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டவள் மெல்ல விஷயத்தை சொன்னாள். நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து போனவர் சில நிமிடங்களில் எல்லாம் பெருங்குரல் எடுத்து புலம்ப ஆரம்பித்து விட்டார். 

அம்மாவின் சத்தம் கேட்டு வெளியில் வந்த கணேசனின் கண்கள் கலங்கி சிவந்து போயிருந்தன. தளர்வுடனே எழுந்து மகனின் கைப்பற்றிக் கொண்ட பரமேஸ்வரி, மருமகள், சின்ன பேத்தி, இழந்த மூத்த மகன், வாழ்க்கையை வாழாத சின்ன மகன் என ஒவ்வொருவருக்காக சொல்லி சொல்லி அழுதார். 

“இப்படி ஒப்பாரி வச்சு என்ன ஆக போகுதும்மா? நீயும் படுத்துக்கிட்டா நிலைமை என்னாகும்னு நினைச்சி பாரு”  என்ற கணேசன், தண்மதியை பார்த்தார். 

அவள் வந்து பாட்டியை பற்றி அமர வைத்து, சமாதானம் செய்து அழுகையை நிறுத்தினாள். 

எப்படி ரவி பற்றி தெரிந்தது என சொன்னாள் தண்மதி. 

அண்ணன் மகள் சொல்வதை செவி மடுத்து அமைதியாகவே இருந்தார் கணேசன். அவர் இவளுக்கு உதவினாரா, அவரது கைப்பேசி எண் வைத்து முகவரி அறிந்து, அவரின் வீடு வரை சென்றாளா என அவருக்கு அதிர்வு ஏற்பட்ட போதும் அந்த நேரம் ஏதும் கேட்கும் நிலையில் அவரில்லை. பாட்டிக்கு இருந்த அதிர்ச்சியில் பேத்தி சொன்னதை தவறாக எல்லாம் நினைக்கவே இல்லை. 

நாளையே பேத்தியை பார்க்க செல்ல வேண்டும், அவர்களை தங்களுடன் அழைத்து வந்து விட வேண்டும் என பிடிவாதக் குரலில் சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி. 

“அப்படிலாம் அவசர பட கூடாது ஆத்தா, சட்டப் படி பிரிஞ்சிட்டாங்கல, சித்தியோட தம்பியே பேசிட்டு சொல்வாங்க” என்றாள் தண்மதி. 

ரவியும் அப்படித்தான் கணேசனிடம் சொல்லியிருந்தான். அவரது மனம்தான் இதுவரை தான் பார்க்காத மகளுக்காக அடித்துக் கொண்டது. ஒன்பது வயது பெண் அப்பா உயிருடன் இருந்தும் அந்த உறவே இல்லாமல் வளர்க்க பட்டிருக்கிறாள், ஓரளவு விவரங்கள் புரியுமே, என் தங்கத்துக்கு என்னைப் பற்றி என்ன சொல்ல பட்டிருக்கும்? திடீரென நான் போய் நின்றால் என்னை ஏற்றுக் கொள்வது அடுத்த கட்டம், மோசமாக பார்த்து விடுவாளோ என்றெல்லாம் தவியாக தவித்தார். 

ரவி பேசிவிட்டு சொல்லும் வரை காத்திருக்கும் பொறுமையெல்லாம் கணேசனிடம் இல்லை. இந்த நொடியே மகளிடம் செல்லத்தான் மனம் பர பரத்தது. அப்பாவை சந்திக்க மனதளவில் மகள் தயாராகாமல் தன்னை அவள் பார்க்க நேர்வதும் கூட சரியில்லை என நினைத்து மட்டுமே தன்னை இங்கே நிறுத்தி வைத்திருக்கிறார். 

அன்றைய இரவு மூவரும் சரியாக சாப்பிடவில்லை, சரியான உறக்கமும் இல்லை. 

வங்கிக்கு வந்ததும் கணேசனை அழைத்து பேசினான் ரவி. உடனடியாக மகளை பார்க்க ஏங்கி நிற்பவருக்கு எப்படி ஆறுதல் சொல்லவென அவனுக்கு தெரியவில்லை. 

நேற்று அதிர்ச்சிகரமான விஷயத்தை அவரிடம் சொன்ன பிறகு மற்ற விஷயங்கள் குறித்து அதிகமாக அவனால் பேச முடியவில்லை. 

