இரவே மதியிடம் சொல்லி விட்டான் ரவி. என்ன இப்படி என அதிர்ச்சியடைந்தாள் அவள்.
“ரெண்டுல ஒன்னு தெரியணும் மதி, அப்போதான் அவளுக்கு அடுத்து என்னன்னு பார்க்க முடியும்?” என அவன் கேட்க, அமைதியாகி விட்டாள். ஆனால் அடுத்த நாள் என்னாகுமோ என்ற பயத்தோடுதான் உறங்கினாள்.
மறுநாள் பதினோரு மணி போல ஸ்ரீதரின் குடும்பம் வந்தது. ரிதி இறுக்கமாக இருந்தாள். பூர்ணிமாவும் மதியும் வந்தவர்களை குறையில்லாமல் உபசரித்தனர்.
திருமணத்துக்கு வர முடியாத நிலை என வருத்தம் தெரிவித்துக் கொண்டார் ஸ்ரீதரின் அப்பா. ரவிக்கும் மதிக்கும் பிரத்யேகமாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்னான் ஸ்ரீதர்.
ஆரம்பத்தில் பொதுவாகவே பேச்சுக்கள் சென்றது.
எல்லா விதத்திலும் ஆதாயம் கிடைக்க இது தோதாக உள்ள இடம் என கருதிய ஸ்ரீதரின் பெற்றோர் ரிதியை கைவிட தயாராக இல்லை. பெரியவர்களின் பேச்சில் ரிதி தலையிட போயிதான் இவர்களுக்குள் சண்டை என சீனுவிடம் சொல்லி, அவளை கண்டித்து விட்டால் பின் இப்படி மகனிடம் சண்டையிட மாட்டாள் என நினைத்துதான் வந்திருந்தனர்.
அவர்கள் நினைத்தது போல, விஷயம் தெரியவும் மகளை கண்டிக்க செய்தார் சீனு. ரவி தலையிட்டுக் கொள்ளவில்லை. என்ன நடக்கிறது என வேடிக்கைதான் பார்த்தான்.
“இவ்ளோ பிரச்சனைல ஏன் இந்த இடம்னு கூட நான் யோசிச்சேன், பழகின பொண்ண விட முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டான் எம்பையன். வீடுதான் பிரச்சனைன்னா அது வேணாம் விடுங்க” என்றார் ஸ்ரீதரின் அப்பா.
“ஹையையோ வீடு என் பொண்ணுக்கு வாங்கிடலாம், அதுல மாற்றம் இல்லை” என்றார் சீனு.
“நான் ஏதோ நல்லது சொல்ல போய் அதை தப்பா எடுத்துக்கிட்டா ரிதி. ரவி தம்பிக்கு குணமாகனும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லை தெரியுமா?” என்றார் ஸ்ரீதரின் அம்மா.
இந்த பேச்சு எதற்கு என மனைவியை முறைத்து வைத்தார் ஸ்ரீதரின் அப்பா.
ரவி ஒற்றை சிரிப்பால் அதை கடந்து விட்டான். சீனுவுக்கு முகமே மாறி விட்டது.
கணவரின் மனநிலை அறிந்தவராக, “பழசை விட்டுட்டு கல்யாணத்துக்கு நாள் பாருங்க” என்றார் பூர்ணிமா.
இவ்வளவு தூரம் வந்த பிறகு கல்யாண பேச்சை முறிக்கும் அளவுக்கு தைரியம் இல்லாத சீனுவும் ஸ்ரீதரின் அப்பாவை பார்த்தார்.
ஸ்ரீதரின் அப்பா வாய் திறப்பதற்குள், “எனக்கு இந்த கல்யாணம் வேணாம் ப்பா” என தெளிவாக சொல்லி விட்டாள் ரிதி.
பெரியவர்களும் ஸ்ரீதரும் அதிர்ந்து போனார்கள். மீண்டும் ஸ்ரீதரின் பெற்றோர் தரப்பிலிருந்து விளக்கம் சொல்லப்பட்டது.
“உங்களால இல்லை இந்த முடிவு” என்ற ரிதி ஸ்ரீதரை பார்த்தாள்.
“பேரெண்ட்ஸ் பத்தி நீ தப்பா சொன்னா கோவ படாம இருக்கணுமா நான்? அதுக்காக இவ்ளோ பெரிய முடிவு எடுப்பியா?” என சற்றே கோவமாக கேட்டான் ஸ்ரீதர்.
