இந்த திருமணத்தை பற்றி நினைத்தே ஒரு வித மன அலட்டலில் இருந்ததாலோ என்னவோ ரவிக்கு மிகவும் சோர்வாக இருந்தது. புரிந்தவளாக அவனை அறைக்கு அழைத்து வந்து விட்டாள் தண்மதி.
“நினைச்சத நடத்திகிட்ட, ஹேப்பியா இப்போ?” எனக் கேட்டான் ரவி.
பதிலாக அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவனை பார்த்தாள். அவளைப் பற்றிய தன் மன உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் சிக்காமல் அவளை பார்த்திருந்தான்.
“இதோ முடிஞ்சிடுச்சு, இதுக்கு போய் எவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்டீங்க மாமா?” என குறையாக சொன்னாள் மதி.
“ஈஸியா சொல்ற, உன்னை எனக்கு சொந்தமாக்கிக்க வருஷக் கணக்கா காத்திருந்தவன் நான். இந்த நாள் பத்தி என்னென்ன நினைச்சிருப்பேன். நிறைய போராடி கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி இருக்கும்னு எல்லாத்துக்கும் தயாராதான் இருந்தேன். இப்ப எந்த எதிர்ப்பும் இல்லாம நீ எனக்கு கிடைச்சிருக்க, கண்ணு முன்னாடி இருக்க நீ, ப்ச்…” வேதனை பிரதிபலிக்க சொன்னான்.
அவனது மனக் கிடங்கு புரிந்தவளாக அவனை அணைத்துக் கொண்டாள். “ரொம்ப யோசிக்காதீங்க மாமா. இப்ப உள்ளதை மட்டும் பாருங்க. உங்களுக்கு உடம்பு முடியாம போனப்போ உயிருக்கு ஆபத்தில்லைனு டாக்டர் சொல்லவே பத்து நாள் ஆச்சு. ஒரு மாசம் ஐ ஸி யூ ல இருந்தீங்க, எல்லாரையும் நல்லா பயமுறுத்தி வச்சிட்டு இன்னிக்கு என்னை கல்யாணம் பண்ணியிருக்கீங்க? நடக்கிறத பாசிட்டிவா பார்க்கணும்” என்றாள்.
“நீ இப்படிலாம் பேசுறது பார்க்க நல்லாருக்கு மதி, எவ்ளோ மாறிட்ட நீ?” என அவளது அணைப்புக்குள் இருந்த படியே சொன்னான்.
“அப்படியா?” எனக் கேட்டுக் கொண்டே அவனிடமிருந்து விலகியவள், “பிசியோதெரபிஸ்ட் வந்திடுவார், ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிடுறீங்களா?” எனக் கேட்டாள்.
“ம்… அப்பாவை கூப்பிடு” என்றவனை முறைத்தவள், அறைக் கதவு அடைக்க பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, அவனுக்கான மாற்று ஆடையை கையில் எடுத்தாள்.
“உனக்கு சிரமம்” என அவன் சொல்ல, “பெரிய மாமாவால முடியுதுன்னா என்னால முடியாதா?” என்றாள்.
“எனக்கு சிரமம் மதி” என கெஞ்சலாக சொன்னான்.
“முதல் தடவ அப்படி இருக்கும், அப்புறம் பழகிடும் மாமா. ஒவ்வொன்னுத்துக்கும் நான் போய் பெரிய மாமாகிட்ட நிக்க முடியாது. புரிஞ்சுக்கிட்டு அமைதியா இருங்க” என அவள் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அவனும் விட்டு விட்டான்.
அவனுக்கு அசௌகர்யமோ சங்கடமோ ஏற்பட்டு விடாத வண்ணம் கவனமாக அவனுக்கு உதவி முடித்தாள்.
“ரெஸ்ட் எடுங்க மாமா, நான் வெளில போய் என்ன ஏதுன்னு பார்த்திட்டு வர்றேன்” என சொல்லி வெளியேறப் போனவளை பார்வையாலேயே தடுத்து நிறுத்தினான்.
“என்ன மாமா சொல்லுங்க” என அவள் கேட்க, படுக்கையை கண்களால் காண்பித்தான். அவளும் அவனது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு, “என்ன மாமா ஏதாவது சொல்லணுமா?” என்றாள்.