“என் பக்கமும் தப்பு இருக்குன்னு ஒத்துக்கிறேன் ஸார், ஆனா பாரதி இப்படி பண்ணியிருக்க கூடாதில்ல, இப்போதான் தெரியுது டிவோர்ஸ் முடிவானப்பலாம் குழந்தை பொறந்திட்டா, வேணும்னே சொல்லாம… இத்தனை வருஷம் இவ்ளோ அழுத்தமா இருந்திட்டாளே” என வேதனை பட்டார் கணேசன். 

அக்காவின் வீம்பு, பிடிவாதம் பற்றி ரவிக்கு தெரியாதா? பல சமயங்களில் ஷஷ்டியே அம்மாவிடம் பணிந்து போகும் நிலைதான் ஏற்படும். 

“முடிஞ்சத பத்தி டிஸ்கஸ் பண்ணினா, பேசிட்டே இருக்க வேண்டியதுதான் ஸார். இனி ஷஷ்டிய யோசிச்சுதான் முடிவு பண்ணனும். என்ன ஸ்டாண்ட்ல இருக்கீங்க நீங்க?” எனக் கேட்டான் ரவி. 

“என்ன கேள்வி ஸார் இது? அப்பவே விருப்ப பட்டு விவாகரத்து கொடுக்கல நான், போராட முடியலை என்னால, வேணாம்ங்கிறவளை அப்படியென்ன தழைஞ்சு தழைஞ்சு கூப்பிடணும்னு சலிச்சு போயிதான் விட்டேன். என் பொண்ணு இருக்கிறது தெரிஞ்சிருந்தா…” என்ற கணேசன் இயலாமையாக மூச்சு விட்டார். 

ரவி அமைதி காக்க, “ரெண்டு பேரும் பிரிஞ்சிருந்தா கூட என் பொண்ணை பார்க்கிற, பழகுற உரிமை எனக்கு இருக்குதானே? சட்டமும் அதைத்தானே சொல்லும்? என்னை என்னன்னு நினைச்சி இருந்தா உங்கக்கா? அவ்ளோ வயசாகுதே உங்க வீட்டு ஆளுங்களுக்கு, இப்படியொரு துரோகம் செஞ்சிருக்காங்க எனக்கு, கொஞ்சமும் மனசு உறுத்தாது?” என குரல் உயர்த்தாமல் கோவப் பட்டார் கணேசன். 

அவரின் பேச்சு ரவிக்கு கோவத்தை வரவழைத்தாலும் பொறுமையாகவே இருந்தான். 

“ஸாரி ஸார், நீங்க என்ன பண்ணுவீங்க? என் நிலைமை எவ்ளோ மோசமாகிடுச்சு பாருங்க, ராத்திரி எல்லாம் நீங்க அனுப்பின என் குழந்தை ஃபோட்டோவையே பார்த்திட்டு இருந்தேன், பொட்டு தூக்கம் வரலை. பாப்பாகிட்ட என்னை பத்தி என்னன்னு சொல்லி வச்சிருக்காங்க, இப்ப நான் அவ முன்னாடி போய் நின்னா ஏத்துக்குவாளா அவ?” எனக் கேட்ட கணேசன் ஏகத்துக்கும் கலங்கிப் போயிருந்தார். 

அவர்கள் மைசூரில் இருந்த வரை  அப்பா என்ற பிம்பத்தின் மீது குழந்தைக்கு வெறுப்பு வளரும் படி யாரும் நடந்து கொள்ளும் சூழல் இல்லை. இங்கு வந்த பின் ரவியின் அப்பயி பேசுவார்தான், அம்மா வாயிலிருந்து அப்பா பற்றி கெடுதலாக ஏதும் சொல்லபடாததால் குழந்தை அதை நம்பவில்லை எனதான் நினைக்கிறான் ரவி. அதை அவரிடமும்  சொன்னான். 

“பாரதியோட அப்பயிதானே? மனுசியா அவங்க? அப்பவும் என்னா பேச்சு பேசினாங்க? பாரதியோட தாத்தா அப்பாலாம் இன்னும் வேற ரகம்” என்றார் கணேசன். 

