இன்று அவனது வீட்டிலும் ஏதோ விஷேஷம் என வெளியில் செல்கின்றனர், ஆகவேதான் யாருமில்லாத வீட்டில் இருக்க வேண்டாம் என இன்றே திரும்புகிறான். நேற்று இவனது திருமணம் குறித்து பேசியிருந்தார் அவனது அன்னை. கொஞ்ச நாள் போகட்டும் என சொல்லியிருந்தான்.
இப்போது பேருந்தில் பாந்தமாக ஒரு பெண்ணை காணவும் இப்படியொரு பெண் துணையாக வர வேண்டும் என இயல்பாக எண்ணம் உதித்தது. பின் இப்படியொருத்தியா, அல்லது இவளேவா என மனம் கண்டபடி அலை பாய்ந்தது.
மானசீகமாக தனக்கொரு கொட்டு வைத்துக் கொண்டான். மிகவும் கடினப் பட்டு கண்களை அந்த பெண் பக்கம் விடாமல் சுய கட்டுப் பாட்டோடு பயணித்தான்.
‘பேங்க் இருக்க ஊர்லேருந்து ஏறினாளே, அந்த ஊர்க் காரியோ? இதுவரை கண்ல படலையே, நம்ம பேங்க்ல அக்கவுண்ட் இல்லையா இவளுக்கு? திரும்பவும் பார்க்கிற சான்ஸ் கிடைக்குமோ?’ குரங்கு மனம் அவளை சுற்றியே சிந்தனை வலை பின்னியது.
அவன் இறங்கும் அதே நிறுத்தத்தில் அவளும் இறங்குவாள் என எதிர் பார்த்திருக்கவில்லை அவன்.
அது பெரிய ஊர்தான் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இருக்கவே செய்தது. ஆட்டோ பிடிக்க நினைத்து சுற்றம் பார்த்தாள் அவள்.
இன்னொரு முறை அவளை பார்த்துக் கொள்ளேன் என ரவியின் உள்ளம் கெஞ்ச, அவனது மனக் கட்டுப்பாடு தகர்ந்து போனது. தன்னை மீறி அவளை பார்த்தான். உடனே அதிர்ந்தும் போனான்.
வேகமாக அவளை நோக்கி அவன் வரவும் எதேச்சையாக பின் பக்கம் திரும்பியவள் அவனை கணடுவிட்டு ஒருவித எச்சரிக்கை உணர்வோடு ஓரெட்டு பின்னால் எடுத்து வைத்தாள்.
அவனுக்கும் அது புரிய, ஒரு நொடி தயங்கியவன் அடுத்த நொடி அவளை நெருங்கி, “உங்க ட்ரெஸ்… அது பிளவுஸ் கிழிஞ்சிருக்கு போலங்க” என்றான்.
திடுக்கிட்டு போனவள் எங்கே என ஆராய்ந்தாள். வலது கை மற்றும் இடுப்பு பகுதி இரண்டுமே தையல் பிரிந்து போயிருந்தது. எப்படி கவனிக்காமல் தவறினோம் என அவளுக்கு புரியவே இல்லை. பிரித்து விடுகிறேன் என ஏதோ கோளாறு செய்து விட்டார் பாட்டி.
என்ன செய்வது எனத் தெரியாமல் கண்கள் கலங்க, விரைவாக புடவை முந்தானை எடுத்து போர்த்திக் கொண்டாள்.
அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவளிடம் அசௌகர்யம் வந்து ஒட்டிக் கொண்டது.
அவளின் மனநிலை புரிந்தவனாக, “இங்க யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க, கால் பண்ணி கூப்பிடுங்க” என்றான்.
அவன் அருகில் இருப்பதே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது, கண்ணியமானவன் போலவே தென்பாட்டாலும் தெரியாத ஆடவனிடம் பேச முடியாமல், பேருந்து நிறுத்த கட்டிடத்தினுள் நுழைந்து, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
புடவை முந்தானையை இறுக்கி பிடித்த வண்ணம் கைப்பையிலிருந்து கைப்பேசியை எடுக்க முயன்றாள். பதட்டத்தில் இருந்தவள் கைப்பை, கைப்பேசி இரண்டையும் தவற விட்டு அவற்றை எடுக்க குனியும் போது யாரேனும் தன்னை பார்க்கிறார்களா என சுற்றிலும் பார்த்தாள்.