“கொஞ்ச நேரம் என் கூட இரு” என சொல்லி புன்னகைத்தான்.
அவளோ அவனது தலையை தன் மடிக்கு மாற்றிக் கொண்டு அமர்ந்தாள்.
“இங்கேருந்து உன் ஆஃபிஸ் ரொம்ப தூரம்ல?” என கவலையாக கேட்டான்.
அவளது வேலையில் வீட்டிலிருந்தே செய்து கொள்ளும் வசதி உள்ளது, நிறைய சீனியர்கள் அப்படித்தான், மாதம் ஒரு தடவை மட்டுமே அலுவலகம் வந்து செல்வார்கள்.
ரவிதான் ‘உனக்கு புதிது, அலுவலகம் போ, அப்போதுதான் நல்ல அனுபவம் கிடைக்கும்’ என சொல்லியிருந்தான். இப்போது அவளது நிலையை அலுவலகத்தில் அவள் விளக்கவுமே, வீட்டிலிருந்து வேலை பார்க்க எளிதாக அனுமதி கொடுத்து விட்டார்கள்.
அதை அவள் சொல்லவும், “இந்த ரூம்ல உட்கார்ந்தா வேலை பார்ப்ப, உனக்கு டிஸ்டர்ப் ஆகும்” என்றான்.
“நான் பாட்டுக்கும் அமைதியா பார்ப்பேன். உங்களுக்கு மார்னிங் பிசியோ செஷன் முடியவும் வேலை ஸ்டார்ட் பண்ணுவேன், நைட்க்குள்ள ஒர்க் முடிச்சு கொடுத்தா போதும், செஞ்சிடுவேன் மாமா” என்றாள்.
அவள் சொல்வது போலவே இருக்கட்டும், ஏதாவது சிரமம் என்றால் அப்போது என்ன செய்வது என பார்க்கலாம் என விட்டு விட்டான்.
“இப்ப பிரேக் எடுத்தா கூட திரும்ப அங்க போய் ஜாயின் பண்ணிக்கலாம், என் ஹெட் அப்படித்தான் சொன்னாங்க” என்றாள்.
“அவங்க சொல்வாங்க, நீ அப்படிலாம் செய்யாத, வேலை பார்க்க கஷ்டம்னா இங்க என்னை பார்த்துக்க வேற ஆல்டர்னேட் யோசிச்சு செய்யலாம்” என அவன் சொன்னதற்கு மறுப்பாக ஏதும் சொல்லவில்லை அவள்.
“உன் கையை கொடேன்” என அவன் கேட்கவும், அவனது ஒரு கையை தன் கையோடு பிணைத்துக் கொண்டாள்.
இன்னொரு கையால் மென்மையாக அவனது கேசம் வருடி, நெற்றி தடவிக் கொடுத்து, தோள்களை அழுத்திக் கொடுத்து என இருந்தாள். கண்கள் மூடிக் கிடந்த ரவிக்கு அவளின் செய்கை எத்தனை ஆறுதலாக இருந்தது என அளவிடவே முடியாது.
ஜோதியும் பாரதியும் மதிய விருந்து செய்வதில் சித்திக்கு உதவிக் கொண்டிருந்தனர். சித்தி தன்னிடம் ஒதுக்கம் காட்டுவதை உணர்ந்த ஜோதிக்கு அன்று தன் கணவர் பேசியதை ரிதி கேட்டு விட்டாளோ என்ற சந்தேகம் இன்று உறுதியானது.
அதை வெளிப்படையாக சொல்லி சித்தியிடம் மன்னிப்பு கேட்டார் ஜோதி.
“இப்ப எதுக்கு அந்த பேச்சை எடுக்கிற?” என உதறி விடுவது போல கேட்டார் பூர்ணிமா.
ஜோதிக்கு என்னவோ போலாகி விட்டது.
“மாமா அப்டி பேசினது உங்களுக்கு தெரியும்னு இப்பதானே அக்காக்கு தெரிய வந்தது, அதனால இப்ப பேசுறா” என்றாள் பாரதி.