“ஸார் இது பேங்க், எதைப் பத்தியும் விலாவாரியா பேசுற இடம் இது இல்ல. அதுக்கு நமக்கு நேரமும் இல்லை. என் தாத்தா… ஐ மீன் அக்காவோட தாத்தா அப்பாலாம் இப்ப உயிரோட இல்லை. அதனால பழச விடுங்க. அக்காவோட சேர்ந்து வாழற ஐடியால இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் உங்களை கூப்பிட்டேன்” என்றான் ரவி. 

மனைவியை மறக்கவில்லை என்றாலும் நேற்றிலிருந்து அவள் மீது அதி பயங்கரமான கோவத்தில் இருக்கிறார் கணேசன். தற்சமயம் மண வாழ்க்கை பற்றி ஆர்வமோ ஆசையோ ஏதும் அவரிடம் இல்லை, ஆனால் மகள் கண் முன் வந்து நின்றாள். 

“என்னோட கடமையை எப்பவும் கை கழுவ நினைச்சதில்ல ஸார் நான்?” என்றார் கணேசன். 

“இப்படி சொன்னா எப்படி? என்ன மீன் பண்றீங்க? உங்க பொண்ணுக்காக என் அக்காவை கடமையா நினைச்சு திரும்பவும் சேர்ந்து வாழுறேன்னு சொல்றீங்களா? இல்லை ஷஷ்டியையே கடமைனு சொல்ல வர்றீங்களா?”

“ஸார்!”

“உங்க பொண்ணுகிட்ட உங்களுக்கான உரிமைகளை யாராலேயும் தடுக்க முடியாது ஸார், அதுக்காக என் அக்காவை ஏத்துக்கணும்னு அவசியம் இல்லை. குழந்தை விஷயத்தை விட்ரலாம், மத்தபடி உங்க பக்கமும் தவறுகள் இருக்குன்னு நீங்களே சொல்றீங்க. என்ன ஏதுன்னுலாம் நான் கேட்டுக்க மாட்டேன், அது உங்க பெர்சனல், ஆனா தப்பு உங்க சைடும் இருக்குதானே?” என தெளிவாகவே பேசினான் ரவி. 

பாரதியின் உணர்வுகளை மதிக்கவில்லை என காலம் கடந்து என்றாலும் உணர்ந்துதான் இருந்தார் கணேசன். ஆகவே இப்போது மறுக்காமல் ஆமாம் என ஒத்துக் கொண்டார். 

“ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு, அதுக்கு தண்டனைன்னு குடும்ப உறவுகள்ல யோசிக்க கூடாது ஸார், அதிலேயும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரிலேஷன்ஷிப்ல அப்படி நினைச்சா ரெண்டு பேருக்குமே நஷ்டம், அவங்களுக்கு குழந்தை இருந்தா இன்னும் கஷ்டம். முதல்ல இப்ப இருக்கிற உங்க கோவத்தை குறைங்க நீங்க. உங்களுக்கே தெரியும் இந்த டைம்ல என்னால லீவ் எடுக்க முடியாது. வீக் எண்ட் ஊருக்கு போய் அக்காட்ட பேசுறேன்” 

“என்ன… வீக் எண்ட் வரையிலுமா?”

“ஸார் ஸார்… பத்து வருஷம் ஓடி போச்சு, இன்னும் நாலு நாள் பொறுக்க முடியாதா? இப்ப அவசர படறதுனால காரியம் கெட்டுத்தான் போகும். திடுதிப்புனு போயி ஷஷ்டியை ஷாக் பண்ண கூடாது, அக்காவோட வாழ்ந்த உங்களுக்கு அவளை பத்தியும் தெரிஞ்சிருக்கும். பெரியம்மா,  அப்பயி இவங்களையும் நான் சமாளிக்கணும். வீக் எண்ட் பேசினாலும் உடனே எல்லாம் சரியாகாது. டைம் எடுக்கும் ஸார்” என ரவி சொல்ல, அவரால் மறுக்க முடியவில்லை. 

ரவியின் தங்கை ஷஷ்டியுடன் இருந்த காணொளி காட்சிகளை அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதை கணேசனுக்கு அனுப்பி வைத்தவன், “ஈவ்னிங் ஃபிரீ டைம்ல ஷஷ்டிகிட்ட வீடியோ கால் பேசுறேன், அப்ப என் வீடியோ ஆஃப் பண்ணிடுறேன், அவளை பார்க்கலாம் நீங்க” என்றான்.