பூர்ணிமாவிடமிருந்து விலகி முகத்தை துடைத்துக் கொண்ட மதி, அவரை ஒரு வித தீவிரத்தோடு பார்த்தாள். “நான் இங்க உங்க புள்ள கூடத்தான் இருப்பேன், இனிமேலாம் விட்டுட்டு போக முடியாதுத்தை, உங்க புள்ளதான் என்கிட்ட, ‘நாம புருஷன் பொண்டாட்டி உறவுக்குள்ள எப்பவோ வந்தாச்சு’ன்னு சொன்னார், நீங்களே சொல்லுங்க நேத்து பெரிய மாமாக்கு மயக்கம்ங்கவுமே உங்களால அவங்கள தனியா விட முடிஞ்சுதா? என்னால மட்டும் எப்படி இவரை விட்டுட்டு இருக்க முடியும்?” எனக் கேட்டாள்.

“ஹையோ மதி! நான் தடை இல்லடா, ஆனாலும் இப்ப எப்படி முடியும்?” என தவிப்பாக கேட்டார் பூர்ணிமா.

“எவ்ளோ சிம்பிலா முடியுமோ அவ்ளோ சிம்பிலா நடத்தி தாங்க. நான் இவர் கூட இருக்கிறத யாரும் கேள்வி கேட்க முடியாத படி எனக்கான உரிமையை ஏற்படுத்தி தாங்கன்னுதான் கேட்கிறேன்”  என மதி சொல்ல, தன் கணவரையும் கணேசனையும் மாறி மாறிப் பார்த்தார் பூர்ணிமா.

சீனுவின் முகமும் கணேசனின் பக்கம் திரும்பியது.

“மதி…” என கண்களை மூடிய படியே கண்டனமாக அழைத்தான் ரவி.

“நீங்க ஒன்னும் பேச வேணாம் மாமா” என்றாள் மதி.

“பாவம் ண்ணா அண்ணி, அவங்க பாயிண்ட் சரிதானே?” என தயக்கமாக கேட்டாள் ரிதி.

கண்களை திறந்து தங்கையை முறைத்தவன், “இங்க யாருமில்லாம அனாதையா கெடக்கேனா நான்? இவ இல்லைனா என்னை கவனிக்க யாரும் இல்லையா? அவ பேசுறது அவளுக்கு சரி, என்னை என் மனநிலையை யாரும் நினைச்சு பார்க்க மாட்டீங்களா? கல்யாணம்லாம் இப்ப எப்படி முடியும்? நீயும் அவளை மாதிரி அறிவில்லாம பேசாத” என இரைந்தான்.

“அண்ணா…” என பாவமாக அழைத்தாள் ரிதி.

“உன் கல்யாணம் என்னாச்சு? ஸ்ரீதர் வீட்லேருந்து வர சொல்லு முதல்ல. வேற டேட் ஃபிக்ஸ் பண்ணலாம்” என்றான் ரவி.

“எனக்காக மைசூர் போயிதான் உனக்கு இப்படி ஆச்சு, இப்பவும் என்னை காரணம் வச்சு உன் கல்யாணத்தை தள்ளக் கூடாது சொல்லிடேன். எனக்கு மேரேஜ் தள்ளி போனா ஸ்ரீதருக்கும் அப்படித்தான்,  வேணும்னா அவங்க வந்து பேசட்டும். இப்ப அண்ணிக்கு மட்டும் நீ பதில் சொல்லு” என்றாள் ரிதி.

“என்னம்மா இதெல்லாம்?” அம்மாவிடம் கவலையாக கேட்டான் ரவி.

“ஏதோ ரெண்டுக்கும் சண்டை, மாப்ளயோட அப்பாம்மா உன் அப்பாகிட்ட பேசிட்டுத்தான் இருக்காங்க. நீ உன் விஷயத்துக்கு வாடா” என்றார் பூர்ணிமா.

ரவிக்கு நேராக வந்து நின்ற மதி, “சரின்னு சொல்லுங்க மாமா” என்றாள்.

“உன் சித்தப்பா சரின்னு சொல்லாம என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நாலு வருஷம் முன்ன நீ சொல்லலை? இப்பவும் அவர் சரின்னு சொல்லலை” என்றான் ரவி.

“சித்தப்பா சரின்னு சொல்வாங்க, அது நான் பேசிப்பேன்” என மதி சொல்ல, தன்னையே பார்க்கும் சீனு தம்பதியினரை எதிர்கொள்ள இயலாமல் நெற்றியை பிடித்துக் கொண்டார் கணேசன்.