“முதல்ல எதுக்கு அப்படி பேச்சு வந்துச்சு? நானோ என் புருஷனோ போய் இவ பொண்ணை எங்க பையனுக்கு பொண்ணு கேட்டோமா? அவரே ஆசை படுவார், அப்புறம் அவரே நல்ல வேளை தப்பிச்சோம்னு சொல்வாரா? அவர்தான் பேசினார்னா அங்க இருந்த யாரும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசல. அப்போ என்னதான் நெருங்கி பழகினாலும் வேற வேறன்னு காட்டிட்டீங்கல்ல?” என வெளிப்படையாக தன் அதிருப்தியை காண்பித்தார் பூர்ணிமா.
பாரதியும் ஜோதியும் அதிர்ந்து போய் விட்டனர். கோசலை ஹாலில் இருந்து காய் நறுக்கிக் கொண்டிருக்க, அவருக்கு இவர்கள் பேசிக் கொள்வது தெரியாது.
“மதி பத்தி பாரதி சொல்லி முன்னாடியே எனக்கு தெரியும் சித்தி, ரேஷ்மி அப்பாக்கு ரவியை மாப்பிள்ளை ஆக்கிக்க ரொம்ப இஷ்டம். எப்படி அவரை கன்வின்ஸ் செய்யன்னு யோசனைல இருந்தேன். அந்த கல்யாண பேச்சை அவரே ஸ்டாப் பண்ணினதா இருக்கட்டும்னுதான் அவர் பேசினப்போ நானும் ஒன்னும் சொல்லலை.
ரிதி வரவும் அந்த பேச்சு நின்னு போச்சு, திரும்ப எதுக்கு தொடங்கன்னு நானும் அப்படியே விட்டுட்டேன். இன்னிக்கு என்னையும் இங்க வரக்கூடாதுன்னு சொன்னார், கேட்டேனா நான்? ரவிக்காக வந்து நிக்கல?” என விளக்கம் சொன்னார் ஜோதி.
“சமாதானம் செய்ய பேசாத ஜோதி. இந்த நிலைல நீயும்தான் ரவிக்கு ரேஷ்மியை கொடுத்திருப்பியா? அவன் நடக்க ஆரம்பிச்சா கூட உங்களுக்கு எல்லாம் அவனுக்கு முழுசா சரியாச்சான்னு சந்தேகம்தான் இருக்கும். விடு விடு, உங்க பேச்சையெல்லாம் கேட்க கேட்கத்தான் மதி பத்தி இன்னும் இன்னும் தெரிஞ்சுக்க முடியுது?” என்றதோடு அந்த பேச்சை தொடர விரும்பாதவராக, “உலை வைக்க தண்ணி எடு ரிதி” என வேறு பேச்சுக்கு சென்று விட்டார் பூர்ணிமா.
ஜோதி சங்கடத்தோடு பாரதியை பார்த்தார். தானும் அன்று அந்த பேச்சுக்கு எதிர்வினை ஆற்றவில்லையே என பாரதிக்கும் குற்ற உணர்ச்சி.
“சில விஷயம் மனசுல சுருக்னு தச்சிட்டா தச்சதுதான், விளக்கம் சொன்னாலும் எடுபடாது. சமையலை பாருக்கா” என அக்காவிடம் சொன்ன பாரதியும் அதன் பின் அமைதியாகி விட்டாள்.
சொர்ணம் பாட்டி ரவியின் அறையை பார்த்து விட்டு, “எவ்ளோ நேரமா ரூம் சாத்தியே கெடக்கு?” என எரிச்சலாக சொன்னார்.
“ரவிக்கு ஏதாவது தேவையா இருக்கும், கவனிச்சிட்டு இருப்பா, கொஞ்ச நேரத்துல வருவாங்க” என கோசலை சொல்ல, சமையலறைக்கு சென்றார் பாட்டி. ஏதாவது வம்பாக பேச போகிறார் என பயந்து கோசலையும் உடன் சென்றார்.
“ரவிக்கும் அவன் பொண்டாட்டிக்கும் தங்க காசு கொடுத்து ஆசீர்வாதம் பண்ணலாம்னு இருந்தேன். ரூமுக்கு போனவங்கள இன்னும் காணோம்? போ, வர சொல்லு அவங்கள, என் வேலை முடிஞ்சா நான் செத்த படுத்து எந்திரிப்பேன்” என ரிதியிடம் சொன்னார் சொர்ணம்.