“நாலு வருஷம் முன்னாடி இதே வீட்ல வெளில மாடி படி பக்கத்துல பாவமா நின்னுட்டு இருக்க ஒரு பொண்ணை பார்த்தேன். கண்ல அவ்ளோ பயம், எது செய்யவும் அவ்ளோ தயக்கம். இப்ப பெரிய கம்பெனில நல்ல வேலை, ரொம்ப கான்ஃபிடெண்ட் ஆயிட்டாங்க. தலை போற பிரச்சனை வந்தப்போ கூட ரொம்ப பாசிட்டிவா அப்ரோச் பண்ணினாங்க, ஒரு முடிவெடுத்து ஒருத்தர் பாக்கியில்லாம கன்வின்ஸ் பண்ணி நினைச்சத நடத்திக்கிட்டாங்க. அவங்க டிரான்ஸ்ஃபர்மேஷன் பார்த்து எனக்கு பெரிய ஆச்சர்யம்” என்றாள் ரிதி.
மதியை பற்றித்தான் சொல்கிறாள் என்பது புரிந்தாலும் ஏன் சொல்கிறாள் என புரியாமல் இருந்தனர் அனைவரும்.
“எப்படி இப்படி மாறினீங்கன்னு கேட்டா ரொம்ப சுருக்கமா என் அண்ணா பேரை சொல்றாங்க. ஒரு லவ் எப்படியிருந்த பொண்ணை எப்படி ஆக்கியிருக்கு பார்த்தீங்களா?” என்ற ரிதி, “ஆனா என் லவ்?” என கேள்வியாக ஸ்ரீதரை பார்த்தாள்.
அவன் நெற்றி சுருக்க, “உங்களோட பழக ஆரம்பிச்சதும் ஃபுல்லா என் கவனம் திசை மாறிடுச்சு. ‘நாந்தான் வேலைல இருக்கேனே நீ ஏன் கஷ்ட படறே’ன்னு நீங்க கேட்டப்பலாம் அக்கறைனு நினைச்சு வானத்துல பறந்தேன், ஒரு கட்டத்துல என் கோச்சிங் ஸ்டாப் ஆகிடுச்சு. என் கனவு காணாம போயிடுச்சு” என்றாள்.
“அப்ஃகோர்ஸ் உன் மேல எனக்கு அக்கறைதான். உன் கவனம் போச்சுன்னா நீயும்தான் காரணம், எல்லார் முன்னாடியும் என்னை அசிங்க படுத்திறியா நீ?” என அதிகமாகவே ஆத்திரப்பட்டான் ஸ்ரீதர்.
“அவ பேசி முடிக்கட்டுமே ஸ்ரீதர்” என ரவி சொல்ல, வெறுப்போடு வாயை மூடிக் கொண்டான் ஸ்ரீதர்.
“அதே அக்கறையோட இப்ப வரை இருக்கீங்களா? எல்லாம் பார்த்துக்கிறேன்னு சொன்னீங்கதானே? அந்த வார்த்தையை காப்பாத்துனீங்களா? இன்னிக்கு என் சைட்ல இவ்ளோ உன் சைட்ல என்னன்னு கேள்வி கேட்குறீங்க? உங்க பேரெண்ட்ஸ் பேசுறதை நியாய படுத்தி பேசுறீங்க.
வீடு பேங்க் பேலன்ஸ்னு காட்டி எங்களையும் செய்யனும்னு டிமாண்ட் பண்றீங்க. மேரேஜ்க்கு அப்புறமும் என்னை சுதந்திரமா இருக்க விட போறதில்லை நீங்க, உங்க பேரெண்ட்ஸ் சொல்ற எல்லாத்துக்கும் வாயை மூடிக்கிட்டு என்னை நிக்க வைக்க போறீங்க. நானும் ஃபுல் அண்ட் ஃபுல் உங்களை டிபெண்ட் பண்ணி வாழணுமா?” என்றாள் ரிதி.
“இதெல்லாம் அதிக படியான பேச்சு, ஏன் உன் வீட்ல உன் அண்ணி உன் அப்பாம்மாக்கு அடங்கி உன் அண்ணாக்கு சேவகம் பண்ணிட்டு இருக்கல? அதெல்லாம் வாழ வர்ற பொண்ணோட கடமை” என்றார் ஸ்ரீதரின் அம்மா.
“எங்க ரெண்டு பேருக்கும் இடைல அன்புதான் இருக்கு, கடமையா ஏதும் இல்லை. நான் யாருக்கும் அடங்கியும் இல்லை, நான் நல்ல மருமகன்னா என் மாமனார் மாமியாரும் நல்லவங்கதான். இன்னொரு முறை சேவகம்னாலும் சொல்லாதீங்க ப்ளீஸ்” என நிதானமான குரலில் சொன்னாள் மதி.
“நானும் அவங்களைத்தான் உதாரணத்துக்கு காட்டுறேன். அவங்களுக்குள்ள மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்ட்டிங் இருக்கு, நம்பிக்கை இருக்கு, அண்ணிக்கு ஒரு காலத்துல அண்ணா சப்போர்ட் பண்ணினார், இப்ப அண்ணி அண்ணனை தாங்குறாங்க. எனக்கும் ஸ்ரீதருக்கும் இடைல அப்படி எதுவும் இல்லை. அவர் எதிர்பார்க்கிற பொண்ணு நான் இல்லை, எனக்கு ஏத்தவர் அவர் இல்லை” என திக்காமல் திணறாமல் சொல்லி விட்டாள் ரிதி.