சித்தப்பாவிடம் திரும்பிய மதி, “எங்களுக்கு கல்யாணம் நடந்து அப்புறம் இப்படி ஆகியிருந்தா என்ன செய்திருப்பீங்க சித்தப்பா? நல்லானதும் வரலாம்னு சொல்லி ஹாஸ்டல்ல விட்ருவீங்களா? இல்லைதானே? எனக்கு கருணை காட்டுங்க சித்தப்பா…” என்றாள்.

பதறிப் போன கணேசன் வேகமாக எழுந்து மதியை தோளோடு அணைத்துக் கொண்டார். ரவியின் பெற்றோரிடம், “எனக்கு சம்மதம். இவரை சிரம படுத்தாம எப்படி நடத்த முடியும்னு பார்த்து அப்படி செய்துக்கலாம்” என சொல்லி விட்டார்.

மதியை கோவமாக பார்த்த ரவி, தங்கையிடம், “ரூம்ல கொண்டு போய் விடு என்னை” என்றான்.

ரிதி ஒரு பக்கம் கை கொடுத்து தூக்கி விட, இன்னொரு பக்கம் பிடித்துக் கொண்டவளோ மதி. அவன் அவளை முறைக்க, அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

ரவி அறைக்கு வந்ததும் படுத்துக் கொண்டான்.  அண்ணன், அண்ணிக்கு தனிமை கொடுத்து சென்று விட்டாள் ரிதி.

“ரிதிக்கு கல்யாணம் ஆகாம இதெல்லாம் என்ன மதி?” என வருத்தமாக கேட்டான் ரவி.

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து அண்ணிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்” என்றாள்.

“நான் பேஷண்ட் மதி, உன்னால சமாளிக்க முடியாம வெறுத்து போக போவுது பார்” என்றான்.

அவனது நெற்றியில் கை வைத்து காய்ச்சல் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டவள், “என்ன சொன்னீங்க மாமா?” என அவன் சொன்னதை கவனிக்காதது போல கேட்டாள்.

“இங்க எல்லாம் நாந்தான், என்னை மீறி எதுவும் நடக்காதுன்னுலாம் ரொம்ப இறுமாப்புல இருந்திட்டேன், என் தலையிலேயே பொடேர் பொடேர்னு அடிச்சு பாடம் கத்து கொடுக்குறீங்க எல்லாரும்”

“அபாண்டாமா பேசாதீங்க மாமா. உங்களை மீறி என்ன நடக்குது, கன்வின்ஸ்தானே செய்தோம்?”

“ரிதி உன் இடத்துல இருந்தா கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருந்திருக்க மாட்டேன் நான்”

“எனக்கு கிடைச்சவர் மாதிரியே உங்க தங்கைக்கும் கிடைச்சா சரிதான் போடான்னு சொல்லிடுவாங்க உங்களை” என்றவள் அவனது கோவ முகத்தில் தலை குனிந்து கொண்டாள்.

அதிருப்தியாக பார்த்தவன், “இந்த கை வச்சிட்டு தாலி கட்ட முடியுமான்னு கூட தெரியலை மதி” என்றான்.

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை”

“வர்ற கோவத்துக்கு ஏதாவது சொல்லிட போறேன்!”

“தாலிய கையால தொட்டு கொடுங்க, நானே கட்டிக்கிறேன் போதுமா?” என  பிடிவாதத்தை கைவிடாமல் அவள் சொல்ல, அவனது முகம் இறுகிப் போனது.

அவனது தாவாய் பிடித்துக் கொண்டவள், “உங்களை விட்டுட்டு இருக்க முடியலை மாமா, நான் பாவம் இல்லையா?” எனக் கேட்டாள்.

“மதி…” என அவன் ஏதோ சொல்ல வர, “என் கண் பார்வைல நீங்க இல்லாம பைத்தியம் புடிக்குது மாமா எனக்கு. சரி இப்ப கல்யாணம் வேணாம், உங்க கூட நான் இருக்க வேற என்ன வழின்னு நீங்களே சொல்லுங்க” என்றாள்.

“இப்படி நம்ம கல்யாணம் நடக்கணுமா மதி?”

“நமக்கு கல்யாணம் நடந்தா போதும். எப்படி நடந்தா என்ன?” என அவள் கேட்க, அதற்கு மேல் தர்க்கம் செய்ய அவனிடம் வார்த்தைகள் இல்லை.