அவனுக்கு என்னவோ அவளை தனியே விட்டுச் செல்ல அச்சமாக இருந்தது. தனியாக நிற்கும் பெண்ணிடம் யாரேனும் ஆடவர் வந்து வம்பு செய்யக் கூடுமே என நினைத்தவன் அங்குதான் இருந்தான்.
‘சித்தப்பா பணி புரியும் வங்கியின் மேலாளரா?’ என நிம்மதி பரவ அவனை பார்த்தவள் அதை அவனிடம் சொல்லவில்லை. இயல்பாக பேசவே வர மாட்டேன் என இருந்தது.
இதே ஊரில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா என யோசித்துப் பார்த்தாள். விஷேஷ வீட்டுப் பெண் தவிர மற்றவர்கள் அசலூர்தான். எப்படியும் யாராவது இந்நேரம் கோயிலுக்கு வந்திருப்பார்கள்தான், யாரை அழைப்பது? அப்படி அழைத்தாலும் அவர்கள் எங்ஙனம் தனக்கு உதவக் கூடும் என யோசித்துக் கொண்டே கை தவறிய பொருட்களை எடுத்துக் கொண்டாள்.
அவளது தயக்கத்தை கண்டவன் உதவ யாருமில்லையோ என்ற நினைவுடன், ஏதோ விழாவில் பங்கெடுக்க என வந்திருப்பவள் அங்கிருந்து யாரையாவது அழைக்கலாமே, ஏன் தயங்குகிறாள் என மனதில் நினைத்தானே தவிர வாய் விட்டு கேட்டுக் கொள்ளவில்லை.
தற்காலிக தீர்வாக தன் தோள் பையிலிருந்து தனது ஸ்வெட்டர் எடுத்தான். வேண்டாம் என அவன் மறுத்த போதும் இரவில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது குளிர் காற்று வீசும், உனக்கு உபயோக படும் என அவனது அம்மாதான் பையில் வைத்திருந்தார். அவரே அவரது கையால் மகனுக்காக பின்னிய ஸ்வெட்டர்.
“இது போடுற அளவுக்கு குளிர் இல்லதான், ஆனாலும் இப்ப இது உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்” என்றான்.
மறுக்கும் நிலையில் அவள் இல்லை, வாங்குவதற்காக அவள் எழ அங்கேயே இருக்கும் படி சைகையில் சொல்லி அவனே கொண்டு போய் அவளின் பக்கத்தில் வைத்தான்.
அவள் கையில் எடுத்துக் கொள்ளவும் மீண்டும் பழைய இடத்தில் போய் நின்று கொண்டான். அதற்குள் அந்த ஸ்வெட்டரை அணிந்திருந்தாள் அவள். இப்போதுதான் பதட்டமும் தணிந்தவளாக காணப் பட்டாள்.
இந்த நிலையில் சஞ்சனாவும் இல்லாமல் தனியாக திருமணத்திற்கு செல்லவே அவளுக்கு அரை மனதாக இருந்தது.
“எங்க போகணும் நீங்க, ஆட்டோ பிடிக்கவா?” என அக்கறையாக கேட்டான் அவன்.
“இல்லை நான் வீட்டுக்கு போகணும், பஸ் வந்ததும் கிளம்பிடுறேன்” என்றாள் அவள்.
அவனுக்கு போவதா நிற்பதா என குழப்பம். தெளிவாகத்தான் இருக்கிறாள், பேருந்து வரவும் செல்ல போகிறாள் பிறகென்ன என நினைத்து புறப்பட எத்தனித்தான்.
அவளும், “தேங்க்ஸ் ஸார், நான் இதை நாளைக்கு பேங்க்ல வந்து கொடுக்கிறேன், நீங்க கிளம்புங்க ஸார்” என்றாள்.
அவனும் தலையசைத்து புறப்பட, பேருந்தும் வந்து கொண்டிருந்தது.
“அதோ பஸ் வருது, வாங்க” என சொல்லி நின்று விட்டான். அவளும் நிறுத்தத்திலிருந்து வெளியில் வந்தாள். பேருந்தில் கூட்டம் நிறைந்து வழிந்தது.