“லேசாதான் சுடுது, யார்கிட்ட சொன்னாலும் பயந்துப்பாங்க, டாக்டர்கிட்ட நீ பேசு” என்றான். அவளுக்கும் பயம்தான், எவ்வளவுதான் தன்னை தைரியம் போலவே காண்பித்துக் கொள்வாள்.
கண்கள் கலங்க நின்றவளை பார்த்தவன், “நீயுமா மதி, ஃபோன் போட்டு கொடு, நானே கேட்கிறேன்” என சலித்தான்.
காய்ச்சல் எவ்வளவு என சோதித்து விட்டு அவளே மருத்துவருக்கு பேசினாள். சில பரிசோதனைகளை அங்கே உள்ள லேபிலேயே செய்து விட்டு முடிவுகளை மட்டும் சொல்ல சொன்னார் மருத்துவர். உடனே அதற்கு ஏற்பாடு செய்தாள்.
வீட்டினர் மீண்டும் பயந்து போனார்கள். சோதனை முடிவுகளை பார்த்து விட்டு சிறுநீரக தொற்றாக இருக்கலாம் என சொல்லி அதற்கான மருந்துகள் பரிந்துரைத்து, வேறு சிக்கல் என்றால் தெரிவிக்கும் படி சொல்லியிருந்தார் மருத்துவர்.
மகனை ஒழுங்காக கவனிப்பதில்லை என கணவரிடம் பூர்ணிமா வருத்தப் பட, மனைவியிடம் கோவமாக பேசி விட்டார் சீனு.
சீனு தன் கடையை விற்பனைக்கு பேசிய நபர் அந்த பேச்சை முறிக்க மறுக்கிறாராம். அந்தக் கவலையில் உன்னிடம் கோவப் பட்டு விட்டேன் என மனைவியிடம் வருத்தம் தெரிவித்தார் சீனு.
வீடு வீடாகவே இல்லை என ஆதங்கப் பட்ட பூர்ணிமா, “கடையும் வேணாம் ஒன்னும் வேணாம், வித்திட்டு வர்ற பணத்துல இவளுக்கு வீட்டை வாங்கி கொடுத்திடுங்க, இவ கல்யாணத்துக்கு வேற நல்ல நாளா பாருங்க, அவங்கதானே கல்யாணம் வச்சுக்க போறாங்க, பத்திரிக்கை கூட நெருங்கின சொந்தம் அம்பது பேருக்கு நாம வச்சா போதும்” என்றார்.
“ரவி இப்படி இருக்கும் போது ரிதிக்கு கல்யாணம் வைக்கிறதா, அவங்க வெயிட் பண்றேன்னு சொல்லிட்டாங்க, நீயும் வெயிட் பண்ணு” என்றார் சீனு.
“அதுக்குள்ள உங்க பொண்ணு மாப்ள கூட பேச்சு வார்த்தை இல்லாம எல்லாத்தையும் முடிச்சு விட்ருவா போல” என சத்தம் போட்டார் பூர்ணிமா.
ரவிக்கு ஏதோ சத்தமான பேச்சுக்கள் என புரிகிறது, என்னவென தெளிவாக தெரியவில்லை. அங்கிருந்த அழைப்பு மணியை ஒலிக்க விட்டான். பேச்சை நிறுத்தி விட்டு அனைவருமே அவனிடம் சென்றனர்.
அம்மாவின் கலங்கி சிவந்த முகத்தை கூர்மையாக பார்த்துக் கொண்டே, “என்ன ம்மா, என்ன பிரச்சனை?” எனக் கேட்டான்.
அதை ரவி நம்பவில்லை. ஆனாலும் நம்புவதாகவே காட்டிக் கொண்டான்.
“யாராவது மேல் ஹோம் நர்ஸ் அரேஞ் பண்ணிடலாம்” என்றான் ரவி.
“உன் அம்மா சொல்லுவா கண்டதையும், நல்ல ஆளா கிடைக்க வேணாமா? நான் இருக்கேன், நான் பார்த்துப்பேன் உன்னை” என சொல்லி சென்று விட்டார் சீனு.