“உங்களுக்கு ஓகேன்னு சொல்லிடுறேன். அப்படியே நர்ஸ் எப்ப வர்றாங்கன்னு கேட்டுட்டு வர்றேன்” என சொல்லி வெளியேறி விட்டாள்.

 அதற்கு பின் எல்லாம் வேக வேகமாக திட்டமிடப் பட்டன. ரவிக்கும் காய்ச்சல் வரவில்லை, ஆனாலும் மூன்று நாட்கள் செவிலியர் வந்து மருந்து செலுத்தி விட்டு போனார்.

ஒரு நாள் ரிதியுடன் போய் விடுதியை காலி செய்து கொண்டு வந்து விட்டாள் மதி.

அதற்கடுத்த இரண்டு நாட்கள் கழித்து வந்த முகூர்த்த நாளில் வீட்டிலேயே திருமணம் நடந்தது. சொர்ணம் பாட்டி மறுப்பாக ஏதும் சொல்லவில்லை.

“இவன் இப்படியிருக்கப்ப எப்படி அவ ஒத்துகிட்டா, வசதி பார்த்து வர்றாளா?” என பாரதியிடம் சந்தேகம் கேட்டு, அவளிடமிருந்து நன்றாக வாங்கி கட்டிக் கொண்டிருந்தார்.

யாரையுமே அழைக்கவில்லை பூர்ணிமா. சீனுதான் தனியாகவே அண்ணன் மகள்களின் குடும்பம், அண்ணி, அம்மா என அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

 ஸ்ரீதரின் வீட்டுக்கு சொல்ல வேண்டாம் என ரிதி ஒரே பிடிவாதம், மகளிடம் சரியென சொல்லி, அவளுக்கு தெரியாமல் ஸ்ரீதரின் பெற்றோருக்கு சொல்லியிருந்தார் சீனு. என்னவோ அவர்கள் வரவில்லை. அது சீனுவுக்கு நெருடலாக இருந்த போதிலும் மகனின் திருமணம்தான் முக்கியம் என நினைத்து அப்போதைக்கு அதை ஒதுக்கி வைத்தார்.

ஜோதியின் கணவரை பூர்ணிமா அழைக்காத காரணத்தால் மதிக்கவில்லை என சொல்லி அவரும் வரவில்லை, மகளையும் அனுப்பவில்லை. ஜோதி மட்டும்தான் வந்தார்.

புரோகிதர் ஒருவரை வரவழைத்திருந்தனர். மிகவும் எளிமையாக தயாராகியிருந்தாள் தண்மதி.

ஹாலில் சோஃபாவில் ரவியும் மதியும் அமர வைக்கப் பட்டனர். ஹோமம் ஏதும் இல்லாமல் மந்திரங்கள் மட்டும் சொல்லி மாங்கல்யம் கோர்க்க பட்ட தாலி செயினை ரவியிடம் எடுத்து கொடுத்தார் புரோகிதர்.

அதை அவளின் கழுத்தில் சரியாக போட்டு விட வேண்டுமே என ரவி எத்தனை தவித்தான் என அவனுக்கு மட்டுமே தெரியும். அவனுக்கு இலகுவாக இருக்கும் படி நன்றாக தலை குனிந்து கொண்டாள் மதி.

ரவி பயந்தது போலில்லாமல் எந்த தடுமாற்றமும் இன்றி அவனே தன் தண்மதிக்கு செயினை அணிவித்து விட்டான். எவ்வளவு பிடிவாதம் இவளுக்கு என லேசான முறுவலுடன் அவன் அவளை பார்க்க, துளிர்த்திருந்த கண்ணீருடன் அவனும் அவளை பார்த்தாள்.

மதியை பின்னாலிருந்து கட்டிக் கொண்டாள் ரிதி. “உங்கக்கா என் அம்மா, என் அக்கா உங்க வைஃப்” என புதிய கண்டுபிடிப்பை ரவியிடம் சொல்லி சிரித்தாள் ஷஷ்டிகா.

ரவி எப்படியெப்படியோ கற்பனை செய்திருந்த திருமணம், அவன் கொஞ்சமும் நினைத்து பாராத வகையில் நடந்து முடிந்திருந்தது. தண்மதிக்கு தன் கண் அவன் என்பது போல ரவியை பார்த்துக் கொள்ள, அவனை கணவனாக அடைய வேண்டும் என மட்டும்தான் இருந்தது. அது நிறைவேறியதில் நிம்மதியாக உணர்ந்தாள்.