“ரெண்டு வருஷம் பழகிட்டு இப்படி பேச வெட்கமா இல்லை உனக்கு?” இரைந்தான் ஸ்ரீதர்.
சீனு கோவமாக எழப் போக, அப்பாவை பார்வையால் சமாதானம் செய்து அமைதியாக இருக்க வைத்தான் ரவி.
“நான் ஏன் வெட்க படணும் ஸ்ரீதர்? ரொம்ப அழகா நமக்குள்ள ஒரு பாண்டிங் ஸ்டார்ட் ஆச்சு. அதை அழகா பாதுகாக்க தெரியாத நீங்கதான் வெட்க படணும். உங்களை எந்தளவு நம்பினேன் நான்? அந்த நம்பிக்கையை நீங்கதானே உடைச்சீங்க? நமக்குள்ள சண்டை வந்து எவ்ளோ நாள் ஆகுது, அதை சரிசெய்ய ஒரு இஞ்ச் என் பக்கம் நகர்ந்திருப்பீங்களா? இன்னிக்கும் என் அண்ணன் கூப்பிடலைனா வந்திருக்க மாட்டீங்க.
நான் பொண்ணுங்கிறதால என் வீட்ல உள்ளவங்களுக்குத்தான் ரெஸ்பான்சிபிலிட்டின்னு நீங்களும் உங்க வீட்லேயும் நினைக்கலன்னு மட்டும் சொல்லிடாதீங்க, நான் நம்ப தயாரா இல்லை. ஆமாம் ரெண்டு வருஷம் பழகினேன், ஊர் சுத்தினேன், அறிவை அடகு வச்சிட்டு நீங்கதான் எல்லாம்னு ஃபேன்டஸி உலகத்துல இருந்தேன். அப்படியே முட்டாளா இருக்கணும்னு இல்லை, சரியான நேரத்துல முழிச்சுகிட்டேன், நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு” என்ற ரிதி வேக வேகமாக உள்ளே சென்றாள்.
அனைவரும் ஒருவித திகைப்பில் இருக்க, ரவி மட்டும் சாதாரணமாக இருந்தான்.
நிச்சயம் அன்று தனக்கு வழங்க பட்ட நகைகள், புடவை என எடுத்து வந்தவள் ஸ்ரீதரின் முன்பு வைத்தாள்.
விழிகள் சிவக்க அவளை பார்த்தான் ஸ்ரீதர். “நமக்கு செட் ஆகாது ஸ்ரீதர், இதுக்கு மேல பேச ஒன்னுமில்ல” என்றாள்.
ரிதியை குற்றம் சாட்டி பேச வந்த ஸ்ரீதரின் பெற்றோர் இந்த பேச்சை எப்படி எடுத்து செல்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி போயிருந்தனர். மகனை குறித்து அவர்கள் பேசியது தெரிந்ததில் ஏற்கனவே அதிருப்தி அடைந்திருந்த சீனு இப்போது மகளின் பேச்சிலும் செயலிலும் மௌனமாகி விட்டார்.
விருட் என எழுந்து கொண்ட ஸ்ரீதர் பெற்றோரிடம், “கிளம்புங்க” என சொல்லி வெளியேறி விட்டான்.
“சின்ன பசங்க புரியாம பேசிட்டு இருக்காங்க…” என ஆரம்பித்தார் ஸ்ரீதரின் அப்பா.
“இல்லை ஸார், என் தங்கை தெளிவாதான் பேசிருக்கா. இதை விட்ருவோமே” என தீர்மானமாக சொல்லி விட்டான் ரவி.
“அப்பா!” என அதிராமல் அழைத்தான் ரவி, அதில் மறைமுக கட்டளைச் செய்தி அடங்கியிருந்தது.
“இந்த வீட்ல என் பையன் எடுக்கிறதுதான் ஸார் முடிவு!” என சின்னக் குரலில் உறுதிபட சொன்னார் சீனு.
“எண்ணி ஒரே மாசத்துல என் மகனுக்கு கல்யாணம் பண்ணி காட்டுறோம், பொண்ண பெத்த நீங்கதான் சிரம பட போறீங்க” என வன்மம் நிறைந்த குரலில் சொல்லி, ரிதி வைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு எழுந்தார் ஸ்ரீதரின் அம்மா.
“ஹையோ… எங்க சிரமங்களை நினைச்சு நீங்க அழ வேணாம், சந்தோஷமா இருங்க” என புன்னகையோடு அவர்களை அனுப்பி வைத்தான் ரவி.