இந்த வீட்டில் யாருமே நிம்மதியாக இல்லை. மதிக்கும் மிகுந்த வருத்தமாக இருந்தது.
தன்னுடன் மதி மட்டும் இருக்கும் போது, “வீட்ல என்ன நடக்குது மதி, மறைக்காம நிஜத்தை சொல்லு” எனக் கேட்டான் ரவி.
“வீடுன்னா பிரச்சனை இருக்கும்தான் மாமா” என மட்டும் சொன்னாள் மதி.
“நடக்கிறது தெரிஞ்சா அப்படியொன்னும் என் இதயம் வெடிச்சி போயிடாது, தெரிஞ்சாதானே என்ன செய்யலாம்னு ஏதாவது சொல்வேன்” என்றான்.
அவள் தயங்க, “சொல்லு மதி, யோசனை இல்லாம ஏதாவது செஞ்சு பிரச்சனை பெருசாகிடுச்சுனா யாராலேயும் ஏதும் செய்ய முடியாது” என்றான்.
“அண்ணியோட கல்யாண பேச்சை ஆரம்பிக்கலாம்னு அத்தை சொன்னாங்க, அதை வச்சு பேச்சு எப்படியோ போயிடுச்சு” என்றாள்.
இவளும் முழுதாக ஒன்றையும் சொல்ல மறுக்கிறாளே என்ற எரிச்சலில் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு விட்டான்.
அவனை மன அலட்டலுக்கு உள்ளாக்க அவள் தயாராக இல்லை. கடைப் பிரச்சனை பற்றி எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டாள்.
மாலையில் ஆரம்பித்த மழை இரவில் நன்றாக வலுத்து விட்டது. இதில் எப்படி போவாய், இங்கேயே இருந்து விடு என பூர்ணிமா சொல்ல, மதியும் இருந்து விட்டாள். ரிதியுடன் அவளது அறையில் தங்கிக் கொண்டாள்.
நடு இரவில் ரவிக்கு காய்ச்சல், மருத்துவருக்கு அழைத்து சொன்னாள் மதி. அவனை அலைய வைக்காமல் ஆண் செவிலியரை வீட்டுக்கே அனுப்பி வைத்தார் அவர். வீட்டிலிருந்த படியே ரவிக்கு நரம்பு வழி ஊசி மருந்து செலுத்தி, அடுத்து வரும் நாட்களுக்கு மருந்து செலுத்த தானே வருவதாக சொல்லி சென்றார் அந்த செவிலியர்.
உறக்கம் கெட்டு போனதால் சீனுவுக்கு கிறக்கமாக இருந்தது. அவரை உறங்க சொல்லி அவருடனே இருந்து விட்டார் பூர்ணிமா. மதியும் ரிதியும் ரவியுடன் இருந்து கொண்டனர். விடியலிலேயே ரிதி எழுந்து அவளது அறைக்கு சென்று விட்டாள்.
பேரனை பார்க்க வந்த சொர்ணம் பாட்டி, அங்கே அவனது அறையில் மதி உறங்குவதை காணவும் மகன் மற்றும் மருமகளிடம் ஆடித் தீர்த்து விட்டார். வழக்கத்துக்கு மாறாக கோவமாக பேசியே அம்மாவை அனுப்பி வைத்தார் சீனு.
காலை நேரமே இப்படி அபஸ்வரமாக ஆரம்பித்தது. சும்மா இல்லாமல் பாரதிக்கு அழைத்து திட்டி விட்டார் போலும் பாட்டி. சற்று நேரத்துக்கெல்லாம் கணேசன் வந்து விட்டார்.
அம்மா பேசியதற்காக கணேசனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் சீனு. நியாயம் கேட்க வந்த கணேசனுக்கு எதுவும் சொல்ல முடியாமல் தர்ம சங்கடமாக இருந்தது. சீனுவின் முன்னிலையிலேயே தண்மதியை அழைத்தவர், “இனி இங்க வரக்கூடாது மதி நீ” என கண்டிப்போடு சொன்னார்.
மற்றவர்களுக்கு ஆதங்கம், ஆனால் ஏதும் பேச முடியாமல் இயலாமையோடு பார்த்தனர்.
“இவரைதான் நீ கல்யாணம் பண்ணிக்க போற, முதல்ல இவருக்கு உடம்பு சரியாகட்டும். எதுக்கு தேவையில்லாத பேச்சு வாங்குற நீ? பாரதிக்கு ஃபோன் போட்டு அவளுக்கும் குடைச்சல் தர்றாங்க இந்த வீட்டு பெரியம்மா. எதுக்குடா நமக்கு பிரச்சனை?” என்றார் கணேசன்.
“என்னிக்கா இருந்தாலும் எங்களுக்குத்தானே சித்தப்பா கல்யாணம் நடக்க போகுது? இப்ப மாமா கஷ்ட படும் போது, மாமா கூட இல்லாம ஹாஸ்டல்ல இருக்க முடியலை சித்தப்பா” என்றாள் மதி.
பாட்டி உண்டாக்கிய கலவரத்தை தங்கையின் மூலம் தெரிந்து கொண்ட ரவி, அவளின் உதவியுடன் ஹாலுக்கு வந்திருந்தான். மதி பேசியதை கேட்டிருந்தவன், “சும்மா உன் சித்தப்பாவை சங்கட படுத்த கூடாது மதி” என்றான்.
ரவி வசதியாக அமரவென வாங்கப் பட்டிருந்த பிரத்யேக சாய்வு நாற்காலியில் அவனை அமர வைத்தாள் ரிதி.
கல்யாண பேச்சு வேண்டாம் என ரவி சொல்ல, அதை மறுக்கும் விதமாக பிடிவாதத்துடன் அவனை ஒத்துக் கொள்ள வைக்க பேசிக் கொண்டிருந்தாள் மதி.
தனியாக என்றால் கணேசன் தன் அண்ணன் மகளிடம் கடுமையாக பேசியாவது விடுதிக்கு அனுப்பி வைத்திருப்பார். இப்போது அனைவரின் மத்தியிலும் ஏதும் சொல்லி, தவறாக புரிந்து கொள்ள படுமோ என யோசித்து அமைதியாக இருந்தார்.
ரவியோ முடியாது என்பதில் அவளுக்கு இணையாக பிடிவாதம் செய்தான்.
“அவர்தான் சொல்றாரே மதி, எப்போலேருந்து நீ இவ்ளோ அடமெண்ட்டா மாறின?” என கடிந்து கொண்டார் கணேசன்.
“அங்க ஹாஸ்டல்ல ராத்திரி திடீர் திடீர்னு முழிப்பு வந்திடுது சித்தப்பா, இப்ப எப்படி இருப்பாரோ ஜுரம் வந்திருக்குமா வேற தொந்தரவு இல்லாம நல்லா இருப்பாரான்னு மனசு பதை பதைச்சு போகுது. எனக்கே எனக்குன்னு மிச்சம் இருக்கிறது மாமா மட்டும்தான், அவர் கூட இருக்க முடியாம தள்ளி நிக்கணும்னா எப்படி முடியும் என்னால? என்ன தப்பு பண்ணினேன்னு என்னை எல்லாரும் தண்டிக்கிறீங்க?” எனக் கேட்ட மதி, முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
பூர்ணிமா போய் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்ட போதும் அழுகையை நிறுத்தவில்லை அவள்.
“இப்படிலாம் எமோஷனலா பேசக்கூடாது. இவ்ளோ நாளா தைரியமா நல்லாதானே இருந்த, இனியும் அப்படித்தான் இருக்கணும் நீ. அப்பப்ப வர போக இருக்கலாம். முதல்ல அழுகையை நிறுத்து” என அதட்டிய ரவி, அயர்வாக இருக்கையில் சாய்ந்து கொண்டான்.